மெட்ரோ ரயில் திட்டத்திற்கு பணம் பெற்றதாக முதல்வர் மீது அண்ணாமலை புகார் - ஆதாரம் ஏதும் தரவில்லை

சென்னையில் செயல்படுத்தப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்காக ஆல்ட்ஸ்டாம் நிறுவனத்திடமிருந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 200 கோடி ரூபாய் பெற்றதாக பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆனால், அந்தக் குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக அவர் எதையும் வழங்கவில்லை. அதைப் போல செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் உடனடியாக பதில் சொல்லப்போவதில்லை என்று அவர் தெரிவித்தார்.
தங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு உரிய பதில் அளிக்கவில்லை என்றால் அண்ணாமலை மீது வழக்குத் தொடரப்போவதாக திமுக தெரிவித்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியும் அண்ணாமலை மீது வழக்குத் தொடரப்போவதாக கூறியுள்ளார். அண்ணாமலை காட்டிய ரஃபேஸ் வாட்ச் பில் தொடர்பாகவும், அண்ணாமலை வீட்டு வாடகை தொடர்பாகவும் செந்தில் பாலாஜி விமர்சனங்களை வைத்துள்ளார்.
பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தி.மு.கவின் ஊழல் பட்டியலை தமிழ் புத்தாண்டு தினத்தன்று வெளியிடப்போவதாக நீண்ட நாட்களுக்கு முன்பே அறிவித்திருந்தார். அன்றைய தினமே தன்னிடமிருக்கும் ரஃபால் வாட்சின் ரசீதையும் வெளியிடப்போவதாக அவர் தெரிவித்திருந்தார்.
அதற்கான செய்தியாளர் சந்திப்பு இன்று காலையில் சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. பெரும் பாதுகாப்புக் கெடுபிடிகளுக்கு மத்தியில் நடத்தப்பட்ட இந்தச் செய்தியாளர் சந்திப்பில் பெரும் எண்ணிக்கையிலான கட்சிக்காரர்களும் அனுமதிக்கப்பட்டனர்.
செய்தியாளர் சந்திப்பின் துவக்கத்திலேயே, எந்தக் கேள்விக்கும் இன்று பதில் சொல்லப்போவதில்லை என்றும் ஒரு வாரம் கழித்துத்தான் பதில் சொல்லப்போவதாகக் கூறிவிட்டு செய்தியாளர் சந்திப்பைத் துவங்கினார் அண்ணாமலை.
மாதம் 7-8 லட்சம் செலவு: நண்பர்களே தருகிறார்கள் - அண்ணாமலை

தான் முதல் தலைமுறை அரசியல்வாதியாக இருப்பதால், தனக்கு முன் இருந்த பாதை மிகக் கடினமானதாக இருப்பதாகவும் கட்சியின் மாநிலத் தலைவராக மாதம் 7- 8 லட்ச ரூபாய் செலவாவதாகவும் அதனை நண்பர்களை வைத்து சமாளித்துவருவதாகவும் தனது 3 பி.ஏ.களின் சம்பளத்தை மூன்று நண்பர்கள் கொடுப்பதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.
தனக்கான காவல் அதிகரித்த பிறகு, தான் குடியிருந்த வீடு போதவில்லை என பெரிய வீட்டிற்குச் சென்றதாகவும் அதற்கான வாடகையை இன்னொரு நண்பர் தருவதாகவும் தான் பயன்படுத்தும் கார் இன்னொருவருடையது என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.
பிறகு தனது ரஃபால் கடிகாரம் குறித்த தகவல்களைக் கூறினார் அண்ணாமலை. "இந்த வகை கடிகாரம் உலகத்திலேயே 500தான் இருக்கிறது. என்னிடம் இருப்பது 147வது கடிகாரம். இந்தியாவில் இந்தக் கடிகாரம் இரண்டுதான் விற்றிருக்கிறது. ஒரு கடிகாரம் மும்பையில் உள்ள சீனியர் எக்சிக்யூட்டிவால் வாங்கப்பட்டுள்ளது. இரண்டாவது கடிகாரம், கோவையில் ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள ஜிம்ஸன் கடையில் வாங்கப்பட்டது. மே மாதம் 27ஆம் தேதி வாங்கினேன்.
2021 மார்ச் மாதத்தில் இந்தக் கடிகாரத்தை வாங்கிய உண்மையான உரிமையாளர் சேரலாதன் ராமகிருஷ்ணன் என்பவர். மே மாதவாக்கில் இந்தக் கடிகாரம் இருப்பது குறித்து கேள்விப்பட்டவுடன், அவரிடம் கேட்டேன். அவர் தருவதற்கு ஒப்புக்கொண்டார். அவரிடமிருந்து நான் வாங்கியதற்கான ரசீது இருக்கிறது. அவரை எனக்கு இரண்டு ஆண்டுகளாகத் தெரியும். மே 27ஆம் தேதி முதல் இந்த ஒரு கடிகாரம் மட்டும்தான் என் கையில் இருக்கிறது. இதை மூன்று லட்ச ரூபாய்க்கு வாங்கினேன். இதற்கான ரசீது இணையதளத்தில் வெளியிடப்படும்" என்று கூறினார்.
வீடியோ மூலம் குற்றச்சாட்டு பட்டியல்

இதற்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில், 15 நிமிடம் ஓடக்கூடிய ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. அதில் தி.மு.க. தலைவர்கள் பலரது சொத்துப்பட்டியல் என்று கூறி ஒரு பட்டியல் வெளியிடப்பட்டது.
தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனுக்கு 50,219.37 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து இருப்பதாகவும் தற்போதைய மாநில அமைச்சர் எ.வ. வேலுவுக்கு 5, 442.39 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து இருப்பதாகவும் கே.என். நேருவுக்கு 2,495.14 கோடிக்கு சொத்து இருப்பதாகவும் மக்களவை உறுப்பினர் கனிமொழிக்கு 830.33 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து இருப்பதாகவும் கலாநிதி மாறனுக்கு 12,450 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து இருப்பதாகவும் டி.ஆர். பாலுவுக்கு 10,841.10 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து இருப்பதாகவும் கதிர் ஆனந்திற்கு 579.58 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து இருப்பதாகவும் கலாநிதி வீராசாமிக்கு 2,923.29 கோடி ரூபாய்க்கு சொத்து இருப்பதாகவும் பொன்முடிக்கும் அவருடைய மகன் கௌதம சிகாமணிக்கும் 581.20 கோடி ரூபாய்க்கு சொத்து இருப்பதாகவும் தி.மு.கவிற்கு 1,408.94 கோடி ரூபாய்க்கு சொத்து இருப்பதாகவும் தி.மு.கவுக்கு சொந்தமாக 3474.18 கோடி ரூபாய் மதிப்பிற்கு பள்ளிக்கூடங்கள் இருப்பதாகவும் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு 1,023.22 கோடி ரூபாய்க்கு சொத்து இருப்பதாகவும் உதயநிதி ஸ்டாலினுக்கு 2,039 கோடி ரூபாய்க்கு சொத்து இருப்பதாகவும் முதலமைச்சரின் மருமகன் சபரீசனுக்கு 476.16 கோடி ரூபாய்க்கு சொத்து இருப்பதாகவும் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்குச் சொந்தமாக சுமார் 24,000 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் தமிழ்நாட்டிலும் தெலங்கானாவிலும் இருப்பதாகவும் மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆண்டுக்கு பத்தாயிரம் கோடி ரூபாய் வசூல் செய்வதாகவும் அந்தப் படத்தில் தெரிவிக்கப்பட்டது.
படம் எடுக்கப் பணம் ஏது? அண்ணாமலை கேள்வி
இதற்குப் பிறகு மீண்டும் பேசிய அண்ணாமலை, புதிதாக தி.மு.கவில் சேர்ந்திருப்பவர்கள் பினாமி சொத்தாக 20,000 கோடி ரூபாய்க்கு சொத்து வைத்திருப்பதாகவும் அது இரண்டாம் பாகமாக வெளியிடப்படும் என்றும் 2008 முதல் 2011வரை 300 கோடி ரூபாய் முதலீட்டில் படம் எடுத்ததாகவும் அந்தப் படங்களுக்கான பணம் எங்கிருந்து வந்தது என அவர் தெரிவிக்க வேண்டும் என்று கூறினார்.
முதலமைச்சரின் மருமகன் சபரீசன் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் வேலையில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிவித்தார். மேலும், முதலமைச்சர் துபாய் சென்றிருந்தபோது நோபல் ஸ்டீல் என்ற நிறுவனம் இந்தியாவில் 1,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய கையெழுத்திடப்பட்டதாகவும் இந்த நிறுவனத்தின் இயக்குனராக உதயநிதி ஸ்டாலின் 2009ல் இருந்ததாகவும் பிறகு ராஜினாமா செய்துவிட்டதாகவும் 2016ல் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இயக்குநராக இருந்ததாகவும் பிறகு ராஜினாமா செய்துவிட்டதாகவும் அண்ணாமலை கூறினார்.
இதற்குப் பிறகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது நேரடியாக ஊழல் குற்றச்சாட்டு ஒன்றைச் சுமத்தினார். 2006-11 ஆண்டுகாலத்தில் சென்னை மெட்ரோவின் முதல் கட்டம் செயல்படுத்தப்பட்டபோது, அதற்கான ஒப்பந்தத்தை ஆல்ட்ஸ்டாம் நிறுவனத்திற்கு அளித்ததில் முறைகேடு இருந்ததாகவும் இதற்காக ஆல்ட்ஸ்டாம் நிறுவனம் முதலமைச்சருக்கு 200 கோடி ரூபாய் கொடுத்ததாகவும் கூறினார். சிங்கப்பூரில் இருந்து செயல்படும் இந்தோ - யுரோப்பியன் வென்சர் பிரைவேட் லிட் மூலம் இந்தப் பணம் கொடுக்கப்பட்டதாகவும் கொடுத்ததாக அவர் கூறினார்.
"தில்லிக்கு சென்று என்னை மாற்றவேண்டும்"

மதன் ரவிச்சந்திரனைப் பயன்படுத்தி, தன் மீது ஒரு குற்றச்சாட்டை விரைவில் சுமத்தப்போவதாகவும் ஆருத்ராவில் பணம் போட்டவர்களை அழைத்துவந்து போராட்டம் நடத்துவதாகவும் அந்த வழக்கை சி.பி.ஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அண்ணாமலை கூறினார்.
தி.மு.க குறித்து மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த அனைத்துக் கட்சிகளைப் பற்றியும் ஊழல் தகவல்களை வெளியிடப்போவதாகவும் அது வெளிவரக்கூடாதென்றால் தில்லிக்குச் சென்று தன்னைத் தலைவர் பதவியிலிருந்து மாற்ற வேண்டும் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.
அண்ணாமலை இந்தக் குற்றச்சாட்டுகளைச் சுமத்திய சில நிமிடங்களில் தி.மு.க. தரப்பும் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தியது. தி.மு.கவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வில்சன், என்.ஆர். இளங்கோ ஆகியோரோடு அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் இந்தச் செய்தியாளர் சந்திப்பை நடத்தினர்.
என்ன சொன்னது திமுக?
அண்ணாமலை தி.மு.க. மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டையும் சுமத்தவில்லையென்றும் மத்திய அரசில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க., சி.பி.ஐ., அமலாக்கப் பிரிவு, வருமான வரித்துறை ஆகியவற்றைப் பயன்படுத்தி தங்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என அவர் கேள்வியெழுப்பினார்.
தி.மு.கவிடம் இருப்பதாக அண்ணாமலை கூறிய, சொத்துகள், பள்ளிக்கூடங்கள் ஆகியவை குறித்து 15 நாட்களுக்குள் ஆவணங்களை வெளியிட வேண்டுமென்றும் இல்லாவிட்டால் அவர் மீது வழக்குத் தொடுக்கப்படும் என்றும், தனி நபர்கள் மீது சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு அவர்கள் வழக்குத் தொடுப்பார்கள் என்றும் ஆர்.எஸ். பாரதி கூறினார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆல்ஸ்டோம் நிறுவனத்தில் 200 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியிருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து கேட்டபோது, 2014 ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. இத்தனை ஆண்டுகளாக என்ன செய்தது என்று கேள்வி எழுப்பினார் ஆர்.எஸ். பாரதி. முடிந்தால் சி.பி.ஐயை வைத்து வழக்குத் தொடுக்கட்டும் என்றும் கூறினார்.
அண்ணாமலை தி.மு.கவினரின் சொத்துப் பட்டியலை வெளியிட்டிருப்பதோடு நிறுத்தாமல், தமிழ்நாட்டில் ஆட்சியிலிருந்த அனைத்துக் கட்சியினரின் சொத்துப் பட்டியலையும் வெளியிடப்போவதாகக் கூறியிருப்பது, அ.தி.மு.கவைக் குறித்துதான் என்பது வெளிப்படையாகவே தெரிந்தது. 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவுடனான கூட்டணி குறித்து தனது அதிருப்தியை ஒரு கட்சிக்கூட்டத்தில் அண்ணாமலை வெளியிட்டார் என்று ஒரு தகவல் சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
அண்ணாமலை மீது வழக்கு தொடர்வேன்: அமைச்சர் செந்தில் பாலாஜி

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் இன்று திமுகவினர் சொத்து மதிப்பை வெளியிடுவதாக பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியிருந்தார்.
இது தொடர்பாக இன்று கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளிக்கையில், "இதற்கான போதிய விளக்கத்தை எங்கள் கழகத்தின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கொடுத்திருக்கிறார். நான் சில பத்திரிகைகளில், தொலைக்காட்சிகளில் பார்த்தேன். மனசாட்சி உள்ள யாரும் அதை பில் என எடுத்துக் கொள்ள மாட்டார்கள். பில் எப்படி இருக்கும் என அனைவருக்கும் தெரியும். இதை வைத்துக் கொண்டு பில் வெளியிட்டார் எனச் சொல்வது சரியா.
இந்த எக்சல் ஷீட்டை தயாரிக்க தான் இவ்வளவு மாதமா? எனக்கு ஒண்ணுமே இல்லை என்கிறார். ஆனால் அவர் வசிக்கும் வீட்டின் வாடகை ரூ.3.75 லட்சம் லட்சம். நண்பர்கள் தான் தனக்கு உதவுவதாக சொல்கிறார். நண்பர்கள் ஒரு நாள் உதவலாம், ஒரு மாதம் உதவலாம், எல்லா நாட்களும் உதவி செய்வார்களா?
அரசியல் கட்சியில் ஒரு பொறுப்பிலிருந்து கொண்டு யாரோ செலவு செய்கிறார் எனக் கூறினால் வார் ரூமில் இருந்தா செலவு செய்கிறார்கள். அவருக்கு செலவும் செய்யும் நண்பர் யார் என்பதை வெளியிட வேண்டும். எங்கள் கட்சியைச் சேர்ந்த அனைவரும் சொத்து மதிப்பை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளோம். அதை எடுத்து வெளியிட்டுவிட்டு புதிதாக வெளியிடுவதாகக் கூறி வருகிறார்.
அவருடைய தேர்தல் அறிக்கையில் சொந்த செலவில் 0 எனக் குறிப்பிட்டுள்ளார். அப்போது அவருக்கு யார் செலவு செய்தார் எனக் கூற வேண்டும். பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி நிருபர்களின் நேரத்தை வீணடித்து வருகிறார். இன்னொருவர் ரூ.4.5 லட்சத்துக்கு வாங்கிய கடிகாரத்தை தான் ரூ.3 லட்சத்திற்கு வாங்கியதாகக் கூறுகிறார்.
ரஃபேல் கடிகாரம் அரிதான பொருள் என்றால் அதற்கு விலை ஏற தானே செய்யும். இவர் எவ்வாறு விலையைக் குறைத்து வாங்கினார். தான் வாங்கிய ஒரு வெகுமதி, லஞ்சத்தை மறைக்க பல பொய்களைச் சொல்லி வருகிறார். பரிசு பொருள் என்றால் வெளிப்படையாக சொல்லிவிடுவதில் என்ன தவறு. சொத்து பட்டியல் எனச் செய்தியை வெளியிடும் அண்ணாமலை ஏன் கேள்விகளுக்குப் பதில் அளிக்கவில்லை.
தேசிய கட்சியில் இருந்து கொண்டு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை பேசுகிறார். அதில் எந்த முகாந்திரம், ஆதாரமும் இல்லை. அண்ணாமலை வீட்டு வாடகை, கார் டீசல், ஊழியர்கள் சம்பளம், பராமரிப்பு செலவு எல்லாம் யார் கொடுக்கிறார்? நான்கு ஆடு மேய்த்து சம்பாதிப்பதில் ரூ.3.75 லட்சம் வாடகைக்கு உள்ள வீட்டில் வசிக்க முடியுமா?
நேர்மையானவர் ஏன் இன்னொருவர் தயவில் வசிக்க வேண்டும். கோமாளித்தனத்திற்கு என்னிடமும் பதில் கேட்பது சரியா? கட்சி தேசிய கட்சியாக இருக்கலாம். ஆனால் அதன் தலைமை கோமாளியாக இருந்தால் என்ன செய்வது? அதில் என்னைப் பற்றியும் ஒரு ஸ்லைட் உள்ளது. முதல்வர் அனுமதி பெற்று நானே நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய இருக்கிறேன். ஒரு பொய்யை மறைக்க ஓராயிரம் பொய்களை சொல்பவர் வைக்கும் குற்றச்சாட்டிற்கு பதில் அளிக்க முடியாது” என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












