இந்தியா ஆறாவது வெற்றி: 230 ரன் இலக்கை எட்ட விடாமல் இங்கிலாந்தை சுருட்டியது எப்படி?

இந்தியா vs இங்கிலாந்து

பட மூலாதாரம், Getty Images

உலகக் கோப்பைத் தொடரின் 29-வது லீக் ஆட்டம் லக்னோவில் இன்று இங்கிலாந்து, இந்தியா இடையே நடந்து வருகிறது. இந்திய அணி இதுவரை ஆடிய 5 போட்டிகளிலும் வென்று 10 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருக்கிறது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி, 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறது.

இந்திய அணி இன்னும் 2 வெற்றிகள் பெற்றால், அரையிறுதிச் சுற்றை உறுதி செய்துவிடும், ஆனால், இங்கிலாந்துக்கான வாய்ப்பு மிகவும் குறைவு.

டாஸ் வென்ற இங்கிலந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்த உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை இந்திய அணி சேஸிங்கை மட்டும் செய்துவந்தது. ஆனால், முதல்முறையாக முதலில் பேட் செய்து, தாங்கள் அடித்த ஸ்கோரை டிபென்ட் செய்ய இருக்கிறது.

லக்னோ ஆடுகளம் எப்படி?

இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவுக்குப் பதிலாக கூடுதல் வேகப்பந்துவீச்சாளராக முகமது ஷமி சேர்க்கப்பட்டிருந்தார். மற்ற வகையில் அணியில் எந்த மாற்றமும் செய்யவில்லை.

ரோஹித் சர்மா, சுப்மான் கில் ஆட்டத்தைத் தொடங்கினர். சுப்மான் கில் தொடக்கத்திலிருந்தே இங்கிலாந்து வேகப்பந்துவீச்சுக்குத் திணறினார். ஆனால் டேவிட் வில்லே வீசிய 3வது ஓவரில் ரோஹித் சர்மா 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி அடித்து வெளுத்து வாங்கினார்.

வோக்ஸ் வீசிய 4வது ஓவரில் சுப்மான் கில் 9 ரன்னில்கிளீன் போல்டாகி ஆட்டமிழந்தார். அடுத்துவந்த விராட் கோலி ரன் ஏதும் சேர்க்காமல் டேவிட் வில்லே வீசிய ஓவரில் மிட் ஆப் திசையில் ஸ்டோக்ஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இந்தியா vs இங்கிலாந்து

பட மூலாதாரம், Getty Images

இப்படியா ஆட்டமிழப்பீங்க..!

3வது விக்கெட்டுக்கு வந்த ஸ்ரேயாஸ் அய்யர், ரோஹித்துடன் இணைந்தார். ஸ்ரேயாஸ் ஷார்ட் பந்துக்கு தொடர்ந்து திணறி விக்கெட்டை இழந்து வந்ததை இங்கிலாந்து அணி கவனித்தது. நியூசிலாந்துக்கு எதிராகவும் ஸ்ரேயாஸ் ஷார்ட் பந்தில் ஆட்டமிழந்திருந்தார்.

அதேபோன்று இந்த முறையும் வோக்ஸ் வீசிய ஷார்ட் பந்துவீச்சு இரையாகி ஸ்ரேயாஸ் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். வோக்ஸ் வீசிய பந்து சாதாரண பவுன்ஸர் அதை தேவையில்லாமல் தூக்கி அடித்து ஸ்ரேயாஸ் விக்கெட்டை இழந்தது ரசிகர்களால் கடுமையாக வலைத்தளங்களில் விமர்சிக்கப்படுகிறது.

இந்திய அணி 40 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பவர்ப்ளே ஓவரில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 35 ரன்களைச் சேர்த்தது.

பவர்ப்ளேயில் கடைசி 6 ஓவர்களில் இந்திய அணி, 9 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 5 முதல் 10 ஓவர்களில் குறைவான ரன்கள் சேர்த்த அணியாக 2007ம் ஆண்டுக்குப்பின் இந்திய அணி உள்ளது.

