ஐபிஎல் போட்டியில் சிறுவர்களுக்கு பயிற்சியளித்து திருட்டில் ஈடுபட வைத்த கும்பல் - இன்றைய முக்கிய செய்திகள்

பட மூலாதாரம், Getty Images
இன்றைய தினம் (02/04/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளியான முக்கிய செய்திகளைப் பார்க்கலாம்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது ரசிகர்கள் போர்வையில் சிறார்களைப் பயன்படுத்தி செல்போன் திருட்டில் ஈடுபட்ட ஜார்க்கண்ட், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 8 பேர் கொண்ட கும்பலை சென்னை போலீசார் கைது செய்துள்ளதாக இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், "அவர்களிடமிருந்து 38 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த மாதம் 28ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை, பெங்களூரு அணிகள் மோதின. இந்தப் போட்டியின்போது 20க்கும் மேற்பட்ட ரசிகர்களின் செல்போன்கள் அடுத்தடுத்து திருடப்பட்டன.
செல்போன்களை பறிகொடுத்த ரசிகர்கள் இது தொடர்பாக போலீஸில் புகார் அளித்தனர். அதன்படி, திருவல்லிக்கேணி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். முதல் கட்டமாக செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உதவியுடன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கிரிக்கெட் மைதானத்தில் பதிவான அனைத்து வீடியோ மற்றும் புகைப்பட காட்சிகளும் ஏஐ தொழில்நுட்பம் மூலம் ஆய்வு செய்யப்பட்டன" என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம், செல்போன் பறிப்பு கும்பல் அடையாளம் காணப்பட்டதாகவும், அவர்கள் சேப்பாக்கத்தில் இருந்து கோயம்பேடு சென்று அங்கிருந்து பேருந்து மூலம் வேலூருக்கு சென்றதும், பின்னர் அங்குள்ள தங்கும் விடுதி ஒன்றில் அறை எடுத்து பதுங்கி இருந்ததும் தெரிய வந்ததாக அந்தச் செய்தி கூறுகிறது. இதையடுத்து அவர்களைத் துப்பாக்கி முனையில் சென்னை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
அதோடு, "இதில் ஈடுபட்டவர்கள், கள்ளச் சந்தையில் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை பெற்று மைதானத்துக்குள் நுழைந்துள்ளனர். ரசிகர்களின் கூட்டத்துக்குள் புகுந்தும், உணவுக் கூடங்களில் நுழைந்தும் அங்கு ரசிகர்களின் கவனத்தை திசை திருப்பி செல்போன்கள் திருடப்பட்டுள்ளன.
பெரியவர்கள் என்றால் சந்தேகம் வரும் என்பதற்காக செல்போன் திருட்டு கும்பல், திருடுவதற்காக சிறுவர்களைப் பயன்படுத்தியுள்ளது. அதற்கு முன்னதாக சிறுவர்களுக்கு செல்போன் திருடுவது தொடர்பாக சிறப்புப் பயிற்சியையும் கும்பல் வழங்கியுள்ளது," என்றும் இந்து தமிழ் நாளிதழின் செய்தி கூறுகிறது.
எம்புரான் 24 திருத்தங்களுடன் மீண்டும் ரிலீஸ்

பட மூலாதாரம், Mohanlal
மோகன்லால் நடித்த எல்2: எம்பூரான் திரைப்படம் 24 மாற்றங்களுடன் மீண்டும் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், அதன் தயாரிப்பாளர்கள் பரிந்துரைத்தபடி சில பகுதிகள் நீக்கப்பட்டிருக்கலாம் அல்லது மாற்றப்பட்டிருக்கலாம் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
"கடந்த 2002 குஜராத் கலவரத்தை படம் சித்தரித்ததாகக் கூறப்படும் சர்ச்சையைத் தொடர்ந்து இந்தத் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
செவ்வாய்க் கிழமை மத்திய திரைப்பட வாரியம் இந்தத் திருத்தங்களை அங்கீகரித்தது. எம்புரானின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஆண்டனி பெரும்பாவூர், சில பகுதிகளை நீக்குவதற்கான முடிவு தன்னார்வமாக எடுக்கப்பட்டதாகவும், எந்த அரசியல் அழுத்தத்தாலும் அல்ல என்றும் கூறியிருந்தார்.
மோகன்லாலுக்கு படத்தின் கதைக்களம் தெரியாது என்ற செய்திகளை மறுத்த ஆண்டனி, "மோகன்லால் உள்பட படத்தின் பின்னணியில் உள்ள அனைவருக்கும் இது தெரியும்" என்று கூறியதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வக்ஃப் சட்டத்திருத்த மசோதா இன்று தாக்கல், 8 மணிநேரம் விவாதிக்க அனுமதி – இன்றைய முக்கிய செய்திகள்

பட மூலாதாரம், Getty Images
வக்ஃப் சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் புதன்கிழமை (ஏப்ரல் 2) தாக்கல் செய்யப்பட்டு அதன் மீது விவாதம் நடத்தப்படவுள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
"இந்த மசோதா மீது 8 மணிநேரம் விவாதம் நடத்தப்பட இருப்பதாகவும், தேவைப்படும்பட்சத்தில் விவாத நேரத்தை அதிகரிக்கவுள்ளதாகவும் மத்திய சிறுபான்மை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா்," என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வக்ஃப் வாரிய சொத்துளை ஒழுங்குபடுத்த வழிவகுக்கும் வக்ஃப் சட்டத்திருத்த மசோதா, மக்களவையில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் அறிமுகம் செய்யப்பட்டது.
எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்பைத் தொடா்ந்து நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு மசோதா அனுப்பப்பட்டது. மசோதாவை ஆய்வு செய்த நாடாளுமன்ற கூட்டுக் குழு, 655 பக்க அறிக்கையை தயாரித்தது.
"இதில் சில திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து, இந்த மசோதாவை மக்களவையில் மத்திய அரசு புதன்கிழமை தாக்கல் செய்யவுள்ளது" என்றும் கூறியுள்ளது அந்தச் செய்தி.
இதுகுறித்து கிரண் ரிஜிஜு செய்தியாளா்களிடம் கூறியபோது, "மக்களவையில் கேள்வி நேரம் முடிந்தவுடன் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும். அதைத் தொடா்ந்து, மசோதா மீது விவாதம் நடைபெறும். மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தலைமையில் நடைபெற்ற மக்களவை அலுவல் ஆலோசனைக் குழு (பிஏசி) கூட்டத்தில் இந்த மசோதா மீதான விவாதத்துக்கு 8 மணி நேரம் ஒதுக்க முடிவெடுக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற எதிா்க்கட்சி உறுப்பினா்கள் மசோதா மீதான விவாதத்துக்கு 12 மணிநேரம் ஒதுக்குமாறு கோரினா். தேவைப்படும்பட்சத்தில் விவாதத்துக்கு கூடுதல் நேரம் ஒதுக்கவும் முடிவு செய்துள்ளோம். இருப்பினும், இந்த மசோதா குறித்து தவறான தகவல்களைத் தொடா்ந்து பரப்பி வரும் எதிா்க்கட்சி உறுப்பினா்கள் சிலா் மக்களவையில் நடைபெறவுள்ள விவாதத்தில் பங்கேற்பதைத் தவிா்க்க முற்பட்டு வருகின்றனா்" என்று கூறியதாகவும் தினமணி செய்தி குறிப்பிட்டுள்ளது.
தலைமை ஆசிரியர் மீது போக்சோ வழக்கு பதிவு

பட மூலாதாரம், Getty Images
ஏழாம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த தலைமை ஆசிரியர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
"விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக சர்க்கரை தாஸ் (வயது 48) என்பவர் பணியாற்றி வந்தார்.
சில நாட்களுக்கு முன்பு 7ஆம் வகுப்பு மாணவிகளைக் கண்டிப்பது போல் இவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஒரு மாணவியின் தாயார் சமூக ஊடகத்தில் வீடியோ வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. வீடியோ வெளியிட்ட அந்தப் பெண், காவல்துறையில் பணியாற்றி வருகிறார்," என்று அந்தச் செய்தி கூறுகிறது.
மேலும் "பாலியல் துன்புறுத்தல் குறித்து அந்தப் பள்ளி மாணவிகள், 1098 என்ற குழந்தைகள் நல உதவி எண்ணில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் விஜயலட்சுமி, பள்ளி மாணவிகளிடம் விசாரணை நடத்தினார்.
பின்னர் அவர் கொடுத்த புகாரின் பேரில் சாத்தூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி, தலைமை ஆசிரியர் சர்க்கரைதாஸ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது," என்று அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வருடம் மாகாணசபை தேர்தல் இடம்பேறாது – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
வழக்கமாக, உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னர் மாகாணசபை தேர்தல் இடம்பெறும். எனினும் இவ்வருடம் அந்தத் தேர்தல் இடம்பெறாது என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளதாக வீரகேசரி செய்தி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

பட மூலாதாரம், nalinda.jayatissa/instagram
தேர்தலை நடத்த தேர்தல் சட்ட விதிமுறைகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளமையால் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்து இருப்பதாகவும் அந்தச் செய்தி கூறுகிறது.
மேலும் அவர், "உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 1) பாணந்துறையில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்ததாக" செய்தி கூறுகிறது.
அவர் மேலும் தெரிவிக்கையில், "தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தால் அரசியல் தலைவர்கள் எவருக்கும் வாகன பெர்மிட் வழங்கப்பட மாட்டாது. அரசியல் தலைவர்களுக்காக வழங்கப்படும் சலுகைகளைக் குறைப்பதே எமது நோக்கம். அமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் பணிபுரிவதற்கு அத்தியாவசியமான வளங்கள் வழங்கப்படும், அதைக் கொண்டு கடமையாற்றுங்கள். நாட்டின் பொருளாதாரம் ஸ்த்திர நிலையை அடையும் வரை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அரச வாகனங்கள் வழங்கப்படமாட்டாது.
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றம் அமைதியாக செயல்படுகிறது. இந்த அரசியல் கலாசாரமே நாட்டின் அபிவிருத்திக்குச் சிறந்த அடித்தளமாக உள்ளது. நாட்டை மறுசீரமைப்பதற்கு அனைத்து நிறுவனங்களும் ஒரு தேசிய கொள்கைத் திட்டத்தின் அடிப்படையில் செயல்படுவது அவசியம்.
வழக்கமாக, உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் மாகாண சபை தேர்தல் இடம்பெறும். எனினும் இவ்வருடம் தேர்தல் இடம்பெறாது. தேர்தலை நடத்த தேர்தல் சட்ட விதிமுறைகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளமையால் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்று அவர் கூறியிருப்பதாகவும் வீரகேசரி செய்தியில் கூறப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












