உலகின் மிக விலையுயர்ந்த, கண் கவரும் பத்து ஆபரணங்கள்

பட மூலாதாரம், Getty Images
கோஹினூரின் கதை, அதன் விலைமதிப்பற்ற தன்மை பற்றி எல்லா இந்தியர்களுக்கும் தெரியும். இப்போது மன்னர் சார்ல்ஸின் முடிசூட்டு விழா நெருங்கி வரும் நிலையில், கோஹினூர் வைரம் குறித்த பேச்சு மீண்டும் தொடங்கியுள்ளது.
நகைகள் அவற்றின் மதிப்புக்காக மட்டும் பிரபலமாவதில்லை. அதன் அழகு அவற்றை விலைமதிப்பற்றதாக ஆக்குகிறது.
பிரகாசமும் புகழும் ஒருபோதும் மங்காத, உலகின் புகழ்பெற்ற பத்து ஆபரணங்களைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
அட்டாலாவின் க்ராஸ்

பட மூலாதாரம், Getty Images
1920 களில், லண்டனின் நகைக்கடைக்காரர் ஜெரார்ட், அட்டாலாவின் க்ராஸை உருவாக்கினார்.
கடந்த மாதம் ரியாலிட்டி ஸ்டார் கிம் கர்தாஷியன் 1.62 கோடி ரூபாய்க்கு அதை வாங்கினார். ஒரு காலத்தில் இந்த சிலுவை இளவரசி டயானாவின் கழுத்தை அலங்கரித்தது.
அமேதிஸ்ட் ரத்தினக்கல்லால் செய்யப்பட்ட இந்த சிலுவையில் 5.2 காரட் வைரமும் பதிக்கப்பட்டுள்ளது. இது இளவரசி டயானாவின் விருப்பமான ஆபரணமாக இருந்தது. ஆனால் இந்த பெண்டெண்ட் எப்போதுமே அவருக்கு சொந்தமாகவில்லை.
ஆனால் அதன் உரிமையாளர் நயீம் அடல்லா, பல சமயங்களில் அதை இளவரசி டயானாவுக்கு அணிந்துகொள்ளக்கொடுத்தார். அந்த நாட்களில், ஆஸ்ப்ரே & ஜெரார்டின் தலைமை நிர்வாக அதிகாரியாக நயீம் அடல்லா இருந்தார்.
இளவரசி டயானாவுக்கு மட்டுமே இந்த சிலுவை அணிந்துகொள்ள அளிக்கப்பட்டதாக அவரது மகன்கள் கூறுகின்றனர்.
இப்போது கர்தாஷியனிடம் இந்த நகை சென்றுள்ள நிலையில் இதுகுறித்து கருத்துத்தெரிவித்த நகை நிபுணர் ஹெலன் மோல்ஸ்வொர்த், "அவர் நினைத்ததை சாதிக்கிறார். அவர் சொந்த முயற்சியில் முன்னுக்கு வந்தவர். அவர் தனக்கு வேண்டியதை தானே வாங்கிக்கொள்கிறார். இந்த நகை அவரது க்ளாஸை காட்டுகிறது. வணிக நோக்கத்திற்காக மதிப்புமிக்க பொருட்களை வாங்குவதில், பாலின சமத்துவத்தின் அடையாளமாகவும் இது உள்ளது,” என்றார்.
”இந்த பெண்டெண்ட் ஓரளவுக்கு இளவரசியின் தன்னம்பிக்கை மற்றும் நகைகளைத் தேர்ந்தெடுக்கும் திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டு,” என்று லண்டனில் உள்ள சோத்பியின் நகைப்பிரிவுத் தலைவர் கிறிஸ்டியன் ஸ்போர்த் குறிப்பிட்டார்.
1987 அக்டோபரில் ஒரு தொண்டு(charity) நிகழ்வின் போது டயானா அதை அணிந்திருந்தார். அவர் அதை ஒரு ஊதா நிற முத்து நெக்லஸுடன் சேர்ந்த்து அணிந்திருந்தார்.
பிளாக் டயமண்ட் ஓர்லோவ்

பட மூலாதாரம், Getty Images
கருப்பு வைரங்கள் மிகவும் அற்புதமானவை. இந்த தலையணை வடிவ கருப்பு வைரம் 67.49 காரட் எடை கொண்டது.
