யார் இந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார்?

பட மூலாதாரம், FB/VIRSA SINGH VALTOHA
- எழுதியவர், ககன்தீப் சிங் ஜசோவால்
- பதவி, பிபிசி நியூஸ்
காலிஸ்தானுக்கு ஆதரவாக பல வழக்குகளில் இந்திய அரசால் தேடப்பட்டு வந்த 45 வயதான ஹர்தீப் சிங் நிஜ்ஜார், இந்த ஆண்டு ஜூன் மாதம் கனடாவின் சர்ரேயில் படுகொலை செய்யப்பட்டார். தற்போது இந்த கொலை தொடர்பாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா மீது குற்றம் சாட்டியுள்ளார்.
சர்ரேயில் உள்ள குருநானக் சீக்கிய குருத்வாரா சாஹிப்பின் வாகன நிறுத்துமிடத்தில் ஜூன் 18ஆம் தேதி இரவு இந்தப் படுகொலைச் சம்பவம் நடந்தது.
கொலைச் சம்பவத்தை உறுதி செய்த போலீஸார், நிஜ்ஜார், அடையாளம் தெரியாத இரு நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறினர்.
கனடாவின் சர்ரேவில் உள்ள குருநானக் சீக்கிய குருத்வாரா சாஹிப்பின் தலைவராக ஹர்தீப் சிங் நிஜ்ஜார் பதவி வகித்துவந்தார்.

பட மூலாதாரம், BBC/PARDEEP SHARMA
ஜலந்தரில் உள்ள பார் சிங் புரா கிராமத்தைச் சேர்ந்தவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார். இந்திய அரசின் கூற்றுப்படி, நிஜார் காலிஸ்தான் புலிப் படையின் தலைவராக இருந்தார் என்பதுடன் காலிஸ்தான் புலிப் படையின் தொகுதி உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தல், நெட்வொர்க்கிங் உள்ளிட்ட நடைமுறைகளுக்கான செலவினங்களை எதிர்கொள்ள நிதி உதவி வழங்குவது போன்ற செயல்களில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.
பஞ்சாப் மாநில அரசின் கூற்றுப்படி, ஜலந்தரின் ஃபில்லூர் சப்-டிவிஷனில் உள்ள அவரது சொந்த கிராமமான பாரா சிங் புராவில் நிஜாரின் சுமார் ஒரு ஏக்கர் நிலத்தை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கைப்பற்றியது.
நீதி கோரும் சீக்கியர்கள் என்ற பெயரில், இணையதளத்தில் நடத்தப்பட்ட சீக்கிய பொதுவாக்கெடுப்பு 2020க்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் இந்த சொத்துகளை தேசிய புலனாய்வு அமைப்பு கைப்பற்றியது.
நிஜ்ஜார் 1997 இல் கனடா சென்றார். கோவிட்-19 லாக்டவுனுக்கு முன்பு அவரது பெற்றோர் சொந்த கிராமத்திற்கு வந்தனர். நிஜ்ஜாருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். நிஜ்ஜார் கனடாவிற்குச் சென்ற போது பிளம்பர் வேலை செய்து வந்தார்.
இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமையின் (NIA) கூற்றுப்படி, KTF (காலிஸ்தான் புலிப்படை) தலைவர் ஜக்தார் சிங் தாராவை சந்திப்பதற்காக நிஜ்ஜார் 2013-14 இல் பாகிஸ்தானுக்குச் சென்றதாகக் குற்றம் சாட்டப்பட்டார்.
தாரா 2015ஆம் ஆண்டு தாய்லாந்தில் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டார்.
தேசிய புலனாய்வு முகமையின் கூற்றுப்படி, நிஜ்ஜார் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட அமைப்பான 'நீதி கோரும் சீக்கியர்கள்' என்ற இயக்கத்துடன் தொடர்புடையவர் எனத்தெரியவந்துள்ளது. அண்மையில் ஆஸ்திரேலியாவில் காலிஸ்தான் தனிநாட்டுக்கான பொதுவாக்கெடுப்பின் போது நிஜ்ஜார் அதில் நேரடியாகப் பங்கேற்றார்.

பட மூலாதாரம், Getty Images
நிஜார் மீதான குற்றச்சாட்டுகள்
இந்தியாவின் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நிஜ்ஜாரின் தலைக்கு ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசாக அறிவித்தது.
பஞ்சாப் காவல்துறை வட்டாரங்களின்படி, 2018ல் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா வந்த போது, பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங், அவரிடம் ஒப்படைத்த தேடப்படுவோர் பட்டியலில் நிஜ்ஜாரின் பெயர் இடம்பெற்றிருந்தது.
2020 டிசம்பரில் பஞ்சாப் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் மூன்று விவசாயச் சட்டங்களை எதிர்த்துப் போராடியபோது, தேசிய புலனாய்வு முகமை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் நிஜ்ஜார் பெயரும் இருந்தது.
அந்த முதல் தகவல் அறிக்கையில் பல சீக்கிய ஆர்வலர்களின் பெயர்களை தேசிய புலனாய்வு முகமை சேர்த்திருந்தது.
அவர்களில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார், குர்பத்வந்த் சிங் பன்னு மற்றும் பரம்ஜித் சிங் பம்மா ஆகியோர் அடங்குவர்.
மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி, பதற்றத்தை ஏற்படுத்தி, அவர்களைத் தூண்டிவிட சதி செய்வதன் மூலம் இந்தியாவுக்கு எதிராக கிளர்ச்சியை ஏற்படுத்தியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் ஜூன் 18 அன்று கனடாவின் சர்ரேயில் இறந்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












