ஹெச்1பி விசா பற்றிய விவேக் ராமசாமி கருத்தால் அமெரிக்காவில் என்ன சர்ச்சை?

ஹெச்-1பி விசா, அமெரிக்கா, குடியரசுக்கட்சி, டொனால்ட் டிரம்ப்,

பட மூலாதாரம், Getty Images

திறன்சார் பணியாளர்களை அமெரிக்காவுக்கு அழைக்கும் விசா திட்டம் தொடர்பாக பல சர்ச்சைகள் தற்போது அமெரிக்காவில் ஏற்பட்டுள்ளன. ஜனவரி மாதம் அதிபர் பொறுப்பை ஏற்க இருக்கும் டொனால்ட் டிரம்ப், இந்த விவகாரத்தில் தொழில்நுட்ப நிறுவனங்களை நடத்தும் எலோன் மஸ்க், விவேக் ராமசாமி போன்ற நபர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 28-ஆம் தேதி அன்று நியூயார்க் போஸ்டுக்கு அளித்த பேட்டியில், "ஆரம்பத்தில் என்னதான் விமர்சனங்களை முன்வைத்திருந்தாலும் கூட, ஹெச்1பி விசா திட்டம் மற்றும் சிறப்பு பணியாளர்களை இந்த திட்டத்தின் கீழ் அழைத்து வந்ததை எப்போதும் விரும்பியதாக," டிரம்ப் கூறினார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

குடியேற்ற விதிகளை கடுமையாக்க வேண்டும் என்று கேட்கும் குடியரசுக் கட்சியினருக்கும், தொழில்நுட்பத்துறையில் இருந்து டொனால்ட் டிரம்பிற்கு ஆலோசகர்களாக செயல்படும் நபர்களுக்கும் இடையே இது ஒரு விவாதமாக மாறியுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்ற திறன்சார் பணியாளர்களை நியமிக்கும் அமெரிக்க கலாசாரத்தை ராமசாமி விமர்சனம் செய்தார். அரசு செலவினங்களை கட்டுப்படுத்த டிரம்ப் மற்றும் மஸ்கால் நியமிக்கப்பட்ட ராமசாமி இப்படி பேசியதைத் தொடர்ந்து இந்த விவகாரம் பேசுபொருளானது.

எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ராமசாமி, "நம்முடைய அமெரிக்க கலாசாரம் சிறந்ததைக் காட்டிலும் சாதாரணவற்றைக் கொண்டாடுகிறது," என்று குறிப்பிட்டார். அந்த பதிவில், வெளிநாட்டில் இருந்து வரும் நபர்கள் தான் அமெரிக்காவின் பொருளாதாரத்தை முன்னேற்றுகின்றனர் என்று குறிப்பிட்டிருந்தார் ராமசாமி.

டிரம்ப் ஆதரவு

"நம்முடைய கலாசாரம் கணித ஒலிம்பியாட்டில் பட்டம் வென்றவர்களைக் காட்டிலும் 'ப்ரோம்-குயின்களை' அதிகம் கொண்டாடுகிறது. வகுப்பில் முதல் மதிப்பெண்களைப் பெறும் மாணவர்களை விட தடகளத்தில் விளையாடும் மாணவர்களையே கொண்டாடுகிறது. இந்த கலாசாரம் சிறந்த பொறியியல் வல்லுநர்களை உருவாக்காது" என்றும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

அவரின் இந்த பதிவு, குடியேற்றத்திற்கு எதிரான டிரம்பின் ஆதரவாளர்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹெச்1பி திட்டம் மோசமடைந்துள்ளது. அதை மாற்ற வேண்டும் என்று தான் நம்பியதாக விளக்கம் அளித்தார் ராமசாமி.

இந்த விவகாரம் இணையத்தில் பல நாட்களாக புகைந்து கொண்டிருக்க, டொனால்ட் டிரம்ப், நியூயார்க் போஸ்ட்டுக்கு அளித்த பேட்டியில், "இந்த திட்டத்தை நான் எப்போதும் விரும்பினேன். அதற்கு நான் ஆதரவாகவே இருந்துள்ளேன். அதனால் தான் அந்த திட்டத்தை நாம் இன்னும் வைத்துள்ளோம்," என்று கூறினார்.

"என்னுடைய நிறுவனங்களில் நான் ஹெச்1பி விசாக்கள் மூலம் நியமிக்கப்பட்டுள்ள பணியாளர்கள் உள்ளனர். இந்த திட்டத்தின் மீது எனக்கு எப்போதுமே நம்பிக்கை இருந்திருக்கிறது. இது சிறந்த திட்டம்," என்றும் அவர் கூறினார்.