இந்தியா vs இங்கிலாந்து

பட மூலாதாரம், Getty Images

தப்பிப் பிழைத்த ரோஹித் சர்மா

4-வது விக்கெட்டுக்கு கேஎல் ராகுல், ரோஹித் ஜோடி இணைந்தது. மார்க் உட் வீசிய 15-வது ஓவரில் ரோஹித் சர்மா கால்காப்பில் வாங்கியதற்கு கள நடுவர் அவுட் வழங்கினார். ஆனால், ரோஹித் 3வது நடுவரிடம் மேல்முறையீடு செய்யவே, ஆய்வுக்குப்பின் அவுட் இல்லை என முடிவு வந்தது. அதன்பின் ராகுல் அமைதி காக்க, ரோஹித் சர்மா ஓவருக்கு ஒரு பவுண்டரி விளாசினார்.

1,000 ரன்களை எட்டிய ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா 42 ரன்களை எட்டியபோது, 2023ம் ஆண்டில் ஒருநாள் தொடரில் ஆயிரம் ரன்களை எட்டிய பேட்டர் என்ற பெருமையைப் பெற்றார். இதற்குமுன் இந்த ஆண்டில் இலங்கையின் நிசாங்கா, சுப்மான் கில் ஆயிரம் ரன்களை எட்டியிருந்தனர்.

மந்தமான ஆட்டம்

10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 73 ரன்கள் சேர்த்தது. இந்த 10 ஓவர்களில் 38 ரன்கள் சேர்த்து ஒரு விக்கெட்டையும் இழந்தது இந்திய அணி, ரன்ரேட் மிகவும் குறைவாக 3.65 என்ற ரீதியில் சென்றது.

ரோஹித் அரைசதம்

மார்க் உட் வீசிய 24-வது ஓவரில் 2 ரன்கள் அடித்து ரோஹித் சர்மா 51 பந்துகளில் அரைசதம் அடித்தார். அடுத்த ஓவரில் லெக் திசையில் சிக்ஸரையும் ரோஹித் விளாசினார். ரோஹித் சர்மா மெதுவாக ஆட்டத்தைத் தொடங்கினார்.

7 பந்துகள் வரை ரன் சேர்க்காத ரோஹித் சர்மா, 11 பந்துகளில் 17 ரன்களாக உயர்த்தினார். விக்கெட் சரிந்தபின் கேப்டன் பொறுப்புடன் நிதானமாக ஆடத் தொடங்கிய ரோஹித், கேஎல்ராகுல் வந்தபின் நங்கூரமிட்டார். இந்திய அணி சேர்த்த 90 ரன்களில் 57 ரன்கள் ரோஹித் சர்மா சேர்த்ததாகும்.

லிவிங்ஸ்டன் வீசிய 25வது ஓவரில் ராகுல் 2 பவுண்டரி உள்ளிட்ட 11 ரன்கள் சேர்த்தார், இதையடுத்து, இந்திய அணி 25 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 100 ரன்கள் சேர்த்தது.

லிவிங்ஸ்டன் வீசிய 26-வது ஓவரில் ரோஹித் சர்மா ரிவர்ஸ் ஸ்வீப்பிலும், தேர்டுமேன் திசையிலும் இரு பவுண்டரிகளை விளாசி 11 ரன்கள் சேர்த்தார். 30ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் சேர்த்திருந்தது.

இந்தியா vs இங்கிலாந்து

பட மூலாதாரம், Getty Images

ரோஹித் சதமடிக்காமல் ஏமாற்றம்

டேவிட் வில்லே வீசிய 31வது ஓவரின் 2வதுப ந்தில் ராகுல் 39 ரன்கள் சேர்த்தநிலையில் பேர்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு ரோஹித், ராகுல் கூட்டணி 91 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

அடுத்து வந்த 360 டிகிரி வீரர் சூர்யகுமார் யாதவ், ரோஹித்துடன் சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி ரன்களைச் சேர்த்தனர், மோசமான பந்துகளை மட்டுமே பவுண்டரிக்கு விரட்டினர்.

சதத்தை நெருங்கிய ரோஹித் சர்மா 87 ரன்களில்(3சிக்ஸர்,10பவுண்டரி) அதில் ரஷித் பந்துவீச்சில் லிவிங்ஸ்டோன் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். 40 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் சேர்த்திருந்தது.

இந்தியா மீண்டும் திணறல்

அடுத்து களமிறங்கிய ஆல்ரவுண்டர் ஜடேஜா வந்த வேகத்தில் 8 ரன்களில் ரஷித் பந்துவச்சில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார். கடந்த 2020ம் ஆண்டுக்குப்பின் ஜடேஜா, ஒருநாள் போட்டியில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. பெயரளவுக்குத்தான் ஆல்ரவுண்டர் என்று பெயர் இருக்கிறது, ஆனால், இதுவரை அதற்கான தாத்பரியத்துடன் 2 ஆண்டுகளாக ஆடவில்லை.

அடுத்துவந்த ஷமி ஒரு ரன்னில் மார்க் உட் பந்துவீச்சில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 131 ரன்கள் வரை 3 விக்கெட்டுகளை இழந்திருந்த இந்திய அணி, அடுத்த 52 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்தியா vs இங்கிலாந்து

பட மூலாதாரம், Getty Images

இங்கிலாந்துக்கு 230 ரன் இலக்கு

கடைசிக் கட்டத்தில் சூர்யகுமார் யாதவ் சற்று கைகொடுத்ததால்தான் இந்திய அணியால் 200 ரன்களை கடக்க முடிந்தது. மற்ற வீரர்கள் யாருமே சொல்லிக் கொள்ளும் படி ஆடவில்லை.

சூர்யகுமார் யாதவ் 47 பந்துகளில் 49 ரன் எடுத்து, டேவிட் வில்லே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 50 ஓவர் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்களையே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 87 ரன்னும், சூர்யகுமார் 49 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக டேவிட் வில்லே 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த ஆடுகளத்தில் 250 ரன்கள் சேர்த்தாலே சேஸிங் செய்வது கடினம் என்று கணிக்கப்பட்டிருந்தது. இந்திய அணி 20 ரன்கள் குறைவாக சேர்த்துள்ளது. பும்ரா 16 ரன்னில் ரன்அவுட் ஆகினார். இந்திய அணி தரப்பில் பும்ரா சேர்த்ததுதான் 4வது அதிகபட்ச ஸ்கோராகும்.

28 ஓவர்கள் டாட் பந்துகள்

முதல் 10 ஓவர்கள் பவர்ப்ளே ஓவரில் 2 விக்கெட்டுகளையும் கடைசி டெத் ஓவரில் 4 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தது. இந்திய அணி பேட்டர்கள் இன்று ஏராளமான டாட் பந்துகளை விட்டனர். ஏறக்குறைய 173 டாட்பந்துகள் அதாவது 28ஓவர்களில் எந்தவிதமான ரன்னும் அடிக்காமல் வீணடித்துள்ளனர்.

இதற்கு முக்கியக் காரணம், கோலி, ஸ்ரேயாஸ், கில் ஆகிய 3 முக்கிய பேட்டர்களும் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்ததால், விக்கெட்டை நிலைப்படுத்த வேறுவழியின்றி, ரோஹித், ராகுல் நிதானமாக விளையாட வேண்டிய தேவை இருந்தது.

அது மட்டுமல்லாமல் ஆடுகளமும் வேகப்பந்துவீச்சுக்கும், சுழற்பந்துவீச்சுக்கும் அதிகமாக உதவியது, சற்று பவுன்ஸரும் இருந்ததால், பேட்ஸ்மேன்கள் கடும் சிரமப்பட்டனர்.

இந்தியா vs இங்கிலாந்து

பட மூலாதாரம், Getty Images

அஸ்வின் இல்லாத வெறுமை

இன்றைய ஆட்டத்தில் முகமது ஷமிக்குப் பதிலாக அஸ்வின் இருந்திருந்தால், கூடுதலாக ஒரு ஆல்ரவுண்டர் கிடைத்திருப்பார். ஓரளவுக்கு ரன்களையும் சேர்த்திருப்பார். லக்னோ ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு நன்றாக ஒத்துழைக்கும் ஆடுகளத்தில் அஸ்வினின் பந்துவீச்சு இங்கிலாந்து அணிக்கு பெரிய சவாலாக இருந்திருக்கும். அஸ்வின் இல்லாத வெறுமை பேட்டிங்கிலும் தெரிந்தது.

11 ஆண்டுகளுக்குப் பின் குறைந்தபட்ச ஸ்கோர்

ஒருநாள் போட்டியி்ல் 2019ம் ஆண்டு உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 8 விக்கெட்இழப்புக்கு 224 ரன்கள் சேர்த்தது இந்திய அணி. அதன்பின் அடித்த இந்திய அணியின் குறைந்தபட்சஸ்கோர் என்று இங்கிலாந்துக்கு எதிராக 229 ரன்கள் சேர்த்ததுதான்.

அது மட்டுமல்லாமல் உள்நாட்டில் கடைசியாக 2012ம் ஆண்டு சென்னையில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் சேர்த்ததுதான் குறைந்தபட்ச ஸ்கோர். அதன்பின் உள்நாட்டில் இந்திய அணி சேர்த்த குறைந்தபட்ச ஸ்கோர் இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 229 ரன்கள் சேர்த்ததுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

டாட் பால் அழுத்தம் கொடுத்த இங்கிலாந்து பந்துவீச்சு

இந்திய அணியின் பேட்டர்களை ரன் ஏதும் அடிக்கவிடாமல் லைன் லென்த்தில் வீசி இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் தொடக்கத்திலிருந்தே நெருக்கடி அளித்தனர். ஆடுகளம் பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைத்து, இங்கிலாந்து ஆடுகளம் போல் இருந்ததால், வோக்ஸ், மார்க்வுட், வில்லே ஆகியோர் பந்தை நன்றாக பவுன்ஸ் ஆகியது. இதனால் தொடக்கத்திலிருந்தே விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் ரன் சேர்ப்புக்கு நெருக்கடி அளித்தனர். இதனால் விக்கெட் வீழ்ச்சியைத் தடுக்கும் முனைப்பில் இந்திய பேட்டர்கள் டாட்பால் அழுத்தத்துக்கு தள்ளப்பட்டு, பந்துகளை வீணடித்தனர்.

வோக்ஸ் 9 ஓவர்கள் வீசி ஒருமெய்டன் 33 ரன்கல் கொடுத்து ஒரு விக்கெட்டையும், டேவிட் வில்லே 10ஓவர்கள் வீசி2 மெய்டன் 45 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.அதில் ரஷித் 10ஓவர்கள் வீசி 35 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் சாய்த்தார். மார்க் உட் 9ஓவர்கள் வீசி ஒரு மெய்டன்46 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்

இந்தியா vs இங்கிலாந்து

பட மூலாதாரம், Getty Images

இங்கிலாந்துக்கு தொடக்கமே அதிர்ச்சி

230 ரன்கள் எனும் இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. டேவிட் மாலன், ஜானி பேர்ஸ்டோ ஆட்டத்தைத் தொடங்கினர். பும்ரா பந்துவீச்சை இங்கிலாந்து பேட்டர்களால் தொடக்கூட முடியாத அளவுக்கு துல்லியமாக இருந்தது, ஆனால், சிராஜ் பந்துவீச்சில் மட்டும் மலான், பேர்ஸ்டோ பவுண்டரி, சிக்ஸர் விளாசினர்.

பும்ரா வீசிய 5-வது ஓவரில் பவுண்டரி அடித்த மலான், 5-வதுபந்தில் கிளீன் போல்டாகி 16 ரன்னில் வெளியேறினார். அரவுண்ட் ஸ்டெம்பில் லென்த்தில் துல்லியமாக வந்த பந்தை இடைவெளி கொடுத்து கட்ஷாட் அடிக்க மலான் முயன்றபோது, பந்து ஏமாற்றி பேல்டாகியது. அடுத்துவந்த ஜோ ரூட், வந்த வேகத்தில் பும்ரா பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி கோல்டக் அவுட்டாகி வெளியேறினார்.

6-வது ஓவரிலிருந்து ஷமி பந்துவீச அழைக்கப்பட்டார். பும்ராவும், ஷமியும் சேர்ந்து இங்கிலாந்து பேட்டர்களுக்கு கடும் நெருக்கடி அளித்து கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். இதனால் ரன்சேர்க்க பேர்ஸ்டோவும், பென் ஸ்டோக்ஸும் கடும் சிரமப்பட்டனர்.

இந்தியா vs இங்கிலாந்து

பட மூலாதாரம், Getty Images

10 ரன்களுக்கு 4 விக்கெட்

ஷமி வீசிய 8-வது ஓவரில் க்ளீன் போல்டாகி பென் ஸ்டோக்ஸ் டக்அவுட்டில் பெவிலியன் திரும்பினார். அடுத்துவந்த பட்லர், பேர்ஸ்டோவுடன் இணைந்தாலும் ஸ்கோரில் பெரிதாக முன்னேற்றமில்லை. ஷமி வீசிய 10-வது ஓவரில் மீண்டும் ஒரு பிரேக் கிடைத்தது. பேர்ஸ்டோ 14 ரன்கள் சேர்த்தநிலையில் ஷமி ஓவரில் க்ளீன் போல்டாகி ஆட்டமிழந்தார்.

30 ரன்கள் வரை இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி இருந்தநிலையில், 40 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதாவது 10 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது.

2007-க்குப் பின்

2007ம் ஆண்டுக்குப்பின் ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து அணியின் டாப்ஆர்டரில் 4 பேட்டர்கள் போல்ட் அல்லது கால்காப்பில் வாங்கி ஆட்டமிழப்பது இதுதான் முதல்முறையாகும். 2007ம் ஆண்டுக்குப்பின் உலகக் கோப்பையில் முதல் 10 ஓவர்களில் டாப்-3 பேட்டர்களை போல்ட் மூலம் ஆட்டமிழக்கச் செய்தது இதுதான் முதல்முறையாகும்

நிரூபித்த ஷமி

இந்தியா vs இங்கிலாந்து

பட மூலாதாரம், Getty Images

ஷர்துல் தாக்கூர் ஆல்ரவுண்டர், அவரால் பேட்டிங்கும் செய்ய முடியும் என்பதால், அவருக்கு தொடக்கத்தில் வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால், ஷர்துல் தாக்கூர் அளவுக்கு ஷமியால் பேட்டிங் செய்ய முடியாது என்றாலும், விக்கெட் எடுக்கும் வித்தை தெரிந்தவர். ஷர்துலைவிட, அதிகமான விக்கெட்டுகளையும், ரன்களையும் சேமிக்கும் கலை தெரிந்தவர் ஷமி. இந்த போட்டியில்கூட ஷர்துல் இருந்தால் கூடுதலாக 30 ரன்கள் வந்திருக்கும் என்று யாரும் நினைக்காத அளவுக்கு ஷமியின் பந்துவீச்சு அமைந்திருந்தது. பும்ராவும் ஷமியும் இணைந்து எதிரணிக்கு கொடுத்த அழுத்தம் வேறு எந்த பந்துவீச்சாளர்களாலும் இருந்திருக்காது.

11-வது ஓவர் முதல் 15-வது ஓவர்கள் வரை குல்தீப், ஷமி, சிராஜ் மூவரும் சேர்ந்து இங்கிலாந்து பேட்டர்களை ரன் சேர்க்கவிடாமல் திணறவிட்டனர். இதனால் 5 ஓவர்களாக பவுண்டரியே வரவில்லை.

குல்தீப் யாதவ் வீசிய 16-வது ஓவரின் முதல் பந்தில் ஜாஸ் பட்லர் பந்தை தவறாகக் கணித்து ஆட முற்பட்டு 10 ரன்னில் கிளீ்ன் போல்டாகினார். குல்தீப் பந்தை “இன்னர் கட் ஷாட்” ஆட முற்பட்டார் பட்லர் ஆனால், பந்தை கணிக்கத் தவறியதால், க்ளீன் போல்டாகியது.

அடுத்துவந்த லிவிஸ்ஸ்டன், மொயின் அலி கூட்டணி ஓரளவுக்கு நிலைத்து ஆட முற்பட்டனர். 6 ஓவர்களுக்குப்பின் லிவிங்ஸ்டன் பவுண்டரி அடித்தார். 20ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 68 ரன்கள் சேர்த்து மூழ்கிக்கொண்டிருந்தது.

ஷமியிடம் வீழ்ந்த மொயின்அலி

லிவிங்ஸ்டன், மொயின் அலி நங்கூரம் அமைக்க முயன்றனர். சில பவுண்டரிகளையும் லிவிங்ஸ்டன் விளாசினார். இருவரில் ஒருவரை வீழ்த்தினால், இந்தியாவின் வெற்றி எளிதாகும் என்று கணிக்கப்பட்டது. இந்த நேரத்தில் மீண்டும் ஷமி பந்துவீச அழைக்கப்பட்டார். அவர் வருகை நியாயம் என்று முதல் பந்திலேயே ஷமி நிரூபித்தார்.

ஷமி வீசிய 24-வது ஓவரின் முதல் பந்தில் மொயின் அலி “அவுட்சைட் எட்ஜ்” எடுத்து ராகுலிடம் கேட்ச் கொடுத்து 15ர ன்னில் ஆட்டமிழந்தார். 8-வது விக்கெட்டுக்கு வந்த கிறிஸ் வோக்ஸ், லிவிங்ஸ்டனுடன் சேர்ந்தார்.

இந்தியா vs இங்கிலாந்து

பட மூலாதாரம், Getty Images

17 ரன்களுக்கு 3 விக்கெட்

வந்த வேகத்தில் வோக்ஸ் பவுண்டரி அடித்தாலும் நிலைக்கவில்லை. ஜடேஜா வீதிய 29-வது ஓவரின் முதல் பந்தை இறங்கி வந்து தூக்கி அடிக்க வோக்ஸ் முற்பட்டு ராகுலால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு 10 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.

29 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் சேர்த்திருந்தது. 30-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். குல்தீப் வீசிய 2வது பந்தை ஸ்வீப் ஷாட் ஆட லிவிங்ஸ்டன் முற்பட்டு கால்காப்பில் வாங்கினார். இந்திய வீரர்கள் தரப்பில் பெரிய அப்பீல் செய்யவே களநடுவர் அவுட் வழங்கினார். ஆனால், லிவிங்ஸ்டன் 3வது நடுவரிடம் அப்பீல் செய்தார். இதை ஆய்வு செய்த 3வது நடுவர் அவுட் வழங்கி உறுதி செய்தார். இதையடுத்து, லிவிங்ஸ்டன் 27 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

81 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்த இங்கிலாந்து அணி, அடுத்த 17 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதிரடி ஆட்டத்துக்கு புகழ்பெற்ற லிவிங்ஸ்டன் பொறுமையாக ஆடியதும் வீணாகியது. இங்கிலாந்து அணி 29.4 ஓவர்களில் 100 ரன்களை போராடி எட்டியது.

ஷமி வீசிய 34-வது ஓவரில் அதில் ரஷித் 2 பவுண்டரிகளை அடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால்,அதே ஓவரின் கடைசிப்பந்தை இன்ஸ்விங் முறையில் ஷமி உள்ளே வீசினார். இதுபோன்ற பந்தை ஆடத் தெரியாத டெய்லென்டர் ரஷித் 13ரன்னில் க்ளீன் போல்டாகி வெளியேறினார்.

இந்தியா vs இங்கிலாந்து

பட மூலாதாரம், Getty Images

ஸ்டார்க் சாதனையை சமன் செய்த ஷமி

2015 முதல் 2023 வரை ஒருநாள் போட்டி உலகக் கோப்பைப் போட்டியில் 4 விக்கெட்டுகளுக்கு மேல் 6 முறை எடுத்த பந்துவீச்சாளர்களில் ஆஸ்திரேலியாவின் மிட்ஷெல் ஸ்டார்க் சாதனையை இந்திய வீரர் ஷமி சமன் செய்தார். உலகக் கோப்பையில் 56 விக்கெட்டுகளை ஸ்டார்க் எடுத்தநிலையில் ஷமி 40 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 4 விக்கெட்டுகளை 4 முறையும், 5 விக்கெட்டுகளை இரு முறையும் ஷமி வீழ்த்தியுள்ளார்.

35வது ஓவரை பும்ரா வீசினார். டேவிட் வில்லே ஒரு சிக்ஸர் விளாசி பரபரப்பு ஏற்படுத்தினார். ஆனால், பும்ராவின் யார்கர் பந்துவீச்சில் டெய்லண்டர் மார்க் உட் க்ளீன் போல்டாகி டக்அவுட்ஆகிய பெவிலியன் திரும்பினார்.

இங்கிலாந்து அணி 34.5 ஓவர்களில் 129 ரன்களுக்கு ஆட்டமிழந்தது, இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா vs இங்கிலாந்து

பட மூலாதாரம், Getty Images

ஷமி, பும்ரா ஹீரோ

இந்தியத் தரப்பில் முகமது ஷமி 8 ஓவர்கள் வீசி 24 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளையும், பும்ரா 6.5 ஓவர்கள் வீசிய ஒருமெயன்டன் 32 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)