You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காதலனுக்கு தேநீரில் எலி மருந்து கலந்து கொடுத்த காதலி – இன்றைய டாப்5 செய்திகள்
இன்றைய (03/03/2025) நாளிதழ்கள் மற்றும் செய்தி இணையதளங்ளில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
திருமணத்துக்கு மறுத்த காதலனுக்கு டீயில் எலி மருந்து கலந்து கொடுத்த பொறியியல் மாணவி ஒருவர், முடிந்தால் உன்னை காப்பாற்றிக் கொள் என்று வாட்ஸ் ஆப்-ல் தகவல் அனுப்பியதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில், "விழுப்புரம் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 23 வயது நபர் ஒருவர் இ-சேவை மையம் நடத்தி வந்துள்ளார். அதே கிராமத்தைச் சேர்ந்த 20 வயது பொறியியல் மாணவிக்கும் அவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிந்திட, அந்த இளைஞரின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எனவே, மாணவியை திருமணம் செய்துக் கொள்ள முடியாது என்று அவர் தெரிவித்துவிட்டார். இதையடுத்து காதலனை தனது வீட்டுக்கு மாணவி அழைத்தார். அப்போது காதலனுக்கு டீ போட்டுக்கொடுத்துள்ளார். அதை குடித்த சில நிமிடங்களில் அவர் மயங்கி விழுந்தார், அவரது வாயில் நுரை வெளியேறியது. அப்போது தான் அந்த மாணவி, டீ-யில் எலி மருந்து கலந்து கொடுத்ததாக கூறினார்.
- பிளாஸ்டிக் தாளில் வேக வைத்த இட்லியால் என்ன ஆபத்து? மருத்துவர்கள் விளக்கம்
- 'இந்தி திணிப்பு' என்ற தமிழ்நாடு அரசின் குற்றச்சாட்டு சரியா? ஓர் அலசல்
- இந்தியாவுக்கும் ஓட்டோமான் பேரரசின் கடைசி கலீபாவுக்கும் என்ன உறவு? ஒரு ஆவணத்தின் மர்மம்
- சென்னை நீர்நிலைகளில் நச்சுக் கழிவுகளா? ஐஐடி ஆய்வும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மறுப்பும்
அந்த இளைஞர் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கூட்டி வரப்பட்டார். மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதனிடையே முடிந்தால் உன்னை காப்பாற்றிக் கொள் என்று காதலனுக்கு வாட்ஸ் ஆப்-ல் தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார், இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சரின் மகளுக்கு தொல்லை - 7 பேர் மீது புகார்
மகாராஷ்டிரா மாநிலத்தில் மத்திய அமைச்சர் ரக்ஷா கட்ஸேயின் மகளையும் அவரது நண்பர்களையும் பின்தொடர்ந்து தொல்லை கொடுத்ததாக 7 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்று தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில், " மகாராஷ்டிர மாநிலம், கோத்தாலி கிராமத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ரக்ஷா கட்ஸேயின் மகளும் அவரது நண்பர்களும் கலந்து கொண்டனர். அப்போது அவர்களை பின்தொடர்ந்து சென்று சிலர் தொல்லை கொடுத்துள்ளனர். அமைச்சர் மகள் உள்ளிட்ட சிறுமிகளின் புகைப்படங்களை அவர்களின் அனுமதி இல்லாமல் இந்த நபர்கள் எடுத்துள்ளனர். அமைச்சரின் மகளுக்குத் துணையாகச் சென்ற மெய்க்காப்பாளர்கள் இதை எதிர்த்த போது அந்த நபர்கள் தகாத முறையில் நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக முக்தாய் நகர் காவல் நிலையத்தில் மத்திய அமைச்சர் ரக்ஷா கட்ஸே புகார் அளித்தார். அதன்படி 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார், அவர்களில் ஒருவரான சோஹம் மாலி என்பவரைக் கைது செய்தனர். குற்றம்சாட்டப்பட்ட மற்ற நபர்களையும் கைது செய்வதற்காக போலீஸ் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. குற்றம்சாட்டப்பட்ட 7 பேர் மீதும் பாரதிய நியாய சம்ஹிதா மற்றும் போக்ஸோ சட்டப் பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் ரக்ஷா கட்ஸே செய்தியாளர்களிடம் பேசும் போது, ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது மத்திய அமைச்சரின் மகளுக்கே இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் சாமானிய மக்களின் நிலையை நினைத்துப் பாருங்கள் என்று தெரிவித்தார். " என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற கேரள நபர் சுட்டுக் கொலை
இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற கேரளாவை சேர்ந்த 47 வயது நபர் ஜோர்டானிய படைகளால் பிப்ரவரி மாதம் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்று தி டைம்ஸ் ஆப் இந்திய ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த தாமஸ் கேப்ரியல் ஜோர்டானுக்கு மூன்று மாத சுற்றுலா விசாவில் சென்றுள்ளார். இஸ்ரேலில் பணி செய்வதற்கான விசா பெற்று தருவதாக ஒரு ஏஜென்சி உறுதி அளித்ததை நம்பி , கேப்ரியல் தாமஸ், அவரது 43 வயது உறவினர் எடிசன் உட்பட நான்கு பேர் ஜோர்டான் சென்றுள்ளனர் என்று அந்த செய்தி தெரிவிக்கிறது.
மேலும் அந்த செய்தியில், "ஜோர்டானிலிருந்து சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற போது, அவர் ஜோர்டானிய படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவரது இறப்பு குறித்து ஜோர்டானில் உள்ள இந்திய தூதரகம் அவரது குடும்பத்தினருக்கு இ-மெயில் மூலம் தகவல் அனுப்பியுள்ளது. அந்த தகவலை பல நாட்கள் அவரது குடும்பத்தினர் பார்க்கவில்லை.
தாமஸ் கேப்ரியலுடன் சென்ற எடிசனும் ஜோர்டானிய படைகளால் சுடப்பட்டுள்ளார். அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். பின்பு அவர் அங்கிருந்து நாடு கடத்தப்பட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போதுதான் குடும்பத்தினருக்கு தாமஸ் கேப்ரியல் சுட்டுக் கொல்லப்பட்ட விவரம் தெரியவந்துள்ளது.
இவர்களுடன் சென்ற மேலும் இருவர் கைது செய்யப்பட்டு ஜோர்டான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஆட்டோ ஓட்டுநர்களான தாமஸ் கேப்ரியல் மற்றும் எடிசன் எதற்காக வெளிநாடு செல்கிறார்கள் என்ற காரணத்தை சரிவர தெரிவிக்கவில்லை. அவர்கள் பிப்ரவரி 5-ஆம் தேதி ஜோர்டான் புறப்படுவதற்கு சில மணி நேரங்கள் முன்பே அவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பிப்ரவரி 9-ஆம் தேதி வரை அவர்கள் குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்துள்ளனர். அதன் பிறகு பிப்ரவரி 10ம் தேதி ஒரு மலைபாதை வழியாக ஜோர்டானுக்குள் நுழைய முயன்றுள்ளனர். அப்போது அவர்களை பார்த்த ஜோர்டானிய படையினர் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். தாமஸ் கேப்ரியலின் உடலை மீட்டுத் தர அவரது குடும்பத்தினர் கேரள மாநில அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தென் மாவட்ட பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிப்பு
தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்துகள் இனி கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படும் என்று தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது என டிடி நெக்ஸ்ட் ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில், "செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக இயக்கப்படும் பேருந்துகள் தாம்பவரம் வரை இயக்கப்படாது. மார்ச் 4-ஆம் தேதி முதல் கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக தாம்பரம் மாநகர போக்குவரத்துக் காவல்துறை வழங்கியுள்ள பரிந்துரையின் படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பயணிகளின் நலன் கருதி மாநகர போக்குவரத்து கழகத்தில் தற்போது 80 வழித்தடங்களில் 589 பேருந்துகள் 3795 பயணநடைகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடா?
இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லாத போதும், எரிபொருள் நிலைய உரிமையாளர்களே திட்டமிட்டு வாகன வரிசையை ஏற்படுத்தியுள்ளனர் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குற்றம்சாட்டியுள்ளார் என வீரகேசரி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில் , " இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையால் மீண்டும் எரிபொருள் நிலையங்களில் வாகனங்கள் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். எனினும் அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் தேவையான எரிபொருள் தொடர்ச்சியாக எவ்வித தடையும் இன்றி விநியோகிக்கப்படுகிறது. எரிபொருள் நிலையத்தில் உரிமையாளர்களே திட்டமிட்டு இவ்வாறானதொரு நிலையை உருவாக்கியுள்ளனர் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் கடந்த ஒரு சில நாட்களாக எரிபொருள் நிலையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பது காணக்கூடியதாக உள்ளது. மீண்டும் நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு ஏற்பட்டுள்ளதா? என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
எவ்வாறாயினும் மாத இறுதியில் எரிபொருள் விலை அதிகரிக்கலாம் என்பதற்காக ஒரு சில எரிபொருள் நிலையங்களில் வரிசைகள் உருவாகியுள்ளன. சில பகுதிகளில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டமைத் தொடர்பில் தெரியவந்ததை அடுத்து விரைந்து அப்பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது என்று அமைச்சர் தெரிவித்தார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)