அதானி-ஹிண்டன்பர்க் விவகாரம்: விசாரணை குழு அறிக்கை, செபி செயல்பாடுகளில் குறைகளை கண்டதா?

அதானி குழுமம்

பட மூலாதாரம், Getty Images

அதானி குழுமத்தின் நிறுவனங்கள் விவகாரத்தில், இந்தியாவின் பங்குச்சந்தை முறைப்படுத்தும் அமைப்பான செபியின் பங்கு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி சாப்ரே கமிட்டி, முதல் நோக்குப்பார்வையில் செபியின் செயல்பாடுகளில் எந்தக் குறைகளையும் கண்டறியவில்லை.

அதானி-ஹிண்டன்பர்க் வழக்கின் விசாரணையை முடிக்க செபி உச்ச நீதிமன்றத்தில் மூன்று மாதங்கள் நீட்டிப்பை, இரண்டு நாட்களுக்கு முன்பு பெற்றது.

178 பக்கங்கள் கொண்ட நீதிபதி சாப்ரே கமிட்டி அறிக்கை வெள்ளியன்று பகிரங்கப்படுத்தப்பட்டது. முதன்மை நோக்கில் செபியின் தரப்பில் எந்தத் தோல்வியும் இல்லை என்று அது கூறியது.

செபி அளித்த காரணங்கள் மற்றும் செபி அளித்த தரவுகளின் அடிப்படையில், விலைகள் முறைகேடு விஷயத்தில், ஒழுங்குமுறை அமைப்பு தோல்வியுற்றது என்ற முடிவுக்கு கமிட்டி முதல் பார்வையில் வருவது கடினம் என்று சாப்ரே கமிட்டி தனது அறிக்கையில் கூறியுள்ளது.

அதானி குழுமம்-ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பான சர்ச்சைக்குப் பிறகு, ஓய்வுபெற்ற நீதிபதி ஏபி சாப்ரே தலைமையில் உச்ச நீதிமன்றம் ஒரு குழுவை அமைத்தது.

அதானி குழுமத்திற்கு எதிராக மோசடி, உள் வர்த்தக விதிகளை மீறுதல் மற்றும் பணமோசடி போன்ற குற்றச்சாட்டுகளை அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஷார்ட் செல்லர் நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் சுமத்தியிருந்தது.

காலவரையின்றி நீட்டிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியது ஏன்?

இந்தக் குற்றச்சாட்டுகள் காரணமாக, அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு 135 பில்லியன் டாலருக்கும் அதிகமாகக் குறைந்தது. இந்தக் குற்றச்சாட்டுகளை செபி விசாரித்து வருகிறது.

இந்த விவகாரத்தில் விசாரணையை முடிக்க செபிக்கு உச்சநீதிமன்றம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை அவகாசம் அளித்துள்ளது. முன்னதாக செபி இந்த விவகாரத்தை இரண்டு மாதங்களுக்குள் விசாரிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த காலக்கெடு மே 2ஆம் தேதியுடன் முடிவடைந்தது.

காலவரையற்ற கால நீட்டிப்பு வழங்க முடியாது என நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பான விசாரணையில் செபி விரைவாகச் செயல்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

கார்ப்பரேட் மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக இதுவரை நடந்த விசாரணையின் விரிவான நிலை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு செபியிடம் உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால், அதானி குழுமம் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.

உச்ச நீதிமன்றம் ஆறு உறுப்பினர்களைக் கொண்ட ஒரு நிபுணர் குழுவை அமைத்தது. ஒழுங்குமுறை தோல்விகள் ஏற்பட்டுள்ளதா என்று ஆராய்ந்து முதலீட்டாளர்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைப்பதே அதன் பணி. இந்தக் குழு தனது பணி குறித்த முதற்கட்ட அறிக்கையையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

தற்போது இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பல அதானி குழும நிறுவனங்கள் முதலீட்டாளர்களிடமிருந்து புதிய நிதி திரட்ட முயற்சிக்கும் இந்த நேரத்தில், அதானி குழுமத்திற்கு எதிரான ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதானி - ஹிண்டர்ன்பர்க் ஆய்வறிக்கை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அதானி குழும நிறுவனங்கள் பங்கு விலையில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, செபியின் பங்கு குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒரு குழுவை அமைத்தது.

செபி மற்றும் நிதி அமைச்சகத்தின் வெவ்வேறு உரிமைகோரல்கள் மீதான சர்ச்சை

நீதியை உறுதி செய்ய விசாரணை செயல்முறைக்குக் கூடுதல் அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று செபி உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள அதானி குழும நிறுவனங்களின் சட்ட மீறல்கள் குறித்து 2016ஆம் ஆண்டு முதல் பொது விசாரணை எதுவும் நடத்தப்படவில்லை என்றும் செபி நீதிமன்றத்தில் தெரிவித்தது.

செபியின் இந்த ஒப்புதல், நிதி அமைச்சகத்தின் முந்தைய அறிக்கைக்கு முரணாக இருப்பதால், இது அரசியல் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. அதானி குழுமத்திற்கு எதிரான விசாரணை குறித்து நிதி அமைச்சகம் 2021இல் அறிக்கை அளித்தது.

2021 ஜூலை 19ஆம் தேதி நாடாளுமன்றத்தில் ஒரு கேள்விக்குப் பதிலளித்த நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் செளத்ரி, "செபி தன் விதிகளுக்கு இணங்க அதானி குழுமத்தின் சில நிறுவனங்கள் குறித்து விசாரித்து வருகிறது. இது தவிர, வருவாய் புலனாய்வு இயக்குநரகமும் (டிஆர்ஐ) அதானி குழுமத்துடன் தொடர்புடைய சில நிறுவனங்கள் குறித்து அதன் சொந்த சட்டங்களின் கீழ் விசாரணை செய்து வருகிறது,” என்று குறிப்பிட்டார்.

ஆனால் அதானி குழும நிறுவனங்களின் விசாரணை காலம் குறித்து செபி எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை.

செபியின் சமீபத்திய தகவலுக்குப் பிறகு, எதிர்க்கட்சிகள் அரசை குறிவைத்தன.

உச்ச நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images

நாடாளுமன்றத்தைத் தவறாக வழிநடத்துவதாக குற்றச்சாட்டுகள்

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ், ’இது நாடாளுமன்றத்தைத் தவறாக வழிநடத்தும் தகவல்’ எனக் கூறியுள்ளார். அதேநேரத்தில், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, இது 'பிரமாண மீறல்' விவகாரம் என்று தெரிவித்தார்.

இருப்பினும், நாடாளுமன்றத்தில் அளித்த எழுத்துமூலமான பதிலைத்தான் இன்னமும் பற்றி நிற்பதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. நன்கு ஆராய்ந்து சரிபார்க்கப்பட்ட மற்றும் சம்பந்தப்பட்ட எல்லா நிறுவனங்களிடமிருந்தும் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தனது பதில் அமைந்திருப்பதாக அது கூறியுள்ளது.

சமீபத்திய சர்ச்சைக்குப் பிறகு அதானி குழுமம், 2016 முதல் விசாரிக்கப்படவில்லை என்று மே 17 அன்று புதிய பிரமாணப் பத்திரத்தில் செபி தெளிவுபடுத்தியுள்ளது.

உலகளாவிய டெபாசிட்டரி ரசீதுகள் அதாவது GDR முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் விவகாரம் தொடர்பான தனது விசாரணையில், அதானி குழுமத்தின் எந்தப் பட்டியலிடப்பட்ட நிறுவனமும் இல்லை என்று செபி கூறியுள்ளது.

அதானி குழுமத்தின் மீதான செபியின் விசாரணை உலக அளவில் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது. ஒரு பெரிய குழுமத்திற்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், மோசடி மற்றும் கார்ப்பரேட் நிர்வாக மீறல் குற்றச்சாட்டுகளை இந்தியாவின் நீதிமன்றங்கள் மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகள் எவ்வாறு கையாள்கின்றன என்பது கவனிக்கப்பட்டு வருகிறது.

அதானி ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை

பட மூலாதாரம், Reuters

அதானி குழும நிறுவனங்கள் சரக்கு வர்த்தகம், விமான நிலையம் மற்றும் துறைமுக செயல்பாடுகள், புதுப்பிக்கவல்ல எரியாற்றால் உள்ளிட்ட பல துறைகளில் பணியாற்றுகின்றன.

”அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை. பங்குச் சந்தைகளும் முதலீட்டாளர்களும் ஏற்கெனவே அதன் விளைவுகளை உணர்ந்திருக்கிறார்கள்.

இத்தகைய சூழ்நிலையில், இந்த விஷயத்தில் செபி இன்னும் முனைப்புடன் செயல்படும் என்று பலர் எதிர்பார்க்கிறார்கள்,” என்று மும்பையைச் சேர்ந்த சுயாதீன ஆராய்ச்சி ஆய்வாளர் ஹேமேந்திர ஹசாரி கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பான விசாரணையின் அரசியல் முக்கியத்துவம் மிகப் பெரியது. இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கூட்டாக அரசைத் தாக்கி வருகின்றன.

ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானபிறகு, பிரதமர் நரேந்திர மோதி அதானி குழுமத்திற்கு ஆதரவாக இருப்பதாகக் குற்றம் சாட்டி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்னையை எழுப்பின. அதேநேரம் பிரதமர் மோதி இதுவரை தனது உரைகளில் அதானியை குறிப்பிடுவதைத் தவிர்த்து வருகிறார்.

மறு எழுச்சிக்கான அதானியின் போராட்டம் தொடர்கிறது

இந்த ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானதில் இருந்து, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ஏழு அதானி குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பீடு 135 பில்லியன் டாலருக்கும் அதிகமாகக் குறைந்துள்ளது.

சந்தையில் இருந்து 2.5 பில்லியன் டாலர் திரட்ட தொடங்கப்பட்ட அதன் இரண்டாம் நிலை பங்கு விற்பனையையும் குழுமம் நிறுத்த வேண்டி வந்தது. இந்தத் தொகையைக் கொண்டு கடனை அடைக்கவும், அதானி எண்டர்பிரைசஸின் புதிய திட்டங்களுக்கு நிதி திரட்டவும் திட்டமிடப்பட்டிருந்தது.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, அதானி குழுமத்தின் உரிமையாளரான கௌதம் அதானியின் தனிப்பட்ட சொத்து கணிசமாகக் குறைந்துள்ளது. மேலும் அவர் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற நிலையில் தற்போது இல்லை.

அதானி குழுமம் தன் மோசமான காலத்திலிருந்து மீண்டு தன் நிலையை சற்று மேம்படுத்திக் கொண்டுள்ளார். ஆயினும் குழுமத்தின் மதிப்பீடு 2023ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்ததைவிட 100 பில்லியன் டாலர் குறைவாக உள்ளது. அதானி குழுமத்தின் பங்குகளில் ஏற்ற இறக்கம் இப்போதும் தொடர்கிறது.

அதானி - ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை

பட மூலாதாரம், Getty Images

துறைமுகங்கள் மற்றும் பசுமை எரிசக்தி வணிகத்தில் முதலீடு செய்வதற்கான தன் திட்டங்களை நிறுவனம் குறைக்க வேண்டியிருந்தது. பிரான்சின் டோட்டல் கேஸ் மற்றும் அதானி குழுமத்தின் லட்சிய பசுமை ஹைட்ரஜன் கூட்டாண்மை, ஒரு சுயாதீன தணிக்கை முடியும் வரையில் பிரெஞ்சு நிறுவனத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பயந்து போயுள்ள தன் முதலீட்டாளர்களுக்கு உறுதியளிக்க அதானி குழுமம் பல முயற்சிகளை மேற்கொண்டது.

இந்த முயற்சிகளில் தனது கடனை முன்கூட்டியே செலுத்துவதும் அடங்கும். 5G போன்ற புதிய துறைகள் மற்றும் பசுமை எரியாற்றல் வணிகம் போன்றவை கடனையே பெரிதும் சார்ந்துள்ளன. இதற்காக வாங்கிய கடன் சுமார் இரண்டு லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

நிதி திரட்டும் சவால்

முதலீட்டாளர்களின் நம்பிக்கையைத் திரும்பப் பெறும் முயற்சியில் அதானி குழுமம், நான்கு குழும நிறுவனங்களின் பங்குகளை அமெரிக்காவை சேர்ந்த சொத்து மேலாண்மை நிறுவனமான GQG பார்ட்னர்ஸுக்கு 2023 மார்ச் மாதம் விற்றுள்ளது. இதன் மூலம் குழுமம் 1.87 பில்லியன் டாலர் முதலீட்டை திரட்டியுள்ளது.

உள்கட்டமைப்புத் துறையில் பணிபுரியும் எந்தவொரு நிறுவனத்திற்கும் எப்போதும் பெரிய மூலதனம் தேவைப்படுகிறது. ஜனவரியில் 2.5 பில்லியன் டாலர்களை திரட்ட முடியாமல் போனதால், அதானி குழுமம் நிறுவன முதலீட்டாளர்களிடமிருந்து அதே தொகையைத் திரட்ட முயல்கிறது.

அதானி ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை

பட மூலாதாரம், DEV IMAGES

படக்குறிப்பு, நிதி திரட்டல் கண்ணோட்டத்தில் பங்கு விலை மிகவும் முக்கியமானதாக இருக்கும் நிபுணர்கள் கூறுகின்றனர்

குழுமத்தின் முதன்மை நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் இதன் மூலம் சுமார் 1.5 பில்லியன் டாலர்களையும், அதானி டிரான்ஸ்மிஷன் 1.1 பில்லியன் டாலர்களையும் திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.

கடனைத் திருப்பிச் செலுத்துதல், புதிய விமான நிலையத் திட்டங்கள், விரைவுச் சாலை கட்டுமானம் மற்றும் ஒரு லட்சிய பசுமை ஹைட்ரஜன் சுற்றுச்சூழல் அமைப்பின் உருவாக்கத்திற்கும் இந்த முதலீடு பயன்படுத்தப்படும்.

"அதானி குழுமத்தின் வளர்ச்சி வேகத்தில் ஓரளவு மந்த நிலை காணப்பட்டாலும், முதலீட்டாளர்களை நம்ப வைப்பதில் அது சிறந்த நிலையில் உள்ளது,” என்று மும்பையின் வெல்த்மில்ஸ் செக்யூரிட்டீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் கிராந்தி பதனி கூறுகிறார்.

இருப்பினும் நிதி திரட்டும் கண்ணோட்டத்தில் பங்கு விலைகள் முக்கியக் காரணியாக இருக்கும். "கடன் மீதான தனது சார்பு மற்றும் மூலதனச் செலவு ஆகிய இரண்டையும் குறைப்பதாக அதானி குழுமம் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும்,” என்று ஹஸாரி சுட்டிக்காட்டினார்.

அதானி குழுமத்தின் நிதி திரட்டும் முயற்சியின் வெற்றி, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவது மட்டுமின்றி, அதன் விரிவாக்க முயற்சிகள் தொடரவும் உதவும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அதேநேரம், ஒழுங்குமுறை அமைப்பான செபியின் விசாரணையுடன் கூடவே, ஊடகங்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் ஆய்வும் தொடரும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: