'கடவுள் மட்டுமே என்னை தேர்தல் போட்டியில் இருந்து தடுக்க முடியும்' - ஜோ பைடன் சொன்னது என்ன?

ஜோ பைடன்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், மைக் வென்ட்லிங்
    • பதவி, பிபிசி செய்திகள்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தனது வேட்புமனு மீதான ஜனநாயகக் கட்சியின் கவலையைத் தணிக்கும் முயற்சியாக ஒரு பிரைம் டைம் நேர்காணலில் பங்கு பெற்றிருக்கிறார். அந்த பேட்டியில், "சர்வவல்லமை படைத்த இறைவன்" மட்டுமே அவரை மறுதேர்தலுக்கான வேட்பு மனுவைத் திரும்பப் பெற வற்புறுத்த முடியும் என்று கூறியுள்ளார்.

பைடன் வெள்ளிக்கிழமை (ஜூலை 5) ஏபிசி நியூஸ் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், அவர் மற்றொரு பதவிக் காலத்துக்கு பணியாற்றத் தகுதியானவர் என்று மக்களுக்கு உறுதியளிக்கும் வகையில் அறிவாற்றல் சோதனை செய்து முடிவுகளை வெளியிட மறுத்துவிட்டதையும் குறிப்பிட்டார்.

"ஒவ்வொரு நாளும் நான் அறிவாற்றல் சோதனையை எதிர்கொண்டு வருகிறேன். நான் அனுதினம் சந்திக்கும் அனைத்து பிரச்னைகளும் எனக்கு ஒரு சோதனை போன்றது தான்,” என்று அவர் ஜார்ஜ் ஸ்டீபனோபொலோஸிடம் கூறினார்.

கடந்த வாரம் டொனால்ட் டிரம்ப் உடனான அவரது மோசமான விவாதத்திற்குப் பிறகு, "81 வயதான பைடன் இந்தத் தேர்தலில் ஒரு இளம் போட்டியாளருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்,” என்ற கருத்து பல ஜனநாயகக் கட்சித் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்களால் வெளிப்படுத்தப்பட்டது.

பைடன்: சர்வவல்லமை படைத்த இறைவன் சொன்னால் மட்டுமே ராஜினாமா செய்வேன்!

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜார்ஜ் ஸ்டீபனோபொலோசுடன் பைடனின் நேர்காணல்

உடல்நலம் மற்றும் வெற்றி வாய்ப்புகள்

நேர்காணலில், ஜார்ஜ் ஸ்டீபனோபொலோஸ் பைடனிடம் இரண்டாவது பதவிக்காலத்துக்கான அவரின் தகுதி குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பினார். பைடன் அவரது உடல்நலம் மற்றும் வெற்றி வாய்ப்புகள் குறித்து பொய் சொல்கிறாரா என்றும் பைடனிடம் கேட்டார்.

"அதிபராக இருக்கவும், இந்த தேர்தலில் வெற்றி பெறவும் என்னை விட அதிக தகுதியுடைய ஒரு வேட்பாளர் இல்லை என்று நான் நினைக்கிறேன்," என்று கூறிய பைடன், கடந்த வாரத்தில் ட்ரம்ப் உடனான நேரடி விவாதத்தில் அவர் மந்தமான செயல்திறனை வெளிப்படுத்தியதற்கு காரணம் சோர்வு மற்றும் "கடுமையான குளிர்" என்று பைடன் கூறினார்.

அந்த 22 நிமிட நேர்காணலில், அவர் மேலும் கூறியதாவது:

