You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரயில், பேருந்துகளில் தனியாகப் பயணிக்கும் பெண்கள் பாதுகாப்பாக இருப்பது எப்படி? 6 யோசனைகள்
- எழுதியவர், கலைவாணி பன்னீர்செல்வம்
- பதவி, பிபிசி தமிழுக்காக
அண்மையில், பட்டிமன்றப் பேச்சாளர் ஒருவர், தனியாக ரயிலில் சென்றபோது, அவருக்கு எதிரே வந்து அமர்ந்த ஆண் ஒருவர் அநாகரீகமாக ஆபாசத்துடன் நடந்துகொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது பெண்கள் தனித்து பயணிக்கும் சூழல்களில் பின்பற்ற வேண்டிய சில பாதுகாப்பு வழிமுறைகளின் அவசியத்தை மீண்டும் நினைவூட்டியுள்ளது.
காரைக்காலிலிருந்து அதிகாலையில் புறப்பட்ட காரைக்கால்-பெங்களூரு பயணிகள் ரயிலில் ஏறி தனியாக தனது பயணத்தை தொடங்கிய அந்த பட்டிமன்ற பேச்சாளர் இப்படியான ஒருநாளை எதிர்பார்த்து இருந்திருக்க மாட்டார்.
8 ஆண்டுகளாக பல முறை இப்படி தனியாக பயணித்து பட்டிமன்ற நிகழ்வுகளுக்கு சென்று வந்துள்ளார். அப்போதெல்லாம் சக ஆண் பயணிகளால் சில தொந்தரவுகளை எதிர்கொண்ட போதும், விலகிச் செல்லும் பெரும்பாலான பெண்களைப் போன்றே தானும் அவற்றை தவிர்த்து விட்டு பயணங்களை தொடர்ந்ததாக பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
என்ன நடந்தது?
பட்டிமன்ற நிகழ்ச்சிக்காக தனியாக ரயிலில் பயணித்த போது எதிர்கொண்ட மோசமான நிகழ்வை பிபிசி தமிழுடன் பகிர்ந்து கொண்டார் பாதிக்கப்பட்ட பட்டிமன்ற பேச்சாளர்.
“அன்று ரயில் நடைமேடைக்கு வந்ததும், நான் தேர்ந்தெடுத்தது குடும்பத்தினர் அதிகம் பேர் பயணிக்கும் ரயில் பெட்டியைத்தான். ரயில் வடலூர் ரயில் நிலையத்தில் நின்றவுடன், எனக்கு அருகிலிருந்த குடும்பத்தினர் இறங்கிவிட்டனர். உடன் பயணித்த ஒன்றிரண்டு பயணிகளும் ஆங்காங்கே இருக்கை காலியாக இருந்ததால் படுத்துவிட்டனர். அந்த நிலையில்தான் 45 வயது மதிக்கத்தக்க அந்த நபர் நான் இருந்த பெட்டியில் ஏறினார்,” என தனக்கு அன்றைய தினம் நடந்த சங்கடத்தை விவரித்தார்.
“அந்த நபர், திடீரென வந்து என் இருக்கைக்கு எதிரே உள்ள இருக்கையில் படுத்துக் கொண்டார். அவர் பார்வையே, தவறாக இருந்தது. அது எனக்கு மிகவும் சங்கடத்தைக் கொடுத்தது.”
அடிக்கடி தனியாக பயணம் செய்யும் தன்னிடம், இதுபோன்ற தருணங்களில் ஆண்களிடம் இருந்து தன்னை பாதுகாக்கும் வகையில் ஹேண்ட்பேக்கில் பெப்பர் ஸ்பிரே எப்போதும் இருக்கும். ஆனால் அன்றைய நாளில் தன்னால் அதை பயன்படுத்த முடியாத நிலை இருந்தது என அவர் தெரிவித்தார்.
“எதிரில் இருந்த அந்த நபரின் செய்கை தவறாக இருந்ததால், அந்த இடத்தைவிட்டு நான் எழுந்து செல்ல ஆயத்தமானேன். ஆனால் அடுத்தக்கட்டமாக செய்த அநாகரிக செயலால் எனக்கு உடல் முழுவதும் நடுங்கிவிட்டது. உடனே அருகிலிருந்த ஒருவரிடம் இதை தெரியப்படுத்தினேன்.” என்றார்.
அந்த ரயில் பெட்டியில் பயணித்த மயிலாடுதுறையைச் சேர்ந்த காவல்துறை உதவி ஆய்வாளர் சுவாமிநாதன் உடனடியாக உதவ முன்வந்துள்ளார். அந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயற்சி செய்த அந்த நபர் தான் தவறு ஏதும் செய்யவில்லை என்று கூறியுள்ளார்.
இதையடுத்து அந்த பட்டிமன்ற பேச்சாளர் ரயிலில் இருக்கும் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து உதவிக்கு அழைத்துள்ளார்.
“காவல்துறை அதிகாரி சுவாமிநாதனின், வழிகாட்டுதல்படி அபாய சங்கிலியை இழுத்தேன். அவர் சொன்ன மாதிரியே அங்கு நடப்பதை வீடியோ எடுக்க தொடங்கினேன். அந்த நபரை ரயில்வே காவலர்களிடம் பிடித்து கொடுத்தேன்.”
குற்றச்சாட்டுக்கு ஆளான அந்த நபரைப் கைது செய்து விசாரணை செய்து வருவதாக ரயில்வே காவல்துறை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணும் தனது புகாரை ஆன்லைன் வழியாக பதிவு செய்தார்.
பொது போக்குவரத்து சேவைகளில் பெண்களின் பாதுகாப்பு
தனக்கு நடந்த இந்த அனுபவம் மிகவும் கசப்பானது எனக் கூறும் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண், “இதுபோன்ற சிக்கல்களில் விலகிச் சென்று விட வேண்டியதுதானே? நீ ஏன் மகளிர் பெட்டியில் ஏறவில்லை? உனக்கு எதற்கு தேவையில்லாத வேலை? என்றுதான் பிரச்னையை வெளியே கூறும் பெண்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களிடமிருந்து பல கேள்விகளை எதிர்கொள்கின்றனர்,” என்றார்.
பாலியல் அத்துமீறலில் காவல்துறையிடம் பிடித்துக் கொடுத்த பாதிக்கப்பட்ட பெண்ணின் துணிச்சலைப் பாராட்டுவதாகக் கூறினார், பெண்கள் மேம்பாட்டு மையத்தைச் சேர்ந்த ரேணுகா.
“பாதிக்கப்பட்ட பெண் எதிர்கொண்ட பிரச்னையை வெளியே செல்லும் பல பெண்களும் எதிர்கொள்கின்றனர். ஆனால் இது போன்ற அத்துமீறல் நடக்கும் போது பல பெண்கள் இப்பிரச்சனையை எதிர்கொள்ளாமல் நமக்கு ஏன் வம்பு என விலகிச் செல்கின்றனர். இதனால் தான் இப்பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவதில்லை.“
பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சிசிடிவி பொருத்தப்படுவது போல, ரயில் மற்றும் பேருந்துகளில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அவசர கால பட்டன்களை வைக்கவேண்டும் என்கிறார் ரேணுகா.
ரயில், பேருந்துகளில் பெண்களின் பாதுகாப்புக்கு 6 யோசனைகள்
ரயில், பேருந்துகளில் தனியாக பயணிக்கும் பெண்கள், அவசர காலத்தில் எப்படி உதவிக்கு அழைப்பது என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று விளக்குகிறார் பெண்கள் மேம்பாட்டு மையத்தைச் சேர்ந்த ரேணுகா.
- தற்போதைய நடைமுறைப்படி, ரயிலில் ஈவ் டீசிங், திருட்டு, தகராறு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து பெண்கள் முறையிட 182 என்ற தெற்கு ரயில்வேயின் இலவச அழைப்பு எண் உள்ளது. பிரச்னை ஏற்படும் போது இந்த எண்ணுக்கு அழைத்து உதவி கோரலாம்.
- அவசர காலத்தில் ‘100’ என்ற காவல்துறையின் புகாரளிக்கும் கட்டுப்பாட்டு அறையை அழைக்கலாம்
- தமிழக காவல்துறையின் ‘காவல் உதவி’ என்ற ஆப்பில் உள்ள SOS எனும் அவசரகால பட்டனை போனில் அழுத்துவதன் மூலமும் பெண்கள் காவல் உதவியை கோரலாம்.
- 'காவல் உதவி' ஆப் உதவியுடன், கேமரா வழியாக சம்பவ இடத்தை வீடியோ எடுக்க முடியும்.
- தனியாக பயணம் செய்யும் போது ஸ்மார்ட்போனில் இருக்கும் ஜிபிஎஸ் சேவையை தெரிந்தவர்களுக்கு, அல்லது காவலர்களிடம் பகிர்வதன் மூலம் பிரச்னை நடக்கும் போது உதவி விரைவாக கிடைக்கும்.
- அந்த குறிப்பிட்ட ஸ்மார்ட்போன் இருக்குமிடமும் ஜிபிஎஸ் மூலம் அருகில் உள்ள காவல்நிலையத்துக்கோ, காவலருக்கோ தகவல் தெரிவித்து உதவிக்கு அழைக்க ஏதுவாக இருக்கும்.
ரயில்வே காவலர்களும், ரயில் பெட்டிகளுக்குள் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுவதன் மூலம் பிரச்னைகள் குறையும். சென்னையில் ஒரு சில வழித்தடங்களில் உள்ள மெட்ரோ ரயிலில், தற்காப்புக் கலையில் தேறிய பெண் பாதுகாவலர்கள், பெண்களின் பாதுகாப்புக்கு உடன் வருகின்றனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)