You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை குறித்து இந்திய சட்டங்கள் சொல்வது என்ன?
- எழுதியவர், கீதா பாண்டே மற்றும் செரிலன் மோலன்
- பதவி, பிபிசி நியூஸ், டெல்லி மற்றும் மும்பை
திருமண உறவில் பாலியல் வன்கொடுமையை குற்றம் என்று அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை எதிர்த்த இந்திய அரசு, அது "மிகக் கடுமையானது" என்று கூறியது.
"தனது மனைவியை உடலுறவு கொள்ளுமாறு கட்டாயப்படுத்த எந்த ஆணுக்கும் உரிமை இல்லை. ஆனால் திருமணமான பெண்களை பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாக்க போதுமான சட்டங்கள் உள்ளன,” என்று மத்திய உள்துறை அமைச்சகம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை செய்யும் ஆணுக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது என்ற பிரிட்டிஷ் கால சட்டத்தில் திருத்தம் கோரும் மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
"இந்தியாவில் திருமண உறவுக்குள் பாலியல் வன்முறை பரவலாக உள்ளது. 25 பெண்களில் ஒருவர் தங்கள் கணவரால் பாலியல் வன்முறையை அனுபவிக்கிறார்" என்று சமீபத்திய அரசு ஆய்வு தெரிவிக்கிறது.
பிரிட்டன் உட்பட 100க்கும் மேற்பட்ட நாடுகளில் திருமண உறவில் பாலியல் வன்புணர்வு சட்டவிரோதம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் இது 1991-ஆம் ஆண்டில் அமலானது. ஆனால் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் செளதி அரேபியா உட்பட 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் மனைவியின் சம்மதம் இல்லாமல் அவரை நிர்பந்தித்து கணவன் உடலுறவு கொள்வது குற்றமில்லை என்கிற நிலை இருக்கிறது. அந்த வரிசையில் இந்தியாவும் இருக்கிறது.
1860ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள இந்திய தண்டனைச் சட்டத்தின் 375ஆவது பிரிவை ரத்து செய்யக் கோரி சமீப ஆண்டுகளில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. உடலுறவில் வன்புணர்வின் கீழ் வராத பல விலக்குகளை இந்த சட்டம் குறிப்பிடுகிறது. அதில் ஒன்று ‘மைனர் அல்லாத தன் மனைவியுடன் கணவன் கொள்ளும் உடலுறவு'.
இதுபோன்ற காரணங்களை நவீன காலத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் யார் செய்தாலும் கட்டாய உடலுறவு என்பது பாலியல் வன்புணர்வுதான் என்றும் நடப்பு சட்டத்தை எதிர்ப்பவர்கள் கூறுகின்றனர்.
ஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமை கண்காணிப்பகம் மற்றும் ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் ஆகிய அமைப்புகள், திருமண பந்தத்தில் பாலியல் வன்முறையை குற்றமாக்க இந்தியா மறுப்பது குறித்து கவலை தெரிவித்துள்ளன.
ஆனால் உடலுறவுக்கான சம்மதம் திருமணத்தின் "ஒன்றிணைந்த பகுதி" என்றும் மனைவி பின்னர் அதில் இருந்து பின்வாங்க முடியாது என்றும் இந்திய அரசு, மதக் குழுக்கள் மற்றும் ஆண் உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர். சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான எந்தவொரு முயற்சியையும் அவர்கள் எதிர்க்கின்றனர்.
நீதிமன்றங்கள் முரண்பாடான தீர்ப்புகளை வழங்கி வருகின்றன, சில நீதிமன்றங்கள் கணவன் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர அனுமதிக்கின்றன, ஆனால் சில நீதிமன்றங்கள் மனுவை நிராகரிக்கின்றன.
டெல்லி உயர்நீதிமன்றம் ’ஒருமித்த கருத்து’ இல்லாத தீர்ப்பை வழங்கியதையடுத்து இந்த வழக்கு 2022 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்திற்கு வந்தது. உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் மாதம் விசாரணையைத் தொடங்கியது.
மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் 49 பக்க பிரமாணப் பத்திரத்தை வியாழக்கிழமை தாக்கல் செய்தது. திருமணம் என்பது மிகவும் புனிதமான ஒன்றாகக் கருதப்படும். ஆணாதிக்க மரபுகளில் வேரூன்றிய ஒரு நாட்டில் அரசின் இந்த பதில் ஆச்சரியம் அளிப்பதாக இல்லை.
திருமணம் என்பது உறவுகளின் ஒரு "தனிப்பட்ட வகை" என்றும் சட்டங்கள், உரிமைகள் மற்றும் கடமைகள் ஆகியவற்றின் "முழு கட்டமைப்பை" அது கொண்டுள்ளது என்றும் பிரமாண பத்திரம் கூறியது.
”திருமண உறவில் பாலியல் வன்புணர்வை குற்றமாக்குவது, திருமண உறவுகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் திருமணம் என்ற பந்தத்தில் கடுமையான இடையூறுகளுக்கு வழிவகுக்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. திருமணத்தில், "ஒருவரது துணையிடம் இருந்து பொருத்தமான உடலுறவு இருக்க வேண்டும் என்ற நிலையான எதிர்பார்ப்பு" இருக்கிறது. இருப்பினும் இது உடலுறவு கொள்ள கட்டாயப்படுத்தும் உரிமையை கணவருக்கு வழங்காது. ஆயினும் திருமண உறவில் பாலியல் வன்புணர்வை சட்டத்தின் கீழ் கொண்டுவந்து அதை குற்றம் என்று அறிவிப்பது மிகவும் ”கடுமையானது" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்ப வன்முறை, பாலியல் துன்புறுத்தல் மற்றும் தாக்குதல்கள் தொடர்பான நடப்பு சட்டங்கள் திருமணமான பெண்ணின் உரிமைகளைப் பாதுகாக்கின்றன என்றும் அது கூறியது.
திருமணம் என்பது ஒரு சமூக கட்டமைப்பு. மனுக்களில் எழுப்பப்பட்டுள்ள பிரச்னை சட்டத்தை விட சமூகம் சம்மந்தப்பட்டது. எனவே அது தொடர்பான கொள்கையை வகுக்க அந்த விஷயத்தை நாடாளுமன்றத்திடம் விடப்பட வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)