முன்னாள் மனைவியை கொன்ற நபரை 45 ஆண்டுக்குப் பிறகு காட்டிக் கொடுத்த விந்தணு - எப்படி தெரியுமா?

    • எழுதியவர், ரெபேக்கா கர்ரான், கென் பேங்க்ஸ்
    • பதவி, பிபிசி ஸ்காட்லாந்து

ஸ்காட்லாந்தில் தனது முன்னாள் மனைவியை கொன்று 45 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அவரை கைது செய்த துப்பறியும் நபர் ஒருவரின் வார்த்தைகளில் கூற வேண்டும் என்றால், கைது செய்யப்பட்ட நபர் தன்னைத் தானே புத்திசாலி என நினைத்துக்கொண்டிருந்துள்ளார்.

ஸ்காட்லாந்தின் வட-கிழக்கு மாநிலமான அபெர்டீனைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர் ஹாரிசன். இவர், 32 வயதான தனது மனைவி பிரெண்டா பேஜிடம் இருந்து விவாகரத்து பெற்று ஒரு ஆண்டுக்கு பிறகு, 1978 ஆம் ஆண்டு தன் மனைவியை கொலை செய்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்தவர்களில் ஒருவரான ஜேம்ஸ் காலண்டர், பிரெண்டா பேஜின் கொலை குற்றவாளியை எப்படி கண்டுபிடித்தனர் என்பதை விளக்கினார்.

“அவர் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்துகொண்டதாக நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால், விசாரணையில், அவரையே அறியாமல், அவர் அதனை ஒப்புக்கொண்டார்,” என்றார் ஜேம்ஸ்.

பிரெண்டா பேஜ் இறந்து 45 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் கைது செய்யப்பட்டு, குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொலை நடந்து 30 ஆண்டுகளுக்கு பின் மறு விசாரணை

இந்தக் கொலைக் குற்றத்தை மையமாகக் கொண்டு, பிபிசியின் ஆவணப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. தி கில்லிங் ஆஃப் டாக்டர் பிரெண்டா பேஜ் என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்த ஆவணப்படம், 2020இல் ஹாரிசன் கைது செய்யப்படும் காட்சிகளுடன் தொடங்குகிறது.

ஆவணப்படத்தை தயாரித்தது. 2020 இல் ஹாரிசன் கைது செய்யப்பட்ட காட்சிகளுடன் ஆவணப்படம் தொடங்குகிறது. ஆரம்பக்காட்சியில், ஹாரிசனை போலீஸ் தேடி வரும்போது, ‘அவர் இங்கே கொல்லப்படவில்லை,’ எனக் கூறுவது கேட்கிறது.

மரபியல் நிபுணரான டாக்டர் பிரெண்டா பேஜ், ஜூலை 14, 1978 அன்று தனது படுக்கையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

அவரை அவரது முன்னாள் கணவர் ஹாரிசன் கொலை செய்திருக்கக்கூடும் என முதலில் சந்தேகிக்கப்பட்டது. கொலை நடந்த சில மணி நேரங்களிலேயே அவரை போலீசாரும் கைது செய்தனர்.

ஆனால், அந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடந்தபோதும், அவர் தான் கொலை செய்தார் என்பதற்கான எந்த ஆதரமும் போலீசாருக்கு கிடைக்கவில்லை.

இந்தக் கொலைக்கான ஆதரங்களை, ஸ்காட்லாந்து போலீசாரும், ஊடகங்களும் தொடர்ந்து தேடி வந்தன. ஆனால், நீண்ட காலத்திற்கு கொலை தொடர்பாக எந்த ஆதரமும் கிடைக்கவில்லை.

அதன் பிறகு இந்த வழக்கை, கிடப்பில் போட்டனர். பின், 32 ஆண்டுகளுக்குப் பிறகு, 2015-இல் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க போலீசாருக்கு உத்தரவு வந்தது.

மறுவிசாரணையில் சிக்கிய புதிய ஆதாரம்

வழக்கை மீண்டும் விசாரித்த போலீசார், பிரெண்டா பேஜின் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தடயங்களை சேகரித்திருந்தனர். அப்போது, ஒரு போர்வையில் விந்துக் கறை காணப்பட்டது. அந்த விந்து, ஹாரிசனின் டிஎன்ஏ,வுடன் ஒப்பிடப்பட்டது.

ஆய்வின் முடிவில், போர்வையில் காணப்பட்ட விந்துவும், ஹாரிசனின் டிஎன்ஏ,வும் ஒத்துப்போனது. ஆனால், அதற்கு முன் நடந்த விசாரணையில், தான் பிரெண்டாவுடன் உடலுறவு கொள்ளவில்லை என ஹாரிசன் கூறியிருந்தார்.

