You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியா - கனடா மோசமாகும் உறவு: இந்தியர்கள் விசா பெறுவது சிக்கலாகுமா?
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி செய்தியாளர்
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தால் கனடா - இந்தியா இடையிலான உறவுகள் மோசமடைந்திருக்கின்றன. இது இரு நாட்டு வர்த்தகத்திலும் விசாக்களை வழங்குவதிலும் எம்மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும்?
ஹர்தீப் சிஹ் நிஜ்ஜார் கொலை
ஹர்தீப் சிஹ் நிஜ்ஜார் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள குருத்வாராவுக்கு அருகில் கொல்லப்பட்ட விவகாரம் கனடா - இந்திய உறவுகளில் மிகப் பெரிய விரிசலை ஏற்படுத்தியிருக்கிறது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்திலும் இந்தியர்களுக்கு கனடா விசாக்களை வழங்குவதிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.
கடந்த ஜூன் மாதம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ஒரு குருத்துவராவுக்கு வெளியே சீக்கிய தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
நிஜ்ஜார் சர்ரேயில் உள்ள குரு நானக் சீக்கிய குருத்வாரா சாஹிப்பின் தலைவராகப் பதவி வகித்துவந்தார். அவர் இந்திய அரசால் தேடப்படும் நபர்களின் பட்டியலில் இடம்பெற்றிருந்தார்.
இந்திய அரசைப் பொறுத்தவரை, நிஜ்ஜார் காலிஸ்தான் புலிப் படையில் உறுப்பினராக இருந்தவர். காலிஸ்தான் புலிப்படையினர் எப்படிச் செயல்படுவது என்பது குறித்தும் நெட்வொர்க்கிங் குறித்தும் பயிற்சி அளிப்பது மற்றும் நிதி உதவி அளிப்பதில் அவர் தீவிரமாக ஈடுபட்டார்.
கனடா குற்றச்சாட்டும் இந்தியா மறுப்பும்
ஆகவே, ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசு இருக்கலாம் என அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார். இதற்குப் பிறகு இந்திய தூதரக அதிகாரி ஒருவரையும் கனடா வெளியேற்றியது. ஆனால், கனடாவின் குற்றச்சாட்டை இந்திய அரசு மறுத்துள்ளது. கனடா அரசின் நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக இங்குள்ள கனடா தூதரகத்தின் மூத்த அதிகாரி நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
இந்தியர்கள் விசா பெறுவது சிக்கலாகுமா?
கனடா - இந்திய உறவுகளில் முன்னெப்போதும் இல்லாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் இது நீண்ட காலத் தாக்கங்களைக் கொண்டதாக இருக்கும் என்றும் கருதுகிறார் சென்னை லயோலா கல்லூரியின் பேராசிரியரான க்ளாட்ஸன் சேவியர்.
"கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு என்பது ஆழமான, நீண்ட கால உறவு. எனக்குத் தெரிந்து இதுபோன்ற நிலை இதுவரை ஏற்பட்டதாக தெரியவில்லை. எப்போதுமே கனடாவும் இந்தியாவும் பரஸ்பரம் நெருக்கமான உறவுகளைக் கொண்ட நாடுகளாகவே இருந்திருக்கின்றன.
கனடா - இந்திய உறவுகளைப் பொறுத்தவரை இரு பரிமாணங்களைக் கொண்டது. ஒன்று, மக்களை அடிப்படையாகக் கொண்டது. இரண்டாவது பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்தியா கனடாவிலிருந்து 60 மில்லியன் டாலர் அளவுக்கு உள்ளது. ஏற்றுமதி 50 மில்லியன் டாலர் அளவுக்கு உள்ளது. உலகப் பொருளாதாரம் ஏற்கனவே தடுமாறி கொண்டிருக்கும்போது, இது போன்ற ஒரு பின்னடைவு இரண்டு நாடுகளுக்குமே நல்லதல்ல. இதில் பாதிப்பு இந்தியாவுக்கு அதிகமாக இருக்கும்.
அதேபோல, இந்தியர்கள் கனடாவில் அதிக அளவில் வசிக்கிறார்கள். டொரண்டோ, ஸ்காபரோ, மிஸஸாகா, வான்கூவர் ஆகிய பகுதிகளில் வசிக்கிறார்கள். பாதுகாப்பான நாடுகள் என்று பட்டியலிட்டால், அதில் முதலிடத்தில் இருக்கக்கூடிய நாடு கனடா. குடியேறிகளை வரவேற்று, அவர்களுக்கு வேலை வழங்கி, வாழ்வளிக்க கூடிய ஒரு நல்ல நாடு அது. மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் என பெரும் எண்ணிக்கையிலான இந்தியர்கள் அங்கே வேலை செய்கிறார்கள்.
படிப்பதற்கென்று சென்று, அதை முடித்த பிறகு அங்கேயே வேலை வாங்கி, குடியுரிமை பெற்றவர்களும் இருக்கிறார்கள். ஆகவே இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான கலாச்சாரப் பாலம் என்பது மிகவும் ஆழமானது. விசாக்களைப் பொறுத்தவரை இதுவரை தெளிவான முடிவுகள் ஏதும் எடுக்கப்படவில்லை. இந்தியர்களுக்கு விசா வழங்குவதை கனடா குறைத்தால் பெரும் பாதிப்புகள் இருக்கும்" என்கிறார் க்ளாட்சன் சேவியர்.
ஜஸ்டின் ட்ரூடோ தீவிரத்தின் பின்னணி என்ன?
கனடா நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் செயல்பாடுகளுக்குப் பின்னால் உள்நாட்டுக் காரணிகளும் இருக்கின்றன என்கிறார் அவர்.
"எந்த நாட்டிலுமே தன் பிரஜைகளை இன்னொரு நாடு வந்து தாக்கியதாக சந்தேகம் ஏற்பட்டாலோ அதற்கான ஆதாரம் இருந்தாலோ சும்மா இருக்காது. கனடாவும் அப்படித்தான் கருதும். ஆகவே, இப்போது நடந்திருக்கும் விஷயத்தை தனது இறையாண்மைக்கு விடப்பட்ட சவாலாகத்தான் கனடா கருதுகிறது. இது தவிர, சமீப காலமாக ட்ரூடோவின் செல்வாக்கு உள்நாட்டில் சரிந்து வருகிறது. பல பிரச்சனைகளை அவரால் சமாளிக்கமுடியவில்லை எனக் கருதுகிறார்கள். அடுத்த தேர்தலில் அவர் வெற்றிபெற்று வருவாரா என்ற நிலைதான் இருக்கிறது. அதனால், ஏதாவது செய்து தன்னை நிரூபிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார் ட்ரூடோ. அதுவும்கூட, அவருடைய கடுமையான செயல்பாட்டிற்குக் காரணமாக இருக்கலாம்" என்கிறார் சேவியர்.
கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் உள்ள நெருக்கமான கலாச்சார உறவுகள் இந்த மோதலால் பாதிக்கப்படுவது வருத்தமளிக்கிறது என்கிறார் அவர். பெரும் எண்ணிக்கையிலான மாணவர்கள் இங்கிருந்து சென்று அங்கு படிக்கிறார்கள். பிறகு அங்கே குடியேறி விடுகிறார்கள். மேலும், இந்தியர்கள் இந்தியப் பண்டிகைகளை இங்கே கொண்டாடுவதைவிட அங்கே விமரிசையாகக் கொண்டாடுவார்கள். அதேபோல, பல இந்தியர்கள் கனடாவில் மக்கள் பிரதிநிதிகளாகவும் இருக்கிறார்கள்.
இந்தியக் கலாச்சாரம் எப்படி அங்கே எதிரொலிக்கிறதோ, அதேபோல பிரச்சனைகளும் அங்கே எதிரொலிக்கும். இங்கே ஏதாவது பிரச்சனை என்றால், அங்கிருந்து குரல் கொடுப்பது என்பது மிகவும் சாதாரணமாக நடக்கும். அப்படித்தான் ஸ்டான் சாமி விவகாரம் கூட அங்கே எதிரொலித்தது. இலங்கைத் தமிழர்களுக்குப் பிரச்சனை என வரும்போது அங்குள்ள நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வைத்தார்கள்.
ஆனால், இந்தியா ஒருவரைப் பயங்கரவாதியாகக் கருதும்போது அவருக்கு கனடா அடைக்கலம் கொடுத்திருப்பது சரியா? இந்தக் கேள்வியை கனடா நாட்டின் பார்வையிலிருந்தும் பார்க்க வேண்டும்" என்கிறார் க்ளாட்ஸன் சேவியர்.
இந்தியா - கனடா உறவின் எதிர்காலம் என்ன?
"இந்த நாட்டில் தேசத் துரோகியாக சொல்லப்படுபவர் இன்னொரு நாட்டில் புரட்சியாளராக பார்க்கப்படுவார். வெளிநாட்டில் இருக்கும் ஒருவர் மோசமான குற்றவாளி என இந்தியா கருதினால், சம்பந்தப்பட்ட நாட்டுடன் குற்றவாளிகளைப் பரிமாறும் ஒப்பந்தம் இருந்தால் அவரைத் தங்கள் நாட்டுக்குத் திருப்பி அனுப்பக் கோரலாம். இல்லாவிட்டால், அந்த நாடு அவரைத் திருப்பி அனுப்பத் தேவையில்லை.
ஆனால், இப்போது ராஜ தந்திர ரீதியில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவு பொருளாதார பின்னடைவாகவும் மாற ஆரம்பித்திருப்பது சிக்கலான விஷயம். இதனால் சாதாரண மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இரு நாடுகளுமே கொஞ்சம் பொறுத்திருந்து பதில் நடவடிக்கைகளை எடுத்திருக்கலாம். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் எதையும் உடனடியாகச் செய்தாக வேண்டியிருக்கிறது. ஆகவே ராஜதந்திர நடவடிக்கைகளும் அதற்கேற்றபடி மாறிவிட்டன. இது நீண்ட கால நோக்கில் இரு நாட்டு உறவுகளை பாதிக்கும். இனி இரு நாடுகளும் என்ன செய்யப்போகின்றன என்பதில்தான் எதிர்காலம் இருக்கிறது" என்கிறார் க்ளாட்ஸன் சேவியர்.
இந்தியா - கனடா உறவை தீர்மானிப்பதில் சீனாவின் பங்கு என்ன?
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் இரு நாடுகளுக்குமே முக்கியமானவை. கனடா, இந்தியா ஆகிய இரு நாடுகளுமே காமன்வெல்த் அமைப்பில் இருக்கின்றன. ஜி 20 அமைப்பிலும் இருக்கின்றன. ஆசியாவில் தனது செல்வாக்கை அதிகரிக்க விரும்பும் கனடா, சீனாவுக்கு எதிரான நேச சக்தியாக இந்தியாவைப் பார்த்துவந்தது.
2022ஆம் ஆண்டில் கனடாவின் வர்த்தகக் கூட்டாளிகளில் 10வது இடத்தில் இந்தியா இருந்தது. முந்தைய ஆண்டைவிட இரு நாட்டு வர்த்தகம் 56 சதவீதம் அளவுக்கு வளர்ந்திருந்தது. ஆகவே, இரு நாடுகளுமே இந்த உறவை சரிசெய்ய முடியாத அளவுக்கு மோசமாக்க விடாது என இப்போதைக்கு நம்பலாம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்