You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மகளிர் உரிமைத்தொகை: ரூ.1000 பெற புதிதாக விண்ணப்பிக்க முடியுமா? கிடைக்காதவர்கள் எங்கே முறையிடுவது?
- எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்
- பதவி, பிபிசி தமிழ்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக விண்ணப்பிக்க விரும்புவோருக்கு அதற்கான வாய்ப்பு உண்டா? என்ன சொல்கிறார்கள் அதிகாரிகள்? நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களில் யாருக்கெல்லாம் உரிமைத் தொகை கிடைக்க வாய்ப்புள்ளது?
தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளன்று இத்திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் 1.63 கோடி பெண்கள் உரிமைத் தொகைக்கு விண்ணப்பம் செய்திருந்தனர். இதில் தேர்வு செய்யப்பட்ட 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை மாதம்தோறும் செலுத்தப்படும்.
நிராகரிக்கப்பட்ட 56 லட்சம் விண்ணப்பங்கள்
இதில் 56 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இவர்களில் பல பெண்கள் தகுதி இருந்தும் தங்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர்.
அரசின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த பலருக்கு உரிமைத் தொகை கிடைக்கப் பெறவில்லை என்ற ஏமாற்றமும் அந்த பெண்களின் குரல்களில் தெரிகிறது.
இந்த நிலையில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் அதுகுறித்து மேல் முறையீடு செய்யலாம் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.
எங்கு மேல்முறையீடு செய்வது?
அதன்படி, மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் செப்டம்பர் 18 தேதி முதல் 30 நாட்களுக்குள் இ- சேவை மையம், கோட்டாட்சியர் அலுவலகங்களுக்கு நேரில் சென்று உரிமைத் தொகை பெற மேல்முறையீடு செய்யலாம்.
பிறகு அதிகாரிகள் அந்த விண்ணப்பத்தின் மீது விசாரணை நடத்தி அவை ஏற்றுக் கொல்லப்பட்டதா? இல்லையா என்பதை அறிவிப்பார் என அரசு தெரிவித்திருந்தது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் தங்களது மாவட்டத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரில் சென்று செப்டம்பர் 18 ஆம் தேதி மேல் முறையீடு செய்யலாம் எனவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி அன்றைய தினம் அரசு விடுமுறை நாள் என்பதையும் பொருட்படுத்தாமல் சிலர் கோட்டாட்சியர் அலுவலகங்களுக்குச் சென்றிருந்தனர்.
வங்கி கணக்கு எண் பதிவேற்றத்தில் குளறுபடி
மதுரை தத்தனேரி பகுதியைச் சேர்ந்த அரியமலை பிபிசி தமிழிடம் இதுகுறித்து பேசும்போது, " தமிழக அரசின் 1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகைக்காக எனது மனைவி விண்ணப்பம் செய்திருந்தார். அவரின் அலைபேசிக்கு விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது.
வங்கிக் கணக்கில் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டதாக செப்.14 ஆம் தேதி குறுஞ்செய்தியும் வந்தது.
ஆனால், ஏடிஎம் சென்று வங்கிக் கணக்கை ஆய்வு செய்தபோது உரிமைத் தொகை வரவு வைக்கப்படவில்லை. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகம் வந்து அலுவர்களிடம் இந்தத் தகவலை கடந்த வெள்ளிக்கிழமை (செப்.15) தெரிவித்தேன்.
அப்போது எனது வங்கிக் கணக்கு புத்தகம் மற்றும் குடும்ப அட்டை நகலை அலுவலர்கள் பெற்றுக் கொண்டனர்.
‘உங்களுடைய வங்கிக் கணக்கின் இரண்டு எண் மாற்றி பதிவேற்றம் செய்யப்பட்டு இருப்பதால் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படவில்லை’ என்று அப்போது அதிகாரிகள் கூறினர்,” என்று அரியமலை தெரிவித்தார்.
“மகளிர் உரிமைத் தொகை நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்துடன், செப்.18 முதல் குறுஞ்செய்தி வரும். அதனை உங்கள் தாலுகா அலுவலகத்தில் உள்ள துணை தாசில்தாரை சந்தித்து மேல்முறையீடு செய்து தீர்வு காணலாம்” என வங்கி அதிகாரிகள் தெரிவித்ததாகவும் அரியமலை கூறினார்.
உரிமைத் தொகை கிடைக்கப் பெறாத மற்றொரு பயனாளியான தனலட்சுமி பிபிசி தமிழிடம் கூறும்போது, “ கடந்த செப்.18 விநாயகர் சதுர்த்தி என்பதால் அலுவலகம் விடுமுறை. மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக தகவல் பெறும் அலுவலர் அன்று வரவில்லை.
இன்று உரிமைத் தொகை பெறத் தேவையான விவரங்களை கேட்டு அறியலாம் என வந்திருக்கிறேன் " என்று தெரிவித்தார்.
புதிதாக விண்ணப்பிக்க முடியுமா?
யானைக்கல் பகுதியைச் சேர்ந்த அங்காள ஈஸ்வரி இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசியபோது, " சென்னை சென்றிருந்ததால் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் என்னால் விண்ணப்பிக்க இயலவில்லை.
தற்போது கோட்டாட்சியர் அலுவலகம் வந்து மகளிர் உரிமைத் தொகை உதவி மையத்தில் இருக்கும் அதிகாரிகளிடம் புதிதாக திட்டத்தில் இணைய விண்ணப்பம் செய்ய வேண்டும் என கூறினேன்.
ஆனால் இதுகுறித்து அரசு தரப்பில் எந்த அறிவிப்பு கொடுக்கவில்லை,” என்று அதிகாரிகள் கூறியதாக அவர் தெரிவித்தார்.
மேலும், “எனது ஆதார், குடும்ப அட்டை எண், தொலைபேசி தொடர்பு எண் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர்.
புதிய விண்ணப்பங்களை பெறுவதற்கான அறிவிப்பு வரும்போது, என்னை திட்டத்தில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்” என்றும் ஈஸ்வரி கூறினார்.
30 நாட்களுக்குள் தீர்வு
இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத அரசு உயரதிகாரி ஒருவர் பிபிசி தமிழிடம் பேசியபோது, “தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள் விண்ணப்பித்தவர்களின் செல்ஃபோனுக்குக் குறுந்தகவலாக அனுப்பப்படும். அந்தத் தகவலை கொண்டு இ - சேவை மையத்தில் மேல்முறையீடு செய்து 30 நாட்களுக்குள் தீர்வு காணலாம்,” என்று அவர் கூறினார்.
சிறப்பு உதவி மையம்
மேலும், “தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து அலுவலர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
அதில் தாலுகா, கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உரிமைத் தொகைக்கு தனியாக சிறப்பு உதவி மையம் ஏற்பாடு செய்ய உத்தரவு வழங்கப்பட்டு உள்ளது.
அதன்படி, தாலுகா அலுவலகங்களில் 2 உதவி மையங்கள், கோட்டாட்சியர் அலுவலகங்களில் 5 முதல் 10 உதவி மையங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 10 உதவி மையங்கள் செயல்படும்.
உரிமைத் தொகை நிராகரிக்கப்பட்டவர்கள் இங்கு நேரில் வந்து உரிய ஆவணங்களை சமர்பித்து, விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தையும் தெரிந்து கொள்ளலாம்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற அரசு விதித்துள்ள பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்படாதவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே நிராகரிக்கப்பட்டுள்ளன.
ஒரு சிலருக்கு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதில் சில குறைபாடுகள் இருக்கலாம். அவர்கள் நேரடியாக செப்.18 ஆம் தேதி முதல் அடுத்த 30 நாட்களுக்குள் தீர்வைப் பெறலாம்,” என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
உரிமைத் தொகை கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது?
அத்துடன், “தகுதி இருந்தும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு உரிமைத் தொகை கிடைக்கப் பெறாதவர்கள் கிராம நிர்வாக அலுவலர், சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர்கள் விண்ணப்பதாரர்களின் வீட்டுக்கே நேரடியாக சென்று ஆய்வு நடத்தி உண்மைத்தன்மையை உறுதி செய்து மகளிர் உரிமைத் தொகை கிடைக்க முழு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இந்த விண்ணப்ப மேல்முறையீட்டு முகாமிற்கு அதிக அளவில் மக்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஏன் என்றால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு அதற்கான காரணம் தெரியும். ஒரு சிலருக்கு சில குளறுபடிகளால் நிராகரிக்கப்பட்டு இருக்கலாம். அவர்களுக்கு முகாமில் தீர்வு கிடைக்கும்.
இதுவரை மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பிக்காத நபர்கள், புதிதாக விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் ஏதும் அரசின் சார்பில் கொடுக்கப்படவில்லை. உதவி மையங்களுக்கு வருவோரின் தகவல் மட்டும் பதிவு செய்வோம். அரசிடமிருந்து அறிவிப்பு வந்தவுடன் புதிய விண்ணப்பங்கள் திட்டத்தில் சேர்ப்பது குறித்து தெரிவிக்கப்படும்" என்றும் அந்த அதிகாரி கூறினார்.
பிரத்யேக இணையதளம்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகையின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள், அதற்கான தகவல் தெரிந்து கொள்ள ஏதுவாக தமிழ்நாடு அரசின் சார்பில் பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டு உள்ளது.
Www.kmut.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பதாரர் பயனாளி என்பதை கிளிக் செய்து உள்ளே செல்ல வேண்டும். ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும் பின் (OTP) "ஓடிபி அனுப்ப" என்பதை கிளிக் செய்தால் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு வரும் ஓடிபி எண்ணை உள்ளீடு செய்து விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்