ஆனால், அந்த விந்து அவருடையது தான் என்பதற்கு வலுவான ஆதாரம் இருப்பதாக போலீசார் முடிவு செய்தனர். அதேபோல, பிரெண்டாவின் அடுக்குமாடி குடியிருப்பில் கண்டெடுக்கப்பட்ட சில உடைந்த ஓவியங்களும், ஹாரிசனின் காரில் கண்டெடுக்கப்பட்டது.

கொலை நடந்த மூன்று தசாப்தத்திற்கு பிறகு, மார்ச் 27, 2020 அன்று ஹாரிசனை மீண்டும் கைது செய்து, விசாரணை நடத்தி வந்தனர்.

ஆனால், ஹாரிசன், தொடர்ந்து தனக்கும் தனது முன்னாள் மனைவின் கொலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என வாதிட்டு வந்தார். ஆனால், ஆதாரங்கள் வலுவாக இருந்ததால், அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இறுதியாக, மார்ச் 2023 இல், 10 நாட்கள் தொடர்ந்து விசாரணை நடந்தது. அந்த விசாரணைக்கு பின், ஹாரிசன் தான் அவரது முன்னாள் மனைவி பிரெண்டா பேஜை கொலை செய்தார் என நிரூபிக்கப்பட்டது. அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரிவிட்டது. சிறையில் அடைக்கப்பட்ட ஹாரிசன், 20 ஆண்டுகளுக்குப் பிறகு தான் பரோலுக்கு விண்ணப்பிக்க முடியும்.

இந்த வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரி காலண்டர், வழக்கு குறித்து பிபிசியிடம் பேசினார். அப்போது அவர், ஹாரிசன் அவரது முன்னாள் மனைவி பிரெண்டா பேஜ் கொலை வழக்கில் 45 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என எதிர்பார்க்கவில்லை.

“அவரத அதீத புத்திசாலித்தனமே அவர் வீழ்ச்சிக்கு காரணம் என்று நினைக்கிறேன். ஏனென்றால், 45 ஆண்டுகளுக்குப் பிறகு அவரை கைது செய்வார்கள் என அவர் நினைக்கவில்லை,”என்றார் காலண்டர்.

மேலும், வழக்கு விசாரணையின்போது, அவரே குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், அவரே வழக்கில் சிக்கிக்கொண்டதாகவும் காலண்டர் பிபிசியிடம் கூறினார்.

"வீடியோ கேமராக்களுக்கு முன்னால் போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய விதத்தை நீங்கள் பார்த்தால், அவரே குற்றத்தை ஒப்புக்கொள்வது உங்களுக்கு புரியும். அவரேதான் இந்த வழக்கில் சிக்கினார்,”என்றார்.

தான் எல்லோரையும் விட புத்திசாலி என்றும், வழக்கில் இருந்து எளிதில் தப்பிக்க முடியும் என்றும் அவர் தன்னை நம்பியிருந்ததாக காலண்டர் கூறினார்.

ஹாரிசன் மற்றும் பிரெண்டாவின் வாழ்க்கை

ஹாரிசன் மற்றும் பிரெண்டா பேஜ், 1972 இல் திருமணம் செய்து கொண்டனர். இருப்பினும், தனது திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இல்லை என்று பிரெண்டா தனது நெருங்கிய நண்பர்களிடம் கூறி வந்தார். தன்னுடைய கணவனைக் கண்டால், பயமாக இருப்பதாகவும் சொல்லிக்கொண்டே இருந்துள்ளார்.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்கள் பிரிந்தனர். பிரெண்டா பேஜ், அடுக்குமாடி குடியிருப்பில் சொந்தமாக ஒரு வீடு வாங்கினார்.

விவாகரத்துக்குப் பிறகும் ஹாரிசன், பிரெண்டாவை தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்ததாக பிரெண்டா பேஜின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். அவர் மற்ற ஆண்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக ஹாரிசன் சந்தேகிப்பதாக பிரெண்டா தங்களிடம் கூறியதாக பிரெண்டாவின் குடும்ப உறுப்பினர்கள் கூறினர்.

பிரெண்டாவின் 59 வயதான மருமகன் கிறிஸ் லிங், வழக்கு விசாரணையின்போது, தினமும் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

"நீதிமன்றத்திற்கு வருவது மிகவும் விசித்திரமான உணர்வு. எனது அத்தையைக் கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் பல ஆண்டுகளாக எங்களுடனே இருந்தார். அவர் எங்கள் கண் முன்னே தான் இருந்தார்," என லிங் பிபிசியிடம் கூறினார்.

டிஎன்ஏ தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியின் காரணமாக, குற்றம் சாட்டப்பட்டவர்களை தற்போது அடையாளம் காண முடிந்ததற்கு அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

இந்த வழக்கின் விசாரணைக்காக, 40 ஆண்டுகளில் 4 ஆயிரம் சாட்சிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மூன்று ஆயிரம் பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. வழக்கு விசாரணைக்கு பிறகு சுமார் 500 வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)