சென்னை சூப்பர் கிங்ஸின் 'முக்கியமான' பலவீனத்தை சரி செய்ய முடியுமா?

பட மூலாதாரம், Getty Images
16-ஆவது ஐபிஎல் போட்டித் தொடர் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நாளை தொடங்கவுள்ளது. முதல் போட்டியிலேயே தற்போதைய சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் உடன் முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் மோதவுள்ளது.
வெற்றிகரமான கேப்டன் எனும் பேர் பெற்ற எம்.எஸ்.தோனி இதுவரை 2010, 2011, 2018, 2021 என 4 முறை சென்னை அணிக்கு கோப்பையை வென்று கொடுத்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை ஃபிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணி சென்னைதான். அதேசமயம், கடந்த ஆண்டு சி.எஸ்.கேவுக்கு சற்று கடினமான ஆண்டாக அமைந்தது. தோனி கேப்டன்சியில் இருந்து விலகியது, ஜடேஜா தலைமையில் சி.எஸ்.கே தொடர்ந்து சறுக்கியது என பல்வேறு சவால்களுக்கு மத்தியில் புள்ளிப்பட்டியலில் 9-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டிருந்தது சென்னை அணி.
இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ்-க்கு ஐபிஎல் தொடர் எப்படி அமையும்? தோனி தலைமையில் 5வது முறையாக கோப்பையை வெல்லுமா சி.எஸ்.கே?
கவனிக்கப்பட வேண்டிய புது முகங்கள்
ஐபிஎல் ஏலத்தில் சென்னை அணி 16.25 கோடி ரூபாய் கொடுத்து வாங்கிய ஒரு சிறந்த ஆட்டக்காரர்தான் பென் ஸ்டோக்ஸ். இங்கிலாந்தின் அதிரடி ஆல்ரவுண்டர். 2019 உலகக் கோப்பையை இங்கிலாந்து அணி வெல்ல உறுதுணையாக திகழ்ந்தவர். மஞ்சள் சீருடையில் அவர் களமிறங்குவது ரசிகர்களைத் தாண்டி மொத்த அணிக்கு உத்வேகம் அளிக்கக்கூடும். ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கிறது.
ஐபிஎல் இறுதிப்போட்டிக்குப் பிறகு இங்கிலாந்து அணி அயர்லாந்துடன் டெஸ்ட் போட்டியில் மோதுகிறது. இந்த போட்டியில் பென் ஸ்டோக்ஸ் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டால், தொடரின் இறுதி நாட்களில் அவர் சி.எஸ்.கேவுக்கு ஆட முடியாமல் போகலாம்.
இதுதவிர, ஜடேஜாவுக்கு மாற்றாக, நிஷாந்த் சிந்து, அஜய் மன்டல் என இரண்டு இடது கை சுழற்பந்துவீச்சாளர்களை வைத்திருக்கிறது சி.எஸ்.கே. மஹீஷ் தீக்சனா சுழற்பந்துவீச்சில் முக்கிய வீரராக திகழ்வார் என்றும் சேப்பாக்கம் அவருக்கு சிறந்த எதிர்காலத்தை அமைத்துத்தரக்கூடும் என்றும் சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது.

பட மூலாதாரம், Getty Images
சேப்பாக்கம் கைகொடுக்குமா?
இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் தலா 14 லீக் போட்டியில் விளையாடவுள்ளன. இதில், 7 லீக் ஆட்டங்கள் வெளி மைதானங்களிலும் 7 லீக் ஆட்டங்கள் அவர்களது சொந்த மைதானங்களிலும் நடைபெறவுள்ளது. சென்னையில் நடைபெறும் ஆட்டங்கள் சிஎஸ்கே அணிக்கு உற்சாகமும் உத்வேகமும் தரும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3வது ஒருநாள் போட்டியின் மூலம் சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எவ்வளவு சாதகமாக இருப்பது என்பதை அறிய முடிகிறது. சென்னை அணியில் வெவ்வேறு முறைகளில் பந்தை சுழற்ற பலர் இருக்கின்றனர். அதேபோல சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள ருத்துராஜ் கெய்க்வாட், கான்வே, மொயின் அலி போன்றோர் இருக்கின்றனர். சென்னை மைதானம் என்பதால் ரசிகர்களின் ஆர்ப்பரிப்பு கூடுதல் எனர்ஜியை தரும்.

பட மூலாதாரம், Getty Images
பேட்டிங் ஒகே, பவுலிங் எப்படி?
மேலோட்டமாக பார்க்கும்போது சென்னை சூப்பர் கிங்ஸ் வழக்கம்போல பேட்டிங்கில் வலுவாகவே திகழ்கிறது. கான்வே - ருத்துராஜ் தொடக்க ஆட்டக்காரர்களாக அணிக்கு வலுசேர்ப்பார். உத்தேசமாக அவர்களைத் தொடர்ந்து மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ், அம்பத்தி ராயுடு, ரவிந்திர ஜடேஜா, ஷிவன் துபே, எம்.எஸ்.தோனி, தீபக் சஹர் போன்றோர் உள்ளனர். இந்த 9 பேருமே பேட்டிங்கில் கணிசமான பங்களிப்பை செய்யக்கூடியவர்கள். அதே அளவுக்கு பந்துவீச்சிலும் கைத்தேர்ந்தவர்கள்.
ஆனால் வழக்கம்போல இந்த முறையும் பந்துவீச்சில் சி.எஸ்.கேவுக்கு ஒரு ஓட்டை இருக்கிறது. டெத் ஓவர்களை வீசுவதற்கு சொல்லிக்கொள்ளும்படியாக வீரர்கள் இல்லை. கைல் ஜேமிசனுக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட தென்னாப்பிரிக்காவின் சிசான்டா மகாலா இந்த பிரச்னைக்கு சற்று தீர்வு அளிக்ககூடும். வீரர்களை சரியாக தேர்ந்தெடுப்பதும், டெத் ஓவர்களில் கைத்தேர்ந்தவர்களை பயன்படுத்துவதும் தோனிக்கு முன்னால் உள்ள சவாலாக பார்க்கப்படுகிறது.
சி.எஸ்.கே.வில் யார் இல்லை?
நியூசிலாந்து வீரர் கைல் ஜேமிசான் காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு பதிலாக தென்னாப்பிரிக்காவின் சிசான்டா மகாலா அணியில் இடம்பெற்றுள்ளார். காயம் காரணமாக அவதிப்படும் முகேஷ் சவுத்ரி விரைவில் அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மஹீஷ் தீக்ஷனா, மதீஷா பதிரானா ஆகிய இருவரும் முதல் 3 ஆட்டங்களில் பங்கேற்க வாய்ப்பில்லை. இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டிகளால் ஏப்ரல் 8ம் தேதி வரை அவர்கள் பங்கேற்க மாட்டார்கள்.

பட மூலாதாரம், Getty Images
தோனிக்கு கடைசி சீசனா?
இந்த சீசனோடு தோனி ஐபிஎல் தொடர்களில் இருந்து ஓய்வுபெறுவாரா என்கிற கேள்வி கடந்த 3,4 ஆண்டுகளாகவே கிரிக்கெட் வட்டாரங்களில் சுற்றிக்கொண்டிருக்கிறது. 2021-ல் சி.எஸ்.கே கோப்பையை வென்றபோது அத்துடன் தோனியும் ஓய்வுபெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் எந்த முடிவையும் எடுக்கவில்லை. 2022-ல் கேப்டன்சியில் இருந்து தோனி விலகியபோது அந்த தொடரோடு ஐபிஎல் பயணம் முடிவுக்கு வரும் என சொல்லப்பட்டது.
அதற்கு வலு சேர்க்கும் விதமாக சென்னையின் புதிய முகமாக ஜடேஜாவை மாற்றும் பொருட்டு அவர் கேப்டனாக்கப்பட்டார். ஆனால் தொடர் தோல்வியால் ஜடேஜா கேப்டன்சியில் இருந்து விலக நேரிட்டதால் மீண்டும் தலைமைப் பொறுப்பு தோனி வசம் வந்தது.
சென்னையில்தான் என் கடைசி ஆட்டம் இருக்கும் என தோனி தெரிவித்தது அவரது ஓய்வு குறித்த பேச்சுக்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைத்தது. தோனிக்கு 41 வயதாகிறது. சென்னை சேப்பாக்கத்தில் சாதித்து, கோப்பையுடன் ஐபிஎல் பயணத்திற்கு தோனி முடிவுரை எழுதுவாரா என்பதே பலரது எண்ணம். ஆனால், தனது ஓய்வு குறித்த விசயத்தில் தோனிதான் முடிவு செய்ய வேண்டும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












