உடுமலையில் புலிப்பல் வைத்திருந்ததாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நபர் மரணம் - என்ன நடந்தது?

மாரிமுத்து மீது வனத்துறையினருக்கு கடும் ஆத்திரம் இருந்ததாக குற்றம் சாட்டும் உறவினர்கள்
படக்குறிப்பு, மாரிமுத்து மீது வனத்துறையினருக்கு ஆத்திரம் இருந்ததாக குற்றம் சாட்டும் உறவினர்கள்
    • எழுதியவர், சுதாகர் பாலசுந்தரம்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

உடுமலை வனச்சரக அலுவலகத்தில் விசாரணையின் போது பழங்குடி சமூகத்தை சேர்ந்த நபர் உயிரிழந்தார்.

கேரள மாநிலம் சின்னாறு கலால் வரித்துறை சோதனை சாவடியில் நடத்திய சோதனையில் புலி பல் வைத்திருந்ததாக பிடிபட்ட மாரிமுத்து (58) என்பவரை, கேரள வனத்துறையிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அவரை உடுமலை வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

உடுமலை அழைத்து வந்த நிலையில், வனச்சரக அலுவலகத்தில் மர்மான முறையில் அவர் இறந்தார் .

வனத்துறையினர் அவர் கழிவறையில் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்துள்ளனர். பழங்குடியின மக்கள் சங்கம் அவர் அடித்து கொல்லப்பட்டதாக புகார் தெரிவிக்கின்றனர்.

மலைவாழ் மக்கள் சங்கத்தினர், உறவினர்கள் கூறுவதென்ன?

உயிரிழந்த மாரிமுத்துவிற்கு பாண்டியம்மாள் என்ற மனைவியும், சிந்து, ராதிகா என்ற இருமகள்களும் உள்ளனர். தற்போது மூணார் அருகே சூரியநெல்லியில் மளிகை கடை நடத்தி வந்தார்.

முன்னதாக, உடுமலைப்பேட்டை அருகே மேல் குருமலையில் விவசாயம் செய்து வந்தார். அதே கிராமத்தைச் சேர்ந்த அவர் உட்பட நான்கு பேர் மீது கடந்த சில வருடங்களுக்கு முன்பு கஞ்சா பயிரிட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால், கடந்த ஜூலை 29 அன்று நீதிமன்றத்தால் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

அவரது வழக்கறிஞர் நீதிமன்ற தீர்ப்பை பெற்றுக் கொள்ள அழைக்கவே, நேற்று கேரளா அரசு பேருந்தில் உடுமலைப்பேட்டைக்கு வந்து நீதிமன்ற தீர்ப்பாணையில் கையெழுத்திட்டு, மீண்டும் உடுமலைப்பேட்டையில் இருந்து மூணாறுக்கு பேருந்து ஏறி சென்றவரை சின்னாறு வனத்துறை சோதனை சாவடியில் கேரளா கலால்துறையினர் புலி பல் வைத்திருந்ததாக பிடித்து, கேரளா வனத்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.

கேரளா வனத்துறையினர் உடுமலை வன அதிகாரிகளிடம் மாரிமுத்துவை ஒப்படைத்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று (ஜூலை 31) காலை வனச்சரக அலுவலக கழிப்பறையில் அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாரிமுத்து என்பவர் உயிரிழந்தார்

மாரிமுத்துவை வனத்துறை ஊழியர்களே அடித்து கொலை செய்ததாக, உறவினர்களும் பழங்குடியின சங்க தலைவர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.

''நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட ஒருவரை ஒரு போலியான வழக்கில் கைது செய்து, முறையற்ற காவலில் வைத்து சித்திரவதை செய்து கொன்றுள்ளனர்'' என பழங்குடி சங்க தலைவர்கள் கூறுகின்றனர்.

மேலும் முறையான விசாரணை நடத்தக்கோரி மலைவாழ் மக்கள் சங்கத்தினர் உடுமலை வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய பழங்குடியின செயற்பாட்டாளர் தன்ராஜ், ''இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மாரிமுத்துவின் குடும்பத்திற்கு தமிழக அரசு 50 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்க வேண்டும். வனத்துறை மீது இந்த குற்றச்சாட்டு இருப்பதால் தமிழக அரசு சிபிசிஐடி விசாரணைக்கு, உத்தரவிட வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்'' என்றார்.

உயிரிழந்த மாரிமுத்து (58)
படக்குறிப்பு, உயிரிழந்த மாரிமுத்து (58)

மனைவி அளித்த புகார்

உயிரிழந்த மாரிமுத்துவின் மனைவி பாண்டியம்மாள் உடுமலை காவல்நிலையத்தில் அளித்துள்ள புகாரில், ''எனது கணவர் மீது கஞ்சா பயிர் வளர்த்ததாக வனச்சரக அலுவலர் நடத்திய வழக்கில் கடந்த 29ம் தேதி அவர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து எனது கணவர் அவரது வழக்கறிஞரை சந்தித்துவிட்டு சின்னாறு சோதனை சாவடி வழியாக ஊருக்கு வந்துள்ளார். சின்னாறு சோதனை சாவடியில் அவரை சட்டத்திற்கு புறம்பாக வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டது குறித்து எங்களுக்கு எந்த தகவலும் அளிக்கவில்லை. எங்களை போன்ற பழங்குடியினர் எதிர்த்து போராடமாட்டோம் என்பதால் வனத்துறையினர் பொய்யான வழக்குகளை எங்கள் மீது போடுகின்றனர். என் கணவர் தைரியமானவர், தற்கொலை செய்திருக்கமாட்டார். வனத்துறையினர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என கூறியுள்ளார்.

சிபிஎம் கட்சியினர் மாரிமுத்து மரணம் தற்கொலை அல்ல விசாரணை மரணம் என குற்றம் சாட்டினர். விசாரணை நடத்திய வனத்துறையினர் மீது எஸ்சி/ எஸ்டி பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எஸ்சி/ எஸ்டி பிரிவின் கீழ் வழக்குப் பதியக் கோரி போராட்டம்
படக்குறிப்பு, எஸ்சி/ எஸ்டி பிரிவின் கீழ் வழக்குப் பதியக் கோரி போராட்டம்

வனத்துறையினர் கூறுவதென்ன?

இந்த சம்பவம் குறித்து வனத்துறை சார்பில் வெளியிட்ட செய்திகுறிப்பில், ''மாரிமுத்து உடுமலைப்பேட்டை சரகத்தின் மேல் குருமலை செட்டில்மெண்ட் பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் கேரள வனத்துறையினர் தமிழக வனத்துறையிடம் ஒப்படைத்தனர் விசாரணையில், சங்கர் என்பவரிடமிருந்து வன விலங்கின் பல்லை பெற்றதாக மாரிமுத்து ஒப்புக்கொண்டார். இந்தநிலையில் வன அலுவலகத்தில் இருந்தபோது அதிகாலை 4:30 மணியளவில், கழிவறைக்குச் செல்ல வேண்டும் என்று அவர் கோரினார். 5 நிமிடங்கள் ஆன பிறகும் அவர் வெளியே வரவில்லை. பின்னர் பணியாளர்கள் கதவைத் தட்டினர். அவர் கதவைத் திறக்கவில்லை. பணியாளர்கள் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது, தற்கொலை செய்து இறந்தது தெரியவந்தது.'' என தெரிவிக்கப்பட்டுள்ளது

உடுமலைப்பேட்டை வனச்சரக அலுவலகத்தில் விசாரணை
படக்குறிப்பு, உடுமலைப்பேட்டை வனச்சரக அலுவலகத்தில் விசாரணை

முன்பகை காரணமாக அவரை பிடித்து சென்றாதாகவும் செய்தி அறிக்கையில் உள்ள தகவல்கள் மாறுபட்டிருப்பதாகவும், மலைவாழ் மக்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

உடுமலை காவல் நிலைய ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், கூறுகையில், மாரிமுத்து வழக்கில் விசாரணையில் இருக்கும் போது மரணம் என 196 (2)(a) இன் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பதாக தெரிவித்தார். மேலதிக தகவல்களை அளிக்க மறுத்துவிட்டார்

அதனுடன் எஸ் .சி எஸ் டி வன்கொடுமை தடுப்புச்சட்டப்பிரிவையும் சேர்க்கக்கோரி மலைவாழ் மக்கள் சங்கத்தினர் கோருகின்றனர்.

புலி பல் போன்ற பொருள் பிடிபட்டதை மூணார் கலால் துறையினர் உறுதி செய்துள்ளனர்.

நீதிபதி விசாரணை

உடுமலை வனத்துறை அலுவலகத்தில், உடுமலை ஜே.எம்.1 நீதிமன்ற நீதிபதி நித்யகலா ஆய்வு செய்து 3 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினார்.

வனத்துறையினர் மீது சாதிய வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி , மாரிமுத்துவின் மனைவி , மகள்கள், மற்றும் மலைவாழ் மக்கள் சங்கத்தினர் நீதிபதி நித்யகலாவிடம் புகார் மனுவை அளித்தனர். அதனைத்தொடர்ந்து குடும்பத்தினரிடம், அவர் விசாரணை நடத்தினார்.

இதனைத்தொடர்ந்து திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நீதிபதி நித்யகலா முன்னிலையில், குடும்பத்தினர் மலைவாழ் மக்கள் சங்கத்தினர் முன், மாரிமுத்துவின் உடற்கூறாய்வு செய்யப்பட்டது.

மாரிமுத்துவின் உடலில் காயங்கள் இருந்ததாகவும், அதற்கு காரணமான வனத்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் வழக்கு பதிந்தால்தான் உடலை வாங்குவோம் எனவும் உறவினர்கள், மலைவாழ் மக்கள் சங்கத்தினர் மருத்துவமனை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய கோட்டாட்சியர், வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொள்ளப்படும் என கூறியதை தொடர்ந்து உடலை எடுத்துச்சென்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு