இந்தியாவை இதற்கு முன் உலுக்கிய ரயில் விபத்துகள் - எங்கு, எப்போது நடந்தன?

ஒடிஷாவின் பாலாசோர் மாவட்டம் அருகே 3 ரயில்கள் ஒன்றோடொன்று மோதி பயங்கர ரயில் விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் 261 பேர் உயிரிழந்துள்ளதாக, ஒடிஷாவின் தலைமைச் செயலர் பிரதீப் ஜெனா, ட்வீட் செய்துள்ளார். இந்தச் சம்பவத்தில் சுமார் 900 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் ரயில் விபத்துகளின் வரலாறு புதிதல்ல. நாட்டில் இதுவரை நடந்த மிகப்பெரிய ரயில் விபத்துகள் மீது ஒரு பார்வை.

இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள்

  • 2017, ஆகஸ்ட்19: உத்தர பிரதேசத்தின் முசாஃபர்நகரில் உள்ள கத்தெளலி அருகே கலிங்கா-உத்கல் எக்ஸ்பிரஸின் 14 பெட்டிகள் தடம் புரண்டன.
  • இந்த ரயில் புரியில் இருந்து ஹரித்வாருக்கு சென்று கொண்டிருந்தது. இந்தச் சம்பவத்தில் 23 பேர் உயிரிழந்தனர்.
  • 2017, ஜனவரி 22 : ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகரம் மாவட்டத்தில் ஹீராகுட் எக்ஸ்பிரஸின் 8 பெட்டிகள் தடம் புரண்டதில் குறைந்தது 39 பேர் உயிரிழந்தனர்.
  • 2016, நவம்பர் 20: கான்பூருக்கு அருகிலுள்ள புக்ராயனில் ஒரு பெரிய ரயில் விபத்து நடந்தது, இதில் 150க்கும் மேற்பட்டோர் இறந்தனர். பாட்னா-இந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலின் 14 பெட்டிகள் தடம் புரண்டன.
  • 2015, மார்ச் 20: டேராடூனில் இருந்து வாரணாசிக்கு செல்லும் ஜனதா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது. இந்த விபத்தில் 34 பேர் உயிரிழந்தனர்.
  • 2014, மே 4: திவா சாவந்த்வாதி பயணிகள் ரயில் நாகோடானே மற்றும் ரோஹா ரயில் நிலையங்களுக்கு இடையே தடம் புரண்டது. இதில், 20 பேர் உயிரிழந்தனர், 100 பேர் காயமடைந்தனர்.
  • 2013, டிசம்பர் 28: பெங்களூர்-நாந்தெட் எக்ஸ்பிரஸ் ரயில் தீப்பிடித்து 26 பேர் பலியானார்கள். குளிரூட்டப்பட்ட பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. அதே ஆண்டு ஆகஸ்ட் 19 ஆம் தேதி பிகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தில் ராஜ்யராணி எக்ஸ்பிரஸ் மோதியதில் 28 பேர் உயிரிழந்தனர்.
  • 2012, ஜூலை 30 : இந்திய ரயில்வே வரலாற்றில், 2012 ஆம் ஆண்டு மிகவும் மோசமான ஆண்டுகளில் ஒன்றாகும். இந்த ஆண்டு சுமார் 14 ரயில் விபத்துகள் நடந்துள்ளன. இதில் தடம் புரண்டது மற்றும் நேருக்கு நேர் மோதல்கள் இரண்டும் அடங்கும். 2012 ஜூலை 30 ஆம் தேதி டெல்லி-சென்னை தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லூர் அருகே தீப்பிடித்து 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
  • 2011,ஜூலை 07: உத்திரப் பிரதேசத்தில் ரயில் பேருந்து மீது மோதியதில் 38 பேர் உயிரிழந்தனர்.
  • 2010 செப்டம்பர் 20 : மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஷிவ்புரியில் குவாலியர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் மீது மோதியது. இந்த விபத்தில் 33 பேர் உயிரிழந்தனர் மற்றும் 160 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
  • 2010, ஜூலை 19: மேற்கு வங்கத்தில் உத்தர பங்கா எக்ஸ்பிரஸ் மற்றும் வனாஞ்சல் எக்ஸ்பிரஸ் மோதிக்கொண்டன. இதில் 62 பேர் இறந்தனர் மற்றும் 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
  • 2010, மே 28,: மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்டுகள் என்று சந்தேகிக்கப்படுவோர் நடத்திய தாக்குதலில் கியானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது. இந்த விபத்தில் குறைந்தது 100 பேர் உயிரிழந்தனர்.
  • 2009, அக்டோபர் 21,: உத்தரப் பிரதேசத்தில் மதுரா அருகே மேவார் எக்ஸ்பிரஸின் கடைசி ரயில் பெட்டு மீது கோவா எக்ஸ்பிரஸின் இஞ்சின் மோதியது. இந்த விபத்தில் 22 பேர் பலியானார்கள். 23 பேர் காயமடைந்தனர்.
  • 2009, பிப்ரவரி 14 : (ரயில் பட்ஜெட் தினம்) ஹவுராவிலிருந்து சென்னை நோக்கிச் செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸின் 14 பெட்டிகள் ஒடிஷாவில் உள்ள ஜாஜ்பூர் ரயில் நிலையம் அருகே தடம் புரண்டன. இந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர், 50 பேர் காயமடைந்தனர்.
  • 2008 ஆகஸ்ட் 01: செகந்திராபாத்தில் இருந்து காக்கிநாடா நோக்கிச் சென்று கொண்டிருந்த கௌதமி எக்ஸ்பிரஸ் இரவில் தீப்பிடித்தது. இதன்காரணமாக 32 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
  • 2005, ஏப்ரல் 21: குஜராத்தில் வதோதரா அருகே சாபர்மதி எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் மோதிக்கொண்டதில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 78 பேர் காயமடைந்தனர்.
  • 2005 பிப்ரவரி 3: மகாராஷ்டிராவில் நாக்பூர் நோக்கிச்சென்றுகொண்டிருந்த ரயில், டிராக்டர்-டிராலியுடன் மோதியதில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
  • 2003 ஜூன் 22: மகாராஷ்டிராவில் ரயில் ஒன்று தடம் புரண்டதில் 51 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.
  • 2003, ஜூலை 2,: ஆந்திரப் பிரதேசத்தில் ஹைதராபாத்தில் இருந்து 120 கிமீ தொலைவில் உள்ள வாரங்கலில், மேம்பாலத்தின் மேலே இருந்து கோல்கொண்டா எக்ஸ்பிரஸின் இரண்டு பெட்டிகளும் இன்ஜினும் சாலையில் விழுந்தன. இந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர்.
  • 2003, மே 15 : பஞ்சாபில் லூதியானா அருகே ஃபிராண்டியர் மெயிலில் தீப்பிடித்ததில் குறைந்தது 38 பேர் உயிரிழந்தனர்.
  • 2002, செப்டம்பர் 9: ஹவுரா-புது டெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் விபத்துக்குள்ளானது. இதில் 130 பேர் உயிரிழந்தனர்.
  • 2001, ஜூன் 22: மங்களூர்-சென்னை மெயில், கேரளாவில் கடலுண்டி ஆற்றில் விழுந்தது. இதில் 59 பேர் உயிரிழந்தனர்.
  • 2001, மே 31: உத்திரப் பிரதேசத்தில் ரயில்வே கிராசிங்கில் நின்று கொண்டிருந்த பேருந்து மீது ரயில் மோதியது. 31 பேர் உயிரிழந்தனர்.
  • 2000, டிசம்பர் 2 : கொல்கத்தாவில் இருந்து அமிர்தசரஸ் நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஹவுரா மெயில் டெல்லி நோக்கிச் சென்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியது. இதில் 44 பேர் பலியானார்கள். 140 பேர் காயமடைந்தனர்.
  • 1999, ஆகஸ்ட் 3 : டெல்லி நோக்கிச் சென்ற பிரம்மபுத்ரா மெயில் மேற்கு வங்கத்தில் உள்ள கேசல் என்ற இடத்தில் அவத்-அசாம் எக்ஸ்பிரஸ் மீது மோதியது. இதில் 285 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 312 பேர் காயமடைந்தனர்.
  • 1998, நவம்பர் 26 : பஞ்சாபின் கன்னாவில் ஃபிராண்டியர் மெயில், சீயல்தா எக்ஸ்பிரஸ் மீது மோதியது. இதில் 202 பேர் இறந்தனர். 120 பேர் காயமடைந்தனர்.
  • 1997, செப்டம்பர் 14 : அகமதாபாத்-ஹவுரா எக்ஸ்பிரஸ் சத்தீஸ்கரின் பிலாஸ்பூரில் ஆற்றில் விழுந்தது. 81 பேர் கொல்லப்பட்டனர், 100 பேர் காயமடைந்தனர்.
  • 1996, ஏப்ரல் 18: எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் தெற்கு கேரளாவில் பேருந்து மீது மோதியது. இதில் 35 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்தனர்.
  • 1995, ஆகஸ்ட் 20 : புது டெல்லி சென்றுகொண்டிருந்த புருஷோத்தம் எக்ஸ்பிரஸ், உத்திரப் பிரதேசத்தில் உள்ள ஃபிரோஸாபாத்தில் காளிந்தி எக்ஸ்பிரஸ் மீது மோதியது. இதில் 250 பேர் பலியானார்கள். 250 பேர் காயமடைந்தனர்.
  • 1993, டிசம்பர் 21: கோட்டா-பீனா எக்ஸ்பிரஸ், ராஜஸ்தானில் சரக்கு ரயில் மீது மோதியது. 71 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
  • 1990 ஏப்ரல் 16 : பாட்னா அருகே பயணிகள் ரயிலில் தீப்பிடித்தது. இதில் 70 பேர் உயிரிழந்தனர்.
  • 1985, பிப்ரவரி 23: ராஜ்நந்த்காவில் பயணிகள் ரயிலின் இரண்டு பெட்டிகள் தீப்பிடித்தன. இதில் 50 பேர் இறந்தனர். பலர் காயமடைந்தனர்.
  • 1981, ஜூன் 6 : பிகாரில் புயல் காரணமாக ரயில் ஆற்றில் விழுந்தது. இதில் 800 பேர் உயிரிழந்தனர். 1000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: