You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாடு அரசின் பன்றி வளர்ப்புக் கொள்கை அறிவிப்பு - களத்தில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு தருமா?
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டில் பன்றி வளர்ப்புக்கென தனிக் கொள்கையை வகுத்து அரசாணை வெளியிட்டுள்ளது மாநில அரசு.
முப்பது ஆண்டுகளாக புதிதாக எந்த பன்றி இனங்களும் கிடைக்காமல் அவதிப்படுவதாக கூறுகின்றனர், பண்ணை விவசாயிகள்.
விவசாயிகள் கூறும் பிரச்னைகளை தற்போது வெளியிடப்பட்டுள்ள கொள்கையில் திருத்தங்களாக கொண்டு வர உள்ளதாக, கால்நடை பராமரிப்புத் துறை கூறுகிறது.
பன்றி வளர்ப்பு தொடர்பான மாநில அரசின் கொள்கை என்ன கூறுகிறது? அதற்கு விவசாயிகள் மத்தியில் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்புவது ஏன்?
தமிழ்நாட்டில் பன்றி வளர்ப்புக்கென தனிக் கொள்கை
கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பன்றி வளர்ப்புக்கென தனிக் கொள்கையை (State Pig Breeding Policy 2024) தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் கால்நடை பராமரிப்புத் துறை வெளியிட்டுள்ள பன்றி வளர்ப்புக் கொள்கையின் அடிப்படையில் மாநில அரசு சில திருத்தங்களை செய்து இதை வெளியிட்டுள்ளது.
கால்நடை வளர்ப்புத் தொழில்களுடன் ஒப்பிடும்போது வேகமான வளர்ச்சி, அதிக ஈனும் திறன் ஆகியவற்றில் இந்தியாவில் இறைச்சி உற்பத்தியில் நம்பிக்கையான ஆதாரமாக பன்றி வளர்ப்பு அமைந்துள்ளதாக தமிழக அரசின் பன்றி வளர்ப்புக் கொள்கை கூறுகிறது.
தமிழ்நாட்டில் பல்வேறு சமூக, தட்பவெப்ப மற்றும் சுற்றுச்சூழலில் பன்றிகள் வளர்க்கப்பட்டாலும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வதற்கு பன்றி வளர்ப்புக் கொள்கை அவசியமானது என அரசு தெரிவித்துள்ளது.
இதன் நோக்கங்கள் என்ன?
- பன்றிகளின் மரபணுத் திறனை மேம்படுத்துதல்
- மேம்பட்ட வகையைச் சேர்ந்த, நாட்டுப் பன்றிகளின் இனப்பெருக்கத் திசுக்களைப் (Germplasm) பாதுகாத்தல் மற்றும் பராமரித்தல்
- பன்றிகளை மேம்படுத்துவதற்கு இனக்கலப்பு வழிமுறையைப் பின்பற்றுதல்
- குறைந்த விலையில், இடத்துக்கு ஏற்ற தீவனத்தை உருவாக்கி இனக்கலப்பு செய்யப்பட்ட பன்றிகள் பராமரிப்பை ஊக்குவித்தல்.
- செயற்கை கருவூட்டல் வாயிலாக, மேம்பட்ட வகையைச் சேர்ந்த இனப்பெருக்கத் திசுக்களைப் பெருக்குவதற்கான உள் கட்டமைப்பை உருவாக்குதல்
மேற்கூறியவற்றையே பன்றி வளர்ப்புக் கொள்கையின் நோக்கங்களாக தமிழ்நாடு அரசு பட்டியலிட்டுள்ளது.
நாட்டுப் பன்றிகளில் இனப்பெருக்க திசுக்களுக்கான பண்ணை தனியாக உருவாக்கப்பட உள்ளதாகவும் அரசுப் பண்ணைகளில் இருந்து உயர்தர மரபணு திறன் உள்ள பன்றிகள் சேகரிக்கப்பட உள்ளதாகவும் கூறியுள்ளது.
இதுதவிர, உயிரி பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி, பெரிய வெள்ளை யார்க்ஷயர், டூராக் மற்றும் லாண்ட்ரீஸ் போன்ற அயல் நாட்டு இனப்பெருக்கத் திசுக்களை இறக்குமதி செய்ய உள்ளதாகவும் அரசின் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கள நிலவரம் என்ன?
"அரசின் கொள்கையை வரவேற்கிறோம். ஆனால், இவை செயல்பாட்டுக்கு வந்தால் மட்டுமே தமிழ்நாட்டில் பன்றி விவசாயிகளுக்குப் பலன் தரும்" என்கிறார், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார். இவர் நீண்டகாலமாக பன்றி வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "வெளிநாட்டில் இருந்து பன்றி இனங்களை இறக்குமதி செய்து முப்பது ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. அப்போது கொண்டு வரப்பட்ட இனங்களை வைத்தே பண்ணைகளை நடத்தி வருகிறோம்" என்கிறார்.
ஒரே இனங்களுக்குள் கலப்பு நடப்பதால் பன்றிகள் இறப்பு தொடர்கதையாகி வருவதாக கூறும் செந்தில்குமார், "தமிழ்நாட்டில் பன்றி வளர்ப்பு விவசாயிகளுக்கு சரியான இனம் (Breed) கிடைப்பதில்லை. லான்டிரேஸ்(landrace), லார்ஜ் வொயிட் (Large white), டியூராக் (Duroc) ஆகிய இனங்களை மட்டுமே இனப்பெருக்கம் செய்கிறோம்"எனக் கூறுகிறார்.
பன்றி வளர்ப்பை ஊக்குவிப்பதில் தமிழ்நாடு அரசின் கால்நடை வளர்ப்புத் துறை சிறப்பாக செயல்பட்டாலும் அவர்களிடமும் போதிய பன்றி இனங்கள் இல்லை என்கிறார் செந்தில்குமார்.
தடுப்பூசி கிடைப்பதில் சிக்கலா?
அடுத்து, பன்றிக் காய்ச்சல், பாஸ்டுரெல்லோசிஸ் தொற்று (Pasteurellosis), கோமாரி மற்றும் ஏனைய நோய்களுக்கான தடுப்பூசிகளை காலமுறைப்படி பன்றிகளுக்கு செலுத்த வேண்டும் அரசின் பன்றி வளர்ப்புக் கொள்கை கூறுகிறது.
"ஆனால், பன்றிக்காய்ச்சல் (Swine flu) சிர்கோ வைரஸ் (Circovirus) ஆகிய நோய்களுக்கான தடுப்பூசிகள் கர்நாடகா அல்லது டெல்லியில் மட்டும் கிடைக்கின்றன. தமிழ்நாட்டில் தடையில்லாமல் கிடைத்தால் போதும். ஒரு பன்றிக்கு ஆண்டுக்கு ஒருமுறை தடுப்பூசி செலுத்துவதற்கு 120 ரூபாய் வரையில் செலவாகிறது. ஆனால், தனியாரிடம் கூட தடுப்பூசி கிடைப்பதில்லை. அரசிடம் இருந்து கிடைத்தாலும் அவை அனைத்து பண்ணையாளர்களுக்கும் கிடைப்பதில்லை" என்கிறார் செந்தில்குமார்.
உலர் பன்றி இறைச்சி தொழிற்சாலை
இதையடுத்து, பன்றி இறைச்சியை மதிப்பு கூட்டி விற்பது குறித்து அரசின் பன்றி வளர்ப்புக் கொள்கை பேசுகிறது.
'உலர் பன்றி இறைச்சித் தொழிற்சாலையை மாநிலத்தில் ஏற்படுத்துவது, ரயில்களில் அவற்றை அனுப்புவதற்கான செலவைக் குறைப்பது, பன்றி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சிப் பொருட்களில் மதிப்புக் கூட்டுதல் ஆகியவை பலன் கொடுக்கும்' என அரசின் கொள்கை கூறுகிறது.
"மதிப்புக் கூட்டுமுறை செயல்படுத்தப்பட்டால் விவசாயிகளுக்கு மிகவும் பலன் உள்ளதாக இருக்கும்" என்கிறார் குடியாத்தத்தில் பன்றி வளர்ப்பில் ஈடுபட்டு வரும் சுஜாதா.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் பன்றி இறைச்சி சாப்பிடுவதை வெளியில் சொல்லவே சிலர் தயங்குகின்றனர். சில கறுப்பு பன்றி இனங்கள் அசுத்தமான இடங்களில் வளர்க்கப்படுவதே இதற்குக் காரணம். பண்ணைகளில் மிக சுகாதாரமான முறையில் பன்றிகளை வளர்த்து வருகிறோம். ஆனாலும் இங்கு பன்றி இறைச்சிக்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லை. அதேநேரத்தில், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பன்றி இறைச்சி அதிகமாக விற்கப்படுகிறது. நாகாலாந்து உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கிறோம்." என்றார்.
"உரமாக மாற 24 மணிநேரம் போதும்"
பன்றியின் உணவு முறை குறித்துப் பேசும் சுஜாதா, "சோயா, சோளம் ஆகியவற்றை உணவாகக் கொடுக்கிறோம். பன்றிகளுக்கு விருப்ப தானியமாக சோளம் இருக்கிறது. உள்ளூரில் கிடைக்கும் உணவுக் கழிவுகளும் கொடுக்கப்படுகிறது" என்கிறார்.
"வீணாகும் உணவை டன் கணக்கில் தெருவில் கொட்டினால் அது குப்பையாவதற்கு சில வாரங்களை எடுத்துக் கொள்ளும். அதற்குள் துர்நாற்றம் உள்பட பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். ஆனால் 24 மணிநேரத்தில் அதை பன்றிகள் உணவாக உண்டுவிடும். அவை உரமாகவும் மாறிவிடுகின்றன" என்கிறார் செந்தில்குமார்.
நெல்லை, சென்னை புறநகர், கோவை ஆகிய பகுதிகளில் சுமார் 2500-க்கும் மேற்பட்டோர் பன்றி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளதாக கூறுகிறார் விவசாயி செந்தில்குமார்.
உள்ளாட்சி அமைப்புகளால் நெருக்கடியா?
உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து பல்வேறு நெருக்கடிகளை சந்திப்பதாக கூறுகிறார் செந்தில்குமார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "மக்கள் அதிகம் வசிக்காத பகுதிகளில் பண்ணை அமைக்கிறோம். யாராவது மனு போட்டால் உடனே பண்ணையை மூடுமாறு உள்ளாட்சி அமைப்புகள் நெருக்கடி கொடுக்கின்றன. பன்றி வளர்ப்புக்கு பயிற்சி கொடுப்பது முதல் பண்ணை பராமரிப்பு வரையில் நிறைய உதவிகளை அரசு செய்கிறது. ஆனால், பண்ணைக்கு என பிரச்னை வரும்போது உதவிகள் கிடைப்பதில்லை. இதற்கு உரிய வழிகாட்டுதல்களை அரசு கொடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
பன்றி 3 முறை குட்டிகளை ஈனுவதைப் பதிவு செய்வது அவசியம்
கால்நடைப் பல்கலைக்கழகம் சார்பில் பண்ணையில் வளர்ப்பதற்கு 5 பெண் குட்டிகளும் ஓர் ஆண் குட்டியும் கொடுக்கப்படுகின்றன. இது பன்றி வளர்ப்பை ஊக்கப்படுத்துவதாக உள்ளதாக கூறுகிறார் சுஜாதா.
"ஒவ்வொரு தாய்ப்பன்றியும் மூன்று முறை குட்டிகளை ஈனுவதைப் பதிவு செய்ய வேண்டும் என அரசின் பன்றி வளர்ப்புக் கொள்கை கூறுகிறது. அதன் இனப்பெருக்கம் முதல் பிரசவம் வரையில் உரிய முறையில் அடையாளப்படுத்தி (TAG) பராமரித்து வருகிறோம். ஒரு பெண் பன்றியின் கர்ப்ப காலம் என்பது மூன்று மாதங்கள். பெண் பன்றி ஒவ்வொன்றும் எட்டு குட்டி போட்டால் தான் லாபம் வரும். சில நேரங்களில் 22 குட்டிகள் வரையில் ஈனும்" என்கிறார் சுஜாதா.
கால்நடைத்துறை அதிகாரிகள் கூறுவது என்ன?
பன்றி வளர்ப்பில் உள்ள சிக்கல்கள் குறித்து, தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறையின் இணை இயக்குநர் இளங்கோவனிடம் பிபிசி தமிழ் பேசியது.
"பன்றி வளர்ப்புக் கொள்கை குறித்து அரசாணை வெளியிட்டுள்ளோம். அதில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்" என்கிறார்.
அரசின் நான்கு பண்ணைகளில் பன்றிகள் வளர்க்கப்படுவதாக கூறும் இளங்கோவன், "இந்தப் பண்ணைகளில் இருந்து விவசாயிகளுக்கு பன்றிகள் கொடுக்கப்படுகின்றன. அவர்களைப் பொருளாதாரத்தில் உயர்த்தும் வகையில் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன" என்கிறார்.
"ஒவ்வொன்றிலும் ஓர் ஒழுங்கு இருக்க வேண்டும் என்பதற்காகவே பன்றி வளர்ப்புக்கு என தனி கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளால் நெருக்கடி என்பது போன்ற பன்றி பண்ணையாளர்கள் முன்வைக்கும் நடைமுறை பிரச்னைகளைக் கேட்டறிந்து, அவற்றைத் தீர்க்கும் வகையில் பன்றி வளர்ப்புக் கொள்கையில் திருத்தங்கள் செய்யப்படும். தடுப்பூசிகள் தட்டுப்பாடின்றி தேவைக்கு ஏற்ப கிடைப்பதை உறுதி செய்ய துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று இளங்கோவன் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)