You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வைரல் வீடியோவில் இடுப்பு மற்றும் கழுத்து வரை மண்ணில் புதைக்கப்பட்ட 2 பெண்கள் என்ன ஆயினர்?
- எழுதியவர், ஷுரைஹ் நியாஸி
- பதவி, பிபிசி இந்தி, போபாலில் இருந்து
மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் வசிக்கும் மம்தா பாண்டே, கடந்த ஞாயிற்றுக் கிழமை தான் அனுபவித்த அந்த துன்பத்தை அடிக்கடி நினைவு கூறுகிறார்.
நிலத்தகராறு காரணமாக அவரும் அவரது அண்ணி ஆஷா பாண்டேயும் சாலையில் இடுப்பளவு மண்ணில் புதைக்கப்பட்டனர். அதாவது, இடுப்பிற்கு கீழே உள்ள பகுதி சாலையில் உள்ள மண்ணில் அழுத்தமாக புதையுண்டது.
இந்த இரண்டு பெண்களும் மண்ணில் புதைந்து கிடந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
மம்தா தற்போது ரேவாவில் உள்ள சஞ்சய் காந்தி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
“வீட்டில் யாரும் இருக்கவில்லை. எங்கள் நிலம் வழியாக அவர்கள் சாலை அமைத்துக் கொண்டிருந்தனர். ஆரம்பத்திலிருந்தே எங்கள் குடும்பம் அவர்களை எதிர்த்து வந்துள்ளது. அன்றைய தினம் அவர்கள் திடீரென டிப்பர் லாரியில் மண்ணுடன் வந்தனர். அவர்களைத் தடுக்க நாங்கள் அதன் பின்னால் அமர்ந்தோம். அதை தொடர்ந்து டிரைவர் தடுப்பை திறந்து எங்கள் மீது மண்ணை கொட்டினார்,” என்று இச்சம்பவம் குறித்து அவர் கூறினார்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு மம்தா மயக்கமடைந்தார். கிராமத்தில் ஏற்பட்ட சலசலப்பை அடுத்து மக்கள் விரைவாக அங்கு வந்தனர். மண்வெட்டியின் உதவியுடன் மண்ணை அகற்றி அவர்களை வெளியே எடுத்தனர்.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மிரட்டப்பட்ட பெண்கள்
"என் உயிர் போய் விடும் போல் உணர்ந்தேன். சிறிது தாமதித்திருந்தால் என்னால் உயிர் பிழைத்திருக்க முடியாது,” என்று அந்த தருணம் பற்றி அவர் கூறினார்.
இந்த சம்பவத்தில் ஆஷா இடுப்பு வரை புதைக்கப்பட்ட அதேநேரம் மம்தா கழுத்து வரை மண்ணிற்கு அடியில் சென்றுவிட்டார்.
சாலை அமைப்பதை எதிர்த்ததால் மீண்டும் தங்களைக் கொல்ல முயற்சி செய்யப்படலாம் என்று மம்தாவும், ஆஷாவும் அஞ்சுகின்றனர்.
உங்களை உயிருடன் விடமாட்டோம் என அவர்கள் மிரட்டியதாக இருவரும் கூறுகின்றனர்.
இந்த சம்பவம் நடந்தபோது தாங்கள் வீட்டில் தனியாக இருந்ததாக ஆஷா கூறினார்.
“சாலை அமைக்க மண் நிரப்பப்பட்ட லாரியுடன் அவர்கள் வந்தனர். வீட்டு ஆண்கள் வந்த பிறகு இந்த விஷயம் பற்றிப் பேசலாம் என்று அவர்களிடம் சொன்னோம். ஆனால் அவர்களின் எண்ணம் வேறாக இருந்தது. என்ன நடந்தாலும், உயிரையே எடுக்க வேண்டி வந்தாலும் சாலை அமைப்போம் என்று அவர்கள் சொன்னார்கள்,” என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த வீடியோ வெளிவராமல் இருந்திருந்தால் ஒருவேளை அந்த நபர்கள் தங்கள் உயிரை பறித்திருப்பார்கள் என்றும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்காது என்றும் ஆஷா கூறுகிறார்.
முழு விவகாரம் என்ன?
ரேவா மாவட்டத்தின் ஹனௌதா கோடார் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. குற்றம் சாட்டப்படும் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் இரு தரப்புமே ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
ஆனால் அவர்களுக்குள் சாலை தொடர்பான தகராறு நிலவிவருகிறது. குற்றம் சாட்டப்பட்ட தரப்பினர் சாலை அமைக்க விரும்புகின்றனர்.
அது தங்கள் நிலம் என்றும் என்ன நடந்தாலும் சாலை அமைக்க அனுமதிக்கமாட்டோம் என்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் சொல்கிறார்கள்.
ஆனால் இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்குகிறதோ அதன்படி செய்யலாம் என பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியுள்ளனர். ஆனால் குற்றம் சாட்டப்படும் தரப்பினர் பிடிவாதமாக இருந்தனர். அன்றைய தினம் ஒரு லாரியில் மண்ணை கொண்டு வந்தனர். அதன் பின்னரே இந்த சம்பவம் நடந்துள்ளது.
குற்றம் சாட்டப்படும் தரப்பினர் என்ன சொல்கிறார்கள்?
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 5 பேரில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். லாரி உரிமையாளர் ராஜேஷ் சிங், ஓட்டுநர் பிரமோத் கோல் மற்றும் பெண்ணின் உறவினர் விபின் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட மற்றொருவரான கோகர்ன் பிரசாத் பாண்டே செவ்வாய்க்கிழமை , நீதிமன்றத்திற்கு வந்து சரணடைந்தார். குற்றம் சாட்டப்பட்ட மகேந்திர பிரசாத் பாண்டே தேடப்பட்டு வருகிறார்.
தன் மீது பொய் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன என்று கோகர்ன் பிரசாத் பாண்டே கூறினார்.
"நாங்கள் எங்கள் சொந்த வேலைக்காக செம்மண் ஏற்றி வந்தோம். அந்த இடத்தில் சிறிது மண்ணை போட்டுவிட்டு மேலே செல்ல இருந்தோம். அப்போது திடீரென இரு பெண்களும் அதன் பின்னால் வந்து அமர்ந்தனர். ஓட்டுநரால் பார்க்க முடியவில்லை. எனவே இந்த சம்பவம் நடந்தது,” என்று அவர் கூறினார்.
இந்த பொது நிலத்தில் இருவருக்கும் உரிமை இருப்பதாகவும், நீதிமன்றத்தில் தங்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
"இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது., குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாரும் தப்பிக்க முடியாது. மீதமுள்ள குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர், விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள்," என்று ரேவா காவல்துறை கண்காணிப்பாளர் விவேக் சிங் கூறினார்
மாநில பாஜக அரசு மீது எதிர்க்கட்சிகள் விமர்சனம்
இந்த சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் மற்றும் தலைவர்களின் விமர்சனத்திற்கு மாநில அரசு ஆளானது. இந்த விவகாரத்தை எழுப்பிய மேற்கு வங்காளத்தில் ஆட்சி செய்யும் திரிணாமுல் காங்கிரஸ், முதல்வர் மோகன் யாதவ் வெட்கித் தலைகுனிய வேண்டும் என்று கூறியுள்ளது.
"தேசிய ஜனநாயக அரசு மீண்டும் வந்த பிறகு பெண்களுக்கு எதிரான கொடுமைகள் 3 மடங்கு அதிகரித்துள்ளன." என்று அக்கட்சி கூறியுள்ளது.
மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜிது பட்வாரியும் இந்த விவகாரத்தில் அரசை சாடினார்.
"இந்த சம்பவம் பாஜக ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது" என்று அவர் சமூக வலைதளமான எக்ஸில் எழுதினார். ”பெண்களுக்கு எதிரான கொடுமைகளில் மத்தியப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. முதலமைச்சர் அவர்களே, இந்தச் சம்பவம் குறித்து நியாயமான, விரைவான விசாரணை நடத்தப்படும் என்று இந்த சகோதரிகள் உங்கள் அரசிடம் எதிர்பார்க்க முடியுமா? பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க உங்கள் அரசு தொடர்ந்து தவறி வருகிறது,” என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த சம்பவத்தின் வீடியோ வைரலான பிறகு விஷயம் வேகம் பெற்றது மற்றும் தலைநகர் போபாலில் நிர்வாகம் செயலில் இறங்கியது. இதையடுத்து, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது குறித்து முதல்வர் மோகன் யாதவ் பேசினார்.
இதனிடையே தேசிய மகளிர் ஆணையமும் காவல்துறைக்கு கடிதம் எழுதி இந்த சம்பவம் குறித்து விவரங்களை கேட்டுள்ளது. இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை அறிக்கையை 3 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு மாநில டிஜிபியிடம் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் மத்தியப் பிரதேசம் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது.
மாநிலத்தில் பெண்கள் மீதான குற்றங்கள் தொடர்பாக 30,673 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)