  • விவாதத்தின் போது டொனால்ட் டிரம்ப்பிடம் பைடன் தோற்றுவிட்டார் என்ற ஜனநாயகக் கட்சியினரின் அச்சத்தைத் தணிக்கும் முயற்சியாக இந்த நேர்காணலில் தேர்தல் முடிவுகள் பற்றி பேசினார். பைடன் சில கருத்துக்கணிப்பாளர்களிடம் பேசியதாகவும், தேர்தல் முடிவுகள் நமக்கு சாதகமாக வரும் என்று அவர்கள் கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
  • அவரது கட்சியின் சக தலைவர்கள் அவரை பதவி விலகுமாறு நிர்பந்திப்பார்கள் என்ற கருத்தை பைடன் நிராகரித்தார். "அது நடக்காது," என்று அவர் தெரிவித்தார்.
  • அவரை இந்த தேர்தலில் இருந்து வெளியேற நிர்ப்பந்திக்க என்ன காரணம் என்பது பற்றிய தொடர்ச்சியான கேள்விகளை பைடன் ஏற்றுக் கொள்ளவில்லை.
  • "சர்வவல்லமையுள்ள இறைவன் இறங்கி வந்து, 'ஜோ, இந்த தேர்தல் பந்தையத்தில் இருந்து வெளியேறு' என்று சொன்னால் மட்டுமே நான் தேர்தலில் இருந்து வெளியேறுவேன்," என்று அவர் கூறினார். "சர்வவல்லமையுள்ள இறைவன் கீழே வரப்போவதில்லை. எனவே நான் போட்டியிடுவதும் மாறப்போவதில்லை" என்றும் குறிப்பிட்டார்.
பைடன்: சர்வவல்லமை படைத்த இறைவன் சொன்னால் மட்டுமே ராஜினாமா செய்வேன்!

பட மூலாதாரம், REUTERS

கடந்த வாரம் விவாத மேடையில் ஒலித்த அவரது சோர்வான குரலை விட இந்த நேர்காணலில் அனைத்து கேள்விகளுக்கும் மிகவும் தெளிவாக பதிலளித்தார் பைடன். ஆனால் அடிக்கடி அவரது குரலில் பலவீனம் வெளிப்பட்டது. அவ்வப்போது குரல் கரகரப்பாக ஒலித்தது.

வெள்ளியன்று விஸ்கான்சினில் உள்ள மேடிசனில் நடந்த பேரணியில் அவரது செயல்பாட்டிற்கு இது முற்றிலும் மாறுபட்டது. மேலும் அந்த பேரணியில் உற்சாக பேசிய பைடன் கடந்த வார சிஎன்என் விவாதத்தில் தனது மோசமான பங்களிப்பை ஒப்புக்கொண்டார்.

"விவாதம் முடிந்ததில் இருந்து, நிறைய யூகங்கள் வெளியாகி வருகிறது. ஜோ அடுத்து என்ன செய்யப் போகிறார் என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்," என்று அவர் பேரணியில் குறிப்பிட்டார்.

"அந்த யூகங்களுக்கு இதோ என் பதில். நான் இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன், மீண்டும் வெற்றி பெறப் போகிறேன்,” என்று பைடன் கூறினார். அதிபர் தேர்தலில் முக்கியத்துவம் வாய்ந்த களமாக கருதப்படும் விஸ்கான்சின் மாநிலத்தில் ஆதரவாளர்கள் அவரது பெயரை ஆரவாரம் செய்தனர்.

பைடன்: சர்வவல்லமை படைத்த இறைவன் சொன்னால் மட்டுமே ராஜினாமா செய்வேன்!

பட மூலாதாரம், REUTERS

அனைத்து யூகங்களுக்குமான பதில்

பைடனின் பிரசாரம் ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளர்களும் நன்கொடையாளர்களும் அவரைத் தொடர்ந்து ஆதரிப்பதா வேண்டாமா என்று விவாதித்து கொண்டிருக்கையில், இந்த ​நேர்காணலும் பேரணியும் தேர்தல் போக்கை மாற்றும் என்று கருதப்படுகிறது.

அமெரிக்க ஊடகங்களில் பல்வேறு செய்தி அறிக்கைகளின்படி, சிஎன்என் விவாதத்தைத் தொடர்ந்து தனது எதிர்கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்பிடம் விவாதத்தில் வீழ்ச்சி அடைந்ததை சரி செய்ய பைடன் முயல்கிறார்.

பிரசாரத்தின் அடுத்த சில நாட்கள் மிகவும் முக்கியம் என்பதை பைடன் அறிவார். அவரது இந்த தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகும் அல்லது அவரின் முயற்சிகள் முறியடிக்கப்படும்.

அவர் மேடிசன் பேரணியின் மேடையில் ஏறியபோது, ​​பைடன் ஒரு வாக்காளரைக் கடந்து சென்றார், அவரின் கைகளில் "ஜோ, ஜோ" என்று எழுதப்பட்ட பலகையை வைத்து கொண்டு ஆதரவை வெளிப்படுத்தினார். அதே சமயம் அந்த மைதானத்திற்கு வெளியே நின்றிருந்த மற்றொரு வாக்காளர், "உங்கள் மரபைக் காப்பாற்றுங்கள், இந்த தேர்தலில் இருந்து வெளியேறுங்கள்" என்ற பலகையை வைத்திருந்தார்.

"வெள்ளை மாளிகையில் பல சாதனைகளை நிகழ்த்துவதற்கு முன், எனக்கு மிகவும் வயதாகிவிட்டதாக பலர் கூறும் கதைகள் அனைத்தையும் கவனித்து கொண்டிருக்கிறேன்," என்று பைடன் பேரணியில் கூறினார்.

"1.5 கோடி வேலைகளை உருவாக்க திட்டமிடும் எனக்கு வயதாகிவிட்டதா?" என்றார்.

"50 லட்சம் அமெரிக்கர்களுக்கான மாணவர் கடன்களை தள்ளிபடி செய்ய முடியாத அளவுக்கு எனக்கு வயதாகிவிட்டதா?" என்று பைடன் பேசினார்.

"டொனால்ட் டிரம்பை வெல்ல எனக்கு வயதாகிவிட்டது என்று நினைக்கிறீர்களா?" என்றும் அவர் கேட்டதற்கு, கூட்டத்தில் இருந்து "இல்லை" என்று பதில் வந்தது.

நியூயார்க்கில் டிரம்பின் கிரிமினல் வழக்கு மற்றும் தனித்தனி வழக்குகளில் அவர் எதிர்கொள்ளும் மற்ற குற்றச்சாட்டுகளைக் குறிப்பிட்டு, அவர் தனது எதிர்கட்சி வேட்பாளரை "ஒன் மேன் கிரைம் வேவ்" (one-man crime wave) என்று அழைத்தார்.

அவரது சிந்தனைப் போக்கு பலவீனமடைந்ததை பிரதிபலித்த விவாதத்தைத் தொடர்ந்து பைடனின் வயது மற்றும் மனநலம் குறித்த கவலைகள் கட்சியினர் மத்தியில் அதிகரித்தது. எனவே, பைடன் தேர்தலில் இருந்து ஒதுங்க வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்தது.

ஜனநாயகக் கட்சியின் சில முக்கிய நன்கொடையாளர்கள் படனை கட்சியின் வேட்பாளர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர். வேட்பாளர் மாற்றப்படாவிட்டால் நிதி அளிப்பதை நிறுத்திவிடுவோம் என்று பகிரங்கமாக எச்சரித்தனர்.

பைடனின் பிரசாரம் ஆக்ரோஷமாக மாறி அவர் மீதான பிம்பத்தை மாற்ற திட்டமிட்டுள்ளது. அவரது மனைவி ஜில் பைடன் மற்றும் துணைத் தலைவர் கமலா ஹாரிஸ் ஆகியோர் இந்த மாதம் முக்கிய தொகுதிகளுக்கு செல்ல பிரசாரங்களை திட்டமிட்டுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை பென்சில்வேனியாவில் மற்றொரு பேரணியில் பேசவிருக்கும் பைடன், துணை ஜனாதிபதியின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். ஒருவேளை பைடன் பதவி விலகினால், அவருக்குப் பதிலாக ஜனநாயகக் கட்சி வேட்பாளராக போட்டியிடும் அதிக வாய்ப்புள்ள வேட்பாளராக அவர் உருவெடுத்துள்ளார்.

'தி வாஷிங்டன் போஸ்ட்' செய்தியின்படி, பைடனின் தலைமைக் குழு, அடுத்த வாரத்திற்குள் வேட்பாளரை முடிவு செய்ய ஜனநாயகக் கட்சிக்குள் அழுத்தம் இருப்பதை அறிந்திருக்கிறது.

வெள்ளிக்கிழமை, சிறுபான்மை தலைவர் ஹக்கீம் ஜெஃப்ரிஸ் ஹக்கீம் ஜெஃப்ரிஸ் ஜனநாயகக் கட்சியின் மூத்த தலைவர்களுடன் பைடனின் வேட்புமனுவைப் பற்றி விவாதிக்க ஞாயிற்றுக்கிழமை கூட்டத்தை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன.

ஜோ பைடன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மேடிசனில் நடந்த பேரணியில், பல பைடன் ஆதரவாளர்கள் அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதை ஆதரிப்பதாகக் கூறினார்

பைடன் பற்றி மக்கள் என்ன சொல்கின்றனர்?

"அதிபர் பைடன் நம் நாட்டிற்கு மகத்தான சேவையை செய்துள்ளார், ஆனால் அவர் ஜார்ஜ் வாஷிங்டனின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, புதிய தலைவர்கள் உருவாகி டொனால்ட் டிரம்பிற்கு எதிராக போட்டியிடுவதற்கு ஒதுங்க வேண்டிய நேரம் இது," என்று முக்கிய தலைவரான மோல்டன் வானொலியில் கூறினார்.

எவ்வாறாயினும், எந்தவொரு மூத்த ஜனநாயகக் கட்சித் தலைவரும் அவரை விலகுமாறு அழைப்பு விடுக்கவில்லை என்று அவரது பிரசாரத்தில் குறிப்பிட்டார்.

சில ஜனநாயகக் கட்சியின் தொண்டர்களும், பைனின் தேர்தலில் போட்டியிடும் திறனில் நம்பிக்கை இழந்துவிட்டனர். வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட வால் ஸ்ட்ரீட் ஜர்னல் கருத்துக் கணிப்பில், 86% ஜனநாயகக் கட்சியினர் பைடனை ஆதரிப்பதாகக் கூறினர், இது பிப்ரவரியில் 93% ஆக இருந்தது.

மேடிசனில் நடந்த பேரணியில், பல பைடன் ஆதரவாளர்கள் பிபிசி நியூஸிடம், அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதை ஆதரிப்பதாகவும், விவாதத்தில் தோல்வி அடைந்ததை பற்றி கவலைப்படவில்லை என்றும் கூறினார்.

"அவரது உடல்நிலை குறித்து நான் கவலைப்படவில்லை. அவர் இந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெற முடியும் என்று நான் நினைக்கிறேன்," என்று ஆரம்ப பள்ளி ஆசிரியர் சூசன் ஷாட்லிஃப்( 56) கூறினார்.

பைடன் விவாதத்தின் போது வார்த்தைகள் கிடைக்காமல் திணறினார். அவரது எதிர் வேட்பாளரை வீழ்த்துவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று சிலர் கூறினர்.

"விவாதத்தின் போது, ​​டிரம்ப் பொய்களை கூறினார். அதை எப்படி ஒப்பிட முடியும். பைடன் பேசியதை மோசமானது என்று எப்படி சொல்ல முடியும்?," 67 வயதான கிரெக் ஹோவல் கூறினார்.

மற்றவர்கள் அதிக கவலை தெரிவித்தனர்.

"நான் அவரை நெருக்கமாகப் பார்க்க விரும்பினேன், அதனால் அவருடைய ஆளுமை, பழக்கவழக்கங்கள் மற்றும் ஆற்றலைக் காண முடிந்தது," என்று மேடிசனைச் சேர்ந்த சுகாதார ஆய்வாளர் தாமஸ் லெஃப்லர் கூறினார்.

"டிரம்பை தோற்கடிக்கும் அவரது செயல்திறன் போதுமானதா என்று எண்ணி நான் கவலைப்படுகிறேன்,” என்றார்.

"அவரின் வயது ஒரு பிரச்னையாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் எதுவாக இருந்தாலும் நான் நீல நிறத்தில் வாக்களிப்பேன்," என்று அவர் கூறினார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்,எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)