ஐபிஎல் புதிய விதிகள்: போட்டிகளை மேலும் விறுவிறுப்பாக்க வரும் இம்பாக்ட் பிளேயர்

ஐபிஎல்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், பொல்லன் கேட்
    • பதவி, பிபிசி மராத்தி செய்தியாளர்

16-வது ஐ.பி.எல். தொடர் இன்னும் சில நாட்களில் தொடங்கப் போகிறது. கொரோனா பேரிடருக்குப் பின்னர் அனைத்து அணிகளும் சொந்த மைதானத்தில் சொந்த ரசிகர்களின் ஆர்ப்பரிப்பை முதன் முறையாக காணப் போகின்றன. இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு அணியும் சொந்த மைதானத்திலும், எதிரணி மைதானத்திலும் தலா ஒரு போட்டிகளை விளையாடும் வழக்கம் மீண்டும் வருகிறது.

இதுபோன்ற மாற்றங்களால் எதிர்வரும் ஐ.பி.எல். தொடர் ரசிகர்களுக்கு இன்னும் சுவாரசியமான ஒன்றாக இருக்கப் போகிறது.

ஐ.பி.எல். தொடரில் என்னென்ன புதிய மாற்றங்கள் வரவிருக்கின்றன என்பதை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

இதுநாள் வரையிலும், ஒவ்வொரு போட்டியிலும் டாஸ் போடுவதற்கு முன்பே எதிரணி கேப்டனுக்கு தனது அணி வீரர்கள் விவரத்தை ஒவ்வொரு கேப்டனும் அளிப்பார்கள். புதிய விதிகளின்படி, வரும் ஐ.பி.எல். தொடரில் டாஸ் போட்ட பிறகு அணி வீரர்கள் விவரம் வெளியாகும்.

ஆம். நீங்கள் வாசித்தது சரிதான்.

டாஸ் போடுகையில், கேப்டன்கள் தனது அணிக்கான 11 வீரர்கள் அடங்கிய இருவேறு பட்டியலை அளிப்பார்கள். டாஸ் போட்டதும், முதலில் பேட்டிங்கா அல்லது பந்துவீச்சா என்பது தெளிவான பிறகு, அதற்கேற்ப தனது அணி வீரர்கள் பட்டியலை எதிரணி கேப்டனுக்கு அளிப்பார்கள்.

ஆடுகளத்தின் தன்மை, மைதானத்தின் சுற்றளவு, போட்டி எந்த நேரத்தில் விளையாடப்படுகிறது?, பனிப்பொழிவுக்கான சாத்தியம் இருக்கிறதா? என்பன போன்றவற்றைப் பொருத்து, டாஸ் போட்ட பிறகு கேப்டன்கள் தங்களது அணியைத் தீர்மானிப்பார்கள்.

இதுவரையிலும், டாசுக்கு முன்னதாகவே அணி வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுவிடும். அதன் காரணமாக, டாஸில் தோற்கும் அணிக்கு பின்னடைவைச் சந்திக்க நேரிடுகிறது.

ஐ.பி.எல். தொடரில் புதிய விதிகள் என்ன?

பட மூலாதாரம், Getty Images

உதாரணமாக, போட்டி நடக்கும் ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமானது என்று எடுத்துக் கொள்வோம். அங்கே, டாஸ் வெல்லும் கேப்டன் சிறிதும் தயங்காமல் முதலில் பந்துவீச முடிவு செய்து, அதன் மூலம் பயனடையலாம்.

அந்த போட்டியில், டாஸில் தோற்கும் அணி முதலில் பேட்டிங் செய்ய நேரிடும். தொடக்கத்தில் வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கக் கூடிய அந்த ஆடுகளத்தில், இரண்டாவதாக பந்துவீசப் போகும் அந்த அணிக்கு எந்தவொரு அனுகூலமும் கிடைக்காது. புதிய விதிகளின்படி, டாஸில் தோற்கும் கேப்டன், சூழலுக்கு ஏற்ப தனது 11 பேர் அடங்கிய அணியை அறிவிக்க முடியும்.

ஆட்டத்தின் நடுவே வீரரை மாற்றிக் கொள்ளலாம் (Impact Player)

தென் ஆப்ரிக்காவில் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற உள்ளூர் டி20 தொடரில் இந்த விதி அறிமுகப்படுத்தப்பட்டது. வீரர்களும், அணி உதவியாளர்களும் இந்த விதி குறித்து அறிந்தவர்களாக இருக்கின்றனர்.

இந்த புதிய விதிகள் குறித்து 'தி ஹிந்து' நாளிதழின் விளையாட்டுப் பிரிவு செய்தியாளர் அமோல் கர்ஹாட்கரிடம் பேசினோம்.

"இந்த புதிய விதிகளால் போட்டி இன்னும் சுவாரஸ்யமானதாக மாறும். கேப்டன், பயிற்சியாளர், நிர்வாகம் ஆகியவற்றிற்கு இடையே சிறப்பான ஒருங்கிணைப்பு கொண்ட அணி மற்ற அணிகளை விட ஒரு படி மேலே இருக்கும். அந்த அணி புதிய விதிகளை சிறப்பாக கையாள வாய்ப்புள்ளது." என்று அவர் கூறினார்.

"புதிய விதிகளின்படி, வெறும் 2 அல்லது 3 ஓவர்கள் மட்டுமே விளையாடும் வீரர்கள் கூட போட்டியின் முடிவை மாற்றிவிட முடியும். தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் (Impact Player) என்ற இந்த விதியை ஏலத்தின் போதே அனைத்து அணிகளும் அறிந்திருந்தன. அதற்காகவே, பல அணிகளும் உள்நாட்டு வீரர்களை எடுத்தன. இந்த புதிய விதியின்படி, பேட்டிங் முடிந்த பிறகு ஒரு பந்துவீச்சாளரை அணியில் இணைத்துக் கொள்ள முடியும் என்பதால் ஆல்ரவுண்டர்களுக்கான தேவை குறையும்." என்று அவர் மேலும் கூறினார்.

ஐ.பி.எல். தொடரில் புதிய விதிகள் என்ன?

பட மூலாதாரம், Getty Images

"பந்துவீச்சாளருக்குப் பதிலாக பேட்ஸ்மேன் அல்லது பேட்ஸ்மேனுக்குப் பதிலாக பந்துவீச்சாளர் என்பது அவசியமல்ல. ஒரு அணி 40 ரன்களை எடுப்பதற்குள்ளாக 5 விக்கெட்டுகளை இழந்துவிடுவதாக வைத்துக் கொள்வோம். ஒரு நல்ல ஸ்கோரை எட்டுவதற்காக கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை அணியில் இணைத்துக் கொள்ளலாம். இதனால், கூடுதலாக ஒரு பவுலரை பெற முடியாமல் போகும் சவால் உண்டு. ஆனால், பவுலிங் செய்கையில் அதற்கேற்ப அணியில் மாற்றம் செய்து கொள்ளலாம்." என்று அவர் விளக்கம் அளித்தார்.

"ஒரு வீரரின் குறிப்பிட்ட ஓரிரு திறமைகள் கூட அவரது அணிக்கு பெரிய அளவில் உதவக் கூடும். உடல் சரிவர ஒத்துழைக்கவில்லை என்று கருதும் வீரர் தனது பணி முடிந்ததுமே சிறிதும் தாமதமின்றி மற்றொரு வீரருக்கு வழிவிட்டு ஒதுங்கிக் கொள்ளலாம்" என்றார் அவர்.

வரும் ஐ.பி.எல். தொடரில் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் என்ற இந்த புதிய விதி நடைமுறைப்படுத்தப்படுவதில் சில குழப்பங்கள் வரலாம். பேட்ஸ்மேனுக்குப் பதிலாக பந்துவீச்சாளர் அல்லது பந்துவீச்சாளரின் இடத்தில் பேட்ஸ்மேனை கொண்டு வருவது இதன் நோக்கமல்ல. போட்டியின் நடுவே முக்கியமான திருப்பங்களை ஏற்படுத்துவதே இதன் நோக்கம். போட்டியின் நடுவே தேவையான நேரத்தில் சரியான வீரரை களமிறக்கி ஆட்டத்தின் போக்கில் திருப்பத்தை ஏற்படுத்தச் செய்ய வேண்டும் என்பதே இந்த புதியை அறிமுகப்படுத்துதன் நோக்கம்.

புதிய விதிகள் என்னென்ன?

தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் என்ற புதிய விதியை சுருங்கச் சொல்வதென்றால், ஆட்டத்தின் தொடக்கத்தில் இடம்பெறும் 11 வீரர்கள் பட்டியலில் இல்லாமல் சேர்க்கப்படும் புதிய வீரர் இவர்.

டாஸ் போடும் முன்பாகவே, ஒவ்வொரு அணி கேப்டனும் தனது அணியில் இடம் பெறும் 11 வீரர்கள் பட்டியலையும், 4 தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர்களின் பெயர்களையும் அளித்துவிட வேண்டும்.

ஐ.பி.எல். தொடரில் புதிய விதிகள் என்ன?

பட மூலாதாரம், Getty Images

தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் எப்போது அணியில் இணையலாம்?

ஒவ்வொரு அணியும் ஆட்டத்தின் தொடக்கத்தில் அறிவிக்கும் 4 வீரர்கள் பட்டியலில் இருந்து ஒரே ஒரு வீரரை மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்தும் வீரராக ஆட்டத்தின் நடுவே களமிறக்க முடியும்.

ஒரு அணி விரும்பினால், இன்னிங்சின் 14-வது ஓவருக்குள் இந்த வீரரை களமிறக்கிவிட வேண்டும். ஒரு பேட்ஸ்மேன் ஏதோ ஒரு காரணத்தால் வெளியேற நேரிடுகையில், இன்னிங்ஸ் தொடங்கும் போதோ, ஓவர் முடிவிலோ இந்த வீரர் இணைந்து கொள்ளலாம்.

தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் இணைந்து விட்டதை எப்படி அறிவது?

தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் களமிறக்குவது குறித்து கேப்டன், பயிற்சியாளர், அணி மேலாளர், நான்காவது நடுவர் ஆகியோர் களத்தில் இருக்கும் நடுவருக்கு தெரியப்படுத்துவர். உடனே கள நடுவர், தனது இரு கைகளையும் மேலே குறுக்காக உயர்த்திக் காட்டி அவர் களத்திற்குள் வருவதை அறிவிப்பார்.

தாக்கத்தை ஏற்படுத்தும் வீரரின் வருகைக்காக வெளியேற்றப்படும் வீரர் அதன் பிறகு எந்தவொரு வகையிலும் ஆட்டத்தில் பங்களிக்க முடியாது.

ஒரு ஓவரின் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் பந்துவீச முடியுமா?

ஐ.பி.எல். தொடரில் புதிய விதிகள் என்ன?

பட மூலாதாரம், Getty Images

பந்துவீசும் அணி ஒரு ஓவர் நடந்து கொண்டிருக்கும் போதே ஒரு வீரரை களமிறக்கினாலும் அவரால் உடனே பந்துவீச முடியாது. அதாவது, அவரால் அந்த ஓவரின் எஞ்சிய பந்துகளை வீச முடியாது.

அந்த ஓவர் முடியும் வரை காத்திருந்து, அடுத்த ஓவரையே அவர் வீச முடியும்.

தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் இந்தியராகவே இருக்க வேண்டும் என்பது கட்டாயமா?

ஐ.பி.எல். விதிப்படி, ஒவ்வொரு அணியிலும் ஆடும் லெவனில் 11 வீரர்கள் இடம் பெறலாம்.

இந்த விதியின்படி பார்த்தால், தாக்கத்தை ஏற்படுத்தும் வீரராக அணியில் சேர்க்கப்படும் வீரர் இந்தியராகவே இருக்க அதிக வாய்ப்புள்ளது.

ஒரு அணி ஏற்கனவே ஆடும் லெவனில் 4 வெளிநாட்டு வீரர்களை இணைத்துக் கொண்டு விடும் பட்சத்தில், தாக்கத்தை ஏற்படுத்தும் வீரராக மற்றொரு வெளிநாட்டு வீரரைப் பயன்படுத்த முடியாது. ஆகவே, அந்த அணி பயன்படுத்தும் வீரர் கண்டிப்பாக இந்தியராகவே இருப்பார்.

அதேநேரத்தில் ஒரு அணி ஆடும் லெவனில் 3 அல்லது அதற்கும் குறைவான வெளிநாட்டு வீரர்களை மட்டுமே சேர்த்துக் கொண்டிருந்தால், அந்த அணி வெளிநாட்டு வீரரை தாக்கத்தை ஏற்படுத்தும் வீரராக ஆட்டத்திற்கு நடுவே களமிறக்கலாம்.

தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் எத்தனை ஓவர்கள் பந்து வீசலாம்?

தாக்கத்தை ஏற்படுத்தும் வீரரும், மற்ற வீரர்களைப் போலவே அதிகபட்சம் 4 ஓவர்கள் பந்துவீச முடியும். ஒருவேளை அவருக்குப் பதிலாக வெளியேற்றப்பட்ட வீரர் தனக்கான ஓவர்களை முழுமையாக வீசியிருந்தாலும் கூட, தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் முழுமையாக 4 ஓவர்களையும் வீசுவதில் தடையில்லை.

மழையால் பாதிக்கப்படும் போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் விளையாட முடியுமா?

மழையால் பாதிக்கப்படும் போட்டிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரரை களமிறக்க முடியும். ஆனால், அந்தப் போட்டி குறைந்தபட்சம் 10 ஓவர்கள் கொண்டதாக இருக்க வேண்டும்.

தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் விதி ஏற்கனவே அறிமுகமாகிவிட்டதா?

ஐ.பி.எல். தொடருக்கு முன்பாகவே, சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் விதியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பரிசோதித்துப் பார்த்துவிட்டது.

அந்த வகையில், மணிப்பூர் அணிக்கு எதிராக டெல்லி அணிக்காக களம் கண்ட ஹிரித்திக் ஷோகீன் என்ற வீரரே தாக்கத்தை ஏற்படுத்தும் வீரராக இந்தியாவில் களமிறங்கிய முதல் வீரர்.

அந்த தொடரில், மும்பை அணி பந்துவீச்சாளர் தவால் குல்கர்னிக்குப் பதிலாக சாய்ராஜ் பட்டீலை தாக்கத்தை ஏற்படுத்தும் வீரராக களமிறக்கியது.

சூப்பர்சப் விதியில் இருந்து தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் விதி எந்த வகையில் வேறுபட்டது?

2005-ம் ஆண்டு சூப்பர்சப் விதியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி.) அறிமுகப்படுத்தியது. ஆனால், அது வெற்றிகரமானதாக அமையவில்லை.

இந்த விதியின்படி, சூப்பர்சப் வீரர் யார் என்பதை டாஸ் போடும் முன்பே கேப்டன் தெரியப்படுத்த வேண்டும்.

இதனால், டாசில் தோற்கும் அணிக்கு சூப்பர்சப் விதி எந்தவொரு பலனையும் தரவில்லை.

ஐ.பி.எல். தொடரில் புதிய விதிகள் என்ன?

பட மூலாதாரம், Getty Images

வரும் ஐ.பி.எல்.லில் அறிமுகமாகும் பிற விதிகள்

  • ஐ.பி.எல். போட்டிகள் திட்டமிடப்பட்ட நேரத்தைக் காட்டிலும் அதிக நேரம் நடப்பதாக குற்றச்சாட்டுகள் உண்டு. இதனைத் தடுக்க அபராதம் விதிக்கப்படுவது வழக்கம். புதிய விதிகளின்படி, பீல்டிங் செய்யும் அணிக்கு புதிய தண்டனை விதிக்கப்படும். அதாவது, குறிப்பிட்ட நேரத்திற்குள் இன்னிங்சை தொடங்க ஒத்துழைக்கத் தவறினால், அந்த அணி கூடுதலாக மேலும் ஒரு வீரரை உள் வட்டத்திற்குள் நிறுத்த வேண்டியிருக்கும். இதனால், அந்த அணிக்கு எல்லைக்கோடு அருகே 4 பீல்டர்கள் மட்டுமே இருப்பார்கள்.
  • விக்கெட் கீப்பரிடம் நேர்மையற்ற அசைவுகள், சைகைகள் தென்பட்டால் டெட் பால் கொடுக்கப்படும். பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள் வழங்கப்படும். அதேபோன்ற அசைவுகள் பீல்டரிடம் கண்டறியப்பட்டாலும் டெட்பால் கொடுக்கப்பட்டு எதிரணிக்கு 5 ரன்கள் வழங்கப்படும்.
  • வரும் தொடரில், வைட், நோ பால் ஆகியவற்றிற்கும் கூட நடுவரின் தீர்ப்பை எதிர்த்து கேப்டன்கள் டி.ஆர்.எஸ். முறைப்படி மேல்முறையீடு செய்ய முடியும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: