தி கேரளா ஸ்டோரி: ஐஎஸ் பயங்கரவாத குழுவில் கேரள பெண்கள் சேருவதாக காட்சிகள் வருவதால் சர்ச்சை

பட மூலாதாரம், SUNSHINE PICTURES / YOUTUBE
- எழுதியவர், இம்ரான் குரேஷி
- பதவி, பிபிசி இந்தி
கேரளாவில் சர்ச்சையை தோற்றுவித்துள்ள ஒரு திரைப்படத்தின் டீசர் குறித்த புகாரின் பேரில் கேரள போலீசார் சட்ட ஆலோசனையை நாடியுள்ளனர்.
'தி கேரளா ஸ்டோரி' என்ற பெயரில் வரவிருக்கும் திரைப்படத்திற்கான டீசரில், இஸ்லாமிய பயங்கரவாதிகளாக “மாற்றப்பட்ட” கேரளாவை சேர்ந்த 32,000 பெண்களில் ஒருவராக வரும் ஒரு பெண் தான் தனது கதாபாத்திரம் என்று கூறுகிறார்.
அந்த மாநிலத்தைச் சேர்ந்த சில அரசியல்வாதிகள் படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று மாநில முதல்வருக்கு பத்திரிகையாளர் ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.
அரவிந்தக்ஷன் பிஆர் எழுதிய அந்தக் கடிதத்தை முதல்வர் அலுவலகம் காவல்துறைக்கு அனுப்பியது.
“விசாரணை தொடங்கியுள்ளது. கடிதத்தின் மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து சட்ட ஆலோசனை கேட்டுள்ளோம்” என்று கேரள தலைநகர் திருவனந்தபுரத்தின் காவல் ஆணையர் ஸ்பர்ஜன் குமார் தெரிவித்தார்.
டீசரில், புர்கா அணிந்த பெண் ஒருவர் தனது பெயர் ஷாலினி உன்னிகிருஷ்ணன் என்றும் தான் செவிலியராக விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
மேலும், “இப்போது நான் பாத்திமா பா. ஆப்கானிஸ்தானில் உள்ள சிறையில் இருக்கும் ஐஎஸ் பயங்கரவாதி. என்னைப் போல் மதமாற்றம் செய்யப்பட்ட 32,000 சிறுமிகள் சிரியா மற்றும் ஏமன் பாலைவனங்களில் புதைக்கப்பட்டுள்ளனர்,” என்று அவர் டீசரில் கூறுகிறார்.
கேரள பெண்களை தவறாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டு
“கேரளாவில் சாதாரண பெண்களை மோசமான பயங்கரவாதிகளாக மாற்றும் கொடிய விளையாட்டு ஆடப்படுகிறது. அதுவும் வெளிப்படையாக,” என்று அவர் கூறுகிறார்.
டீசர் கடந்த ஆறு நாட்களில் யூட்யூபில் 440,000 பேருக்கும் மேலாகப் பார்க்கப்பட்டு விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
படத்தின் டீசரை #TrueStory என்ற ஹேஷ்டேக்குடன் ட்வீட் செய்துள்ளார் நடிகை அடா ஷர்மா. படத்தின் தயாரிப்பாளர் விபுல் ஷா பிபிசி அணுகியபோது பதிலளிக்கவில்லை.
டீசரில் உள்ள கூற்றுகளால் ஆத்திரமடைந்த காரணத்தால், அதுகுறித்து விசாரணை நடத்துமாறும் திரைப்பட தயாரிப்பாளர்கள் ஆதாரங்களைத் தாக்கல் செய்யுமாறும் கேட்டுக் கொண்டதாக பத்திரிகையாளர் அரவிந்தக்ஷன் பிபிசியிடம் தெரிவித்தார்.
“சிலருக்கு நடந்திருக்கலாம். ஆனால், 32,000 என்பது நம்பமுடியாதது,” என்று அவர் கூறினார்.
2021ஆம் ஆண்டு சிட்டி மீடியா என்ற ஊடக தயாரிப்பு நிறுவனத்திற்கு இந்தப் படத்தின் இயக்குநர் அளித்த பேட்டியில், முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி கேரள சட்டசபைக்கு அளித்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தான் அந்த எண்ணிக்கையை எடுத்துக் கொண்டதாகக் கூறினார்.
“ஒவ்வோர் ஆண்டும் தோராயமாக 2,800 முதல் 3,200 பெண்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்கிறார்கள்,” என்று உம்மன் சாண்டி கூறியதாக சுதிப்தோ சென் கூறினார்.
இருப்பினும், இந்திய உண்மை சரிபார்ப்பு செய்தி இணையதளமான ஆல்ட் நியூஸ் ஒரு செய்தியில் இந்தக் கூற்றை ஆதரிக்க “எந்த ஆதாரமும் இல்லை” எனக் கூறியது.
டீசரை வைத்து அரசியல்

பட மூலாதாரம், SUNSHINE PICTURES / YOUTUBE
2006ஆம் ஆண்டு முதல் மாநிலத்தில் 2,667 இளம் பெண்கள் இஸ்லாமிய மதத்திற்கு மாறியுள்ளனர் என்று 2012இல் உம்மன் சாண்டி கூறியுள்ளார் என்றும் அதில், வருடாந்திர எண்ணிக்கையை குறிப்பிடவில்லை என்றும் அந்தச் செய்தி கூறியது.
2016ஆம் ஆண்டில், கேரளாவை சேர்ந்த 21 பேர் கொண்ட குழு ஐஎஸ் ஜிஹாதி தீவிரவாதக் குழுவின் துணை அமைப்பில் சேர்வதற்காக நாட்டை விட்டு வெளியேறியது.
அவர்களில் ஒரு மாணவர், திருமணத்திற்கு முன்பே இஸ்லாம் மதத்திற்கு மாறினார். அவர் நாட்டை விட்டு வெளியேறியபோது எட்டு மாத கர்ப்பிணியாக இருந்தார்.
2021ஆம் ஆண்டில், ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, ஐஎஸ்-இல் இணைந்த கேரளாவை சேர்ந்த நான்கு பெண்கள் அங்கு சிறையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
“தரவுகளைச் சரிபார்க்க வேண்டும். ஆனால் 2016 முதல் கேரளாவில் இருந்து ஐஎஸ் அமைப்பில் சேர்வதற்காக 10-15க்கும் மேற்பட்ட பெண்களுக்கும் மேல் மதம் மாறவில்லை என்பது எங்கள் கணிப்பு,” என்று பெயர் அடையாளம் வெளிப்படுத்த விரும்பாத போலீஸ் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் கூறினார்.
மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம், மாநில திரைப்பட சான்றிதழ் வாரியங்கள் மற்றும் இந்தியாவின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோருக்கும் கடிதம் எழுதியுள்ளதாக அரவிந்தக்ஷன் கூறுகிறார். அவருக்கு இதுவரை எந்தப் பதிலும் வரவில்லை.
“இந்தத் திரைப்படம் இந்தியாவின் ஒற்றுமைக்கும் இறையாண்மைக்கும் எதிரானது. இந்தியாவின் அனைத்து உளவுத்துறை அமைப்புகளின் நம்பகத்தன்மையையும் கெடுக்கிறது,” என்று அவர் கூறினார்.
இந்தப் படத்தின் டீசர் கேரளாவில் அரசியல் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் வி.டி.சதீசன், இது தெளிவாக தவறாக தகவல்களை வழங்கும் விஷயம் என்றும், “கேரளாவின் நற்பெயரைக் கெடுக்கவும் மக்கள் மத்தியில் வெறுப்பைப் பரப்பவும்” இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
கேரளாவை ஆளும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் புதன்கிழமையன்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் இந்தத் திரைப்படத்தைத் தயாரித்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
ஆனால், திரைப்பட தயாரிப்பாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்த கேரள அரசை பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தலைவர் கே.சுரேந்திரன் விமர்சித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












