ராஜஸ்தான்: முஸ்லிம் ஆசிரியர்கள் மீது 'லவ் ஜிகாத்', 'மத மாற்றம்' குற்றச்சாட்டு - என்ன நடந்தது?

ராஜஸ்தான்: மாணவர்களை முஸ்லிம் மதத்திற்கு மாற்றியதாக ஆசிரியர்கள் மீது குற்றச்சாட்டு - என்ன நடந்தது?

பட மூலாதாரம், MOHAR SINGH MEENA/BBC

படக்குறிப்பு, இந்தச் சம்பவத்தைக் கண்டித்து சங்கோடு எஸ்.டி.எம். அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • எழுதியவர், மோஹர் சிங் மீனா
    • பதவி, பிபிசி இந்திக்காக ஜெய்பூரிலிருந்து

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா-வில் உள்ள கஜூரி ஒட்பூர் அரசுப் பள்ளியில் ’லவ் ஜிகாத்’ மற்றும் மத மாற்றம் செய்ததாக எழுந்த புகார்கள் தொடர்பான விசாரணை அறிக்கை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கல்வி அமைச்சரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பள்ளியின் முஸ்லிம் ஆசிரியர்கள் மூன்று பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர்களின் அறிக்கையை முதன்மை வட்டார கல்வி அதிகாரி (CBEO) சங்கோத் ராமவதார் ராவல் தயாரித்துள்ளார்.

இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ​​“ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர். இந்த முழு சர்ச்சையும் மனிதத் தவற்றின் காரணமாக எழுந்தது” என்றார்.

இரண்டு முறை விசாரணை

ராஜஸ்தான்: மாணவர்களை முஸ்லிம் மதத்திற்கு மாற்றியதாக ஆசிரியர்கள் மீது குற்றச்சாட்டு - என்ன நடந்தது?

பட மூலாதாரம், MOHAR SINGH MEENA/BBC

படக்குறிப்பு, பள்ளி ஆசிரியர்கள் மீது மதமாற்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக, கல்வித்துறை சார்பில் இரண்டு முறை விசாரணை நடத்தப்பட்டது. கோட்டாவின் முதன்மை மாவட்ட கல்வி அதிகாரி (சிடிஇஓ) சாருமித்ரா சோனியின் உத்தரவின் பேரில், சிபிஇஓ சங்கோத் ராமவதார் விசாரணை நடத்தினார். அதேநேரம், சங்கோட் சிபிஇஓ ராமவதார் ராவல் உத்தரவின் பேரில் ஏசிபிஇஓ புருஷோத்தம் மேக்வால் உள்ளிட்ட மூன்று அதிகாரிகளால் இரண்டாவது முறை விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இரண்டு அறிக்கைகளும் சிடிஇஓ சாருமித்ரா சோனிக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதுகுறித்து அறிக்கை தயாரித்த ராமவதார் ராவல் கூறுகையில், இதுதொடர்பான அறிக்கையை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிவித்தார்.

அவர் அறிக்கை குறித்து எதுவும் கூற மறுத்துவிட்டார். சிடிஇஓ சாருமித்ரா சோனியும் இந்த விவகாரத்தில் எதுவும் கூற மறுத்துவிட்டார். பள்ளி ஆசிரியர்கள் தங்கள் அறிக்கையை எழுத்துப்பூர்வமாக அளித்துள்ளனர். மாணவர்களும் தங்கள் தரப்பைக் கூறியுள்ளனர்.

பள்ளி முதல்வர் டாக்டர் கமலேஷ் பைர்வா, ஆசிரியர்கள் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்து, "இதுவரை எந்தப் பெற்றோரும் மாணவர்களும் பள்ளியில் இதுபோன்ற புகாரைக் கூறவில்லை. ஆசிரியர்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. கல்வித்துறை சார்பில் அதிகாரிகள் விசாரிக்கச் சென்றனர்," என்றார்.

இந்தப் பள்ளியில் 12 ஆண்டுகளாக கற்பித்து வரும் தீபக், ஆசிரியர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து பிபிசியிடம் கூறுகையில், "பள்ளியில் மதமாற்றம், நமாஸ் கற்பித்தல் போன்ற எதுவும் நடக்கவில்லை. இவை அனைத்தும் தவறான குற்றச்சாட்டுகள்," என்றார்.

இடைநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் ஃபிரோஸ் கான் மற்றும் ஷபானா ஆகியோரும் விசாரணை அதிகாரியிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். அதேநேரம், மிர்சா முஜாஹித்திடம் இன்னும் விசாரிக்கப்படவில்லை.

”கடந்த 19ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததால், என்னிடம் இதுகுறித்து இன்னும் விசாரிக்கவில்லை,” என்கிறார் ஆசிரியர் மிர்சா முஜாஹித்.

ஃபிரோஸ் கான் கூறுகையில், "எங்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து எங்களிடம் கேட்கப்பட்டது. இவை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என்று நாங்கள் கூறினோம். அனைத்து ஆசிரியர்களிடமும் தனித்தனியாகப் பேசப்பட்டு அனைவரிடமிருந்தும் எழுத்துப்பூர்வ அறிக்கைகள் பெறப்பட்டன," என்றார்.

விசாரணையில், பள்ளி மாணவர்களிடம் நான்கு கேள்விகள் எழுத்துபூர்வமாகக் கேட்கப்பட்டன. ’ஆம்’ அல்லது ’இல்லை’ என்ற பதில்கள் அவர்களிடம் இருந்து பெறப்பட்டது.

இதுகுறித்து ஏசிபிஇஓ புருஷோத்தம் மேக்வாலிடம் பேசியபோது, ​​உயர் அதிகாரிகளைக் காரணம் காட்டி பேச மறுத்துவிட்டார்.

என்ன நடந்தது?

ராஜஸ்தான்: மாணவர்களை முஸ்லிம் மதத்திற்கு மாற்றியதாக ஆசிரியர்கள் மீது குற்றச்சாட்டு - என்ன நடந்தது?

பட மூலாதாரம், MOHAR SINGH MEENA/BBC

படக்குறிப்பு, இந்த விவகாரம் தொடர்பாக ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.

பிப்ரவரி 5ஆம் தேதி, கஜூரியில் வசிக்கும் பல்ராம் கௌர் என்பவர் சங்கோட் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் ஒன்றைப் பதிவு செய்தார். தனது மகள் முஸ்கான் கௌரை லக்கி அலி கான் தன்னுடன் அழைத்துச் சென்றதாக அவர் குற்றம்சாட்டினார். லக்கி அலி கான், தனது தாய்வழி தாத்தா முகமது சலீமுடன் கஜூரியில் வசிக்கிறார்.

கஜூரி கிராமத்தின் கௌர் பகுதியில் வசித்து வரும் பல்ராம் கூறுகையில், "எனது குடும்பம் சீரழிந்துவிட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு திரும்பி வந்திருக்கிறேன், என் மனைவியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். என் மகள் இன்னும் வீடு திரும்பவில்லை,” என்றார்.

இதுகுறித்து, சங்கோடு காவல் நிலைய பொறுப்பாளர் ஹீரா லால் மீனா கூறுகையில், "விசாரணையின்போது, ​​கஜூரி ஓட்பூர் பள்ளியில் பல்ராமின் மகளுடைய பதிவுகளை போலீசார் கேட்டனர். அவர், இந்தப் பள்ளியில் படித்தவர்” என்றார்.

"கடந்த 2019ஆம் ஆண்டில் 10ஆம் வகுப்பில் சேர்க்கைக்காக அவரின் விண்ணப்பப் படிவத்தை காவல்துறையிடம் வழங்கியது பள்ளி நிர்வாகம். இந்த விண்ணப்பப் படிவத்தில்தான் அவர் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது,” என்கிறார் அவர்.

இந்த விண்ணப்பம் வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து இந்த சர்ச்சை தொடங்கியது. அதேநேரத்தில் முஸ்கான் கௌர், பிப்ரவரி 23 அன்று முத்திரைத் தாளில் அளித்த வாக்குமூலமும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதில், "பத்தாம் வகுப்பு விண்ணப்பப் படிவத்தில் மதத்தை இஸ்லாம் என்று தவறாக எழுதியிருந்தேன். ஆனால், என்னுடைய மதம் இந்து," என அந்த வாக்குமூலத்தில் எழுதப்பட்டுள்ளது.

பள்ளி ஆசிரியர் ஃபிரோஸ் கான், "நாங்கள் மூன்று ஆசிரியர்களும் முஸ்லிம்கள் என்பதால் குறிவைக்கப்பட்டுள்ளோம். இருப்பினும் நாங்கள் எந்தக் குற்றமும் செய்யவில்லை," என்று குற்றம்சாட்டுகிறார்.

மதமாற்ற குற்றச்சாட்டு

ராஜஸ்தான்: மாணவர்களை முஸ்லிம் மதத்திற்கு மாற்றியதாக ஆசிரியர்கள் மீது குற்றச்சாட்டு - என்ன நடந்தது?

பட மூலாதாரம், @MADANDILAWAR/X

படக்குறிப்பு, மதன் திலாவர், கல்வித்துறை அமைச்சர், ராஜஸ்தான்

முஸ்கான் கௌரின் தந்தை பல்ராம் கௌர் பிபிசியிடம், "2019ஆம் ஆண்டு கஜூரி ஓட்பூர் பள்ளியில் என் பேத்தி 10ஆம் வகுப்பில் சேர்க்கப்பட்டார்" என்று கூறினார்.

"பிப்ரவரி 5, 2024 அன்று சங்கோடு காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டபோது, ​​ஆதார் அட்டையின் அடிப்படையில் பேத்தியின் வயதை ஏற்க போலீசார் மறுத்துவிட்டனர். காவல்துறையினரால் கண்டெடுக்கப்பட்ட பள்ளி ஆவணங்களில், அவருடைய மதம் இஸ்லாம் என்று எழுதப்பட்டிருந்தது. அப்போது நாங்களும் உடனிருந்தோம். அப்போதுதான் இதுகுறித்து எங்களுக்குத் தெரியும்," என்றார்.

காவல் நிலைய பொறுப்பாளர் ஹிரா லால் மீனா பிபிசியிடம், "பிப்ரவரி 8ஆம் தேதி சம்பந்தப்பட்ட இளம்பெண் அழைக்கப்பட்டு அரசு காப்பகத்தில் வைக்கப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்," என்று கூறினார். மேலும், "அவர் தானாக முன்வந்து லக்கி அலி கானுடன் சென்றதாக நீதிமன்றத்தில் கூறியுள்ளார். அவர் 18 வயதுக்கு மேற்பட்டவர். அதனால் தானாக அவருடன் செல்ல அவருக்கு சுதந்திரம் இருக்கிறது,” என அவர் தெரிவித்தார்.

இருப்பினும், பள்ளியின் சான்றிதழ் வெளிவருவதற்கு முன்பு, பள்ளி ஆசிரியர்கள் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவில்லை. 2021ஆம் ஆண்டில், முஸ்கான் பள்ளியிலிருந்து வெளியேறினார்.

இந்து அமைப்புகளுக்கு இந்தத் தகவல் கிடைத்ததும், விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. சங்கோடு எஸ்டிஎம் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பிப்ரவரி 20ஆம் தேதி கல்வி அமைச்சரிடம் இதுகுறித்து மனுவும் அளிக்கப்பட்டது.

கோட்டாவில் உள்ள பஜ்ரங் தளத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் யோகேஷ் ரென்வால் பிபிசியிடம், "பள்ளியில் மத மாற்றம், ’லவ் ஜிகாத்’ நடைபெறுகிறது. இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் ஆசிரியர்களுக்குத் தொடர்பு உள்ளது, முஸ்கான் மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறார்," என்று கூறினார்.

ஆசிரியர்கள் மீது நடவடிக்கை

கல்வி அமைச்சருக்கு வந்த புகாரின் அடிப்படையில், பிப்ரவரி 22 அன்று, கோட்டா மாவட்டக் கல்வி அதிகாரி மிர்சா முஜாஹித் மற்றும் ஃபிரோஸ் கான் ஆகியோரை இடைநீக்கம் செய்து இரண்டு உத்தரவுகளைப் பிறப்பித்தார். ஆசிரியை ஷபானாவையும் இடைநீக்கம் செய்து கோட்டாவின் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) யதீஷ்குமார் பிப்ரவரி 24 அன்று உத்தரவு பிறப்பித்தார்.

கல்வி அமைச்சர் மதன் திலாவர், "கஜூரி பள்ளியில், இந்து சிறுமி விண்ணப்பத்தில் மதத்தை முஸ்லிம் என ஆசிரியர் எழுதினார். அங்கு கட்டாயமாக நமாஸ் கற்பிக்கப்படுவதாக, புகார்கள் வந்தன.

"ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அங்கு மிகப்பெரிய மதமாற்ற சதி நடக்கிறது. இந்த மதமாற்ற சதியைத் தொடர அனுமதிக்க மாட்டோம். ராஜஸ்தான் பள்ளிகளை மத மாற்றம் மற்றும் ‘லவ் ஜிகாத்’ மையமாக மாற்ற அனுமதிக்க மாட்டோம்," என அவர் தெரிவித்தார்.

சமீபத்தில் கஜூரி ஒட்பூர் பள்ளி மாணவர்கள், பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது, ​​ஆசிரியர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும், ஆசிரியர்களை மீண்டும் பணியில் சேர்க்குமாறும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மிர்சா முஜாஹித் கூறுகையில், "எங்கள் மீதான குற்றச்சாட்டுகளில் எங்கள் தரப்பைக்கூட கேட்கவில்லை, எங்களை அவசரமாகப் பணிநீக்கம் செய்தது. இவ்விவகாரத்தில் பாரபட்சமற்ற விசாரணையை எதிர்பார்க்கிறோம்,” எனத் தெரிவித்தார்.

”ஆசிரியர்கள் விசாரணைக்குப் பிறகு மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டாலும் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கப்படுவார்கள்,’’ என்கிறார்.

ஷபானா மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்பட்டது?

ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன்லால் சர்மா

பட மூலாதாரம், BHAJANLAL SHARMA/FACEBOOK

படக்குறிப்பு, ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன்லால் சர்மா

கஜூரி ஓட்பூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்பு 8ஆம் வகுப்பு வரை மட்டுமே இருந்தது. 2018ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பாகவும், 2019ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பாகவும் தரம் உயர்த்தப்பட்டது.

பள்ளியில் பதினைந்து ஆசிரியர்கள் உள்ளனர். முஸ்லிம் ஆசிரியர்கள் மூன்று பேர் மிர்சா முஜாஹித், ஃபிரோஸ் கான் மற்றும் ஷபானா. மிர்சா முஜாஹித் ஐந்து ஆண்டுகளும், ஃபிரோஸ் கான் எட்டு ஆண்டுகளும் இங்கு பணியாற்றி வந்தனர்.

அதேநேரம், பணிநீக்கம் செய்யப்பட்ட மூன்றாவது ஆசிரியை ஷபானா. கடந்த ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதிதான் அவர் பணியில் சேர்ந்தார். வேலைக்குச் சென்ற நான்கு மாதங்களில் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். ஷபானாவின் தரப்பை அறிய முயன்றும் தொடர்புகொள்ள முடியவில்லை.

ஃபிரோஸ் கான் கூறுகையில், "ஷபானா நான்கு மாதங்களுக்கு முன்புதான் சேர்ந்தார். அவர் என்ன தவறு செய்தார்?" என்கிறார்.

ஃபிரோஸ் கான் கூறுகையில், "விண்ணப்பப் படிவத்தை தாம் பூர்த்தி செய்ததாக மாணவியே கூறியிருக்கிறார். அப்படியிருக்கையில், ஷபானா என்ன தவறு செய்தார்?" என்கிறார்.

லக்கி அலி கான் யார்?

லக்கி அலி கான் கஜூரி கிராமத்தில் உள்ள அவரது தாய்வழி தாத்தா அப்துல் சலீமின் வீட்டில் வசித்து வந்தார். முஸ்கான் கௌரும் லக்கி கானும் இப்போது எங்கு வாழ்கிறார்கள் என்று அப்துல் சலீம் கூறவில்லை.

அவர் பிபிசியிடம், "என் பேரன் அதிர்ஷ்டசாலி. அவன் வயிற்றில் இருக்கும்போது என் மகளுக்கு விவாகரத்தாகி விட்டது. அன்றிலிருந்து அவர் என்னுடன் வசித்து வருகிறார்" என்று கூறினார்.

“இருவரும் இப்போது எங்கு வாழ்கிறார்கள் என்று தெரியவில்லை. சில நாட்களுக்கு முன்பு சந்தித்தபோது பள்ளி விண்ணப்பப் படிவத்தில் தவறுதலாக முஸ்லிம் என்று எழுதிவிட்டதாக முஸ்கான் தானே முத்திரைத் தாளில் வாக்குமூலம் அளித்தார். காவல்துறையின் பயம் காரணமாக, அவர் தலைமறைவாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

நீதிமன்றத்தில் முஸ்கான் அளித்த வாக்குமூலத்துக்குப் பிறகும், சங்கோடு போலீசார் எங்களைத் துன்புறுத்துகின்றனர். என்னை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று உட்கார வைத்து, முஸ்கானின் வாக்குமூலத்தை மாற்றுங்கள், இல்லையெனில் புல்டோசர்களை ஏற்றி விடுவோம் என்று கூறினர்,” என அவர் குற்றம்சாட்டினார்.

சலீமின் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ராஜு லால் மீனா கூறுகையில், ”நீதிமன்றத்தில் முஸ்கானின் வாக்குமூலம் அளிக்கப்பட்டுவிட்டது, அவர் இப்போது சுதந்திரமாக இருக்கிறார். எனவே, இப்போது வாக்குமூலத்தை மாற்ற அழுத்தம் கொடுக்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை,” என்றார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)