கேரளா லாட்டரியில் பரிசு வென்ற ஆட்டோ ஓட்டுநர்: "என்னால் வீட்டை விட்டு வெளியேற முடியவில்லை"

பட மூலாதாரம், ANI
இந்திய லாட்டரி ஒன்றில் பரிசு பெற்ற ஆட்டோ ஓட்டுநர், தனக்கு ஜாக்பாட் கிடைத்ததற்காக வருந்துவதாக தெரிவித்துள்ளார். லாட்டரியில் வென்ற தகவல் கேட்டது முதல் தன்னை சுற்றி இருப்பவர்கள் நிதி உதவிக்காக கோரிக்கைகளுடன் வருவதாகவும் எல்லோருக்கும் உதவ முடியாத நிலையில் தாம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்தியாவின் தென் மாநிலமான கேரளாவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அனூப்புக்கு செப்டம்பர் மாத தொடக்கத்தில் கேரளா அரசு லாட்டரியில் 25 கோடி பரிசு விழுந்தது. ஆனால் ஒரு வாரம் கழித்து, தன்னையும் தனது குடும்பத்தினரையும் தொந்தரவு செய்வதை நிறுத்துமாறு அந்நியர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் காணொளி ஒன்றை அவர் வெளியிட்டார்.
"நான் பரிசு பெறாமல் இருந்திருக்க விரும்புகிறேன். எனக்கு மூன்றாம் பரிசு விழுந்தால் கூட நன்றாக இருந்திருக்கலாம். மக்களின் கவனத்தில் இருந்து தப்பிக்க வீடு மாறுவது குறித்து ஆலோசித்து வருகிறேன்," என்று காணொளியில் அனூப் கூறுகிறார்.
லாட்டரியில் பரிசு விழுந்தபோது ஊடகங்களில் அனூப் ஒரே இரவில் தலைப்புச் செய்தி ஆனார். அவர் தனது மகனின் உண்டியலை உடைத்து, ஒரு வேலைக்காக மலேசியா செல்வதற்கு ஒரு நாள் முன்னதாக - செப்டம்பர் 17ஆம் தேதி லாட்டரி சீட்டை வாங்கினார்.
இந்த நிலையில், அனூப்புக்கு பரிசு விழுந்த தகவல் வெளியானதும் இப்போது அவரது குடும்பம் ஊடகங்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.
"நான் வெற்றி பெற்றபோது மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். ஆனால், இப்போது எந்நேரமும் வீட்டில் மக்கள், வெளியே கேமராக்கள் உள்ளன. நாங்கள் முன்பு மகிழ்ச்சியாக இருந்தோம். ஆனால் இப்போது விரைவாகவே நிலைமை கட்டுக்கடங்காமல் போய்விட்டது," என்கிறார் அனூப்.
"என்னால் வீட்டை விட்டு வெளியேற முடியவில்லை. என் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை. மருத்துவரிடம் அழைத்துச் செல்ல முடியவில்லை," என்றும் அனூப் கூறுகிறார்.
லாட்டரி பரிசாக அரசாங்க வரி பிடித்தம் போக, அனூப் கைக்கு ரூபாய் 15 கோடி அளவுக்கு கிடைக்கும்.
இந்த தகவலால்தான் தினமும் காலையில் மக்கள் தமது வீட்டிற்கு வரத் தொடங்கியிறார்கள் என்கிறார் அனூப்.
"நான் எல்லோரிடமும் சொல்லக்கூடியது என்னவென்றால், நான் இன்னும் பணம் எதுவும் பெறவில்லை. என் பிரச்னையை நான் எத்தனை முறை சொன்னாலும் யாருக்கும் புரியவில்லை. மக்கள் கவனத்தில் இருந்து தப்பிக்க நானும் எனது குடும்பத்தினரும் இப்போது உறவினர்களுடன் அவர்களுடைய வீட்டில் தங்கியிருக்கிறோம்," என்கிறார் அனூப்.
இந்த நிலையில், பணத்தை சரியாகப் பயன்படுத்த அனூப்புக்கு நிதி மேலாண்மை குறித்த ஒரு நாள் பயிற்சித் திட்டத்தை ஏற்பாடு செய்வதாக மாநில அரசு கூறியுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













