You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உத்தரப் பிரதேசம்: சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்டும் மதரஸாக்களின் நவீன ஆசிரியர்கள் - அவலநிலைக்கு என்ன காரணம்?
“முஸ்லிம் இளைஞர்கள் தங்களது ஒரு கையில் குரானும், மற்றொரு கையில் கணினியும் வைத்திருப்பதைப் பார்த்தால் மட்டுமே நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி சாத்தியமாகும்”
டெல்லியில் 2018 மார்ச் 1 இல் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் நரேந்திர மோதி உதிர்த்த வார்த்தைகள்தான் இவை.
ஒருபுறம் நமது இளைஞர்கள் இஸ்லாத்துடன் இணைந்திருக்க வேண்டும். மறுபுறம் அவர்கள் அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தக் கூடியவர்களாக இருக்க வேண்டும் என்பதே இன்று மிகவும் அவசியமானது என்று மோதி அப்போது கூறியிருந்தார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தூர்தர்ஷனுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் மதரஸாக்களில் நவீன கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
“நமது இன்றைய இளம் தலைமுறையை எப்படிப்பட்ட வல்லவர்களாக உருவாக்க வேண்டும் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்” எனவும் தனது பேட்டியில் யோகி ஆதித்யநாத் தெரிவித்திருந்தார்.
மதரஸாக்கள் மாணவர்களுக்கு பாரம்பரியக் கல்வியை தருகின்றன. ஆனால் இவற்றை நவீன கல்வியை பயிற்றுவிக்கும் இடமாக ஏன் கருதக்கூடாது? நல்ல குடிமகனாக, அப்துல் கலாமாக வருவதற்கு இங்கு பயிலும் மாணவர்களுக்கு உரிமை இல்லையா?
மதரஸாக்களில் அறிவியல், கணிதம், கணினி பற்றிக் கல்வி கற்பிக்க அரசு முயற்சித்தால் அதை ஏன் எதிர்க்க வேண்டும்? இப்படி அந்தப் பேட்டியில் பல கேள்விகளை எழுப்பி இருந்தார் உத்தரப் பிரதேச மாநில முதல்வர்.
உத்தரப் பிரதேசத்தில் தற்போது அரசு மதரஸாக்களின் ஆயிரக்கணக்கான நவீன ஆசிரியர்கள் நவீன கல்வியை மாணவர்களுக்கு வழங்கும் பொறுப்பை சுமந்துள்ளனர்.
ஆனால், இந்த ஆசிரியர்கள் மத்திய அரசிடமிருந்து தங்களுக்கு வர வேண்டிய சம்பளத்திற்காக கடந்த ஆறரை ஆண்டுகளாக காத்திருக்கும் நிலைதான் இருக்கிறது.
தங்களின் வயிற்றுப் பிழைப்புக்காக மிதிவண்டி பழுதுபார்ப்பது, உணவு விநியோகம், காய்கறிகள் விற்பது, நெசவு, டியூசன் சொல்லிக் கொடுப்பது என்ற நிலைக்கு இன்று அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
சபிக்கும் மனசாட்சி
சந்த் கபீர் நகரைச் சேர்ந்த இம்தியாஸ் அகமது, மதரஸாவில் மாணவர்களுக்கு தினமும் ஐந்து மணி நேரம் அறிவியல் பாடம் நடத்துகிறார்.
“மதரஸாவில் மதியம் 2 மணி வரை பாடம் நடத்துகிறேன். அதன் பிறகு சைக்கிள் கடையில் வேலை செய்கிறேன். எனது ஊதியம் 12 ஆயிரம் ரூபாய். ஆனால் கடந்த ஆறு ஆண்டுகளாக மத்திய அரசிடம் அதை பெறவில்லை,” என்கிறார் அவர் வேதனையுடன்.
“ஒருவருக்கு குறிப்பிட்ட ஒரு தேதியில் சம்பளம் வரவில்லை என்றால், அடுத்த தேதியில் அவர் கவலைப்படலாம். ஆனால் கடந்த ஆறு ஆண்டுகளாக ஊதியம் இல்லாமல் எப்படி வாழ்கிறோம் என்பது எங்களுக்குத் தான் தெரியும்,” என்கிறார் இம்தியாஸ் கண்ணீர் மல்க.
“கடந்த ஓராண்டாக எங்கள் பிள்ளைகளின் பள்ளிக் கட்டணத்தைகூட கட்ட முடியவில்லை. அன்றாட செலவுக்கே சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்ட வேண்டிய அவல நிலையில் இருக்கும் என்னை போன்றவர்கள், பிள்ளைகளை எப்படி படிக்க வைப்பது?” என்று ஆதங்கத்துடன் கேள்வியெழுப்புகிறார் அவர்.
எங்களின் மனசாட்சியே எங்களை கண்டிக்கிறது. ஆனாலும் நாங்கள் என்ன செய்ய முடியும்? அரசாங்கத்தின் உறுதிமொழியை தான் நம்ப வேண்டியுள்ளது என்று தனது இயலாமையை நொந்து கொள்கிறார் இம்தியாஸ்.
சைக்கிள்களை பழுதுபார்க்கும் பணியின் மூலம் தினமும் 100 ரூபாய் சம்பாதிக்கிறார் இம்தியாஸ். மாநில அரசு மாதந்தோறும் இரண்டாயிரம் முதல் மூவாயிரம் ரூபாய் வரை ஊதியம் கொடுக்க முயற்சிக்கிறது. “அதுவும் கடந்த ஐந்து மாதங்களாக கிடைக்கப் பெறவில்லை” என்கிறார் வேதனையுடன்.
நெசவுக்கு தள்ளப்பட்ட நவீன ஆசிரியர்
கடந்த 11 ஆண்டுகளாக பனாரஸில் உள்ள ஒரு மதரஸாவில் இந்தி மற்றும் அறிவியல் பாடங்களை கற்பித்து வருகிறார் அமீர் அஷ்ரஃப்.
மதரஸாவில் தனது பணியை முடித்துவிட்டு அருகில் உள்ள விசைத்தறிக்கு பனாரசி சேலைகளை நெய்யச் செல்கிறார்.
“பாரம்பரிய நெசவாளர்களான நான் நவீன ஆசிரியராக ஆனபோது மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் எங்களுக்கு மத்திய அரசிடமிருந்து வந்து கொண்டிருந்த மாத ஊதியம் 2017 ஆம் ஆண்டு முதல் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு விட்டதால் மீண்டும் நெசவுத் தொழிலுக்கே வந்துவிட்டேன்” என்கிறார் அமீர்.
பனாரசில் சேலை வியாபாரம் மந்தமாகும்போது மோட்டார் பழுதுபார்க்கும் வேலை செய்ய வேண்டிய கட்டாயமும் அவருக்கு ஏற்பட்டுள்ளது.
“முறையாக சம்பளம் வந்திருந்தால் குழந்தைகளின் எதிர்காலம் குறித்தும் யோசித்திருப்பேன். ஆனால் தற்போது சில நேரம் அவர்களுக்கு உணவு சமைத்து தருவதற்குகூட பணம் இல்லாத அவலநிலையில் தான் இருக்கிறேன். வறுமையின் காரணமாக எனது பிள்ளைகளை குழந்தைத் தொழிலாளிகளாக்க வேண்டியதாகிறது” என்று கூறுகிறார் அமீர் அஷ்ரஃப்.
யார் மதரஸாக்களில் படிக்க செல்கிறார்கள்?
கடந்த ஜூன் மாதம், போபாலில் நடந்த பாஜக மாநாட்டில் பேசிய பிரதமர் மோதி, பாஸ்மாண்டா சமூக முஸ்லிம்களின் பின்தங்கிய நிலை குறித்து பேசினார். அவர்களின் முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாகவும் அப்போது அவர் கூறியிருந்தார்.
ஆனால்,” இந்த அரசு குறிப்பிடும் பாஸ்மாண்டா சமூகத்தைச் சேர்ந்த பிள்ளைகள் தான் பெரும்பாலும் மதரஸாக்களில் படிக்கின்றனர்.
அவர்களுக்கு நவீன கல்வியை அளிக்க நாங்கள் உழைத்து வருகிறாேம். ஆனால் எங்களுக்கு ஆண்டுக்கணக்கில் ஊதியம் வழங்கப்படவில்லை. எங்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது” என்கிறார் பனாரஸில் உள்ள ஒரு மதரஸாவின் நவீன ஆசிரியரான வினோத் மௌரியா.
உத்தரப்பிரதேச மதரஸா கல்வி வாரியமே மதரஸாக்களில் பயிலும் மாணவர்களில் 95 சதவீதம் பேர் பாஸ்மாண்டா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று ஒப்புக்கொள்கிறது.
ஒரு மதிப்பீட்டின்படி, இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் சுமார் 15 சதவீதம் பேர் முஸ்லிம்கள். இவர்களில் 80 சதவீதம் பேர் பாஸ்மாண்டா சமூகத்தினர்.
40 சதவீத ஆசிரியர்கள் முஸ்லிம் அல்லாதவர்கள்
உத்தரப் பிரதேச மதரஸா வாரியத்தின் கூற்றுப்படி, மதரஸாக்களில் பணியாற்றும் ஆசிரியர்களில் 40 சதவீதம் பேர் முஸ்லிம் அல்லாதவர்கள்.
அதாவது, இவற்றில் 40 சதவீதம் இந்து ஆசிரியர்கள் வேலை செய்கின்றனர் என்கிறார் கோரக்பூரில் உள்ள ஒரு மதரஸாவில் பணியாற்றும் நவீன ஆசிரியரான ஷாமா சுக்லா.
“எனக்கு சம்பளம் கிடைக்காததால் தையல் வேலை செய்து பணம் சம்பாதிக்க வேண்டியுள்ளது. ஆனால் எங்களால் வேறு எதுவும் செய்ய முடியாது. வேலையை விட்டுவிடவும் இயலாது,” என்கிறார் அவர்.
தங்களுக்கு வர வேண்டிய சம்பளம் என்றாவது ஒருநாள் வந்துவிடும் என்ற நம்பிக்கையில் மதரஸாவுக்கு சென்று மாணவர்களுக்கு பாடம் நடத்துவதாக சுக்லா கூறுகிறார்.
“நாங்கள் பாடம் நடத்த செல்லவில்லையென்றால், பிள்ளைகளை படிக்க அனுப்பும் பெற்றோருக்கு என்ன பதில் சொல்வது?” என்று கேள்வி எழுப்புகிறார் அவர்.
மதரஸாக்களில் நவீன கல்வி தொடங்கப்பட்டது எப்போது?
உத்தரப் பிரதேச நவீன ஆசிரியர்கள் சங்கத்தின் கூற்றுப்படி, மதரஸாக்களில் தரமான கல்வியை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு 1993 இல் துவக்கியது. இத்திட்டத்தின்கீழ் நவீன ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது இத்திட்டத்தை மிகவும் திறம்பட செயல்படுத்தினார் என்று நவீன ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
அவர்களின் ஊதியத்தையும் அரசு அவ்வபோது உயர்த்தியது. இது மத்திய அரசின் திட்டமாகும்.
மாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்ட 7442 மதரஸாக்களில் மொத்தம் 21,546 நவீன ஆசிரியர்கள் பாடங்களைக் கற்பித்து வருகின்றனர். இவர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக அரசு ஊதியம் தரவில்லை.
இத்திட்டத்தின்கீழ் முதுநிலை ஆசிரியர்களுக்கு 12 ஆயிரம் ரூபாயும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு 6000 ரூபாயும் ஊதியம் அளிக்கப்படுகிறது.
ஆசிரியர்களின் ஊதியத்தில் 60 சதவீதம் மத்திய அரசும், 40 சதவீதம் மாநில அரசும் வழங்குகின்றன.
எங்களின் ஊதியத்தில் மத்திய அரசின் பங்களிப்பான 60 சதவீதம் கிடைக்க பெறாத நிலையில், மாநில அரசின் பங்களிப்பான 40 சதவீதம் சம்பளமும் முறையாக வழங்கப்படவில்லை என்கின்றனர் நவீன ஆசிரியர்கள் சங்கத்தினர்.
இதனால், 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கான ஊதிய நிலுவைத் தொகை தற்போது 1,762 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என்கின்றனர் அவர்கள்.
கடிதப் போக்குவரத்து
உத்தரப் பிரதேச நவீன ஆசிரியர்கள் சங்கத்தின் கூற்றுப்படி, கடந்த 2021 இல் இத்திட்டம், மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் இருந்து சிறுபான்மை நலத் துறைக்கு மாற்றப்பட்டது. இந்த மாற்றமே ஆசிரியர்களின் ஊதிய பிரச்னை முக்கிய காரணம்.
இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணும் நோக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே கடிதப் பரிமாற்றம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அகிலேஷ் யாதவ் ஆட்சிக் காலத்தில், ஊதியத்தை தவிர, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் 3,000 ரூபாயும், பட்டதாரி ஆசிரியர்கள் 2,000 ரூபாயும் கூடுதல் ஊதியம் பெற துவங்கினர். அதை அவ்வபோது ஆசிரியர்களுக்கு அளிக்க உத்தரப் பிரதேச மாநில அரசு முயற்சிக்கிறது என்கின்றனர் நவீன ஆசிரியர்கள் சங்கத்தினர்.
மதரஸா கல்வி வாரியம் என்ன சொல்கிறது?
மதரஸாவில் பணியாற்றும் நவீன ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குமாறு பிரதமர் நரேந்திர மோதிக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், ஆனால் இதுவரை பதில் வரவில்லை என்றும் கூறுகிறார் உத்தரப் பிரதேச மதரஸா கல்வி வாரியத்தின் தலைவரான டாக்டர் இப்திகார் அகமது ஜாவேத்.
ஆசிரியர்களுக்கு தாங்கள் அனுதாபம் காட்டுவதாக கூறும் அவர், "அவர்களின் கோரிக்கைகள் குறித்து மத்திய அரசுக்கு மீண்டும் கடிதம் எழுதுவேன்" என்கிறார்.
மதரஸாவின் பணியாற்றும் ஆசிரியர்களின் ஊதிய நிலுவைகளை பெற்றுத் தர, முதல்வர் யோகி ஆதித்யநாத் முயற்சித்து வருவதாகவும் கூறுகிறார் அவர்.
“முஸ்லிம் மாணவர்களின் ஒரு கையில் குரானும், இன்னொரு கையில் கணினியும் இருக்க வேண்டும் என்ற பிரதமரின் கனவு நிறைவேறும் வகையில், மதரஸாக்களில் பணியாற்றும் நவீன ஆசிரியர்களுக்கு ஊதிய நிலுவைத் தொகை வழங்கப்படுவதன் மூலம், நவீன கல்வித் திட்டம் முறையாகச் செயல்படுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்று இப்திகார் அகமது ஜாவேத் கூறுகிறார்.
ஏமாற்றமும், நம்பிக்கையும்
கோரக்பூரில் உள்ள ஒரு மதரஸாவில் பல ஆண்டுகளாக நவீன ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர் முகமது ஆசம். ஆனால் கடந்த ஆறரை ஆண்டுகளாக ஊதியத்துக்காக காத்திருந்து ஏமாற்றமடைந்த அவர், மூன்று மாதங்களுக்கு முன்பு தமது பணியை ராஜினாமா செய்தார்.
தற்போது வீடு வீடாக சென்று மாணவர்களுக்கு டியூசன் கற்று கொடுத்து வரும் அவர், இதன் மூலம் மாதத்துக்கு அதிகபட்சம் 10 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க முடிகிறது.
தனியார் பள்ளிகளிலும் பணியில் சேர முயற்சித்து வருவதாக கூறும் ஆசம், ஆனால் இங்கு தமக்கு புதிய வேலை கிடைக்கவில்லை என்கிறார்.
“உத்தரப் பிரதேச மாநிலத்தில் இரட்டை எஞ்சின் ஆட்சி நடைபெற்று வருவதாக கூறுகிறார்கள். ஆனால் மதரஸாக்களில் நவீன கல்வித் திட்டம் ஏன் சரியாக செயல்படுத்தப்படவில்லை” என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.
“நவீன ஆசிரியர்களின் முதுகெலும்பு உடைக்கப்படும்போது, அவர்கள் எப்படி மதரஸாக்களில் பயிலும் மாணவர்களை நவீன கல்வியுடன் இணைக்க முடியும்,” என்று கேள்வி எழுப்புகிறார் முகமது ஆசமுடன் மதரஸாவில் பணியாற்றிய நவேத்.
“எங்களுக்கு நிறைய ஏமாற்றங்கள் உள்ளன. இருப்பினும் அரசாங்கம் எங்களின் துயரைப் புரிந்துக் கொண்டு, அதை தீர்க்கும் விதத்தில், எங்களுக்கான ஊதிய நிலுவையை என்றாவது ஒருநாள் வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது” என்கிறார் நவேத்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்