டிரம்ப் அவருடைய முதல் ஆட்சி காலத்தில் ஹெச்1பி விசா விதிகளை கடுமையாக்கினார்.

அடுத்த அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பும் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜே.டி.வான்ஸும் இந்த விசாக்கள் குறித்த கடுமையான விமர்சனங்களை இதற்கு முன்பு முன்வைத்துள்ளனர். ஜே.டி.வான்ஸ் தொழில்நுட்ப உலகில் புதிய தொழில் துவங்கும் திட்டங்களுக்கான முதலீட்டாளராக பணியாற்றியுள்ளார். அப்போது ஹெச்1பி விசாக்கள் மூலம் பணியாளர்களை அவர் நியமித்துள்ளார்.

குடியரசுக் கட்சியினரும், தீவிர வலதுசாரிகளும் ராமசாமி மற்றும் டொனால்ட் டிரம்பின் நெருங்கிய வட்டத்தில் உள்ள வசதி படைத்த நபர்களையும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இத்தகைய சூழலில், கிறிஸ்துமஸ் விடுமுறை காலத்தில் ராமசாமியின் இந்த பதிவு பெரிய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

"இதனை எதிர்த்து களமாட வேண்டும் என்றால் இதனை இப்போதே செய்ய வேண்டும்," என்று ஸ்டீவ் பன்னோன் கூறியுள்ளார். டிரம்பின் முக்கிய ஆதரவாளரான அவர் வார் ரூம் என்ற பாட்காஸ்டில் டிசம்பர் 27ம் தேதியன்று பேசியுள்ளார்.

மேற்கொண்டு பேசிய அவர், ஹெச்1பி விசாக்களுக்கு ஆதரவு தரும் குடியரசுக்கட்சியின் இந்த போக்கு ஒரு மோசடி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஹெச்-1பி விசாவை ஆதரிக்கும் டொனால்ட் டிரம்ப்... குடியேற்றம் தொடர்பான திட்டங்களில் மாற்றமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டிரம்ப் அவருடைய முதல் ஆட்சி காலத்தில் ஹெச் - 1பி திட்டத்திற்கான அணுகலைக் கட்டுப்படுத்தினார்

ஈலோன் மஸ்க் ஆதரவு

விவேக் ராமசாமியின் கருத்துகளுக்கு ஈலோன் மஸ்க் ஆதரவு தெரிவித்துள்ளார். எக்ஸ் தளம், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைவரான அவர், டிரம்ப் முன்மொழிந்த அரசு செயல்திறன் துறையின் இணை இயக்குநராக பொறுப்பேற்க உள்ளார்.

ஈலோன் மஸ்க், ஹெச்1பி விசாவை ஆதரித்துள்ளார். ஏனென்றால் இது உலகில் உள்ள தலைசிறந்த பொறியியலாளர்களில் 0.1% நபர்களை ஈர்க்கிறது என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து, மஸ்கின் நிறுவனத்தில் ஹெச்1பி விசாக்கள் மூலம் அமெரிக்கா வந்து பணியாற்றும் நபர்களை குறித்தும் அவர்களுக்கு வழங்கப்படும் 2 லட்சம் அமெரிக்க டாலர் அல்லது அதற்கும் குறைவான வருமானத்தை விமர்சிப்பவர்கள் மேற்கொள்காட்டினார்கள்.

குறைந்த வருமானத்திற்கு பணியாளர்களை நியமிப்பது, திறமையானவர்களை பணிக்கு அமர்த்துவது என்பது போல் இல்லாமல் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த நபர்களின் வருமானத்தை குறைப்பதற்கான வழியாகவே உள்ளது என்று கூறியுள்ளனர்.

குடியரசுக்கட்சியில் உள்ள இனவெறி கொண்ட, வெறுப்பு மிக்க நபர்கள் என்று மஸ்க் குறிப்பிட்டு, அவர்கள் அனைவரும் 'கண்டிக்கத்தக்க முட்டாள்கள்' என்று கூறியுள்ளார்.

"இவர்களை கட்சியில் இருந்து நீக்கவில்லை என்றால் குடியரசுக் கட்சி வீழ்ச்சியடையும்" என்றும் கூறியுள்ளார்.

மற்றொரு விமர்சனத்திற்கு பதில் அளித்த மஸ்க், இந்த திட்டத்தை ஆதரிக்க நான் போர் புரியவும் தயார் என்று கூறினார்.

ஹெச்-1பி விசாவை ஆதரிக்கும் டொனால்ட் டிரம்ப்... குடியேற்றம் தொடர்பான திட்டங்களில் மாற்றமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, விமர்சனத்திற்கு பதில் அளித்த மஸ்க், இந்த திட்டத்தை ஆதரிக்க நான் போர் புரியவும் தயார் என்றார்

ஆதரவாளர்கள் மத்தியில் வலுக்கும் எதிர்ப்பு

டிரம்பின் முதல் ஆட்சியின் போது ஐநாவுக்கான அமெரிக்க தூதுவராக இருந்த நிக்கி ஹாலே, விவேக் ராமசாமி, மஸ்க் ஆகிய இருவருக்கும் எதிராக குரல் கொடுக்கும் முக்கிய நபராக மாறியுள்ளார்.

"அமெரிக்க பணியாளர்கள் அல்லது அமெரிக்க கலாசாரத்தில் எந்த தவறும் இல்லை," என்று எக்ஸ் தளத்தில் அவர் குறிப்பிட்டார். "நீங்கள் இப்போது எல்லையை தான் கவனிக்க வேண்டும். நாம் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டுமே தவிர வெளிநாட்டவர்களுக்கு அல்ல," என்றும் அவர் கூறினார்.

ராமசாமி போன்றே ஹாலேவும் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடியேறிய தம்பதியினருக்கு மகளாக பிற்னதார். ஹெச்1பி விசா திட்டத்திற்கு எதிரான தீவிர வலதுசாரி குழுக்களுடன் இணையம் மூலமாக இணைந்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவுக்கான வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகராக ஶ்ரீராம் கிருஷ்ணன் என்பவரை டொனால்ட் டிரம்ப் தேர்வு செய்தார். அதனை விமர்சனம் செய்துள்ளார் லாரா லூமர் என்ற டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர். "கிருஷ்ணன் ஒரு தீவிர இடதுசாரி. அவர் டிரம்பின் 'அமெரிக்கா ஃபர்ஸ்ட்' என்ற கொள்கைக்கு நேர் எதிரான நபர்," என்று குறிப்பிட்டுள்ளார்.

தீவிர வலதுசாரி எக்ஸ் பயனாளிகள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றது இந்த பதிவு. மேலும் அவர், இந்திய குடியேறிகளை "ஆக்கிரமிப்பாளர்கள்" என்று அழைத்தது மட்டுமின்றி, இனவெறி கருத்துகளையும் பதிவு செய்துள்ளார்.

எக்ஸ் தளத்தில் தனது பதிவுகளுக்கு பதில் அளிப்பது கட்டுப்படுத்தப்படுவதாகவும், பணம் செலுத்தி பெறப்பட்ட சந்தா திட்டத்தில் இருந்து தான் நீக்கப்பட்டதாகவும் மஸ்க் மீதும் அவர் தன்னுடைய விமர்சனத்தை முன்வைத்தார்.

"அதிபர் மஸ்க் என்பது உண்மையாக தோன்றுகிறது.... கருத்து சுதந்திரம் ஒரு மாயைப் போல் மாறுகிறது," என்று குறிப்பிட்டு டொனால்ட் டிரம்ப் மீது மஸ்க் கொண்டிருக்கும் செல்வாக்கு குறித்தும் அவர் விமர்சனம் செய்தார்.

ஹெச்-1பி விசாவை ஆதரிக்கும் டொனால்ட் டிரம்ப்... குடியேற்றம் தொடர்பான திட்டங்களில் மாற்றமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கிருஷ்ணன் ஒரு தீவிர இடதுசாரி. அவர் டிரம்பின் 'அமெரிக்கா ஃபர்ஸ்ட்' என்ற கொள்கைக்கு நேர் எதிரான நபர் என்றும் தீவிர வலதுசாரிகள் விமர்சித்துள்ளனர்.

ஆண்டுக்கு 65 ஆயிரம் ஹெச்1பி விசாக்கள் மட்டுமே வழங்கப்படும் என்ற உச்சவரம்பு கொண்டுவரப்பட்டுள்ளது. அமெரிக்க கல்வி நிறுவனங்களில் பட்ட மேற்படிப்பு படித்திருக்கும் நபர்களுக்கு கூடுதலாக 20 ஆயிரம் விசாக்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பவுண்ட்லெஸ் என்ற குடியேற்ற ஆலோசனை மையம் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவில் ஹெச்1பி விசாக்களில் 73% விசாக்கள் இந்தியர்களுக்கும், 12% விசாக்கள் சீனர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிய வந்துள்ளது.

டிரம்ப் அதிகாரத்திற்கு வந்த பிறகு, ஆவணங்கள் ஏதுமின்றி நாட்டில் வசிக்கும் குடியேறிகளை பாரிய அளவில் வெளியேற்ற திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

சமீபத்திய நாட்களில், டிரம்பின் பிரசாரத்திற்கு உதவிய மஸ்க் மற்றும் இதர கோடீஸ்வரர்களின் ஆதிக்கத்தின் கீழ் செயல்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)