படிக்கட்டில் அமர்வதில் தகராறு: ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி ஒருவர் கொலை - இன்றைய டாப்5 செய்திகள்

பட மூலாதாரம், Getty Images
இன்றைய (13/04/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
சேலம் அருகே படிக்கட்டில் உட்கார இடம் தராததால், ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி பனியன் நிறுவன ஊழியரை கொலை செய்ததாக, ஜார்க்கண்ட் இளைஞரை போலீஸார் கைது செய்தனர் என தினமணி நாளிதச் செய்தி வெளியிட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், குரும்பேரி கிராமம், பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர் நவீன் (35). இவர் தனது மைத்துனர்களான சூர்யா, தேவேந்திரன் ஆகியோருடன் திருப்பூரில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். பங்குனி உத்திரத்தையொட்டி குரும்பேரி திரும்புவதற்காக வியாழக்கிழமை நள்ளிரவு திருவனந்தபுரம் - புதுதில்லி கேரள விரைவு ரயிலில் நவீன் உள்ளிட்ட 3 பேரும் பயணித்தனர்.
"முன்பதிவில்லா பெட்டியில் படிக்கட்டில் அமர்ந்து நவீன் பயணித்த நிலையில், வடமாநில இளைஞர் ஒருவர் தகராறில் ஈடுபட்டதுடன் அவரை காலால் உதைத்து கீழே தள்ளினார். இதில் ரயிலுக்கு அடியில் சிக்கிய நவீன் உடல் துண்டாகி உயிரிழந்தார்." என அச்செய்தி குறிப்பிடுகிறது.
மேலும், "இதனால் அதிர்ச்சியடைந்த சக பயணிகள், நவீனை கீழே தள்ளிவிட்ட நபரை சரமாரியாக தக்கினர். தகவலறிந்து வந்த ரயில்வே போலீஸார், நவீன் உடலைக் கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதுகுறித்து கொலை வழக்குப் பதிவு செய்த போலீஸார், ரயிலில் இருந்து கீழே தள்ளி கொலை செய்த ஜார்க்கண்ட் மாநிலம், துல்கா மாவட்டம் மசிலியா பகுதியைச் சேர்ந்த பர்தேஸ்வர் டுடூ (27) என்பவரை கைது செய்தனர். விசாரணையில் படிக்கட்டில் அமர்வதில் ஏற்பட்ட தகராறில் நவீனை கீழே தள்ளி விட்டதாக அவர் தெரிவித்தார்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, உயிரிழந்த நவீனின் உடல் சேலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஏழு மாத குழந்தையை நரபலி கொடுத்த பெண்ணுக்கு மரண தண்டனை

பட மூலாதாரம், Getty Images
தனக்கு ஏற்பட்ட தோஷத்தை நீக்குவதற்காக தன்னுடைய ஏழு மாத பெண் குழந்தையை நரபலி இட்டதற்காக 32 வயது பெண்ணுக்கு சூர்யபேட் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது என, டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
அச்செய்தியில், "பி பாரதி எனும் லாஸ்யா, தன் குழந்தையை நரபலி கொடுத்ததைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின் தன் கணவரை எடைக்கல் மூலம் தாக்கிக் கொலை செய்ய முயற்சித்ததாக ஏற்கெனவே சிறையில் உள்ளார். இதுவும் இந்த வழக்கில் அவருக்கு மரண தண்டனை கிடைக்க முக்கிய பங்கு வகித்துள்ளது.
'ஆதாரங்களின் அடிப்படையில் இது அரிதிலும் அரிதான வழக்கு என்பதால் அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டதாக' கோடாட் துணை காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீதர் ரெட்டி தெரிவித்தார்.
2021 ஏப்ரலில் குழந்தையை பலியிடும்போது தன்னுடைய நோயுற்றிருந்த தந்தை மட்டுமே வீட்டில் இருந்ததாக அப்பெண்ணின் கணவர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
அவருடைய தந்தையின் கூச்சலைத் தொடர்ந்து, அக்கம்பக்கத்தினர் குழந்தையை அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அக்குழந்தை ஏற்கெனவே இறந்ததாக தெரிவித்தனர்.
அதே ஆண்டில் ஜாமீனில் வெளிவந்த பாரதி, தன் கணவரையும் கொலை செய்ய முயற்சித்ததாக மீண்டும் கைது செய்யப்பட்டார்." என அச்செய்தி கூறுகிறது.
மேலும், "தன் மனைவிக்கு மனநல பிரச்னைகள் இருப்பதாக கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.குழந்தையை கொலை செய்வதற்கு முன்பு மனநல மருத்துவர் ஒருவர் பாரதிக்கு மருந்துகள் பரிந்துரைத்ததாகவும் அதை அவர் எடுத்துக்கொள்ளவில்லை என்றும் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தின் சஞ்சல்குடா பெண்கள் மத்திய சிறையில் பாரதி தற்போது அடைக்கப்பட்டுள்ளார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது: ரூ.1.09 கோடி பறிமுதல்

பட மூலாதாரம், Getty Images
கோவையில் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை கைது செய்துள்ள போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.1.09 கோடி பறிமுதல் செய்துள்ளதாக, தினமணி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
அச்செய்தியில், "கோவை, காந்திபுரம் பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சிலரது நடவடிக்கைகள் இருப்பதாக காட்டூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலை அடுத்து அங்கு சென்ற போலீசார், அங்கு இருந்த இளைஞர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் தங்கியிருந்த அறையை போலீசார் சோதனையிட்ட போது மடிக்கணிகள், செல்போன்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் அங்கு ரூ.1 கோடியே 9 லட்சத்து 90 ஆயிரம் பணம் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார், பணம் குறித்து அவர்களிடம் விசாரணை நடத்திய போது ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.
பின்னர், அந்த அறையில் இருந்த 7 இளைஞர்களையும் கைது செய்து காட்டூர் காவல்நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்ததில் ராஜேஷ், சௌந்தர், அருண்குமார், நந்தகுமார், விபுல், ஜடேந்திரா, விபின் என்பது தெரியவந்தது.
தொடர்ந்து அவர்களிடம் இருந்த ரூ.1 கோடியே 9 லட்சத்து 90 ஆயிரம் பணம், 2 கார்கள், 2 பைக்குகள் மற்றும் 12 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஏப்ரலில் அதிகபட்ச வெப்பநிலை பதிவு

பட மூலாதாரம், Getty Images
இந்த ஏப்ரல் மாதத்தில் அதிகபட்ச வெப்பநிலையை சென்னை சனிக்கிழமை (ஏப். 12) பதிவுசெய்ததாக, தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அச்செய்தியின்படி, நுங்கம்பாக்கத்தில் 39.2 டிகிரி செல்சியஸ் மற்றும் மீனம்பாக்கத்தில் 39.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவானது.
நேற்று சென்னை மற்றும் கடலூரில் சராசரி வெப்பநிலையைவிட 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவானதாக அச்செய்தி கூறுகிறது. கடலூரில் நேற்று 39.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
வேலூரில் பகல் நேரத்தில் 40.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
தமிழ்நாட்டில் திங்கட்கிழமை வரை ஒன்னும் 2-3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயரும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இன்று சென்னையில் 37-38 டிகிரி செல்சியஸ் பதிவாக வாய்ப்புள்ளது என்றும் அச்செய்தி கூறுகிறது.

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை - இலங்கை அமைச்சர்
இலங்கைக்கு அமெரிக்கா விதித்துள்ள பரஸ்பர தீர்வை வரி குறித்து அமெரிக்காவின் வர்த்தக துறை பிரதிநிதிகளுடன் சுமூகமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம், கிடைக்கப்பெற்றுள்ள 90 நாட்களை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்வோமென தொழில் அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்ததாக, வீரகேசரி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள பரஸ்பர தீர்வை வரி தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
"ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அமெரிக்காவின் பரஸ்பர தீர்வை குறித்து விரிவாக பேசப்பட்டது. பல யோசனைகளை முன்வைத்துள்ளனர். அவற்றை முழுமையாக பரசீலனை செய்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
அமெரிக்காவினால் விதிக்கப்பட்ட 44 சதவிகித பரஸ்பர தீர்வை வரி குறித்து ஆராய்வதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு அமெரிக்காவின் வர்த்தக துறை பிரதிநிதிகளுடன் இரண்டு முறை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்கள்.
வரி விவகாரத்தில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வலியுறுத்தி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அமெரிக்க ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
இதற்கு மாறாக நிதி அமைச்சகம் சார்பில் அமெரிக்காவின் வர்த்தக துறைக்கும் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆகவே, கிடைக்கப் பெற்றுள்ள 90 நாட்களை சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ளும். குறித்த வரி விதிப்பில் இலங்கைக்கு நிவாரணம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்" என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












