பாகிஸ்தானில் இந்தியா தாக்குதல் நடத்திய பகுதிகளின் நிலை என்ன? புகைப்படங்களுடன் விளக்கம்

பாகிஸ்தான், இந்தியா

பாகிஸ்தான் மற்றும் அதன் நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீர் பகுதிகளில் உள்ள தீவிரவாதிகளின் மறைவிடங்களில் இன்று நள்ளிரவு ஆபரேஷன் சிந்தூர் என்கிற பெயரில் தாக்குதலை நடத்தியுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதல்கள் எந்த பொது மக்களையும் ராணுவ தளங்களையும் குறிவைக்கவில்லை என்றும் இந்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தீவிரவாத இடங்கள் மட்டுமே குறிவைக்கப்பட்டுள்ளன என்றும் இதில் பொதுமக்கள் யாரும் பலியாகவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் பாகிஸ்தான் ராணுவம், இந்தத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதாகவும் 46 பேர் காயம் அடைந்ததாகவும் கூறியுள்ளது.

பாகிஸ்தானில் இந்தியா தாக்குதல் நடத்திய பகுதிகளின் நிலை என்ன? புகைப்படங்களுடன் விளக்கம்

பட மூலாதாரம், Getty Images

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அஹமத்பூர், ஷர்கியா, முரிட்கே, சியால்கோட் மற்றும் ஷகர்கர் பகுதிகளையும் பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரில் கோட்லி மற்றும் முசாபராபாத் பகுதிகளையும் இந்தியா குறிவைத்ததாக அறிக்கை மூலம் பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தாக்குதல்கள் நிகழ்ந்த இடங்கள் எங்கு அமைந்துள்ளன, அங்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என்ன என்பதைப் பார்ப்போம்.

இந்தியா, பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தாக்குதல் நடந்த இடங்களில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர்

அகமதுபூர் ஷர்கியா (பஹாவல்பூர்)

அஹமத்பூர் ஷர்கியா பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பஹாவல்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம்.

"இந்தப் பகுதியில் உள்ள சுபன் மசூதி இந்தத் தாக்குதலில் குறிவைக்கப்பட்டு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது, சுற்றியுள்ள மக்களுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது" என பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்தியா பாகிஸ்தான் தாக்குதல்

பட மூலாதாரம், Getty Images

அதோடு, இந்தத் தாக்குதல்களில் மூன்று வயது பெண், இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் உள்ளிட ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 31 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

"தடை செய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைமையிடம் பஹாவல்பூரில்தான் அமைந்துள்ளது. அல்-சபிர் மதராஸா, ஜாமியா மஸ்ஜித் ஷுபான் ஆகியவையும் இதன் ஒரு பகுதியாக உள்ளது" என்று பிபிசி உருது கூறியுள்ளது.

முரிட்கே

இந்தியா, பாகிஸ்தான், முரிட்கே
படக்குறிப்பு, முரிட்கே மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதி

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது முரிட்கே என்கிற நகரம் லாஹூரில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

லாஹூரின் வெளிப்புறத்தில் அமைந்துள்ள இந்த நகரம் ஜமாத்-உத்-தவாவின் மையமான 'தவாத்-இல்-இர்ஷத்'-ஆல் கடந்த காலங்களில் செய்திகளில் இடம்பெற்றுள்ளது.

"முரிட்கே மாவட்டத்தில் உள்ள அல்-குரா மசூதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் நான்கு இந்திய தாக்குதலில் குறிவைக்கப்பட்டதாகவும் இதில் ஒருவர் உயிரிழந்து, ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் இருவரைக் காணவில்லை" என ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பிபிசி செய்தியாளர் தாரஸ் நங்கியானா முரிட்கேவில் தாக்குதல் நடந்த இடத்திற்கு புதன்கிழமை காலையில் சென்றடைந்தார். இந்தத் தாக்குதலில் குறிவைக்கப்பட்ட கட்டடம் பொது சுகாதார மற்றும் கல்வி வளாகம் என்கிறார் அவர். முரிட்கே நகரில் இருந்து சற்று தொலைவில் அமைந்துள்ள இந்தப் பகுதி பெரிய இடத்தில் பரவி இருப்பதாகவும் அனைத்துப் பக்கங்களிலும் வேலியிடப்பட்டு இருந்ததாகவும் கூறுகிறார்.

முரிட்கே, இந்தியா, பாகிஸ்தான்
படக்குறிப்பு, முரிட்கே மாவட்டத்தில் பாதிப்படைந்த பகுதி

மேலும் அவர், "இந்த வளாகத்தில் ஒரு பள்ளியும் மருத்துவமனையும் உள்ளன. அருகில் ஒரு பெரிய மசூதி அமைந்துள்ள கட்டடமும் குறிவைக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் கட்டடம் அழிக்கப்பட்டது, அதன் இடிபாடுகள் பரவியிருந்தன. மசூதியின் ஒரு பகுதியும் இந்தத் தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வளாகம் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளது" என்றார்.

இருப்பினும், தீவிரவாத முகாம்களை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகவும் இந்தத் தாக்குதல்களில் பொதுமக்கள் யாரும் கொல்லப்படவில்லை என்றும் இந்தியா கூறுகிறது.

முரிட்கே

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முரிட்கே நகரில் வீட்டை விட்டு வெளியேறிய மக்கள்

முசாஃபராபாத்

முசாஃபராபாத்

பட மூலாதாரம், Naseer chaudhry

படக்குறிப்பு, முசாஃபராபாத்தில் தாக்குதல் நடைபெற்ற பகுதி

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரின் தலைநகரமான இங்கு பல முக்கிய அலுவலகங்களும் அரசாங்க கட்டடங்களும் உள்ளன.

ஷுவாய் நல்லா என்கிற இடத்தில் அமைந்துள்ள பிலால் மசூதி குறிவைக்கப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

"முசாஃபராபாத்தில் மலையை நோக்கிச் செல்லும் பிரதான சாலையில் ஷுவாய் நல்லா அமைந்துள்ளது. இந்த மலையின் உச்சிப் பகுதி ஷாஹித் கலி என்று அழைக்கப்படுகிறது" என்கிறார் பிபிசி செய்தியாளர் தபிந்தா கோகப்.

முசாஃபராபாத், பிலால் மசூதி
படக்குறிப்பு, முசாஃபராபாத்தில் பிலால் மசூதியின் வெளிப்பகுதி

தாக்குதலுக்கு உள்ளான ஷுவாய் மற்றும் அதற்கு அருகில் உள்ள சமான் பந்தி பகுதிகளைச் சேர்ந்த மக்கள் நகரின் வேறு இடங்களுக்கு நகர்வதாக அவர் குறிப்பிடுகிறார்.

"தற்போது வாகனங்களின் வரிசைகள் உள்ளன, பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் அங்கு சென்றடைந்துள்ள நிலையில் சிலர் அவர்களுக்கு வேண்டியவர்களின் நலனை விசாரித்து அழைத்துச் செல்ல வந்துள்ளனர்.

பிலால் மசூதியில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் அதில் ஒரு பெண் காயமடைந்துள்ளதாக பாகிஸ்தான் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

கோட்லி

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரில் அமைந்துள்ள கோட்லி இஸ்லாமாபாத்தில் இருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அருகே அமைந்துள்ளது.

கோட்லியில் உள்ள மசூதி மீது நடைபெற்ற தாக்குதலில், 16 வயது பெண் ஒருவரும் 18 வயது இளைஞரும் உயிரிழந்தாகவும், இரண்டு பெண்கள் காயமடைந்துள்ளதாகவும் ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

சியால்கோட்

பாகிஸ்தான், இந்தியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வீட்டை விட்டு வெளியேறிய மக்கள்

பஞ்சாப் மாகாணத்தில் செனாப் நதிக்கரையில் அமைந்துள்ள முக்கியமான நகரம் சியால்கோட். ஜம்மு காஷ்மீர் இதற்கு வடக்கே 48 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு சியால்கோட் மாவட்டத்தை இந்திய எல்லையில் இருந்து பிரிக்கிறது.

சியால்கோட்டின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள கோட்லி லோஹரன் கிராமத்தின் எல்லைப் பகுதியில் இரண்டு குண்டுகள் விழுந்தன. அதில் ஒன்று வெடிக்கவில்லை என்று தெரிவித்த ராணுவ செய்தித் தொடர்பாளர், இந்தத் தாக்குதலில் எந்த உயிரிழப்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ஷகர்கர்

ஷகர்கர் என்பது பஞ்சாப் மாகாணத்தின் நரோபல் மாவட்டத்தில் உள்ள ஒரு தாலுகா. இந்த நகரத்தின் கிழக்குப் பகுதியில் இந்தியாவின் குர்தாஸ்பூர் மாவட்டமும் வடக்குப் பகுதியில் ஜம்மு-காஷ்மீரும் உள்ளதால் சர்வதேச எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு என இரண்டுடனும் இந்தப் பகுதி தம் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது.

ஷகர்கர் மீது வீசப்பட்ட இரண்டு குண்டுகளால் ஒரு மருந்தகம் சிறிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

நேரில் பார்த்தவர்கள் என்ன சொல்கிறார்கள்?

 இந்தியா, பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாதிக்கப்பட்ட பிலால் மசூதி

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முரிட்கேவில் வசிப்பவரான முகமது யூனிஸ் ஷா இந்தியாவின் நான்கு ஏவுகணைகள் ஒரு கல்வி வளாகத்தில் விழுந்ததாக பிபிசியிடம் தெரிவித்தார்.

முதல் மூன்று ஏவுகணைகள் அடுத்தடுத்து வந்ததாகக் கூறும் அவர் நான்காவது ஏவுகணை 5-7 நிமிடங்கள் கழித்து வந்ததாகத் தெரிவித்தார்.

பள்ளி, கல்லூரி, விடுதி, மருத்துவ வளாகம், மசூதி ஆகியவற்றைக் கொண்ட அந்த வளாகம் பகுதியளவு பாதிப்படைந்துள்ளது எனத் தெரிவிக்கும் ஷா அதே வளாகத்தில் சில குடும்பங்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதியும் இருப்பதாகக் கூறுகிறார்.

ஆனால் தீவிரவாத இலக்குகளை மட்டுமே தாக்கியதாக இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முரிட்கே

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முரிட்கே நகரைச் சேர்ந்த குடும்பம் தங்களின் வீடுகளைக் காலி செய்துள்ளனர்

முசாபராபாத்தில் உள்ள பிலால் மசூதிக்கு அருகில் வசிக்கிறார் முகமது வாஹித். முதல் வெடிப்பு தம் வீட்டை அதிரவைத்தபோது உறங்கிக் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கிறார் அவர்.

மேலும் அவர், "நான் சாலைக்கு ஓடி வந்தபோது மக்கள் ஏற்கெனவே அங்கு குழுமியிருந்தனர். என்ன நடக்கிறது என நாங்கள் யூகிக்கும் முன்பாக மேலும் மூன்று ஏவுகணைகள் ஏவப்பட்டன. இது மேலும் பதற்றத்தையும் குழப்பத்தையும் அதிகரித்தது" என்றார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு