காலிஸ்தான் ஆதரவாளர் நிஜ்ஜார் கொலை பற்றி அமெரிக்கா முன்பே எச்சரித்ததா? என்ன நடந்தது?

நிஜ்ஜார் கொலை அமெரிக்கா

பட மூலாதாரம், SIKH PA

வட அமெரிக்காவில் குறைந்தது நான்கு சீக்கிய பிரிவினைவாதிகளை கொல்ல செய்யச் சதி செய்ததாக இந்தியர் ஒருவர் மீது அமெரிக்க அரசு குற்றம் சாட்டியுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டு, இந்த ஆண்டு தொடக்கத்தில் கனடா நாட்டு குடிமகனும் காலிஸ்தான் ஆதரவாளருமான ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலை வழக்கோடு தொடர்புபடுத்தப்படுகிறது. மேலும், இந்தக் குற்றச்சாட்டின் விளைவாக நிஜ்ஜார் கொலை செய்யப்படுவதற்கு முன்பு அது குறித்து அமெரிக்க உளவு அதிகாரிகளுக்கு என்ன தெரியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஜூன் 18 அன்று, நிகில் குப்தா கனடாவில் தனது காரில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட சீக்கிய பிரிவினைவாதத் தலைவரான ஹர்திப் சிங் நிஜ்ஜாரின் வீடியோவை பார்த்தார். அவரது ரத்தம் தோய்ந்த உடல் ஸ்டீயரிங் மீது சரிந்தது.

குப்தா அந்த வீடியோவை வேறொருவருக்கு அனுப்பினார். வேறொரு நாட்டில் வைத்து வேறொரு நபரைக் கொலை செய்வதற்காக அந்த நபரை குப்தா பணியமர்த்தினார் என்று குப்தா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதே நபரிடம் அடுத்த நாள் தொலைபேசியில் பேசிய குப்தா, கொலை செய்யப்பட்ட நபர் ஒரு ‘டார்கெட்’ என்று கூறியதாகவும் “நமக்கு நிறைய டார்கெட்கள் இருக்கிறார்கள். இப்போது உள்ள நல்ல செய்தி என்னவென்றால் நாம் எதற்கும் காத்திருக்க வேண்டியதில்லை என்பதுதான்,” எனவும் தெரிவித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நிஜ்ஜார் கொலை குறித்து அமெரிக்காவுக்கு முன்பே தெரியுமா?

நிஜ்ஜார் கொலை அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்க வழக்குரைஞர்களால் வெளியிடப்பட்ட குற்றப்பத்திரிக்கையில், நடந்ததாகக் கூறப்படும் அந்த உரையாடல்கள் புதன் கிழமையன்று இடம்பெற்றுள்ளது.

நியூயார்க்கை சேர்ந்த அமெரிக்க-கனடிய குடியுரிமை உள்ள ஒருவரை படுகொலை செய்ய விரிவான சதித்திட்டம் தீட்டியதாக அமெரிக்க நீதித்துறை குப்தா மீது குற்றம் சாட்டியுள்ளது. இந்திய அரசாங்க அதிகாரி ஒருவர்தான் இதற்குப் பின்னணியில் இருக்கிறார் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அமெரிக்க அரசு வழக்கறிஞர்கள் அந்த நபரின் பெயரைக் குறிப்பிடப்படவில்லை என்றாலும், அமெரிக்க ஊடகங்கள் சீக்கிய பிரிவினைவாத குழுவின் உறுப்பினரான குர்பத்வந்த் சிங் பன்னு என்பவரைத்தான் கொலை செய்யத் திட்டம் தீட்டப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளன.

அந்த நபரைக் கொலை செய்வதற்காக நியூயார்க்கை சேர்ந்த ஒருவருக்கு குப்தா 83 லட்சம் ரூபாய் கொடுக்க ஒப்புக்கொண்டார். ஆனால், அந்த நபர் அமெரிக்க அரசின் உளவு அதிகாரி. இதன் மூலமாகத்தான் அந்தக் கொலை முயற்சி தடுக்கப்பட்டதாக குற்றப் பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் ஹர்திப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டது குறித்தும் சில புதிய தகவல்கள் இந்த குற்றப் பத்திரிக்கையில் இடம் பெற்றுள்ளன. இதனால் நிஜ்ஜார் கொலை செய்யப்படுவது குறித்து அமெரிக்காவுக்கு முன்பே தெரியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

காலிஸ்தான் ஆதரவாளர் கொலை பற்றி அமெரிக்காவிற்கு முன்பே தெரியுமா? - குற்றப்பத்திரிக்கையில் புதிய தகவல்கள்

பட மூலாதாரம், X

படக்குறிப்பு, நியூயார்க்கில் இருந்து இயங்கும் காலிஸ்தான் சார்பு அமைப்பான ‘நீதிக்கான சீக்கியர்களின்’ நிறுவனர் மற்றும் தலைவராக பன்னு அறியப்படுகிறார்.

சீக்கியர்களுக்கான தனிநாடு அமைப்பதற்கு பிரசாரம் செய்த 45 வயது செயற்பாட்டாளரான நிஜ்ஜார் கொல்லப்பட்ட சம்பவம் கனடாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சில மாதங்களுக்குப் பிறகு செப்டம்பரில், கனடாவின் பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோ, இந்தியா இந்தக் கொலையில் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறியபோது, ​​இந்தக் கொலை வெளியுறவு பிரச்னையாக மாறியது.

ட்ரூடோவின் குற்றச்சாட்டை இந்தியா "அபத்தமானது" என்று நிராகரித்தது. இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் பிளவை இந்த விவகாரம் விரிவுபடுத்தியது. பிரதமர் ட்ரூடோ தனது குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டிய அழுத்தத்திற்கும் ஆளானார்.

கடந்த புதன்கிழமையன்று பேசிய ட்ரூடோ, கனடாவின் குற்றச்சாட்டுகளை இந்தியா தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தைத் தற்போது அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் வலியுறுத்துவதாகக் கூறினார்.

அமெரிக்காவின் குற்றச்சாட்டு ட்ரூடோவின் கூற்றுகளுக்கு வலு சேர்த்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

“செப்டம்பரில் ட்ரூடோ கூறியதைவிட இன்றைய ஆதாரம் நிறைய சொல்கிறது" என்று ஒட்டாவாவில் உள்ள கார்லேடன் பல்கலைக் கழகத்தின் சர்வதேச விவகாரங்களின் பேராசிரியரான ஸ்டெபானி கார்வின் பிபிசியிடம் கூறினார்.

காலிஸ்தான் ஆதரவாளர் கொலை பற்றி அமெரிக்காவிற்கு முன்பே தெரியுமா? - குற்றப்பத்திரிக்கையில் புதிய தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images

அவர் கூறுகையில், "கனடாவில் மூன்று நபர்களைக் கொல்வதற்கான சதித் திட்டம் இருந்ததை இது தெளிவாக்குகிறது. நிஜ்ஜார் கொல்லப்பட்டது ஒற்றைச் சமபவம் கிடையாது," என்று அவர் கூறினார்.

ட்ரூடோவின் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தபோது கனடாவிற்கு ஆதரவு தெரிவித்தோ அல்லது இந்தியாவை கண்டித்தோ அமெரிக்கா எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

'கனடாவில் ஒரு பெரிய இலக்கு உள்ளது'

குப்தா, 2023ஆம் ஆண்டு மே மாதம் இந்திய அரசாங்க அதிகாரி ஒருவரால் படுகொலைக்கு ஏற்பாடு செய்யப்படுவதற்கு முன்னர் சர்வதேச போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டதாக அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

நிஜ்ஜாரின் கூட்டாளிதான் பன்னூன். நிஜ்ஜாரை போலவே பன்னூனும் இந்தியாவால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால், அவர்கள் இருவரும் இந்தக் குற்றச்சாட்டை மறுத்தனர்.

பல வாரங்களாக, குப்தா, பன்னூனை கண்காணித்து, இந்திய அரசு ஊழியரின் உத்தரவுகளைப் பின்பற்றினார் என்று அமெரிக்கா கூறுகிறது.

மேலும், அமெரிக்காவின் குற்றப்பத்திரிக்கையில் ஜூன் 12ஆம் தேதி கனடாவில் ஒரு பெரிய டார்கெட் இருப்பதாக குப்தா அமெரிக்காவின் உளவு அதிகாரியிடம் தெரிவித்ததாகக் கூறப்பட்டுள்ளது.

நிஜ்ஜார் கொலை அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

அவர் கூறி, ஆறு நாட்களுக்குப் பிறகு, ஜூன் 18 அன்று, கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரேயில் உள்ள சீக்கிய கோவிலுக்கு வெளியே நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கனடாவின் தேசிய பொலிஸ் படையான Royal Canadian Mounted Police, நிஜ்ஜாரின் மரணத்தை இன்னும் தீவிரமாக விசாரித்து வருகிறது. மேலும் அமெரிக்க குற்றச்சாட்டு குறித்து கனடா எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

குப்தாவும் இந்திய அதிகாரியும் சேர்ந்துதான் இந்தக் கொலையைச் செய்தார்கள் என்று அமெரிக்க வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டவில்லை. ஆனால் கொலை குறித்து இருவரும் பேசியதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

குற்றப்பத்திரிகையின்படி, தனிப்பட்ட முறையில் தானே அந்தக் கொலையைச் செய்திருக்க விரும்புவதாக குப்தா இந்திய அரசாங்க ஊழியரிடம் கூறியதாகவும் கொலை நடந்தவுடன் அமெரிக்க உளவு அதிகாரியை அழைத்து, தான் கூறிய கனடாவில் இருந்த இலக்கு கொலை செய்யப்பட்ட நிஜ்ஜார்தான் என்று கூறியதாகவும் குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நீதிமன்ற ஆவணங்களின்படி, நிஜ்ஜாரின் கொலை குப்தாவை தூண்டியது. பன்னூனின் கொலை "விரைவாக" செய்யப்பட வேண்டும் என்று அவர் அமெரிக்க உளவு அதிகாரியிடம் கூறினார். அது முடிந்த பிறகு, ஜூன் மாத இறுதிக்குள் இன்னும் மூன்று "வேலைகள்" செய்ய வேண்டியிருப்பதாக குப்தா கூறியதாக குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கா நிஜ்ஜாரின் கொலை குறித்து கனடாவை எச்சரித்ததா?

காலிஸ்தான் ஆதரவாளர் கொலை பற்றி அமெரிக்காவிற்கு முன்பே தெரியுமா? - குற்றப்பத்திரிக்கையில் புதிய தகவல்கள்

பட மூலாதாரம், REUTERS

புதன்கிழமை குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ள விவரங்கள் நிஜ்ஜார் உட்பட கனடாவில் இருக்கக் கூடியவர்களுக்கு இருக்கும் அச்சுறுத்தல்கள் குறித்துப் புதிய கேள்விகளை எழுப்பியுள்ளன.

நிஜ்ஜார் கொல்லப்படுவதற்கு முன்னதாகவே அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கனடாவின் சட்ட அமலாக்க அதிகாரிகள் எச்சரித்ததாக கூறப்படுகிறது.

ஆனால் கனடா குடிமக்களுக்கு ஏற்படவிருந்த அச்சுறுத்தல் குறித்து ரகசிய நடவடிக்கையின் மூலம் தகவல்களைச் சேகரித்த அமெரிக்க உளவுத்துறையால் எந்த அளவுக்கு கனடாவிற்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டது என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை.

பன்னூன் வழக்கை ஒப்பிடும்போது, நிஜ்ஜாரின் விஷயத்தில், நம்பகத்தன்மையுடன் செயல்படக்கூடிய விவரங்கள் குறைவாக இருப்பதாக சர்வதேச ஆளுகை கண்டுபிடிப்பு மையத்தைச் சேர்ந்த வெஸ்லி வார்க் பிபிசியிடம் கூறினார்.

சதி தொடர்பாக அமெரிக்கா எழுப்பிய பாதுகாப்பு சம்பந்தமான கவலைகள் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆனால் அமெரிக்காவோ இந்தியாவோ தங்களின் வளர்ந்து வரும் ராஜ்ஜீய உறவை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை என்று சர்வதேச விவகார நிபுணர் பேராசிரியர் கார்வின் கூறினார்.

"இதை முடிந்தவரை அமைதியாகவும் விரைவாகவும் தீர்த்துக்கொள்ள வாஷிங்டனில் இருந்து டெல்லிக்கு நிறைய அழைப்புகள் வந்ததாக நான் உறுதியாகச் சந்தேகிக்கிறேன்," என்று அவர் கூறினார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)