மகளிர் உரிமை மாநாடா, வாரிசுகள் மாநாடா? - கனிமொழியின் பதில் என்ன?

திமுக மகளிர் உரிமை மாநாடு

பட மூலாதாரம், DMK/TWITTER

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

'இந்தியா' கூட்டணியின் அகில இந்தியத் தலைவர்களை அழைத்து மிகப் பெரிய அளவில் மகளிர் உரிமை மாநாடு ஒன்றை நடத்தி முடித்திருக்கிறது தி.மு.க. இதன் பின்னணி என்ன? தேர்தல் ரீதியாக இந்த மாநாடு தி.மு.கவுக்கு உதவுமா?

சென்னையில் கடந்த அக்டோபர் 14ஆம் தேதியன்று தி.மு.க மகளிரணியின் சார்பில் மிகப் பெரிய அளவில் `மகளிர் உரிமை மாநாட்டை' நடத்தி முடித்திருக்கிறது தி.மு.க.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, அவரது மகளும் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான ப்ரியங்கா காந்தி, தேசியவாத ஜனநாயகக் கட்சியின் மூத்த தலைவரான சுப்ரியா சுலே, சுஷ்மிதா தேவ், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி, லேஷி சிங், ராக்கி பிர்லா, ஆனி ராஜா, சுபாஷினி அலி, டிம்பிள் யாதவ் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் சோனியா காந்தி, ப்ரியங்கா காந்தி ஆகியோர் பேசிய பேச்சுகள் வெகுவாக கவனத்தை ஈர்த்தன. கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இருக்கும் பெரும்பாலான மாநிலத்தைச் சேர்ந்த பெண் தலைவர்களை அழைத்து வந்து, ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாடு, தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடாக மட்டுமல்ல - இந்தியப் பெண்களின் மாநாடாக அமைந்திருக்கிறது" என்று குறிப்பிட்டார்.

திமுக மகளிர் உரிமை மாநாடு

பட மூலாதாரம், DMK/TWITTER

ஏன் மகளிர் உரிமை மாநாடு ?

முழுக்க முழுக்க அகில இந்திய அளவிலான பெண் தலைவர்களை வைத்து மாநாட்டை ஒருங்கிணைப்பது என்ற சிந்தனையும் இந்த மாநாட்டில் பங்கேற்றவர்களின் பேச்சுகளும் நேர்மறையாகவே செய்திகளில் வந்த நிலையில், தி.மு.கவுக்கு இது கூடுதல் உற்சாகத்தை அளித்திருக்கிறது.

இந்த மாநாட்டை கலைஞர் நூற்றாண்டு விழாவுக்கான தி.மு.கவின் மகளிரணி சார்பிலான ஒரு மாநாடாக நடத்தத்தான் திட்டமிடப்பட்டது. ஆனால், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியிருந்தாலும், அது எப்போது நடைமுறைக்கு வரும் என்பது தெரியாததால், அதனை ஒரு முக்கியப் பிரச்சனையாக மாற்றிவருவதால், இதனை மகளிர் உரிமை மாநாடாக நடத்த முடிவுசெய்யப்பட்டது என்கிறார் மாநாட்டை ஒருங்கிணைத்த தி.மு.கவின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி.

"பொதுவாகவே பெண்களின் கருத்துகளை மையப்படுத்திய ஒரு பார்வையை உருவாக்குவதில்லை. அதைச் செய்ய வேண்டும் என்பதுதான் மிக முக்கியமான நோக்கம். முதல்வரும் அதைச் செய்யலாம் என்றார். மற்ற தலைவர்களும் அதை ஏற்றுக்கொண்டார்கள். அதற்குள் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா தாக்கல்செய்யப்பட்டுவிட்டது. ஆகவே, அதன் போதாமைகளையும் பேச முடிவுசெய்தோம்" என பிபிசியிடம் தெரிவித்தார் கனிமொழி.

இம்மாதிரி மாநாடுகள் வாக்குகளைப் பெற்றுத் தருமா என்பதைத் தாண்டி, பெண்களை மையப்படுத்திய ஒரு அரசியல் பார்வையை உருவாக்குவதுதான் இதன் நோக்கம் என்கிறார் கனிமொழி.

"பெண்கள் எதைச் செய்ய விரும்புகிறார்கள் என்று சுட்டிக்காட்டுவது, அவர்களுக்கான அரசியல் வெளியை உருவாக்குவது ஆகியவைதான் இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம். அதற்கான முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறோம். அரசியல் பார்வை, கொள்கைகளை உருவாக்குவது, அரசு ஆகியவற்றில் பெண்களின் பார்வைக்கும் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என நினைக்கிறோம். அதை நோக்கிச் செல்ல ஆரம்பித்திருக்கிறோம்.

திமுக மகளிர் உரிமை மாநாடு

பட மூலாதாரம், DMK/TWITTER

மாநாட்டின் நோக்கம் என்ன ?

தேர்தல் அரசியலும் முக்கியம், கருத்து ரீதியான பார்வை உருவாக்குவதும் முக்கியம். அதே நேரத்தில் வெறுப்பு அரசியலுக்கு எதிராகச் செயல்பட வேண்டிய தேவை இருக்கிறது.

பிற்போக்குத்தனமான விஷயங்களை முன்னிறுத்தி மக்களைப் பிரிக்கக்கூடிய அரசியலானது வன்முறைக்கு வழிவகுக்கும்போது முதலில் பாதிக்கப்படக்கூடியவர்கள் பெண்கள்தான். குஜராத்திலும் மணிப்பூரிலும் அதைத்தான் பார்க்கிறோம்.

ஆகவே அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதும் இதன் நோக்கம்" என்கிறார் கனிமொழி.

இதுபோன்ற மாநாடுகள் தேர்தல் அரசியலிலும் தி.மு.கவுக்கு உதவும் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ப்ரியன்.

"ஜெயலலிதா இருந்தவரை, பெண்களின் வாக்கை அ.தி.மு.க. கூடுதலாகப் பெற்றது என்ற ஒரு பார்வை இருந்தது. ஆனால், தி.முக. 2021ல் ஆட்சிக்கு வந்த பிறகு, தொடர்ச்சியாக பெண்கள் வாக்குகளின் மீது கவனம் செலுத்தி வருகிறது.

பெண்களை இலக்காக வைத்து, மகளிர் உரிமைத் தொகை, பேருந்தில் பெண்களுக்கு இலவசப் பயணம் போன்ற திட்டங்களைச் செயல்படுத்தியிருக்கிறது. அதேபோல, பள்ளிக்கூடங்களில் காலை உணவுத் திட்டமும் பெண்களிடம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் தொடர்ச்சியாகத்தான் இந்த மாநாட்டைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

அ.தி.மு.கவின் பெண் வாக்காளர்களை இந்த மாநாட்டை வைத்து மட்டும் முழுமையாக ஈர்க்க முடியாது. ஆனால், அரசின் திட்டங்கள், இது போன்ற மாநாடுகள் ஏற்படுத்தும் செய்திகளை வைத்து குறிப்பிட்ட அளவு தாக்கத்தைச் செலுத்த முடியும்" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ப்ரியன்.

திமுக மகளிர் உரிமை மாநாடு

பட மூலாதாரம், DMK/TWITTER

என்ன சொல்கிறது பாஜக ?

இந்த மாநாடு தொடர்பாக பா.ஜ.க. ஒரு விமர்சனத்தை முன்வைத்தது. "அந்த மாநாட்டு மேடையில் அமர்ந்திருந்தவர்கள் எல்லோருமே பெரிய தலைவர்களின் உறவினர்கள். இவர்கள் சாதாரண மக்களைப் பற்றிப் பேச முடியாது" என்றார் அக்கட்சியின் மாநிலத் தலைவரான கே. அண்ணாமலை.

"மகளிர் உரிமை மாநாடு என்ற பெயரில் மகளிர் வாரிசு உரிமை மாநாட்டை நடத்துகின்றனர்" என்று குறிப்பிட்டார் பா.ஜ.க. மகளிரணியின் தேசியத் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி ஸ்ரீநிவாசன்.

ஆனால், இந்த விமர்சனம் பெரிதாக எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்கிறார் ப்ரியன். "இது போன்ற விமர்சனத்தைச் செய்ய பா.ஜ.கவுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. ஆனால், இதுபோன்ற விமர்சனங்களை இன்னும் எத்தனை நாட்களுக்கு முன்வைப்பார்கள்? வாரிசுகளை அந்தந்த கட்சித் தொண்டர்களும் நிர்வாகிகளும் ஏற்றுக்கொண்டார்கள்.

தேர்தல்களில் மக்களும் ஏற்றுக்கொண்டார்கள். காங்கிரசைப் பொறுத்தவரை, 1990களுக்குப் பிறகு நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்சிக்கு வரவில்லை. கட்சியை மட்டும்தான் கட்டுப்படுத்துகிறார்கள். அதுபோல பிற கட்சிகளிலும் நடக்கலாம். அப்படியிருக்கும்போது இந்த விமர்சனத்தில் பெரிய அர்த்தமில்லை" என்கிறார் ப்ரியன்.

பா.ஜ.கவைச் சேர்ந்த குஷ்புவும் இந்த விமர்சனத்தை கடுமையாக முன்வைத்தார். "இதே குஷ்புவுக்கு காங்கிரசில் பதவி அளிக்கும்போது சோனியா காந்தியும் ப்ரியங்கா காந்தியும் வாரிசுகள் என்பது தெரியவில்லையா? வாரிசு அரசியல் இருக்கிறதா என்று கேட்டால் இருக்கிறது. ஆனால், அதைச் சொல்ல பா.ஜ.கவுக்கு தகுதி இருக்கிறதா என்பதுதான் இங்கே முக்கியமான கேள்வி" என்கிறார் குபேந்திரன்.

திமுக மகளிர் உரிமை மாநாடு

பட மூலாதாரம், DMK/TWITTER

உதயநிதியையும் கனிமொழியையும் எப்படி பார்க்கிறார் முதல்வர் ஸ்டாலின் ?

ஒரு அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், அரசியல் பேசக்கூடாது என்பது எப்படி சரியான நிலைப்பாட இருக்க முடியும் எனக் கேள்வியெழுப்புகிறார் கனிமொழி.

"ஆம் ஆத்மிக் கட்சியின் தில்லி சட்டப்பேரவை துணைத் தலைவர் ராக்கி பிட்லன் பேசும்போது தன் தந்தை எப்படி ஒரு சாதாரணத் தொழிலாளராக இருந்தார் என்பதைப் பகிர்ந்துகொண்டார். அதுபோல பல தலைவர்கள் இருக்கிறார்கள். மற்றொரு பக்கம், ஒரு அரசியல் குடும்பத்தில் இருந்து வரக்கூடிய பெண்கள் அரசியல் பேசக்கூடாது, அரசியலில் இறங்கக்கூடாது என்ற நிலைப்பாடு எப்படி நியாயமாக இருக்கும்?" என்கிறார் கனிமொழி.

தி.மு.கவைப் பொறுத்தவரை, உதயநிதி ஸ்டாலினை கட்சியின் அடுத்த தலைவராக முன்னிறுத்திவரும் நிலையில், அகில இந்திய அளவில் கவனம் கிடைக்கக்கூடிய மாநாட்டை முதலமைச்சரின் சகோதரியும் கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி நடத்தி முடித்திருப்பதும் அதில் முதலமைச்சர் முழு ஈடுபாட்டோடு கலந்துகொண்டதும் பலராலும் கவனிக்கப்படுகிறது.

"இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. இந்த மாநாட்டால் கட்சிக்கு அகில இந்திய அளவில் பெரிய கவனம் கிடைத்திருக்கிறது. ஆகவே, கட்சியைப் பொறுத்தவரை யாரை எங்கே பயன்படுத்த வேண்டுமோ அங்கே பயன்படுத்துவார்கள். கட்சி ஏற்கனவே செல்லும் திசையில் பெரிய மாற்றம் இருக்காது" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன்.

ஆனால், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைப் பொறுத்தவரை உதயநிதி ஸ்டாலினையும் கனிமொழியையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் நடத்துகிறார் என்கிறார் ப்ரியன்.

"முதலமைச்சர் முழு ஈடுபாட்டோடு இந்த மாநாட்டில் கலந்துகொண்டார். மாநாட்டு ஏற்பாடுகள் நடக்கும்போது அதனைப் பார்வையிட்டதில் இருந்து, கடைசிவரை முழுமையாக கவனம் செலுத்தினார். மு.க.ஸ்டாலினைப் பொறுத்தவரை, உதயநிதி ஸ்டாலினுக்குத்தான் கூடுதல் முக்கியத்துவம் தருகிறார் என்ற பேச்சு இருந்தது. ஆனால், என்னைப் பொறுத்தவரை அவர் இருவரையும் சமமாகத்தான் பார்க்கிறார் எனக் கருதுகிறேன். இந்த மாநாட்டில் நடந்ததை வைத்துப் பார்க்கும்போது அது உறுதியாகியிருக்கிறது" என்கிறார் ப்ரியன்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)