இது 19 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் ஒரு பிரம்மா கோயிலில் இருந்து திருடப்பட்டதாக சொல்லப்படுகிறது.
அன்றிலிருந்து இந்த வைரம் சாபம் பெற்றது என்று கூறப்படுகிறது. அதனை திருடிய நபர் அகால மரணமடைந்தார். அதன் பிறகு அந்த வைரத்தின் மூன்று உரிமையாளர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இவர்களில் நாடியா விஜின்-ஓர்லோவ் என்ற ரஷ்ய இளவரசியும், அவரது ஒரு உறவினரும் மற்றும் அமெரிக்காவிற்கு வைரத்தை இறக்குமதி செய்த ஜே.டபிள்யூ. பாரிஸும் அடங்குவர்.
இருப்பினும் சில சமீபத்திய ஆய்வுகள் இந்தக் கதைகள் தொடர்பாக கேள்விக்குறிகளை எழுப்பியுள்ளன. இந்த வைரம் இந்தியாவில் இருந்து திருடப்பட்டதா என்ற சந்தேகமும் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
இளவரசி நாடியா உண்மையில் இருந்தாரா என்பது பற்றியும் நிபுணர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
ஆனால் தனித்தனி மணிகளாக ஆக்கும்பொருட்டு இந்த வைரம் மூன்று பகுதிகளாக வெட்டப்பட்டது என்பது உறுதி. சாபத்திலிருந்து அதை விடுவிக்க வேண்டும் என்பதற்காக இது செய்யப்பட்டது.
அதை மூன்று பகுதிகளாக வெட்டிய பிறகு அதன் உரிமையாளர்கள் யாரும் அகால மரணமடையவில்லை என்பது ஒரு சுவாரசியமான விஷயம்.
பில்கிரிம் பெர்ல்

பட மூலாதாரம், Getty Images
1576 ஆம் ஆண்டு தென் அமெரிக்க நாடான பனாமாவில் கண்டுபிடிக்கப்பட்ட 'லா பெரெக்ரினா' என்ற பேரிக்காய் வடிவ முத்து அதன் கதையைப் போலவே அத்தனை வசீகரமானது.
"இது உலகின் மிகவும் கச்சிதமான முத்து. மேலும் இதன் கடந்த காலத்தில் ரொமான்ஸும் உள்ளது,” என்று மோல்ஸ்வார்ட் கூறுகிறார்,
இந்த 50.56 காரட் முத்து ஸ்பெயினின் அரசர் இரண்டாம் பிலிப் தனது மனைவியான இங்கிலாந்தின் ராணி முதலாம் மேரிக்காக வாங்கினார்.
அப்போதிருந்து, இந்த விலைமதிப்பற்ற முத்து தலைமுறை தலைமுறையாக ஸ்பெயினின் அரச குடும்பத்துடன் இருந்தது.
பின்னர் இந்த முத்து பிரான்சின் ஆட்சியாளரான நெப்போலியனின் சகோதரர் ஜோசப் போனபார்ட்டின் கைகளுக்குச்சென்றது.
நீண்ட காலத்திற்குப் பிறகு அதாவது 1969 ஆம் ஆண்டு, ஹாலிவுட்டின் பிரபல நடிகை எலிசபெத் டெய்லருக்காக நடிகர் ரிச்சர்ட் பர்ட்டன் இதை வாங்கினார்.
"இது ஒரு அழகான காதல் கதை. ஆனால் இது தொடர்பான ஒரு சுவாரசியமான கதையும் உள்ளது," என்று மோல்ஸ்வொர்த் கூறுகிறார்.
”ஒரு முறை சோபாவில் அமர்ந்திருந்தபோது கழுத்தில் அணிந்திருந்த மாலையில் இருந்து முத்து நழுவுவதை உணர்ந்தேன். நான் மண்டியிட்டு அமர்ந்து அதை தேடினேன். அப்போது என் நாய் கம்பளத்தின் மீது அமர்ந்து எதையோ மென்று கொண்டிருந்தை பார்த்தேன். அதன் வாயில் அந்த முத்து இருந்தது. அதிர்ஷ்டவசமாக சேதம் ஏதும் ஏற்படாமல் பர்டன் அதை நாயின் வாயிலிருந்து வெளியே எடுத்தார்,"என்று எலிசபெத் டெய்லர் தனது வாழ்க்கை வரலாற்றில், எழுதியுள்ளார்.
லா பெரெக்ரினாவை நியூயார்க்கின் ஏல நிறுவனமான கிறிஸ்டி 2011 ஆம் ஆண்டு 96 கோடியே 84 லட்சம் ரூபாய் விற்பனை செய்தது. இதுவே எந்த ஒரு இயற்கை முத்துக்கு இதுவரை கொடுக்கப்பட்ட அதிகபட்ச விலையாகும்.
'தி ஹோப்'

பட மூலாதாரம், Getty Images
தனது இருண்ட கடந்த காலத்திற்காக அறியப்பட்ட மற்றொரு சபிக்கப்பட்ட வைரம் ஹோப் டயமண்ட் ஆகும். இது அமெரிக்காவின் ஸ்மித்சோனியன் அருங்காட்சியகத்தின் தேசிய ரத்தின சேகரிப்பின் பெருமையாகும்.
"இது 45.52 காரட் எடை கொண்ட மிகவும் சிறப்பு வாய்ந்த மற்றும் அரிதான நீல நிற வைரம். புற ஊதா ஒளியில் இதை வைக்கும்போது அதன் நிறம் ரூபி சிவப்பு நிறமாக மாறும். இது இந்த வைரத்தை மேலும் மர்மமாக்குகிறது,” என்று லண்டனில் உள்ள கிறிஸ்டியின் நகை நிபுணர் அரபெல்லா ஹிஸ்காக்ஸ் கூறினார்.
1966 ஆம் ஆண்டு வெளியான கார்ல் ஷுக்கர் எழுதிய 'தி அன்எக்ஸ்ப்ளெய்ன்ட்' என்ற புத்தகத்தில் அதன் வரலாற்றின் சுவாரசியமான கதை பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு இந்து பூசாரி இதை கோவிலில் இருந்த ஒரு சிலையிலிருந்து அகற்றினார். 1668 ஆம் ஆண்டில், பிரான்சின் பேரரசர் பதினான்காவது லூயி அதை வாங்கினார். பிரெஞ்சு புரட்சியின் போது இது திருடு போனது.
இந்த வைரத்தால் பிரான்சின் பேரரசரும் அவரது ராணியும் சபிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
நகை பிராண்ட் கார்டியர், ’தி ஹோப்பை’ ஒரு வெள்ளை வைர நெக்லஸில் பதித்தது. அது 1912 ஆம் ஆண்டில் ஈவ்லின் வால்ஷ் மெக்லீனுக்கு விற்கப்பட்டது.
"மெக்லீன், சுரங்க நிறுவனத்தின் ஒரே வாரிசு. தி ஹோப் அவரிடம் வந்தபிறகு அவருடைய இரண்டு குழந்தைகள் இறந்துவிட்டன,"என்று ஹிஸ்காக்ஸ் கூறுகிறார்.
1958 வாக்கில், இந்த வைரம் நகைக்கடை வியாபாரி ஹாரி வின்ஸ்டனை அடைந்தது. அதே ஆண்டில் அவர் அதை ஸ்மித்சோனியன் அருங்காட்சியகத்திற்கு வழங்கினார்.
வாலிஸ் சிம்ப்சனின் பேந்தர் பிரேஸ்லெட்

பட மூலாதாரம், Getty Images
1936 ஆம் ஆண்டில், மன்னர் எட்டாம் எட்வர்ட் தனது காதலி வாலிஸ் சிம்ப்சனுக்காக இங்கிலாந்தின் கிரீடத்தைத் துறந்தார். அவர்களின் காதல் கதையில் பல விலையுயர்ந்த வைரங்கள் மற்றும் நகைகள் அன்பளிப்பாக பரிமாறப்பட்டன.
இந்தக் காதலர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் இப்படிப்பட்ட அன்புப்பரிசுகளை ஒருவருக்கொருவர் அளித்துக்கொண்டிருந்தனர். இந்த இருவரின் அன்பளிப்புகளும் 2010 ஆம் ஆண்டு சோதேபி நிறுவனத்தால் ஏலம் விடப்பட்டது.
1952 ஆம் ஆண்டு வாலிஸ் சிம்ப்சன் அன்பளிப்பாகப்பெற்ற பிளாக் பேந்தர் பிரேஸ்லெட் அந்த ஏலத்தின் சிறப்பம்சமாகும். வைரம் மற்றும் ரத்தினங்கள் பதிக்கப்பட்ட இந்த வளையல் பாரிஸில் இருந்து வாங்கப்பட்டது.
மாகலி டெஸ்ஸி பாரிஸில் உள்ள சோதேபியின் தலைவராக உள்ளார். பிளாக் பேந்தரைப் பற்றி குறிப்பிட்ட அவர், "ஒரு நகையை நிலைத்து நிற்கக்கூடிய பெருமை கொண்டதாக மாற்றும் ஒவ்வொரு குணமும் இந்த பிரேஸ்லெட்டிற்கு உள்ளது,” என்றார்.
"கார்டியரின் வரலாற்றிற்கும் இது மிகவும் முக்கியமானது. இது ஜீன் டூசைன்ட் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. லூயிஸ் கார்டியர் தானே இதற்கு 'தி பேந்தர்' என்று பெயரிட்டார், எனவே இதில் தரம், வரலாறு மற்றும் ஒரு காதல் காதல் உல்ளது," என்று டெஸ்ஸி விளக்கினார்.
வாலிஸ் சிம்ப்சனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படத்தில் அமெரிக்க பாடகி மடோனா இந்த பிரேஸ்லெட்டை அணிந்திருந்தார். ஆனால் கோடிக்கணக்கில் செலவு செய்து அதை வாங்கியவரின் பெயர் இன்று வரை பகிரங்கப்படுத்தப்படவில்லை.
கோஹினூர்
105.6 காரட் எடை கொண்ட உலகின் மிகப்பெரிய வைரம் கோஹினூர். பிரிட்டனின் அரச கிரீடத்தை அலங்கரிக்கும் இந்த வைரம் மிகவும் சர்ச்சைக்குரிய நகையாகும்.
இடைக்காலத்தில் தென்னிந்தியாவில் இருந்து இந்த வைரம் வெட்டி எடுக்கப்பட்தாகக்கூறப்படுகிறது. அதன் எழுதப்பட்ட பதிவுகள் 1628 ஆம் ஆண்டுமுதல் கிடைக்கிறது. முகலாயப் பேரரசர் ஷாஜகானின் சிம்மாசனத்தில் இது பதிக்கப்பட்டது.
1739 ஆம் ஆண்டு இரானின் பேரரசர் நாதிர் ஷா டெல்லிக்கு படையெடுத்து வந்து முகலாயர்களை தோற்கடித்தார். இதன் பிறகு கோஹினூர் நாதிர்ஷாவின் கைக்கு சென்றது. நாதிர்ஷா அதை ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு சென்றார்.
இந்த விலைமதிப்பற்ற கல் ஒன்றன் பின் ஒன்றாக பல்வேறு அரச குடும்பங்களிடம் சென்றன என்றும் பின்னர் இறுதியாக 1813 ஆம் ஆண்டில் அது மகாராஜா ரஞ்சித் சிங்கின் கைகளுக்கு வந்தது என்றும் ஸ்மித்சோனியன் பத்திரிகை தெரிவிக்கிறது.
அப்போது இந்தியாவின் மற்ற பகுதிகளை பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி செய்தது. இந்த வைரம் குறித்த தகவலை அறிந்ததும் அந்த நிறுவனம் அதை பெறுவதற்கான முயற்சிகளை தொடங்கியது.
1849 ஆம் ஆண்டில் இந்த வைரம் பஞ்சாப் சிம்மாசனத்தின் பத்து வயது வாரிசிடமிருந்து பறிக்கப்பட்டு விக்டோரியா மகாராணியிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த வைரத்தின் பிரமாண்ட கண்காட்சி இங்கிலாந்தில் 1851-ம் ஆண்டு நடைபெற்றது. கோஹினூரும் சபிக்கப்பட்டதாக சிலர் வதந்தியை பரப்பினர்.
இப்போது இந்த வைரம் இங்கிலாந்து அரச குடும்பத்திடம் உள்ளது. ஆனால் இந்தியா, பாகிஸ்தான், இரான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் அதை தங்களிடம் அளிக்க வேண்டும் என்று கோரி வருகின்றன.
மேரி அன்த்வானெட்டாவின் மோதிரம்

பட மூலாதாரம், Getty Images
பிரான்ஸ் ராணி அன்த்வானெட்டாவின் மோதிரத்தில் வைரம் மட்டுமின்றி அவரது தலைமுடியும் பதிக்கப்பட்டுள்ளது.
”மேரி அன்த்வானெட்டா, நகை உரிமையாளர்களின் பட்டியலில் உயர்ந்த இடத்தில் உள்ளார்," என்று கிறிஸ்டியின் அரபெல்லா ஹிஸ்காக்ஸ் கூறுகிறார்.
அதன் ஆதாரம் 10 ரத்தினங்களின் தொகுப்பில் காணப்படுகிறது. இது ஒரு காலத்தில் பிரான்சின் ராணி மேரிக்கு சொந்தமாக இருந்தது. பின்னர் போர்பன் பார்மா குடும்பம் அதை வாங்கியது. 2018-ம் ஆண்டு சோதேபி ஏலத்தில் பல லட்சம் ரூபாய்க்கு இது விற்கப்பட்டது.
இந்த வரலாற்றுத்தொகுப்பின் சிறந்த நகை, ஒரு அழகான அசல் முத்து பதக்கமாகும். இது பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் நகருக்கு கப்பல் மூலம் அனுப்பப்பட்டது.
இருப்பினும் பேரரசரின் மோனோகிராம் கொண்ட சிறிய இளஞ்சிவப்பு மோதிரம் உண்மையில் சிறப்பு வாய்ந்தது என்று டெஸ்ஸி தெரிவிக்கிறார்.
"இதில் வைரங்களும் மேரி அன்த்வானெட்டாவின் முடியும் உள்ளன. இது நம்பமுடியாத விஷயம். நான் அடிக்கடி இந்த மோதிரத்தை அணிவேன்," என்றார் அவர்.
"மிகவும் அரிதான இந்த நகையின் மதிப்பு என்னவாக இருக்கும் என்று ஒரு நிபுணரிடம் நான் ஒருமுறை கேட்டேன். அவருடைய பதில் மிகவும் அதிகம் என்பதாகும். இதன் விலை 8500 முதல் 10,600 டாலர்கள் வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது. ஆனால் அதைவிட 50 மடங்கு அதிக விலைக்கு இது விற்கப்பட்டது,” என்று அவர் குறிப்பிட்டார்.
படத்தின் மூலம் பிரபலமான வைரம்

பட மூலாதாரம், Getty Images
1870 களில், இந்த வைரம் பிரபலமான கடை டிஃப்பனியால் வாங்கப்பட்டது. 1961 ஆம் ஆண்டு வெளியான "பிரேக்ஃபாஸ்ட் அட் டிஃப்பனிஸ்" திரைப்படத்திற்கான விளம்பர புகைப்படங்களில் நடிகை ஆட்ரி ஹெப்பர்ன் இந்த வைரத்தை அணிந்திருந்தார்.
இந்த வைரம் பார்ப்பதற்கு சிறப்பாக இருந்தது. கலாச்சார மதிப்புமிக்கது. இந்த மஞ்சள் நிற வைரத்துடன் கடந்த காலத்தின் சில வேதனை தரும் நினைவுகளும் இணைந்துள்ளன.
128.54 காரட் கொண்ட இந்த வைரத்தை இதுவரை மேரி வைட்ஹவுஸ், ஆட்ரி ஹெப்பர்ன், லேடி காகா மற்றும் பியோனஸே ஆகிய நான்கு பெண்கள் மட்டுமே அணிந்துள்ளனர். ஆனால் இந்த திகைப்பூட்டும் வைரத்தின் கதையும் மிகவும் வேதனையானது.
இது 1877 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் உள்ள கிம்பர்லி சுரங்கத்தில் இருந்து இது எடுக்கப்பட்டது. இந்த சுரங்கத்தில், கறுப்பினத்தொழிலாளர்கள் மிகவும் பரிதாபமான சூழ்நிலையில் வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்டனர்.
அத்தகைய வைரங்களை 'ரத்த வைரங்கள்' என்று அழைக்க வேண்டும் என்று 2021 ஆம் ஆண்டு வாஷிங்டன் போஸ்ட்டில் வெளியிடப்பட்ட கட்டுரையில், எழுத்தாளர் கரேன் அதியா எழுதினார்.
" ஆப்பிரிக்காவின் வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டபோது ஆயிரக்கணக்கான ஆப்பிரிக்கர்கள் தங்கள் உயிரை இழந்தனர் மற்றும் பல சமூகங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன," என்கிறார் அதியா.
விக்டோரியா ராணியின் கிரீடம்

பட மூலாதாரம், Getty Images
லண்டனின் விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் உள்ள மிகவும் பிரபலமான ஆபரணம் இதுவாகும். விக்டோரியா மகாராணியின் கிரீடத்தில் விலைமதிப்பற்ற நீலங்களும், வைரங்களும் மின்னுகின்றன. இது 1840 இல் இளவரசர் ஆல்பர்ட்டால் ராணிக்காக வடிவமைக்கப்பட்டது. இந்த அரச தம்பதியினர் அதே ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர்.
ஜோசப் கிச்சிங் இந்த அழகான கிரீடத்தை உருவாக்கினார்.
"மகாராணி தனது இளமைக்காலத்தில் அதை தன் தலையில் பெருமையுடன் அணிந்துகொள்வார். பிரின்ஸ் ஆல்பர்ட் காலமான பிறகு இந்த கிரீடம் அவருடைய தொப்பியை அலங்கரித்தது. ஆல்பர்ட்டை தன்னிடமிருந்து பிரிக்க அவர் விரும்பவில்லை," என்று மோல்ஸ்வொர்த் விளக்குகிறார்.
பிரிட்டிஷ் அரச குடும்பத்திற்கு நீலக்கல் மிகவும் முக்கியமானது. விக்டோரியாவில் இருந்து தொடங்கிய நீலக்கல், இளவரசி டயானா வரை செல்கிறது என்று அவர் தெரிவித்தார்.
நெப்போலியனின் வைர நெக்லஸ்

பட மூலாதாரம், Getty Images
வரலாற்று சிறப்புமிக்க நெப்போலியன் வைர நெக்லஸ் பிரான்சின் பேரரசரால் 1811 இல் அவரது இரண்டாவது ராணி மேரி லூயிக்கு அவர்களின் இரண்டாவது மகன் இரண்டாம் நெப்போலியன் பிறந்தவுடன் வழங்கப்பட்டது.
இந்த வெள்ளி மற்றும் தங்க நெக்லஸை எட்டியென் நீட்டோ வடிவமைத்தார். இதில் 234 வைரங்கள் உள்ளன. அவை பல சிறிய வைரங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
"இந்த வைரங்கள் அனைத்தும் இந்தியா மற்றும் பிரேசில் சுரங்கங்களிலிருந்து வந்தவை. வரலாற்று ரீதியாக, இந்த பகுதிகளில் சிறந்த வைரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன," என்று ஹிஸ்காக்ஸ் கூறுகிறார்.
நெப்போலியனின் தோல்விக்குப் பிறகு இந்த விலைமதிப்பற்ற நெக்லஸ் அவரது மனைவியின் நகரமான வியன்னாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அவரது மனைவி இறந்த பிறகு, இந்த நெக்லஸ் நெப்போலியனின் சகோதரிக்கு சென்றது.
இந்த நெக்லஸ் 1948 வரை அந்தக்குடும்பத்திடம் இருந்தது. அதன் பிறகு அதை ஒரு பிரெஞ்சு பிரபு வாங்கினார். பிறகு அவரிடம் இருந்து அமெரிக்க தொழிலதிபர் மர்ஜோரி மெரிவெதர் போஸ்ட் அதை வாங்கினார்.
பின்னர் மெரிவெதர் போஸ்ட் அதை ஸ்மித்சோனியன் அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக வழங்கினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












