You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம் - எதிர்த்து வாக்களித்த 2 எம்.பி.க்கள் யார்?
நாடாளுமன்ற மக்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா பெருவாரியான ஆதரவுடன் நிறைவேறியுள்ளது. மசோதாவுக்கு எதிராக 2 எம்.பி.க்கள் மட்டுமே வாக்களித்தனர். நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு அமலுக்கு வருவது எப்போது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதிய விளக்கம் அளித்துள்ளார்.
இதன் மூலம் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் முதலில் நிறைவேற்றப்பட்ட மசோதாவாக மகளிர் இட ஒதுக்கீடு மசோதா திகழ்கிறது. இந்த மசோதாவில் உள்ள முக்கிய அம்சங்கள் என்ன? நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிர் இட ஒதுக்கீடு எப்போது அமலுக்கு வரும்?
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் நேற்று (19-09-2023) அறிமுகப்படுத்தினார். நாடாளுமன்றத்தில் அரசியல் சாசனத்தில் 128-வது திருத்த மசோதா-2023-வாக அது தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் மூன்றில் ஒரு பங்கு இடங்களை பெண்களுக்கு ஒதுக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது.
மசோதாவின் மீது இன்று 8 மணி நேரத்திற்கும் மேலாக விவாதம் நடைபெற்றது. ஆளும் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் தங்களது கருத்துகளை முன்வைத்தனர். 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, தொகுதி மறுவரையறை முடிந்த பின்னரே இது அமலுக்கு வரும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்தார்.
விவாதத்தின் முடிவில் மசோதாவின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது, நாடாளுமன்ற மக்களவை நிகழ்வுகளில் பங்கேற்றிருந்த எம்.பி.க்களில் 2 பேர் மட்டுமே மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர். ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சித் தலைவர் ஓவைசியும் மற்றொரு எம்.பி.யும் மட்டுமே மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர்.
அதேநேரத்தில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவாக 454 எம்.பி.க்கள் வாக்களித்தனர். இதன் மூலம் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மக்களவையில் பெருவாரியான ஆதரவுடன் நிறைவேறியது.
அரசியல் சாசன திருத்தம் கூறுவது என்ன?
மக்களவை, மாநில சட்டமன்றங்கள் மற்றும் டெல்லி சட்டமன்றம் ஆகியவற்றில் மூன்றில் ஒரு பங்கு இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்று இந்த மசோதா கூறுகிறது. அதன்படி, 543 மக்களவை இடங்களில் 181 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும். புதுச்சேரி போன்ற யூனியன் பிரதேசங்களின் சட்டமன்றங்களில் இந்த ஒதுக்கீடு கிடையாது.
எஸ்.சி./எஸ்.டி. பிரிவு பெண்களுக்கு இட ஒதுக்கீடு உண்டா?
மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு தற்போது இட ஒதுக்கீடு அமலில் இருக்கிறது.
அதில் மூன்றில் ஒரு பங்கு இடங்கள் இனி பெண்களுக்கு ஒதுக்கப்படும்.
தற்போது, மக்களவையில் 131 இடங்கள் எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் கிட்டத்தட்ட 43 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும். இந்த 43 இடங்களும், சபையில் மகளிர் இட ஒதுக்கீட்டிற்கான மொத்த இடங்களின் ஒரு பகுதியாக கணக்கிடப்படும்.
அதாவது 181 இடங்களில் 138 இடங்கள் பொதுப் பிரிவினருக்கான இடங்கள்.
இவை தற்போது மக்களவையில் உள்ள இடங்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டவை. மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டால் இந்த எண்ணிக்கை மாறக்கூடும்.
மகளிர் இட ஒதுக்கீடு எப்போது அமலுக்கு வரும்?
முதலில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இந்த மசோதாவை 2/3 பெரும்பான்மையுடன் இந்த மசோதா நிறைவேற்றப்பட வேண்டும்.
அடுத்தபடியாக, மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்குப் பிறகு தொகுதி மறுசீரமைப்புப் பணி நடைபெற வேண்டும்.
தொகுதி மறுசீரமைப்பு என்பது மக்கள்தொகைப் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தொகுதிகளுக்கான எல்லைகளை நிர்ணயிக்கும் செயல்முறையைக் குறிக்கிறது.
