You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கோவை 'மைவி3 ஆட்ஸ்' நிறுவனர் சக்தி ஆனந்தன், மண்டல இயக்குநர்கள் 5 பேர் கைது - என்ன நடந்தது?
- எழுதியவர், பி சுதாகர்
- பதவி, பிபிசி தமிழுக்காக
கோவையில் மைவி3 ஆட்ஸ் என்ற எம்.எல்.எம். முறையில் செயல்படக் கூடிய நிறுவனத்திற்கு ஆதரவாக பல ஆயிரம் பேர் திரண்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதன் மூலம் அந்நிறுவனம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் கவனத்தையும் ஈர்த்தது. அந்த போராட்டத்தின் போது, ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த மக்கள் மற்றும் வாகனங்களால் அங்கே பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அடுத்த 7 நாட்களில் மைவி3 ஆட்ஸ் நிறுவனத்தின் மீது மோசடி புகார் கொடுக்கப்பட்ட நிலையில், அதன் நிறுவனர் சக்தி ஆனந்தனை காவல்துறையினர் அழைத்து விசாரணை நடத்தினர்.
அடுத்த ஒரே வாரத்தில் சக்தி ஆனந்தன், அவரது நிறுவனத்தின் மண்டல இயக்குநர்கள் 5 பேர் உள்பட 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
என்ன நடந்தது? விரிவாகப் பார்க்கலாம்.
மைவி3 ஆட்ஸ் நிறுவனம் செயல்படுவது எப்படி?
கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு மைவி3 ஆட்ஸ் என்ற நிறுவனத்தை சக்தி ஆனந்தன் என்பவர் நடத்தி வருகிறார். யூடியூப் தளத்தில் இந்நிறுவனத்தின் சேனலும் இயங்கி வருகிறது. இதில் தினமும் 2 மணிநேரம் விளம்பரம் பார்ப்பதன் மூலமும், புதிய நபர்களைச் சேர்ப்பதன் மூலமும் அதிக வருமானம் பார்க்கலாம் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
அதில் 360 ரூபாய் முதல் ஒரு இலட்சத்து 21 ஆயிரம் ரூபாய் வரை உள்ள பல்வேறு பிரிவுகளில் பணம் செலுத்தி உறுப்பினராகச் சேர முடியும் எனவும், தினசரி செல்போனில் விளம்பரம் பார்ப்பதன் மூலம் 5 ரூபாய் முதல் 1,800 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செலுத்தும் பணத்திற்கு ஏற்ப ஆயுர்வேத கேப்சூல்கள் வழங்கப்படும் எனவும், புதிய நபர்களைச் சேர்க்கும் நபர்களுக்குத் தனியாக பணம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை நம்பி ஆயிரக்கணக்கானோர் லட்சக்கணக்கான ரூபாயை முதலீடு செய்துள்ளனர்.
தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.
சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு
இதனிடையே மருத்துவர்களின் பரிந்துரையின்றி மாத்திரைகளை வழங்குவது சட்டத்திற்குப் புறம்பானது எனவும், தினசரி விளம்பரம் பார்ப்பதால் அதிக வருமானம் பார்க்கலாம் என ஆசைக்காட்டி பொதுமக்களை ஏமாற்றி பெரும் தொகையை வசூலித்து வரும் அந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளிக்கப்பட்டது.
இந்தப் புகாரின் பேரில் அந்நிறுவனத்தின் மீது சைபர் க்ரைம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல அந்நிறுவனம் வி3 ஆன்லைன் டிவி என்ற பெயரில் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
மாநகர ஆணையரிடம் புகாரளிக்க ஆதரவாளர்களுடன் வந்த நிறுவனர்
இந்த நிலையில் மைவி3 ஆட்ஸ் நிறுவனம் குறித்து அவதூறாகப் பேசி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அதன் நிறுவனர் சக்தி ஆனந்தன் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
இதுகுறித்துப் பேசிய சக்தி ஆனந்த், "கடந்த 31 மாதமாக முறையாக நிறுவனம் நடத்தி வருகிறேன். இதுவரை யாரும் பாதிக்கப்பட்டதாகப் புகார் அளிக்கவில்லை. சிலர் அளித்த பொய்யான புகார் குறித்து காவல் துறையினர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறேன். சில யூடியூபர்ஸ் 20,000 கோடி ரூபாய் மோசடி செய்ததாக பொய் செய்திகளைப் பரப்பி வருகின்றனர்.
வருகின்ற திங்கட்கிழமை அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் புகார் மனு அளிக்க உள்ளோம். தவறான செய்தி வெளியிடும் யூடியூபர்ஸ் வீடுகளை முற்றுகையிடுவோம்.
விசாரணையில் நல்லவன் என நிரூபிப்பேன். முகாந்திரம் இல்லாமல் மோசடி செய்ததாகப் பேசக்கூடாது. இதனால் 60 லட்சம் பேர் வாழ்க்கை பாதிக்கப்படும். என் மீதான குற்றத்தை நிரூபிக்கும் வரை அவதூறு பேசக்கூடாது," எனத் தெரிவித்தார்.
காவல் துறையை மிரட்டிய நிறுவனர்
இதையடுத்து கோவை மாநகர காவல் ஆணையரைச் சந்தித்து மனு அளித்த பிறகே, கலைந்து செல்வோம் என மைவி3 ஆட்ஸ் ஆதரவாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல் துறையினர் அவர்களைக் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தியும், கலைந்து செல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட சக்தி ஆனந்தன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர். அப்போது மைவி3 நிறுவனத்திற்கு ஆதரவாக போராட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சக்தி ஆனந்தன் மீது சட்டம் ஒழுங்கு உதவி ஆய்வாளர் புகார்
ரேஸ் கோர்ஸ் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு உதவி ஆய்வாளர் சக்தி ஆனந்தன் மீது புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், "சக்தி ஆனந்தன் தனது ஆதரவாளர்களுடன் மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு, தனது நிறுவனத்தின் மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்வதாகவும், தன் மீதும், நிறுவனம் மீதும் கோவை நகரில் பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பொய்யான தகவல்களைப் பரப்பி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகாரளிக்க வந்துள்ளார்.
புகாரை பெற்றுக்கொண்ட காவல் துறையினர், அவரையும், அவரது ஆதரவாளர்களையும் கலைந்து செல்ல அறிவுறுத்தியுள்ளனர்.
கலைந்து செல்ல மறுத்த சக்தி ஆனந்தன், வீடியோ செய்தியை வெளியிட்டு, வருகின்ற திங்களன்று லட்சக்கணக்கான மக்களைத் திரட்டி தனது ஆதரவாளர்களுடன் மாவட்டத் தலைமையகத்தில் போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைக்க முடியும் என்று மிரட்டி, தனது ஆதரவாளர்களைத் தூண்டிவிட்டு போராட்டம் செய்ய முயன்றதாக" குறிப்பிட்டுள்ளார்.
சக்தி ஆனந்தன் கைது
இதையடுத்து சக்தி ஆனந்தன் மீது அரசு ஊழியர் கடமையை செய்ய வரும்போது,அவரை தாக்க வேண்டும் அல்லது தாமதப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்ட குற்றத்திற்காகவும் (353), பொது அமைதிக்கு எதிராக குற்றம் செய்யத் தூண்டும் வகையில் நடந்து கொண்டது 505((i) (b) என இரு பிரிவுகளில், ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்ப்ட்டது.
இதனையடுத்து சக்தி ஆனந்தனை காவல் துறையினர் அரசு மருத்துவமனை அழைத்துச்சென்று உடல் பரிசோதனை செய்து, நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்திரவிட்டதை தொடர்ந்து, அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டிருந்த 180 பேர் விடுவிக்கப்பட்டனர்.
காவல்துறை கூறுவது என்ன?
"சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாத வண்ணம், மைவி3 ஆட்ஸ் முதலீட்டாளர்கள், யார் வேண்டுமானாலும், தனியாக வந்து புகார் அளிக்கலாம்.
கூட்டம் சேர்த்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்ககூடாது. மாநகரத்தில் கூட்டம் சேரும் பகுதிகளில் காவல்துறை பாதுகாப்பை அதிகரித்துள்ளோம்," என்று இதுதொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
மைவி3 ஆட்ஸ் மண்டல இயக்குநர்கள் 5 பேர் கைது
சனிக்கிழமை இரவு 11.30 மணியளவில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கூடிய 5 பேர், மைவி3 ஆட்ஸ் நிறுவனர் சக்தி ஆனந்தனை விடுவிக்குமாறு காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்தனர். மைவி3 ஆட்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்டின் மண்டல இயக்குநர்களாக இருந்தவர்கள் ஆவர்.
அவர்கள் ஐவர் மீது்ம இந்திய தண்டனைச் சட்டம் 143, 341, 353 மற்றும் 505 (1) (பி) பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். அவர்கள் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர். 5 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)