You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாடு: இளம் வயதினரை அதிகம் தாக்கும் வயிற்றுப்போக்கு -ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டில் வயிற்றுப்போக்குப் பிரச்னையால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, சுகாதாரத்துறையின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
வயிற்றுப்போக்கு தொடர்பான ஆய்வு முடிவு ஒன்றை, தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் சமீபத்தில் வெளியிட்டனர் (Epidemiology of Acute Diarrheal Diseases reported in Tamil Nadu in 2022-2023) .
கடந்த 2 ஆண்டுகளில் வயிற்றுப்போக்கால் ஆண்களைவிட பெண்கள் அதிகம் பாதிப்படைந்துள்ளதாக அந்த ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இதற்கு என்ன காரணம்?
ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?
இந்த ஆய்வுக்காக, ஒருங்கிணைந்த சுகாதாரத் தகவல் மையத்தின் தரவுகளைப் பயன்படுத்தியுள்ளனர். ஆய்வில், தமிழ்நாட்டில் 2022 ஜனவரி முதல் 2023 டிசம்பர் வரையில் சுமார் 1.6 லட்சம் பேர் (1,62,765 பேர்) வயிற்றுப்போக்கு பிரச்னைக்காகச் சிகிச்சை பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதில் 55.4% பேர் பெண்கள், 44.6% பேர் ஆண்கள் என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. குறிப்பாக, 2023-ஆம் ஆண்டில் 86,200 பேருக்கு வயிற்றுப்போக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதுவே, 2022-ஆம் ஆண்டில் 76,565 பேருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளது என ஆய்வு கூறுகிறது.
நோய்த்தொற்று தொடர்பான வரைபடத்தில் (Epidemiological graph) ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் மட்டும் வயிற்றுப்போக்கு பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
கோடையில் அதிகரித்த வயிற்றுக் கோளாறு
ஆய்வில், 2022 மார்ச் மாதம் 5,901 பேருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை 2023 மார்ச் மாதம் சற்று அதிகரித்து 6,527 பேருக்கு வயிற்றுப்போக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
2022 ஏப்ரல் மாதம் 6,413 பேருக்கும் 2023 -ஆம் ஆண்டு இதே மாதத்தில் 6,550 பேருக்கும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மே மாதம் சற்று அதிகரித்துள்ளது.
2022 மே மாதம் 8,602 பேருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. 2023-ஆம் ஆண்டு மே மாதத்தில் 8,476 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜூன் மாதத்தில் இதன் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளது.
2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9,446 பேர் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், 2023-ஆம் ஆண்டு இதே மாதத்தில் 8,728 பேர் மட்டுமே சிகிச்சை பெற்றுள்ளனர். ஜூலை மாதத்திலும் ஏறக்குறைய இதே நிலையே நீடித்துள்ளது.
கோடைகாலத்தில் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்துள்ளதாக, ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
காரணம் என்ன?
இதற்கான காரணம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய பொது சுகாதாரத் துறையின் முன்னாள் இயக்குநர் மற்றும் மருத்துவர் குழந்தைசாமி, "கோடை காலங்களில் குடிநீர் பற்றாக்குறை வரும் போது பாதுகாப்பற்ற மாற்று ஆதாரங்களில் இருந்து நீரைக் கொண்டு வருகின்றனர். இதனால் அதிகப்படியான வயிற்றுப்போக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன," எனக் கூறுகிறார்.
"பல்வேறு காரணங்களால் மக்கள் வெளியூர்களுக்குப் பயணிக்கும் போது சுகாதாரமற்ற நீர் மற்றும் உணவு ஆகியற்றை உட்கொள்கின்றனர். இதன் காரணமாகவும் வயிற்றுப் போக்கு ஏற்படுகிறது," என்கிறார்.
"அதுவே, குளிர்காலங்களில் மக்கள் அதிகம் வெளியில் செல்வதில்லை. இதனால் வயிற்றுப்போக்கு பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கவில்லை," என்கிறார்.
சரிவர வேகவைக்கப்படாத உணவுகள், சுகாதாரமற்ற காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவை அதிக விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
எந்த வயதினருக்கு அதிக பாதிப்பு?
அடுத்து, 31 வயது முதல் 40 வரையிலான வயதினர் மட்டும் அதிகளவில் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டதாக ஆய்வு கூறுகிறது. இந்த வயதினரில் ஏறக்குறைய 19.3% பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
41 முதல் 50 வயது வரையில் 18.5% பேர் வயிற்றுப்போக்கால் பாதிப்படைந்துள்ளனர். 10 வயதுக்குட்பட்ட பிரிவினர் 12.1%, 11 முதல் 20 வயது வரையில் உள்ளவர்கள் 8.1%, 21 முதல் 31 வயது வரையில் உள்ளவர்கள் 14.6% பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
சுகாதாரமற்ற சூழல், சுத்திகரிக்கப்படாத குடிநீர், சுகாதாரக் குறைவு ஆகியவை முக்கிய காரணம் எனவும் ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
முப்பது வயது முதல் 40 வயது வரையிலானவர்கள் அதிகம் பாதிப்படைவதற்கு, அவர்களின் பணிச்சூழல், உணவு போன்றவை காரணமாக உள்ளதாக கூறுகிறார் மருத்துவர் குழந்தைசாமி.
வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டவர்களில் 50.1% ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 17.6% பேர் மாவட்ட துணை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
தனியார் மருத்துவமனைகளில் 14.2% பேரும் சமுதாய நலக் கூடங்களில் 10.8% பேரும் அரசு மருத்துவமனைகளில் 6.2% பேரும் மாவட்ட மருத்துவமனைகளில் 1.2% நபர்களும் சிகிச்சை எடுத்துள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
மாவட்டங்களில் என்ன நிலை?
இந்த ஆய்வில் மாவட்டவாரியான விவரங்களும் தொகுக்கப்பட்டுள்ளன. இதில், ராமநாதபுரம், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, விழுப்புரம் மாவட்டங்களில் 5%-க்கும் குறைவாக வயிற்றுப்போக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
திருச்சி, தஞ்சாவூர், மதுரை, சென்னை, சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 3% முதல் 5%, மற்ற 21 மாவட்டங்களில் 1% முதல் 2% வயிற்றுப்போக்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
ராமநாதபுரம், புதுக்கோட்டையில் அதிகம் ஏன்?
ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் வயிற்றுப்போக்கு அதிகரிப்பது குறித்துப் பேசிய குழந்தைசாமி, "அங்கு போதிய குடிநீர் இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். சுகாதார சீர்கேடுகளும் முக்கிய காரணங்களாக உள்ளன," என்கிறார்.
நகரமயமாதலின் போது, குடிநீர் குழாய்கள் சேதம் அடைவது, அதனுடன் சாக்கடை நீர் கலப்பது அதிகரிப்பது தொடர்வதாக கூறும் குழந்தைசாமி, "பொது சுகாதாரத்துறையின் ஆய்வு முடிவுகள் மிக முக்கியமானவை. எங்கெல்லாம் பரவல் அதிகரித்துள்ளது என்பதை மேலும் ஆய்வு செய்ய உதவியாக இருக்கும்" என்கிறார்.
பாதிப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்?
வயிற்றுப்போக்கு ஏற்படும் நேரங்களில் அதைத் தடுப்பதற்குச் சில யோசனைகளை மருத்துவர் குழந்தைசாமி முன்வைக்கிறார்.
- குடிநீரைக் காய்ச்சிக் குடிக்க வேண்டும்
- குடிநீரில் குளோரின் மருந்து கலக்க வேண்டும்
- இளநீர், கஞ்சி, ஓ.ஆர்.எஸ் போன்ற திரவ உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்
- ஒரே பகுதியில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் உடனடியாக 104 என்ற உதவி எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்
பொது சுகாதாரத்துறை சொல்வது என்ன?
ஆய்வு முடிவுகள் குறித்து, தமிழ்நாடு பொது சுகாதாரத்துறையின் இயக்குநர், மருத்துவர் செல்வ விநாயகத்திடம் பிபிசி தமிழ் பேசியது.
"எல்லா காலங்களிலும் வயிற்றுப்போக்கு பாதிப்பு இருந்தாலும் தற்போது சற்று அதிகரித்துள்ளது. குடிநீர் விநியோகம் என்பது முக்கியப் பிரச்னையாக உள்ளது. தனி நபர்களின் செயல்பாடுகள், சுகாதாரம், காலநிலை மாற்றம் என வயிற்றுப்போக்கு ஏற்பட பல காரணங்கள் உள்ளன" என்கிறார்.
30 வயதுக்குட்பட்டவர்களுக்கு பாதிப்பு வருவதற்கான காரணம் குறித்துப் பேசிய செல்வவிநாயகம், "வெளி உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வது, குடிநீர் ஆகியவை காரணமாக உள்ளது," என்கிறார்.
"குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டும் வயிற்றுப்போக்கு அதிகரிப்பதற்கும் குடிநீர், சுற்றுச்சூழல், உணவு ஆகியவை காரணமாக உள்ளன. காய்கறிகளாக இருந்தாலும் இறைச்சியாக இருந்தாலும் சுகாதாரமாக பயன்படுத்துவது பாதிப்புகளைப் பெருமளவு குறைக்கும்," என்கிறார் செல்வவிநாயகம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)