கடைசியாக நாடு தழுவிய தொகுதி மறுசீரமைப்பு 2002-ம் ஆண்டு நடைபெற்று 2008-ம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது.
தொகுதி மறுசீரமைப்பு முடிந்த பிறகு, மக்களவை மற்றும் மாநில சட்டசபைகள் கலைக்கப்பட்ட பின் மகளிர் இட ஒதுக்கீடு அமலுக்கு வரும்.
அதன்படி பார்த்தால், 2029-ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குன் முன்பாக மகளிர் இட ஒதுக்கீடு அமலுக்கு வராது என்றே தெரிகிறது.
மகளிர் இடஒதுக்கீடு அமலுக்கு வந்த பிறகு 15 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். எஸ்.சி. மற்றும் எஸ்.டி. இட ஒதுக்கீடு இதேபோல் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கானதாகவே இருந்தது. ஆனால், அதன் பிறகு அது தொடர்ச்சியாக 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுக் கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.
மகளிருக்கான இடங்கள் எப்படி தீர்மானிக்கப்படும்?
ஒவ்வொரு தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைக்குப் பிறகும் மகளிருக்கான இடங்கள் சுழற்சி முறையில் மாற்றப்படும் என்று மசோதா கூறுகிறது.
இவை நாடாளுமன்றத்தால் பின்னர் தீர்மானிக்கப்படும்.
இந்த அரசியல் சட்டத் திருத்தம், நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்க அங்கீகாரம் அளிக்கும்.
இருப்பினும், மகளிருக்கான இடங்களின் சுழற்சி மற்றும் தொகுதி மறுசீரமைப்புக்கு தனி சட்டமும் மற்றும் அறிவிக்கையும் அவசியம்.
ஊராட்சி, நகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளில் மூன்றில் ஒரு பங்கு இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
இவையும் ஒவ்வொரு தேர்தலிலும் சுழற்சி முறையில் மாற்றியமைக்கப்படுகின்றன.
பட்டியல் பிரிவினரைப் பொருத்தவரை, தொகுதியில் அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப தீர்மானிக்கப்படுகிறது.
சிறிய மாநிலங்களில் இடங்கள் எப்படி ஒதுக்கப்படும்?
ஒரே ஒரு மக்களவைத் தொகுதியைக் கொண்ட லடாக், புதுச்சேரி மற்றும் சண்டிகர் போன்ற யூனியன் பிரதேசங்களில் மகளிர் இட ஒதுக்கீடு எப்படி இருக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. மணிப்பூர் மற்றும் திரிபுரா போன்ற சில வடகிழக்கு மாநிலங்களில் 2 இடங்களும், நாகாலாந்தில் 1 இடமும் உள்ளன.
ஆனால், 2010 ஆம் ஆண்டு மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட முந்தைய மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவில் இது திறம்பட கையாளப்பட்டிருந்தது.
அதன்படி, ஒரு தொகுதியைக் கொண்ட மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களில் ஒரு மக்களவைத் தேர்தலில் பெண்களுக்கு அந்த இடம் ஒதுக்கப்படும், அடுத்த இரண்டு தேர்தல்களில் அந்த தொகுதியில் மகளிர் இட ஒதுக்கீடு இருக்காது.
இரண்டு இடங்களைக் கொண்ட மாநிலங்களில், இரண்டு மக்களவைத் தேர்தல்களில் ஒரு இடம் ஒதுக்கப்படும், மூன்றாவது தேர்தலில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு இருக்காது.
பெண்களின் தற்போதைய பிரதிநிதித்துவம் என்ன?
தற்போதைய மக்களவையில் 82 பெண் உறுப்பினர்கள் உள்ளனர். இது மொத்த உறுப்பினர் எண்ணிக்கையில் 15 சதவீதம் ஆகும்.
19 மாநில சட்டமன்றங்களில் 10%க்கும் குறைவான பெண் உறுப்பினர்களே உள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளின் நாடாளுமன்றங்களில் பெண்களின் சராசரி பிரதிநிதித்துவம் 26.5% ஆகும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்