You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கையை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அசகாய சூரனாக உருவெடுக்கிறதா?
புனேவில் இன்று நடந்த உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் இலங்கையை எதிர்த்து ஆப்கானிஸ்தான் அணி சேஸிங் செய்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இங்கிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்த ஆப்கானிஸ்தான், அடுத்து பாகிஸ்தான், இப்போது இலங்கை என தொடர்ச்சியாக பெரிய அணிகளுக்கு எதிராக நல்லதொரு வெற்றியைப் பதிவு செய்து இந்திய ரசிகர்களின் மனங்களில் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளார்கள்.
பந்துவீச்சிலும் சரி பேட்டிங்கிலும் சரி இதுவரை ஆடிய ஆட்டங்களில் அவர்களது திறன் நல்ல முறையில் வெளிப்பட்டிருக்கிறது. குறிப்பாக சேஸிங்கில் தொடக்கம் முதல் இறுதி வரை பொறுப்பான பேட்டிங் வெளிப்பட்டுள்ளது.
களத்தில் நங்கூரமிட்டு, சூழலுக்கு ஏற்றாற்போல் கூட்டணி அமைத்து நிதானமாக ஆடுவது பல நேரங்களில் வெற்றிப்பாதைக்கு அவர்களை அழைத்துச் சென்றுள்ளது.
முதலில் இங்கிலாந்தை வீழ்த்தியபோது அவர்களிடம் இன்ப அதிர்ச்சி தென்பட்டது. ஆனால், அடுத்ததாக பாகிஸ்தானை வென்றபோது நம்பிக்கை மிளிர்ந்தது. தற்போது இலங்கையையும் வெற்றி பெற்று ஆப்கானிஸ்தான் அணி உலகக்கோப்பையில் அசகாய சூரராக உருவெடுக்கும் பாதையில் மெல்ல மெல்ல அடியெடுத்து வைக்கிறதா என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இரு அணிகளுக்குமே இந்த ஆட்டத்தில் கிடைக்கும் வெற்றி முக்கியத்துவம் வாய்ந்தது. இரு அணிகளும் தற்போது 4 புள்ளிகளுடன் இருப்பதால், அடுத்த கட்டத்துக்குச் செல்ல வெற்றி அவசியம் என்பதால் வெற்றிக்காக கடுமையாகப் போராடின.
ஆனால், ஆப்கானிஸ்தானும், இலங்கையும் சம வலிமையுடன் இருக்கின்றனவா என்றால் இல்லை. ஆப்கானிஸ்தானின் வலிமையான பந்துவீச்சுக்கு இணையாக இலங்கை அணி போட்டியிட முடியாமல் முதல் இன்னிங்ஸில் திணறியது.
அதன் விளைவாக ஆப்கானிஸ்தானுக்கு 242 என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த இலக்கை 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து மிக எளிதாகவே எட்டியது ஆப்கானிஸ்தான்.
ஆப்கான் டாஸ் வெற்றி
டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. இரவு நேரத்தில் பனிப்பொழிவு இருப்பதால், அதை சாதகமாகப் பயன்படுத்தும் நோக்கில் சேஸிங்கை தேர்ந்தெடுத்தது ஆப்கானிஸ்தான். புனே ஆடுகளம் ஓரளவுக்கு பேட்டர்களுக்கு ஒத்துழைக்கும் என்பதால், ஆப்கானிஸ்தான் குறைந்த ஸ்கோரில் இலங்கையை சுருட்ட முயலும்.
இலங்கை அணி பேட்டர்கள் நிசங்கா, கருணா ரத்னே ஆட்டத்தைத் தொடங்கினர். இதில் திமுத் கருணாரத்னேயின் ஒருநாள் வருகை மிகவும் வேடிக்கையானது.
கடந்த 2015ஆம் ஆண்டு கடைசியாக கருணா ரத்னே ஒருநாள் போட்டியில் விளையாடியிருந்தார், அவர் அதன்பின் விளையாடவில்லை. அவருக்கு 2019ஆம் ஆண்டு கேப்டன்ஷிப் வாய்ப்பு வழங்கப்பட்டது. 2020 முதல் 2021ஆம் ஆண்டு வரை 3 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கருணாரத்னே விளையாடியிருந்தார்.
ஆனாலும் அவரை அணியில் தேர்ந்தெடுத்து நிசாங்காவுடன் சேர்ந்து தொடக்க வீரராக களமிறக்க இலங்கை அணி முடிவு செய்தது. கடந்த உலகக்கோப்பைத் தொடரிலிருந்து 17 விதமான ஜோடிகளை உருவாக்கி தொடக்க ஆட்டக்காரர்களுக்கு பரிசோதித்துள்ளது இலங்கை அணி. இதில் கருணாரத்னே, நிசாங்கா ஜோடி 14வது முறையாக களமிறங்குகிறது.
ஆப்கானிஸ்தான் தொடக்கத்திலேயே பரூக்கியையும், சுழற்பந்துவீச்சாளர் முஜிபுர் ரஹ்மானையும் களமிறக்கி பந்துவீசச் செய்தது.
இலங்கை பேட்டர்கள் ரன் சேர்க்க கடும் சிரமப்பட்டனர். பருக்கி வீசிய 6வது ஓவரில் கருணாரத்னே 15 ரன்னில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார்.
பத்து ஓவர்கள் பவர்ப்ளே முடிவில் இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 41 ரன்கள் சேர்த்திருந்தது. இதில் இலங்கை அணி 4 பவுண்டரிகள் மட்டுமே சேர்த்திருந்தது. குஷால் மென்டிஸ், நிசாங்கா இருவரும் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சை எதிர்கொண்டு ரன் சேர்க்க மிகவும் சிரமப்பட்டதால் ரன்ரேட் மந்தமாக இருந்தது.
அசமத்துல்லா ஓமர்ஜாய் வீசிய 19வது ஓவரில் நிசாங்கா 46 ரன்கள் சேர்த்த நிலையில் குர்பாஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு இருவரும் 62 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 2 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் சேர்த்தது.
மந்தமான பேட்டிங்
மூன்றாவது விக்கெட்டுக்கு சமரவிக்ரமா வந்து மென்டிஸுடன் சேர்ந்தார். சமரவிக்ரமா வந்தபின் ரன்களை வேகமாகச் சேர்த்தார். 22வது ஓவரில்தான் இலங்கை அணி 100 ரன்களை எட்டியது.
ரஷித் கான், முகமது நபி, ஓமர்ஜாய் என மாறி மாறி நெருக்கடியாகப் பந்துவீசி இலங்கை பேட்டர்களை திணறவிட்டனர். விக்கெட்டுகளை இழந்துவிடக்கூடாது என்ற நோக்கில் இலங்கை பேட்டர்கள் நிதானமாக பேட் செய்ததால் ரன் ரேட் மிகவும் மந்தமாகவே உயர்ந்தது.
ஆமை வேகத்தில் பேட் செய்த மென்டிஸ் 50 பந்துகளில் 39 ரன்கள் சேர்த்து முஜிபுர் ரஹ்மான் வீசிய 27வது ஓவரில் விக்கெட்டை இழந்தார். 3வது விக்கெட்டுக்கு மென்டிஸ், சமரவிக்ரமா ஜோடி 50 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
முஜிபுர் வீசிய 29வது ஓவரில் மற்றொரு விக்கெட்டும் வீழ்ந்தது. சமரவிக்ரமா 36 ரன்களுடன் பேட் செய்த நிலையில் முஜிபுர் ரஹ்மான் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி பெவிலியின் திரும்பினார். இலங்கை அணி மிகப்பெரிய விக்கெட்டை இழந்து தடுமாறியது.
முப்பது ஓவர்களில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் சேர்த்தது. 134 ரன்களில் மென்டிஸ் விக்கெட்டையும், 139 ரன்களில் சமரவிக்ரமா விக்கெட்டையும் 5 ரன்கள் இடைவெளியில் இலங்கை இழந்தது.
அசலங்கா, டி சில்வா ஜோடி 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடியும் நிலைக்கவில்லை. 35வது ஓவரில், ரஷித் கான் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி டி சில்வா14 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த சில ஓவர்களில் அசலங்கா 22 ரன்னில் பரூக்கி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
அடுத்து களமிறங்கிய சமீரா ஒரு ரன் சேர்த்த நிலையில் ஜாத்ரனால் ரன் அவுட் செய்யப்பட்டார். 40 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 185 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 30 ஓவர்கள் முதல் 40 ஓவர்கள் வரை இலங்கை அணி, 41 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
இலங்கை அணி இந்த உலகக்கோப்பைத் தொடரில் கடைசி 15 ஓவரில் அதன் ரன்ரேட் 5.78 என வைத்திருந்தது. இது மற்ற எந்த அணிகளையும்விட மிகக் குறைவானது.
ரஷித் கானுக்கு 100வது போட்டி
ரஷித் கான் இன்று தனது 100வது ஒருநாள் ஆட்டத்தில் விளையாடுகிறார். டி20 போட்டிகளில் சிறந்த பந்துவீச்சாளராகக் கருதப்படும் ரஷித் கான் ஒருநாள் போட்டிகளில் 20 ரன்களுக்கும் மேல் சராசரி வைத்துள்ளார்.
ஜிம்பாப்வே, நெதர்லாந்துக்கு அணிகளுக்கு எதிராகத்தான் இவர் பெரும்பாலான விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
இந்த உலகக்கோப்பைத் தொடரில்கூட இங்கிலாந்துக்கு எதிராக ரஷித் கான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், அதில் 2 விக்கெட்டுகள் டெய்லெண்டர்களை வீழ்த்திக் கிடைத்தது.
ரஷித் கான் பந்துவீச்சு சராசரி 2023ஆம் ஆண்டில் 37 முதல் 47 ஆக மோசமாக இருக்கிறது. இன்றைய ஆட்டத்தில்கூட இலங்கையின் ரன் சராசரி 4.5 ஆக இருக்கும்போது, ரஷித் கான் ஓவரில் ரன் சராசரி 5.5 ஆக இருக்கிறது.
முதல் இன்னிங்ஸில் இலங்கையைப் பாடாய்ப்படுத்திய ஆப்கானிஸ்தான், தற்போது 242 என்ற இலக்குடன் பேட்டிங் செய்து வருகிறது. அவர்களது பந்துவீச்சை சமாளிக்க முடியாத இலங்கை அணி, ஆப்கன் வீரர்களின் பேட்டிங்கையும் கட்டுப்படுத்த முடியவில்லை.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)