You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'தமிழ்நாட்டு மருமகன்' தர்மேந்திரா: கிராமத்து இளைஞர் பாலிவுட்டில் கோலோச்சிய கதை
- எழுதியவர், வந்தனா
- பதவி, பிபிசி இந்தி, மூத்த செய்தி ஆசிரியர்
தர்மேந்திரா பாலிவுட்டின் வெற்றிகரமான கதாநாயகன் என்பதைத் தவிர, அவர் பல்வேறு திறமைகளைக் கொண்ட சிறந்த கலைஞர் என்று சொல்லலாம். பஞ்சாபில் பிறந்த தர்மேந்திரா, தமிழ்நாட்டு மருமகன். பிரபல திரைப்பட நடிகை ஹேமமாலினியின் கணவர். ஹேமமாலினி திருச்சியை பூர்வீகமாகக் கொண்டவர்.
அனுபமா படத்தில் உணர்ச்சி பொங்கும் எழுத்தாளர் என்றால், சத்யகம், சுப்கே சுப்கேயில் நகைச்சுவை நடிகர் என நடிப்பின் பல பரிணாமங்களையும் வாழ்ந்து காட்டியவர் தர்மேந்திரா.
நிஜ வாழ்க்கையில் கவிஞர், காதலன், தந்தை, 'உலகின் மிக அழகான' மனிதர்களில் ஒருவர், மது போதையிலிருந்து விடுபட்ட மனிதர் மற்றும் ஒரு காலத்தில் அரசியல்வாதியாக இருந்தவர்.
1935-ஆம் ஆண்டில் பஞ்சாபில் பிறந்த தரம் சிங் தியோல், தன்னுடைய பூர்வீக கிராமமான நர்சாலியிலிருந்து பம்பாய்க்கு சென்ற பயணத்தை கனவுப்பயணம் என்று சொல்லலாம்.
தர்மேந்திராவின் ரசிகர்கள் இந்தியாவில் மட்டுமல்ல, பாகிஸ்தான் உட்பட உலகம் முழுவதிலும் உள்ளனர். முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், தர்மேந்திராவின் ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.
தர்மேந்திரா நடிப்புக்கு மட்டுமல்ல, தாராள மனப்பான்மைக்கும் பெயர் பெற்றவர். எழுத்தாளர் ராஜீவ் விஜய்கரின் 'தர்மேந்திரா - நாட் ஜஸ்ட் எ ஹீ-மேன்' புத்தகம், தர்மேந்திராவின் வாழ்க்கையை விரிவாக சித்தரிக்கிறது.
அந்தப் புத்தகத்தில், மகேஷ் பட் இவ்வாறு கூறுகிறார்: "'தோ சோர்' திரைப்படத்தில் நான் உதவியாளராகப் பணிபுரிந்துகொண்டிருந்தேன். நான் சரியான அறிவுறுத்தல்களை வழங்கவில்லை. அதனால், லாரி ஓட்டுநராக நடித்துக்கொண்டிருந்த தர்மேந்திராவின் உடை, படப்பிடிப்புத் தளத்தில் இருந்து வெகு தொலைவில் உள்ள ஹோட்டலில் தங்கிவிட்டது. திட்டமிட்டபடி அதிகாலையில் அந்த காட்சியை எடுக்காவிட்டால் தயாரிப்பாளருக்கு பெரும் இழப்பு ஏற்படும். நான் இந்த பிரச்னையை தர்மேந்திராவிடம் சொன்னேன்" என்று கூறுகிறார்.
"நான் சொன்னதை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த தர்மேந்திரா எழுந்து நடந்துச் சென்றார், அங்கிருந்த லாரி ஓட்டுநர் ஒருவரிடம் சென்று அவரிடம் பேசி, ஓட்டுநரின் அழுக்குத் துணிகளைக் கடன் வாங்கி அணிந்து நடித்தார். எங்களுடைய தவறை தனது பெருந்தன்மையாலும், சமயோஜிதமான செய்கையாலும் மறைத்தார்."
நடிப்பு ஆசையைத் தூண்டிய திலீப் குமார்
தர்மேந்திராவின் தந்தை லூதியானாவுக்கு அருகிலுள்ள சனேவால் கிராமத்தில் கணித ஆசிரியராக இருந்தார், அங்கு திரைப்படங்களைப் பார்ப்பது என்பது நிறைவேறாத ஆசை என்றே சொல்லலாம்.
1948 இல் வெளியான திலீப் குமாரின் ஷாஹீத் திரைப்படத்தை சிறுவன் தரம் சிங் தியோல் ரகசியமாகப் பார்த்தார். அந்த திரைப்படமும், நடிகர் திலீப் குமாரும் சிறுவனின் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அன்றே அவரது தலைவிதி நிர்ணயமானது என்று தர்மேந்திரா முடிவு செய்துவிட்டார் என எழுத்தாளர் ராஜீவ் விஜய்கரின் புத்தகம் கூறுகிறது.
1958-ஆம் ஆண்டில், பிலிம்பேர் பத்திரிகையின் ஒரு போட்டியில் பிமல் ராய் மற்றும் குரு தத் போன்ற பிரபலங்கள் இருந்தனர். அதில் பங்கேற்க விரும்பிய தர்மேந்திரா, ஜான் முகமது போட்டோ ஸ்டுடியோவுக்குச் சென்று, "என்னை திலீப் குமார் போல படம் எடுத்துக்கொடு, நான் நிச்சயம் தேர்வாகிவிடுவேன் என்று சொன்னார்" என்றார்.
அவர் நினைத்ததுதான் நடந்தது. கிராமத்து இளைஞர் பாலிவுட்டில் கோலோச்ச பம்பாயில் குடியேறினார்.
உணர்ச்சி, நாடகம் மற்றும் சோகம் கலந்த ஒரு திரைப்படக் கதை இப்படித்தான் தொடங்கியது.
பிமல் ராயின் பந்தினி
பிமல் ராய், "பந்தினி" (Bandini) திரைப்படத்தில் தர்மேந்திராவை நடிக்க வைத்தார். இந்தத் திரைப்படம் தயாரிப்பதில் தாமதமானது. அப்போது, அர்ஜுன் ஹிங்கோரானி தர்மேந்திராவை "தில் பி தேரா ஹம் பி தேரே" படத்திற்காக ஒப்பந்தம் செய்தார்.
அந்த காலகட்டத்தில் வேறு எந்த கதாநாயகனுக்கும் தர்மேந்திராவைப் போன்ற வாட்டசாட்டமான உடலமைப்பு இல்லை. 1966 இல் வெளியான பூல் அவுர் பத்தர், தர்மேந்திராவை தனி கதாநாயகனாக அங்கீகரித்தது. தர்மேந்திராவுக்கு முதல் பிலிம்பேர் பரிந்துரையைப் பெற்றுத் தந்த படம் இது.
அமிதாப், ராஜேஷ் கன்னா போன்ற திரைப்பட ஜாம்பவான்களுக்கு மத்தியில் வெற்றி பெற்ற தர்மேந்திரா, 60களின் இறுதியில், கடுமையான போட்டிகளுக்கு இடையில் வெற்றிப் படிக்கட்டில் ஏறிக்கொண்டிருந்தார்.
தர்மேந்திரா 60களின் தொடக்கத்தில் நடிக்கத் தொடங்கியபோது, ஷம்மி கபூர் அனைவரின் விருப்ப நாயகராக இருந்தார். 1970களில், ராஜேஷ் கன்னா, அமிதாப் பச்சன் போன்ற உச்ச நட்சத்திரத்திரங்களுக்கு மத்தியில் 60களில் இருந்து 80கள் வரை பிரபலமாக இருந்த நடிகர் தர்மேந்திரா மட்டுமே.
70களில் தர்மேந்திராவின் தனித்துவமான பாணி வெளிப்பட்டது. இந்த காலகட்டத்தில், ஜீவன் மிருத்யு, சீதா அவுர் கீதா, சரஸ், பிளாக்மெயில், சுப்கே சுப்கே என, ஆக்ஷன், காதல், நகைச்சுவை மற்றும் வணிக சினிமா என பலவிதமான திரைப்படங்களில் நடித்தாலும், 1975-இல் வெளியான ஷோலே திரைப்படம், அவரது (வீரு) புகழை உச்சத்திற்கு கொண்டு சென்றது.
அழகான கதாநாயகன் தர்மேந்திரா
அந்த காலகட்டத்தில், தர்மேந்திரா 'உலகின் மிக அழகான மனிதர்களில்' ஒருவராக இருந்தார். தர்மேந்திராவின் ஆதர்ச நாயகரான நடிகர் திலீப் குமார் ஓர் விழாவில் பேசும்போது, தான் கடவுளைச் சந்திக்கும் போது, தர்மேந்திராவைப் போல தன்னை ஏன் அழகாக உருவாக்கவில்லை என்று கேட்கப் போவதாகக் கூறினார்.
இது குறித்து முன்பொரு முறை பிபிசியிடம் பேசும்போது தர்மேந்திரா இவ்வாறு குறிப்பிட்டார்: "மக்கள் அப்படிச் சொன்னால் அது உண்மையாக இருக்கலாம் என்றே தோன்றுகிறது. அவர்கள் என்னை ஹீ-மேன் என்று அழைக்கிறார்கள், கிரேக்க கடவுள் என்றுகூட சொல்கிறார்கள். என்னுடைய அபிமானிகளின் அன்பை இழந்துவிடுவேனோ என்ற கவலையும் எழுகிறது. அதனால், என்னுடைய நல்ல குணங்களில் கூட குறைபாடுகளைக் கண்டுபிடித்துக்கொண்டே இருக்கிறேன்."
தர்மேந்திராவின் கூச்ச சுபாவம்
தர்மேந்திராவுக்கு சரியாக நடனம் ஆடத் தெரியாது என்று பரவலாக பேசப்பட்டது. இருப்பினும் அவரது "ஜட் யம்லா பக்லா தீவானா" போன்ற பாடல்கள் மிகவும் பிரபலமடைந்தன.
இந்தப் பாடலைப் பற்றி பிபிசியுடனான பேட்டியில் குறிப்பிட்ட தர்மேந்திரா, "திரைப்பட படப்பிடிப்பின்போது, நான் பொது இடங்களில் நடனமாட மறுத்துவிட்டேன். அதனால் எனக்காக ஒரு கிரேன் பொருத்தப்பட்டது. பின்னர் ஒரு காலகட்டத்தில் என்னுடைய கூச்ச சுபாவம் மாறிவிட்டது" என்று கூறினார்.
ஹேம மாலினி மற்றும் தர்மேந்திராவின் காதல் கதை
பிரபல பாலிவுட் நடிகை ஹேம மாலினியுடன் அவருக்கு காதல் ஏற்பட்டது. ஆனால் தர்மேந்திராவுக்கு அதற்கு முன்பே திருமணமாகியிருந்தது. 1980-ஆம் ஆண்டு தர்மேந்திரா, பாலிவுட்டின் கனவுக் கன்னி ஹேம மாலினியை மணந்தபோது, அது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஹேம மாலினியின் வாழ்க்கை வரலாறான "ஹேம மாலினி: பியாண்ட் தி ட்ரீம் கேர்ள்" என்ற புத்தகத்தில், எழுத்தாளர் ராம் கமல் முகர்ஜி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்: "1974-ஆம் ஆண்டு, ஜீதேந்திரா மற்றும் ஹேம மாலினியின் பெற்றோர், அவர்களின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது, தர்மேந்திரா ஏற்கெனவே ஹேம மாலினியின் வாழ்க்கையில் நுழைந்திருந்தார். மெட்ராஸில் திருமணம் நடக்கப் போவது தெரிந்ததும் தர்மேந்திரா நேராக அங்கு சென்று ஹேம மாலினியிடம் தனியாகப் பேசினார், அதன் பிறகு திருமணம் நின்றுபோனது."
தயாரிப்பாளர் தர்மேந்திரா
விஜேதா பிலிம்ஸ் என்ற பதாகையின் கீழ் தனது மகன்களான சன்னி மற்றும் பாபி தியோலை அறிமுகப்படுத்தினார் தர்மேந்திரா. இருப்பினும், தனது மகள்கள் இஷா மற்றும் அஹானா இருவரும் திரைத்துறையில் வருவதை அவர் ஆதரிக்கவில்லை.
மிகவும் பிரபலமானவரான நடிகர் தர்மேந்திராவுக்கு அவரது மதுப்பழக்கம் பின்னடைவைத் தந்தது என்பதை அவரே ஒப்புக்கொண்டுள்ளார்.
சத்யகம் மற்றும் சுப்கே சுப்கே படங்களில் நடித்த தர்மேந்திரா, 1990களுக்குப் பிறகு பாபி தேவ்தா, வீரு தாதா, டக்கு பைரவ் சிங் மற்றும் மகா சக்திமான் போன்ற படங்களில் நடித்தது அவரது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.
எழுத்தாளர் ராஜீவ் விஜய்கர், Dharmendra – Not Just a He-Man என்ற தனது புத்தகத்தில், 1990 முதல் 2003 வரையிலான காலகட்டத்தை தர்மேந்திராவின் வாழ்க்கையில் இருண்ட காலம் என்று அழைக்கலாம் என்று எழுதுகிறார். 1999-இல் வெளியான காந்தி ஷாவின் முன்னிபாய் திரைப்படம் மூலம், அவர் 'பி-கிரேடு' படங்களை முழுமையாக ஏற்றுக்கொண்டார்.
அதே புத்தகத்தில், ராஜ்குமார் சந்தோஷி தர்மேந்திராவைப் பற்றி கூறும்போது, "தர்மேந்திராவுக்கு எவ்வளவு நிர்ப்பந்தம் இருந்தாலும், அவர் தனது கவர்ச்சியைக் கெடுத்து, சி-கிரேடு படங்களைத் தயாரித்ததன் மூலம் தனது ரசிகர்களின் நம்பிக்கையை உடைத்தார். 25 ஆண்டுகளாக அவர் சம்பாதித்த பெயர் அப்போது அடிபட்டது என்பது சோகமான விஷயம்" என்று சொல்கிறார்.
தர்மேந்திரா ஒரு நேர்காணலில் கூறியது முக்கியமானது: "நடிப்பு என் காதலி, நான் அதை விரும்புகிறேன். ஒரு காதலனுக்கும் காதலிக்கும் இடையே சண்டை ஏற்படுவது போல... சில நேரங்களில் அது என்னிடம் பிணக்கு கொள்ளும், அப்போது நான் அதை சமாதானப்படுத்துவேன், சில நேரங்களில் நான் வருத்தப்படுவேன், அது என்னை சமாதானப்படுத்தும். ஆனால் நான் அதை ஒருபோதும் விட்டுவிடவில்லை."
திரைப்படத் துறையில் கோலோச்சிய தர்மேந்திரா அரசியலிலும் இறங்கினார். அரசியலில் விருப்பம் இல்லாவிட்டாலும், அடல் பிஹாரி வாஜ்பேயியின் அறிவுறுத்தலின் பேரில், அவர் பீகானேர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
நடிப்பு மட்டுமல்ல, உருது மொழி மற்றும் கவிதைகளையும் நேசித்தவர் தர்மேந்திரா.
உருது மொழியின் மீதான அவரது அன்பைப் பற்றி நான் ஒருமுறை அவரிடம் கேட்டபோது, அவர் அளித்த பதில்: "உங்கள் உருது மொழிக்கு நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன். உங்கள் மொழியில், என்னுடைய இதயத்தின் உணர்வுகளை வெளிப்படுத்த முடிந்தது."
தர்மேந்திரா, உணர்ச்சிவசப்பட்டவர், காதல் கொண்டவர், கவிஞரின் இதயம் கொண்ட அற்புதமான திரை நட்சத்திரம்.
புகழ் மற்றும் நட்சத்திர அந்தஸ்து பற்றி பேசும்போது, "முக்கியத்துவம் பாராட்டப்படுகிறது, ஆனால் மனிதநேயம் மதிக்கப்படுகிறது. மனிதநேயத்தை விட அந்தஸ்துக்கு முன்னுரிமை அளிக்காதீர்கள், அப்போதுதான் கடவுள் நம்மை பார்ப்பார்" என்று தெரிவித்திருந்தார்.
தர்மேந்திராவின் நடிப்பில் எளிமையும் நேர்த்தியும் இருந்தது. சில நேரங்களில் திரையில் தெரியும் அது, சில சமயங்களில் ஹீ-மேனின் நிழலில் மறைந்திருக்கும், ஆனால் தர்மேந்திராவின் தேடல் ஒருபோதும் முடிவடையவில்லை.
அவரது படத்தில் வரும் ஒரு வசனம்: "ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஆசை, சிறந்த ஒன்றைத் தேடச் செய்யும்... இந்தச் செயல்பாட்டில், ஒருவர் தன்னிடம் உள்ள அனைத்தையும் இழக்கிறார். தேடல் ஒருபோதும் முடிவதில்லை, ஆனால் நேரம் முடிந்துவிடுகிறது..."
டிசம்பரில் தர்மேந்திராவின் 'இக்கீஸ்' திரைப்படம் வெளியாகும் போது, அவர் உலகில் இல்லாவிட்டாலும், அவரது ரசிகர்கள் அவரை கடைசியாக திரையிலாவது பார்க்க முடியும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு