கண்ணாடி பார்க்கும் போதே கழுத்து மூலம் ஆரோக்கியத்தை தெரிந்து கொள்வது எப்படி?

    • எழுதியவர், சந்தன் குமார் ஜஜ்வாரே
    • பதவி, பிபிசி செய்தியாளர்

மக்கள் பெரும்பாலும் உடல் பருமனை அதிக எடை அல்லது தொப்பை கொழுப்புடன் தொடர்புபடுத்திக் கொள்கின்றனர். இதுபோன்ற உடல் பருமனால் பெரும்பாலானோர் பீதியடைந்து எடையைக் குறைக்க முயற்சி செய்கிறார்கள்.

ஆனால் நமது உடல் ஆரோக்கியத்தைப் பற்றி உணர்த்தும் உடல் உறுப்புகளில் கழுத்தும் முக்கியமானதாகும். ஆனால் மக்கள் பொதுவாக இதில் கவனம் செலுத்துவதில்லை.

கழுத்துப் பகுதி முகத்திற்கு கீழ் இருப்பதாலும் எளிதில் பார்க்கக் கூடிய வகையில் இருப்பதாலும், கழுத்தில் கறை தென்பட்டாலோ, நிறம் மாறினாலோ பொரும்பாலானோர் அதை சரி செய்யவே முயற்சிக்கின்றனர்.

ஆனால் கழுத்துப்பகுதி வழக்கத்தை விட தடிமனாகவோ, ஒல்லியாகவோ இருந்தால் அது எதை உணர்த்துகிறது? இது குறித்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை என்ன?

அழகு மட்டுமல்ல, ஆரோக்கியமும் கூட..

மெல்லிய கழுத்து என்பது எப்போதும் அழகுடன் தொடர்புடைய ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இதை மெருகேற்றிக் காண்பிக்க பலரும் ஆபரணங்களை அணிவதுண்டு.

பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் தங்களின் கழுத்தை அழகாக காண்பித்துக்கொள்ள விரும்புகிறார்கள்.

ஒரு சில ஆப்ரிக்க நாடுகளில், கழுத்தை மெல்லியதாக வைத்துக்கொள்ள வளையங்களை கழுத்தில் அணிந்துகொள்வார்கள். இதனால் கழுத்து மெல்லியதாகவும் நீளமாகவும் இருக்கும் என நம்புகின்றனர்.

கழுத்தை வசீகரமாக மாற்ற மக்கள் உடற்பயிற்சி மையங்களை நாடி பிரத்யேக உடற்பயிற்சிகளையும் மேற்கொள்கின்றனர்.

உடற்பயிற்சி செய்வதால் உடல் மற்றும் கழுத்துப் பகுதியில் ஏற்படும் மாற்றம் இயல்பானதுதான். ஆனால் நம் உடலை விட கழுத்துப்பகுதி மெல்லியதாகவோ, தடிமனாகவோ இருந்தால், அது பல்வேறு நோய்களுக்கான அறிகுறியாக இருக்கலாம்.

தடிமனான கழுத்து எதை உணர்த்துகிறது?

டெல்லியில் உள்ள தேசிய மருத்துவ அறிவியல் அகாடமியின் தலைவர் டாக்டர் சிவ் குமார் சரின் தனது 'On Your Body' என்ற புத்தகத்தில் இதுகுறித்து பேசியுள்ளார்.

"பொதுவாக பெண்களின் கழுத்துச் சுற்றளவு 33 முதல் 35 செ.மீ ஆகவும், ஆண்களுக்கு 37 முதல் 40 செ.மீ ஆகவும் இருக்க வேண்டும். இதைவிட கூடுதலாக இருந்தால் நோய் அறிகுறியாக இருக்கலாம்" என பிபிசியிடம் கூறினார்.

கழுத்தின் தடிமனை வைத்து நோய்களை கண்டறிவது தொடர்பாக நிறைய ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இரைப்பை குடலியல் இணை பேராசிரியர் டாக்டர் ஷாலிமர் இதுகுறித்து பேசுகையில், "கழுத்துப் பகுதியில் கொழுப்பு சற்று அதிகமாக இருந்தாலோ அல்லது கழுத்து குட்டையாக இருந்தாலோ பெரும்பாலும் கல்லீரலில் கொழுப்பு அல்லது உடல்பருமன் போன்ற பிரச்னைகள் இருப்பதைக் கண்டறிந்துள்ளோம். சில சமயங்களில் இவர்கள் அதிகமாக குறட்டை விடுவார்கள்" என்றார்.

ஒருவரின் கழுத்து வழக்கத்தை விட தடிமனாக இருந்தால் அது வளர்சிதை மாற்ற நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.

டெல்லியில் உள்ள ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனையின் மூத்த ஆலோசகராகரான டாக்டர் மோஹ்சிம் வாலி கூறுகையில், "தடிமனான கழுத்து இருக்கும் நபர்களுக்கு அதிக கொழுப்பு, கல்லீரல் கொழுப்பு, நீரிழிவு நோய், அதிக ரத்தக்கொதிப்பு இருக்கலாம். இதற்கு தனி பரிசோதனைகள் தேவை" என்கிறார்.

தடிமனான கழுத்து உடல் பருமனுக்கான அறிகுறியாகவும் இருக்கக்கூடும்.

"ஒரு பெண்ணின் கருப்பை வாய் தடிமனாக இருந்தால், அது பாலிசிஸ்டிக் கருப்பை (polycystic ovary) நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். கருப்பையில் கட்டிகள் உண்டாகலாம். இது தீவிர பிரச்னைக்கு வழிவகுக்கும். சீரற்ற மாதவிடாய் மற்றும் கருவுறுதலில் பிரச்னை போன்றவையும் இதில் அடங்கும்" என மோஹ்சிம் வாலி கூறுகிறார்.

சில நோய்களால் கழுத்து தடிமனாக இருப்பவர்களுக்கு கழுத்தின் பின்புறம் கருப்பாக மாறலாம். இந்தக் கருமையான கழுத்து என்பது சருமப் பிரச்னையை தாண்டி வேறு ஏதேனும் மருத்துவ பிரச்னைக்கான அறிகுறியாகக்கூட இருக்கலாம்.

புனேவில் உள்ள டி.ஒய். மருத்துவக் கல்லூரி பேராசிரியர் அமிதவ் பானர்ஜி இது குறித்து பேசுகையில், "ஒருவரின் கழுத்து வழக்கத்தை விட தடிமனாக இருந்தால், அவருக்கு உடல்நலப் பிரச்னை இருப்பதை குறிக்கும். குறிப்பாக அவர் உடல் பருமனை நோக்கிச் செல்கிறார் என அர்த்தம். உடல் பருமன் என்பது நிறைய நோய்களை உள்ளடக்கியுள்ளது." என்றார்.

"ஒரு பொதுவான கண்ணோட்டத்தில் இரண்டு பேரின் உடல் அமைப்பு ஒரே மாதிரியாகத் தெரிந்தால், அதாவது, எடை அடிப்படையில் இருவரும் ஒரே மாதிரியாகத் தெரிந்தாலும், அவர்களில் ஒருவரின் கழுத்து தடிமனாக இருந்தால், அவரது உடலில் அதிக கொழுப்பு உள்ளது என்றும், அவர் உடல் பருமனை நோக்கி நகர்கிறார் என்றும் அர்த்தம்." என்கிறார் அமிதவ் பானர்ஜி.

மெல்லிய கழுத்து உணர்த்துவது என்ன?

மெல்லிய கழுத்து பொதுவாக அழகுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. ஆனால் இது தைராய்டு தொடர்பான நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.

மெல்லிய கழுத்து உடையவர்களுக்கு பெரும்பாலும் கூடுதல் முதுகெலும்புகள் இருக்கும்.

முதுகு தண்டுவடத்தில் பொதுவாக ஒருவருக்கு 7 முதுகெலும்புகள் இருக்கும். சிலருக்கு இது 8 ஆக இருக்கும்.

அதாவது ஒருவருக்கு கையில் 5 விரல்களுக்கு பதில் 6 விரல்கள் இருக்கிறதல்லவா. அதுபோலதான் இதுவும்.

முதுகு தண்டுவடத்திற்கு முதுகெலும்புதான் முக்கியமாக உள்ளது. முதுகு தண்டுவடம் மற்றும் நரம்புகளுக்கு இதுதான் பாதுகாப்பு அளிக்கிறது.

"மெல்லிய கழுத்து பொதுவாக எந்தப் பிரச்னையையும் ஏற்படுத்தாது. ஆனால் சில சூழல்களில் கூடுதலாக ஒரு முதுகெலும்பு தென்படும் போது (8 ஆக இருக்கும்போது) கைகளில் உணர்ச்சியற்ற தன்மை போன்ற பிரச்னைகள் இருக்கும்" என மருத்துவர் வாலி கூறுகிறார்.

"சில சமயங்களில் ரத்த சோகையால் கூட (anemia) சிலரின் கழுத்து வழக்கத்தை விட மெல்லியதாக தென்படலாம். இவர்களுக்கு இரும்புச்சத்து, வைட்டமின்கள் மற்றும் இதர ஊட்டச்சத்துகள் அளிக்கப்படுகின்றன. சில சமயங்களில் ரத்தத்தை மாற்ற வேண்டிய தேவையும் (blood transfusion) ஏற்படுகிறது" என்கிறார் பெங்களூருவைச் சேர்ந்த மருத்துவர் அடேரியா நிகர்சந்திரா.

சில சமயங்களில் இது மரபணு ரீதியாகவும் இருக்கலாம் என்றார் அவர். தந்தைக்கு நீளமான மற்றும் மெல்லிய கழுத்து இருந்தால், மகனுக்கும் அதேபோல இருக்கலாம்.

பெரும்பாலும் மெல்லிய கழுத்து உடையவர்களுக்கு பிரத்யேக பிசியோதெரபி சிகிச்சை வழங்க ஆலோசிக்கப்படுகிறது. அவர்கள் உடலில் உள்ள ஊட்டச்சத்துகளின் அளவு மருந்துகள் மூலமாகவோ, மற்ற வழிகளிலோ சமன் செய்யப்படும். இதன்மூலம் அவர்களின் கழுத்து தசைகள் வலுவாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

வழக்கத்தை விட தனது கழுத்து தடிமனாக இருப்பதைப் போல ஒருவர் கருதினால் உடனடியாக அவர்கள் தங்களின் உடல் எடையை கட்டுப்படுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

பொதுவாக குழந்தைப்பேறுக்குப் பிறகு பெண்களின் உடல் எடை அதிகரிக்கும். அதனால் அவர்கள் தங்களின் உணவு முறையில் தனி கவனம் செலுத்துமாறு பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

உங்களின் உடல் அல்லது ஆரோக்கியம் ஆபத்தை நோக்கி செல்கிறதா என்பது தெரியவேண்டும் என்றால் எப்போதெல்லாம் கண்ணாடியில் முகம் பார்க்கிறீர்களோ, அப்போது உங்களின் கழுத்தையும் பார்த்துக் கொள்ளுங்கள்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு