இலங்கையில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடக்குமா?

இலங்கையில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடக்குமா?

பட மூலாதாரம், Ranil Wickremesinghe/fb

    • எழுதியவர், யூ.எல். மப்றூக்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

இலங்கையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை சமர்ப்பிக்கும் தினத்தை - கடந்த புதன்கிழமை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கடந்த வருடம் பெப்ரவரி மாதம் உள்ளூராட்சி சபைகள் கலைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவற்றின் பதவிக்காலம் - மேலதிகமாக ஒரு வருடத்தினால் நீடிக்கப்பட்டது. உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலத்தை மேலதிகமாக ஒரு வருடத்தினால் மட்டும் நீடிக்கும் அதிகாரம் அதற்குப் பொறுப்பான அமைச்சருக்கு உள்ளது.

இலங்கையில் மொத்தமாக 341 உள்ளூராட்சி சபைகள் உள்ளன. அவற்றில் 340 சபைகளுக்கான தேர்தல்கள் 2018ஆம் ஆண்டு பெப்ரவரி 10 ஆம் திகதி நடந்தன. எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் அடுத்த வருடமே நடைபெற்றது. அங்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுவொன்று நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக, உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டமை காரணமாக, எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் தனியாக 2019 ஒக்டோபர் மாதம் நடத்தப்பட்டது.

உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் 4 வருடங்களாகும். அந்த வகையில், எல்பிட்டிய பிரதேச சபை தவிர்ந்த ஏனைய அனைத்து சபைகளின் பதவிக் காலமும் 2022 பெப்ரவரி மாதத்துடன் நிறைவுக்கு வந்தன. ஆயினும், உள்ளூராட்சி அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், அந்த சபைகளின் பதவிக் காலம் - ஒரு வருடத்தினால் நீடிக்கப்பட்டது.

இந்தப் பின்னணியில் 2023 மார்ச் மாதத்துக்குள் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டிய கடப்பாடு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு ஏற்பட்டுள்ளது.

தேர்தல் நடைபெறுமா?

தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் தினம் குறித்து, தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ள போதிலும், தேர்தலை அரசாங்கம் ஒத்திவைக்கும் என்கிற பரவலான பேச்சுகள் அரசியலரங்கில் எழுந்துள்ளன. உள்ளூராட்சித் தேர்தலை ஒத்தி வைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு எடுத்துள்ள தீர்மானத்தை ரத்துச் செய்யுமாறு கோரி, உச்ச நீதிமன்றில் மனுவொன்று செவ்வாய்கிழமை (03) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடி நிறைந்துள்ள தற்போதைய காலகட்டத்தில் - தேர்தலை நடத்துவது, பாரிய அழிவுக்கு வழிவகுக்கும் எனக் கூறி, ஓய்வுபெற்ற கேர்ணல் ஒருவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலையில் அரசியல் கட்சிகளின்பிரதிநிதிகளுடன் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் பிபிசி தமிழ் பேசியபோது, அவர்களில் மிக அதிகமானோர், தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதற்கான சாத்தியங்களே அதிகம் உள்ளதாகத் தெரிவித்தனர்.

எண்ணிக்கையை குறைக்கும் ஜனாதிபதியின் அறிவிப்பு

நாட்டில் தற்போதுள்ள உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை அதிகம் என்றும், அதனால் அதனை அரைவாசியாகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார். தற்போது நாடு முழுவதும் 8,690 உள்ளூராட்சி உறுப்பினர்கள் உள்ளனர்.

உறுப்பினர் தொகையைக் குறைக்கும் பொருட்டு, தற்போதுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான வட்டாரங்களின் எண்ணிக்கையினையும் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்காக 'எல்லை நிர்ணய ஆணைக்குழு' ஒன்றினையும் ஜனாதிபதி நியமித்துள்ளார்.

உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையை, ஜனாதிபதி கூறுகின்றமை போல் குறைக்க வேண்டுமாயின், தேர்தல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சித் தேர்தல் நெருங்கும் காலகட்டத்தில், உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக ஜனாதிபதி எடுத்துள்ள இவ்வாறான முயற்சிகள், 'தேர்தலை ஒத்தி வைப்பதற்கான தந்திரம்' என எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

இலங்கையில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடக்குமா?

தேர்தல் முறையில் செய்யப்பட்ட மாற்றம்

தற்போது நடைமுறையிலுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் முறைமையானது - ரணில் விக்ரமசிங்க பிரதமராகப் பதவி வகித்த 2017ஆம் ஆண்டு காலப் பகுதியில் உருவாக்கப்பட்டதாகும். இதன் காரணமாகவே உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்துக்கும் அதிகமானது.

இந்த புதிய தேர்தல் முறையிமையில் - விகிதாரசார ரீதியிலும், வட்டார ரீதியிலுமாக உறுப்பினர்களை தேர்வு செய்யும் 'கலப்பு முறை' அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு முன்னர் விகிதாசார தேர்தல் முறையே அமலில் இருந்தது.

முன்னர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்து அதிகரிக்கச் செய்த - உள்ளூராட்சி உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையை, அவர் ஜனாதிபதியாக இருக்கும் போது - அரைவாசியாகக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளமையானது முரண்பாடான செயற்பாடாகும் என விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

பேராசிரியர் எம்.ஏ.எம். பௌசர்
படக்குறிப்பு, பேராசிரியர் எம்.ஏ.எம். பௌசர்

தேர்தல் அச்சம்

உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை குறைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளமையானது, 'தேர்தலை ஒத்தி வைப்பதற்கான தந்திரம்' என, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரசியல்துறைத் தலைவர் பேராசிரியர் எம்.ஏ.எம். பௌசர் பிபிசி தமிழிடம் கூறினார்.

உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் எண்ணிக்கை தொடர்பான ரணில் விக்ரமசிங்கவின் இரட்டை நிலைப்பாடு தொடர்பாகவும், தற்போது தேர்தல் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு அவர் எடுத்துள்ள முயற்சிகள் குறித்தும் பேராசிரியருடன் பிபிசி தமிழ் பேசிய போதே, இதனைக் குறிப்பிட்டார்.

மைத்திரி - ரணில் காலத்தில் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் தொகை அதிகரிக்கப்பட்டாலும், அதற்கான தீர்மானம் மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில்தான் எடுக்கப்பட்டது எனத் தெரிவித்தார்.

"உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் தொகையை அதிகரிப்பதால் நன்மைகளும் உள்ளன. மக்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும். அதனால் அபிவிருத்தி நடவடிக்கைகள் அதிகமாகும். பிரதேச மக்களின் அரசியல் பங்கேற்பினை அதிகரிக்கச் செய்யலாம், அரசியல் தீர்மானம் எடுத்தலில் உள்ளூர் மக்களின் பங்குபற்றுதலையும் அதிகரிக்க முடியும். இந்த நோக்கங்களின் அடிப்படையில்தான் உள்ளூராட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டன" என, அவர் விவரித்தார்.

மறுபுறமாக, தற்போதைய தேர்தல் முறைமையினால் - சில பிரச்சினைகள் எழுந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். "உள்ளூராட்சி சபைகளில் உறுதியான ஆட்சியை அமைக்க முடியாத நிலை ஏற்பட்டன. அதனால்தான், தேர்தல் முறையை மாற்ற வேண்டும் என்கிற பேச்சுக்கள் எழுந்தன" என்றார்.

"இப்போது நாட்டின் பொருளாதார நிலை வீழ்ச்சியடைந்துள்ளமையினை காரணமாக கூறி, உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையினை குறைக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார். ஆனால் தேர்தலைப் பிற்போடும் நோக்கமும் இதில் உள்ளது” எனக் குறிப்பிட்ட அவர், "தேர்தல் சட்டத்தை திருத்துவது, எல்லை நிர்ணயம் செய்யும் நடவடிக்கை என்பதெல்லாம் தேர்தலை ஒத்தி வைப்பதற்கான தந்திர உபாயங்கள்" எனவும் தெரிவித்தார்.

இலங்கையில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடக்குமா?

பட மூலாதாரம், Election Commission of Sri Lanka/fb

படக்குறிப்பு, தேர்தல் ஆணைக்குழு தலைவர் நிமல் புஞ்சிஹேவ

ஒத்தி வைப்பதால் என்ன லாபம்?

தங்களுக்கு மக்கள் ஆணை உள்ளதாக ஒரு பிம்பத்தை ஆளுந்தரப்பினர் உருவாக்கி வைத்துள்ளார்கள் என்றும், இந்த நிலையில் தேர்தலொன்றுக்கு முகம்கொடுத்தால், அவர்கள் தோல்வியடைந்து, அந்த பிம்பம் உடையலாம் எனவும் பேராசிரியர் பௌசர் குறிப்பிட்டார்.

"இறுதியாக நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சி பெற்ற அமோக வெற்றிதான், அவர்கள் தேசிய மட்டத் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது. உள்ளூராட்சித் தேர்தலில் வெற்றிபெறும் கட்சிதான், தேசிய மட்டத் தேர்தலிலும் வெற்றிபெற வாய்ப்புள்ளது".

"தற்போதுள்ள உள்ளூராட்சி சபை உறுப்பினர்களில் அதிகமானோர் ஆளும் பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்களாக உள்ளனர். அதனால் உள்ளூர் மட்டத்தில் பொதுஜன பெரமுனவுக்கு அதிகாரம் உள்ளது. எனவே அதனை இழப்பதற்கு அல்லது பறிகொடுப்பதற்கு அவர்கள் விரும்ப மாட்டார்கள். எனவேதான், தேர்தல் ஒத்தி வைக்கப்படலாம் என, பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது" என, அவர் விளக்கினார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலொன்று நடந்தால், ஆளுந்தரப்பினர் கணிசமான ஆசனங்களை இழப்பதற்கான சந்தர்ப்பம் உள்ளது என்கிறார் பௌசர். "உலகில் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்த நாடுகளின் அரசாங்கங்கள், அதன் பின்னர் எதிர்கொண்ட தேர்தல்களில் அநேகமாக தோல்வியடைந்தமைதான் வரலாறு" எனவும் அவர் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: