இந்திய அரண்மனைகளில் இந்து கடவுள்களை பிரமாண்டமாக வரைந்த போலந்து கலைஞர் தற்கொலை செய்தது ஏன்?

    • எழுதியவர், செரிலன் மோலன்
    • பதவி, பிபிசி செய்தியாளர், மும்பை

1939 ஆம் ஆண்டு..

ஜெர்மன் டாங்கிகள் மற்றும் வீரர்கள் போலந்து மீது படையெடுத்த போது, ​​​ பிரபல போலந்து கலைஞர் ஸ்டெஃபான் நோர்ப்ளின் மற்றும் திரைத்துறையை சேர்ந்த அவரது மனைவி லீனா ஆகியோர் தங்கள் நகைகளை அடகு வைத்து நாட்டை விட்டு வெளியேறினர்.

ஸ்டெஃபான் நோர்ப்ளினும் லீனாவும் தங்களுடைய கனவு இல்லத்தை விட்டுச் சென்றனர். பாதுகாப்பிற்காக அவர்களின் முழு கலை மரபுகளையும் அங்கு விட்டுச் சென்றனர்.

போலந்தில் இருந்து தப்பி சென்ற இந்த ஜோடி, அமெரிக்காவில் தஞ்சம் அடைவதை நோக்கமாகக் கொண்டிருந்தனர். ஆனால், ருமேனியா, துருக்கி மற்றும் இராக் முழுவதும் பயணம் செய்து, இறுதியாக காலனித்துவ இந்தியாவிற்கு வந்து, அங்கு அவர்கள் ஆறு ஆண்டுகள் வரை வாழ்ந்தனர்.

அவர்கள் இந்தியாவில் இருந்த சமயத்தில் கலைஞர் நோர்ப்ளினுக்கும் இந்திய மன்னர்களுக்கும் (ஆட்சியாளர்கள்) இடையே சிறந்த ஒத்துழைப்பு உருவானது. அவர் மேற்கத்திய அழகியலை இந்திய அடையாளத்துடன் இணைத்து சில சிறந்த கலைப் படைப்புகளை இந்தியாவுக்கு வழங்கினார்.

மன்னர்களை கவர்ந்த நோர்ப்ளின்

1941 மற்றும் 1946 க்கு இடையில், பல இந்திய மன்னர்கள் தங்கள் அரண்மனைகளை ஓவியங்களால் அலங்கரிக்க நோர்ப்ளினை நியமித்தனர். அரண்மனைகளின் உட்புற வடிவமைப்பிற்காக கலை டெகோ பாணியைப் பயன்படுத்தி, புதுமை மற்றும் தொழில்நுட்பத்தை கொண்டாடும் நவீனத்துவ பாணியை நோர்ப்ளின் வழங்கினார்.

நோர்ப்ளின் இந்துக் கடவுள்களின் பிரமிக்க வைக்கும் சுவரோவியங்கள், இந்து இதிகாசங்களான மகாபாரதம் மற்றும் ராமாயணத்தின் முழுக் காட்சிகள் , நாட்டின் புகழ்பெற்ற புலிகள், சிறுத்தைகள் மற்றும் யானைகள் போன்றவற்றையும் அவரது தனித்துவமான பாணியில் வரைந்ததன் மூலம் இந்தியாவில் புகழ் பெற்றார்.

அவரது ஓவியங்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உமைத் பவன் அரண்மனையில் காணப்படுகின்றன. இது ஜோத்பூரின் முன்னாள் சமஸ்தான ஆட்சியாளரின் இல்லம். தற்போது ஒரு சொகுசு ஹோட்டலாக மாற்றப்பட்டுள்ளது. அதே போல் குஜராத் மாநிலத்தின் மோர்பியின் ஆட்சியாளர்களின் அரண்மனையிலும் நோர்ப்ளின் ஓவியங்கள் உள்ளது.

தத்ரூபமான உருவப்படங்களை வரைந்த நோர்ப்ளின்

பிகார் மாநிலத்தில் உள்ள ராம்கர் மகாராஜாவின் உருவப்படங்களையும் (portraits) அவர் வரைந்துள்ளார். ஆனால் இந்த கலைப்படைப்புகள் காலப்போக்கில் தொலைந்துவிட்டன என்று நிபுணர் கிளாஸ்-உல்ரிச் சைமன், சித்ராஞ்சலி என்னும் ஆவணப்படத்தில் கூறுகிறார். இந்த படம் இந்தியாவில் கலைஞர் நோர்ப்ளின் உருவாக்கிய படைப்புகளை விவரிக்கிறது.

அவரது சுவரோவியங்கள் பிரமாண்டமானவை. உணர்வுப்பூர்வமானவை. அவை இந்துக் கடவுள்களின் அம்சங்கள் மற்றும் தோரணைகள் உட்பட பாரம்பரிய இந்திய உருவங்களின் புதுமையான விளக்கங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.

பணக்கார குடும்பத்தில் பிறந்த நோர்ப்ளின்

நோர்ப்ளின் 1892இல் போலந்து தலைநகர் வார்சாவில் (Warsaw) பணக்கார தொழிலதிபர் குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை அவரை ஒரு தொழிலதிபராக ஆக்க விரும்பினார். அவரை பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் நகரில் வணிகவியல் படிக்க அனுப்பினார்.

ஆனால் நோர்ப்ளின் ஓவியம் வரைவதில் ஆர்வம் காட்டினார். அவரது பெரிய மாமா ஒரு பிரபலமான பிரெஞ்சு ஓவியர். எனவே அவரது வழியே நோர்ப்ளின் கலை ஆர்வம் பெற்றிருக்கலாம்.

கலை மீது ஆர்வம் கொண்ட நோர்ப்ளின், இளம் வயதில் தனது படிப்பை விட்டுவிட்டு ஐரோப்பா புறப்பட்டார், அங்கு அவர் ஏராளமான ஆர்ட் கேலரிகளுக்குச் சென்றார். பெல்ஜியம், பிரான்ஸ் மற்றும் பிரிட்டனில் உள்ள பத்திரிகைகளுக்கு ஓவியங்கள் வரைந்து கொடுத்தார் என்று தி அன் பிளான்ட் ரிட்டர்ன் ஆஃப் ஸ்டீபன் நோர்ப்லின் (The Unplanned Return of Stefan Norblin) என்ற கட்டுரையில் அக்னிஸ்கா காஸ்ப்ரசாக் எழுதியுள்ளார்.

பின்னர் அவர் வார்சாவுக்குத் திரும்பினார். ஒரு கிராஃபிக் கலைஞராகவும், மேடை வடிவமைப்பாளராகவும், புத்தகங்களுக்கு விளக்கப்படம் வரைபவராகவும் பணியாற்றினார். சமூகத்தில் உயரடுக்கு ரசிகர்கள் மத்தியில் திறமையான கலைஞர் என பெயரெடுத்தார்.

நோர்ப்ளின் `portraits’ உருவாக்குவதில் தனித்துவம் பெற்றவர்.

இரண்டாம் உலகப் போரால் திருப்புமுனை

அவர் தனது இரண்டாவது மனைவியான லீனாவை 1933-இல் சந்தித்து திருமணம் செய்து கொண்டார். செல்வாக்கு மிக்க இந்த தம்பதியினர் வார்சாவில் வசதியான வாழ்க்கையை வாழ்ந்தனர். ஆனால் இரண்டாம் உலகப் போர் அவர்களை தாயகத்திலிருந்து தொலைதூர இந்தியாவின் கடற்கரை வரை கொண்டு சென்றது .

நோர்ப்ளின் - லீனா தம்பதியினர் முதலில் பிரிட்டிஷ் இந்தியாவில் பம்பாய்க்கு (இப்போது மும்பை) வந்தடைந்தனர். கலாசாரங்கள், மதங்கள் மற்றும் மொழிகளின் சங்கமம் அவர்களை வரவேற்றது என்று சித்ராஞ்சலி ஆவணப்படத்தில் கட்டிடக் கலைஞர் ராகுல் மெஹ்ரோத்ரா கூறுகிறார்.

இந்தியாவில் போலந்து தம்பதியினர் தங்களுக்கேற்ற இருப்பிடத்தை கண்டறிந்தனர். நோர்ப்ளின் சிறந்த கலைக்கூடங்களில் தனது படைப்புகளை காட்சிப்படுத்தத் தொடங்கினார். பணக்காரர்களின் கவனத்தை ஈர்த்தார்.

1930 மற்றும் 40 களில், ஆர்ட் டெகோ பாணி (the art deco style) ஐரோப்பாவில் பிரபலமாக இருந்தது. ஆனால் அது இந்தியாவின் கட்டிடக்கலையில் ஊடுருவவில்லை.

அந்த சமயத்தில் இந்தியாவின் பல மன்னர்களின் மகன்கள் வெளிநாடுகளுக்குப் படிக்கச் சென்றபோது அந்த பாணியை பற்றி தெரிந்துக் கொண்டனர்.

அதனால், மகாராஜா மகேந்திர சிங்ஜியின் மகன் மோர்வியில் (இப்போது மோர்பி) ஒரு புதிய அரண்மனையைக் கட்டும் போது, அதற்கு அவர் `தி நியூ பேலஸ்’ என்று பெயரிட்டார் - அதை ஆர்ட் டெகோ பாணியில் வடிவமைக்க விரும்பினார்.

அரண்மனையின் உட்புறங்களை தனது ஓவியங்களால் அழகுபடுத்தும் பணியை நோர்ப்ளினுக்கு வழங்கினார்.

இந்திய அரண்மனைகளை அலங்கரித்த போலந்து ஓவியர்

நோர்ப்ளின் வேட்டையாடும் காட்சிகளை சித்தரிக்கும் பிரமாண்ட சுவரோவியங்களை உருவாக்கினார். இந்து கடவுள் சிவன் மெய் மறந்து பிரார்த்தனையில் மூழ்கி இருக்கும் ஓவியம், மன்னரின் மூதாதையர்களின் உருவப்படங்கள் மற்றும் அப்பகுதியின் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை ஓவியங்களாக தீட்டினார். அவர் உருவாக்கிய ஓவியங்களில், நிறங்களின் கலவை தனித்துவமாக இருந்தது.

அதன் பின்னர் மற்றொரு பெரிய கலைப் பணி அவரைத் தேடி வந்தது. உமைத் சிங், ஜோத்பூரில் உள்ள அரச இல்லத்தின் உட்புறங்களை அலங்கரிக்கவும் வடிவமைக்கவும் நோர்ப்ளினை அழைத்தார்.

பரந்து விரிந்து கிடக்கும் உமைத் பவன் அரண்மனையில் நோர்ப்ளினின் மிகச்சிறந்த படைப்புகளை பார்க்க முடிகிறது.

அதில் துர்கா தேவியின் சுவரோவியங்கள் மிகவும் வசீகரமானவை. சிங்கத்தின் மீது சவாரி செய்து துர்கா தேவி ஒரு அரக்கனைக் கொல்வதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

துர்கா தேவி என்ற இந்து தெய்வம் பல கைகளைக் கொண்டதாகவும், ஒவ்வொன்றும் ஒரு கொடிய ஆயுதத்தை ஏந்தியதாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.

நோர்ப்ளினின் மற்றொரு ஓவியத்தில் துர்கா தேவி கிட்டத்தட்ட எகிப்திய இளவரசியைப் போல் காட்சியளிக்கிறார்; மற்றொன்றில், கறுப்பு நிறத்திலான உருவமாக வரைந்துள்ளார். துர்கா தேவி கிட்டத்தட்ட சுவர் முழுவதும் ஒரு நிழல் போல தோற்றமளிக்கிறார்.

`தி ஓரியண்டல் ரூம்’ என்று அழைக்கப்படும் அறைகளில் ஒன்றில், நோர்ப்ளின் ராமாயணத்தின் முக்கியமான காட்சிகளை சித்தரிக்கும் ஆறு சுவரோவியங்களின் வரிசையை வரைந்துள்ளார். இதில் சீதா தேவியை ராவணன் கடத்திச் சென்றது, தன்னை நிரூபிக்க சீதா நெருப்பில் நடந்தது போன்ற ஓவியங்கள் அடங்கும்.

நோர்ப்லின் அரண்மனையின் முழு அறைகளையும் அற்புதமாக வடிவமைத்துள்ளார்.

காலப்போக்கில், சரியான கவனிப்பு இல்லாததாலும், , வெப்பம் மற்றும் ஈரப்பதம் இல்லாததாலும் நோர்ப்ளினின் பல ஓவியங்கள் சேதமடைந்தன, ஆனால் அவை இப்போது போலந்து அரசாங்கத்தால் மீட்டெடுக்கப்பட்டுள்ளன. அவரது படைப்புகள் போலந்து மற்றும் இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன, ஆனால் அது பற்றி பலருக்குத் தெரியவில்லை.

வாழ்வாதாரம் இழந்த கலைஞர்

ஸ்டெஃபான் நோர்ப்ளின் இந்தியாவை விட்டு அமெரிக்கா சென்ற பிறகு அதே புகழ் அவருக்கு கிடைக்கவில்லை.

சான் பிரான்சிஸ்கோவில் உள்ள கலைஞர்களின் கூட்டமைப்பு போலந்து கலைஞரான நோர்ப்ளினை வரவேற்கவில்லை. சில வாய்ப்புகள் மட்டுமே அவரை தேடி வந்தன. அதன் பிறகு சிறிது காலத்தில், கிளௌகோமா காரணமாக அவரது கண்பார்வை பலவீனமடையத் தொடங்கியதால் ஓவியம் வரைவதை நிறுத்தினார்.

ஒரு காலத்தில் பிரபல நடிகையாக இருந்த அவரது மனைவி, அங்குள்ள ஒரு அழகு நிலையத்தில் மேனிக்கியூரிஸ்டாக (கை நகங்களை அழகுபடுத்தும் நிபுணர்) பணிபுரிந்தார்.

நோர்ப்ளின் குடும்பம் அன்றாட வாழ்க்கையைச் சமாளிக்க போராடியது. அவர் மன அழுத்தத்தில் தள்ளப்பட்டார். 1952 ஆம் ஆண்டில், நோர்ப்ளின் தனது குடும்பத்திற்கு ஒரு சுமையாக மாற விரும்பாமல் தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.

அவர் இறந்த பிறகு, இந்தியாவில் அவரது ஓவியங்களின் மரபு மறைந்து போனது. ஆனால் க்ளாஸ்-உல்ரிச் சைமன் 1980 களில் அவற்றை மீண்டும் கண்டுபிடித்தார்.

கலைஞரின் படைப்புகளை மக்கள் பார்வைக்கு மீண்டும் அறிமுகப்படுத்த நிறைய முயற்சிகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் இன்னும் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது!

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)