You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிரிட்டனில் பிறந்த குழந்தைகளை மாற்றிய மருத்துவமனை - 55 ஆண்டுகள் கழித்து வெளிவந்த உண்மை
- எழுதியவர், ஜென்னி க்ளீமன்
- பதவி, தொகுப்பாளர், தி கிஃப்ட்
பிரிட்டனின் என்.எச்.எஸ் (NHS) அறக்கட்டளை மருத்துவமனையின் வரலாற்றில் முதல்முறையாக பிரசவத்தின்போது பச்சிளம் குழந்தைகள் மாற்றப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த வழக்கில் வெஸ்ட் மிட்லாண்ட்ஸில் உள்ள இரண்டு குடும்பங்கள் இழப்பீடுக்காகக் காத்திருக்கின்றன.
மழை பெய்துகொண்டிருந்த ஒரு நாளில் எந்த நோக்கமும் இன்றி, சுய ஆர்வத்தின் பேரில் ஒருவர் டிஎன்ஏ பரிசோதனை எடுத்தார். அதன் விளைவாக ஒரு மிகப்பெரிய அதிர்ச்சியூட்டும் முடிவு வெளியானது.
இந்த டி.என்.ஏ முடிவு இரண்டு பெண்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது. இத்தனை காலமாகத் தங்கள் குடும்பம் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்கள் உண்மையில் தங்கள் ரத்த உறவுகள் இல்லை என்பது அவர்களுக்குத் தெரிய வந்தது.
டோனியின் நண்பர்கள் 2021ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் பரிசாக அவருக்கு ஒரு டி.என்.ஏ ஹோம்-டெஸ்டிங் கிட் வாங்கி கொடுத்தனர். குடும்ப வரலாற்றை அறிந்துகொள்ளும் நோக்கத்தில் சிலர் டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கும் சாதனத்தைப் பரிசாகக் கொடுப்பது வழக்கம்.
டோனி தனது நண்பர்கள் கொடுத்த பரிசைத் தனது சமையலறையில் ஓர் ஓரத்தில் வைத்துவிட்டு இரண்டு மாதங்களுக்கு அதை மறந்துவிட்டார்.
பின்னர் பிப்ரவரியில் ஒரு நாள் அந்த டெஸ்ட் கிட் அவரது கண்களில் பட்டது. டோனி ஏதோவோர் ஆர்வத்தில், அந்த டெஸ்ட் கிட்-ஐ எடுத்து, மாதிரியை சேகரிக்கும் ட்யூப்பில் தன் எச்சிலை வைத்து, அதை ஆய்வகத்திற்கு அனுப்பினார். அதன் பிறகு, வாரக்கணக்கில் அதைப் பற்றி அவர் யோசிக்கவே இல்லை.
ஞாயிற்றுக்கிழமை மாலை டிஎன்ஏ முடிவுகள் மின்னஞ்சலில் வந்தது. அந்த நேரத்தில் டோனி தனது தாய் ஜோனிடம் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார்.
அந்தச் சோதனை முடிவுகளைப் பார்த்த டோனி குழப்பமடைந்தார். அவரது தாய் வழிக் குடும்பம் அயர்லாந்தில் ஒரு பகுதியைச் சேர்ந்தது என சரியாகச் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. அவரது குடும்பக் கிளை (Family Tree) தகவல்களும் சரியாக இருந்தது. ஆனால் டோனியின் சகோதரியின் பெயர் மாறியிருந்தது.
ஜெசிக்காவிற்கு பதிலாக, கிளேர் என்ற பெயர் இருந்தது. (ஜெசிக்கா, கிளேர் என்பவை உண்மையான பெயர்கள் அல்ல - இரண்டு பெண்களின் அடையாளங்களும் மாற்றப்பட்டுள்ளது).
ஜெசிக்கா யார்?
ஜோனுக்கு நான்கு குழந்தைகள். அதில் டோனி மூத்தவர். மூன்று மகன்களுக்குப் பிறகு, ஜோன் ஒரு மகள் வேண்டும் என்று ஆசைப்பட்டார். 1967இல் ஜெசிக்கா பிறந்தபோது அவரின் விருப்பம் நிறைவேறியது.
"கடைக்குட்டியாக ஒரு பெண் குழந்தை பிறந்தது அற்புதமான உணர்வு" என்று ஜோன் என்னிடம் கூறினார்.
ஆனால் ஜோனின் மூத்த மகன் டோனியின் டி.என்.ஏ முடிவுகளில் எதிர்பாராத ஒரு தகவல் இருப்பதாகக் கேள்விப்பட்டவுடன் ஜோன் கவலைக்குள்ளானார். டோனிக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் தன் வயதான தாயிடம் அந்த அதிர்ச்சியைக் காண்பிக்க அவர் விரும்பவில்லை.
டோனியின் தந்தை இறந்து பத்து ஆண்டுகள் கடந்திருந்தது. டோனியின் தாயார் ஜோனுக்கு 80 வயது. அவர் தனியாக வசித்து வந்தார். எனவே டோனி தனது தாயிடம் ஏதோ மிகப்பெரிய தவறு நடந்திருப்பதாகக் காட்டிக் கொள்ளவில்லை.
மறுநாள் காலை, டி.என்.ஏ சோதனை மேற்கொண்ட நிறுவனத்தின் தனிப்பட்ட தகவல் மையத்தைத் தொடர்புகொண்டு தனது தங்கை எனக் குறிப்பிடப்பட்டிருந்த கிளேர் என்ற பெண்ணின் தகவல்களைப் பெற்றார். அதன் பின்னர் கிளேரை தொடர்புகொண்டார்.
"வணக்கம், என் பெயர் டோனி. நான் டி.என்.ஏ சோதனை மேற்கொண்டேன். அதன் முடிவுகளில் நீங்கள் என் சகோதரி எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஏதோ தவறுதலாக இது நடந்திருக்கலாம். உங்களுக்கு இதைப் பற்றி ஏதேனும் தெரியுமா?” என்று மின்னஞ்சல் அனுப்பினார்.
கிளேரின் எதிர்வினை என்ன?
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிளேரின் மகன் அதே நிறுவனத்தின் டி.என்.ஏ டெஸ்ட் கிட்-ஐ பிறந்தநாள் பரிசாக கிளேருக்கு வழங்கினார்.
அவருக்கு வந்த டி.என்.ஏ முடிவுகளும் விசித்திரமாக இருந்தது. கிளேரின் பெற்றோருடைய பிறப்பிடம் தவறாக இருந்தது. அவரது பெற்றோருடைய பிறப்பிடத்திற்கும் அவருக்கும் எந்தவொரு தொடர்பும் இருக்கவில்லை. ஆனால், ஏதோ தவறு நடந்திருக்கிறது என்று மட்டும் அவருக்குப் புரிந்தது.
அதன் பின்னர், 2022இல், அவருக்கு டோனியிடம் இருந்து தகவல் கிடைத்தது. எங்களின் குடும்ப உறுப்பினர்களில் உங்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாக டோனி குறிப்பிட்டிருந்தார்.
இது கிளேருக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் ஒரு விதத்தில் இது உண்மை என்பது அவருக்குப் புரிந்தது. ஏனெனில், சிறு வயதில் இருந்தே கிளேர் தனது குடும்பத்தோடு பெரிதாக நெருக்கம் காட்டவில்லை. அவர்களுக்கு மத்தியில் வித்தியாசமானவராகத் தான் இருப்பதாகவே கிளேர் உணர்ந்துள்ளார்.
``நான் ஏமாற்றபட்டதைப் போல் உணர்ந்தேன். தோற்றம் மற்றும் முக அம்சங்களில் என் குடும்பத்தோடு எனக்கு எந்த ஒற்றுமையும் இருக்கவில்லை. எனவே நான் தத்தெடுக்கப்பட்டதாக நினைத்தேன்," என்று அவர் என்னிடம் கூறினார்.
உண்மையான சகோதரர் டோனி
கிளேரும் டோனியும் குறுஞ்செய்திகளில் பேசிக்கொள்ளத் தொடங்கினர். தங்கள் வாழ்க்கை வரலாற்று விவரங்கள், குடும்ப விவரங்கள் ஆகியவற்றைப் பகிர்ந்துகொண்டனர். அப்போது கிளேருக்கு சில தகவல்கள் கிடைத்தன. டோனியின் தங்கை ஜெசிக்காவும் கிளேரும் ஏறக்குறைய ஒரே நேரத்தில் பிறந்தது, ஒரே மருத்துவமனையில் பிறந்தது போன்ற விவரங்கள் தெரிய வந்தன.
இப்போது அவர்களுக்கு என்ன நடந்தது என்பது விளங்கியது. ஜெசிக்காவும் கிளேரும் பிறந்த சில மணிநேரங்களில் இடம் மாற்றப்பட்டுள்ளனர். அதன் பின்னர் வெவ்வேறு குடும்பங்களில் அவர்கள் வளர்க்கப்பட்டுள்ளனர். ஜெசிக்காவின் வீட்டில் கிளேரும், கிளேருடைய வீட்டில் ஜெசிக்காவும் வளர்ந்தனர். பெற்றோர்களும் அவர்கள்தான் தங்கள் உண்மையான குழந்தைகள் என நினைத்து வளர்த்தனர்.
மகப்பேறு வார்டில் தற்செயலாக குழந்தைகள் இடம் மாற்றப்பட்ட சம்பவங்கள் பிரிட்டன் நடைமுறையில் இதுவரை கேள்விப்படாதவை.
கடந்த 2017ஆம் ஆண்டு ஒரு தகவல் அறியும் உரிமை கோரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, என்.எச்.எஸ் மருத்துவமனை, ``இதுவரை குழந்தைகள் தவறான பெற்றோரிடம் கொடுக்கப்பட்டதாக ஆவணப்படுத்தப்பட்ட சம்பவங்கள் எதுவும் இல்லை” என்று பதிலளித்தது.
கடந்த 1980களில் இருந்து, புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு ரேடியோ அதிர்வெண் அடையாளக் குறிச்சொற்கள் (RFID) அவர்கள் பிறந்த உடனேயே வழங்கப்படுகின்றன. அது அவர்கள் மருத்துவமனையில் இருக்கும் வரை அவர்களைக் கண்காணிக்க அனுமதிக்கிறது. முன்னதாக, மகப்பேறு வார்டுகளில் இருந்த கட்டில்களில் கையால் எழுதப்பட்ட குறிச்சொற்கள் மற்றும் அட்டைகள் மட்டுமே குழந்தைகளின் அடையாளங்களைக் காட்டின.
கிளேரும் டோனியும் தகவல்களைப் பரிமாறிக்கொண்ட போது, அவர்கள் இருவருமே அடுத்து என்ன செய்வது என்பதை முடிவெடுக்க வேண்டியிருப்பதை உணர்ந்தனர்.
மருத்துவமனையில் தவறு நடந்திருப்பதை உணர்ந்த அவர்கள், அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தனர்.
"இந்தச் சம்பவத்தின் தாக்கம் மிகப் பெரியதாக இருக்கும்" என்று டோனி கிளேருக்கு எழுதினார்.
மேலும், "நீங்கள் இந்த விஷயத்தை இப்படியே விட்டுவிட விரும்பினால், நான் அதை முற்றிலும் ஏற்றுக்கொள்கிறேன். நான் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன்," என்று டோனி கூறினார்.
ஆனால் கிளேர் தயக்கமின்றி, டோனியையும் அவரது தாயையும் சந்திக்க விரும்புவதாகக் கூறினார்.
"நான் அவர்களைப் பார்க்க விரும்பினேன். அவர்களைச் சந்திக்கவும், அவர்களுடன் பேசவும், அவர்களைக் கட்டியணைக்கவும் விரும்பினேன்" என்று கிளேர் விவரித்தார்.
டோனி இறுதியாகத் தனது தாய் ஜோனிடம் டி.என்.ஏ சோதனை முடிவுகள் பற்றிச் சொன்னபோது, அவரும் இது எப்படி நடந்தது என்பதைத் தெரிந்துகொள்ள நினைத்தார்.
1967இல் ஒரு பனி இரவு
ஜோன் தனது மகள் பிறந்த இரவைத் தெளிவாக நினைவு வைத்திருந்தார். அவர் வீட்டிலேயே குழந்தையைப் பிரசவிக்க நினைத்தார். ஆனால் உயர் ரத்த அழுத்தம் காரணமாக, அவரது பிரசவம் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டது.
"ஞாயிற்றுக்கிழமை என்னை அழைத்துச் சென்றார்கள். அன்று பனி பெய்தது" என்று ஜோன் நினைவுகூர்ந்தார்.
சுமார் 10:20 மணிக்குக் குழந்தை பிறந்தது. ஜோன் நீண்டகாலமாக ஆசைப்பட்ட பெண் குழந்தை பிறந்தது. புதிதாகப் பிறந்த குழந்தையின் சிவந்த முகமும் சுருண்ட முடிகளும் அவருக்கு இன்னமும் நினைவில் இருக்கிறது.
அதன் பின்னர் அந்தப் பச்சிளம் குழந்தை நர்சரிக்கு அழைத்துச் செல்லப்பட்டது. அன்றைய காலக்கட்டத்தில் (1960களில்) மகப்பேறு மருத்துவமனைகளில் பிரசவித்த தாய் ஓய்வெடுப்பதற்காக பச்சிளம் குழந்தைகளை நர்சரியில் வைத்திருக்கும் பொதுவான நடைமுறை இருந்தது.
அடுத்த நாள் காலையில், தவறுதலாக ஜோனின் மகள் கிளேருக்கு பதிலாக ஜெசிக்கா அவரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இந்தக் குழந்தைக்கு (ஜெசிக்கா) பொன்னிற முடி இருந்தது. குடும்பத்தில் உள்ள மற்றவர்களைப் போல் இல்லாமல், ஜெசிக்கா வித்தியாசமாக இருந்தார். அவர்கள் அனைவரும் கருப்பாக இருந்தனர். ஆனால் ஜெசிக்கா வெள்ளையாக இருந்தார். ஆனால் ஜோன் அதைப் பற்றி எதுவும் நினைக்கவில்லை. தன் குடும்பத்தில் வெள்ளையின உறுப்பினர்கள் இருப்பதால் அவர்களின் ஜீன் என்று நினைத்துக் கொண்டார்.
பச்சிளம் குழந்தையாக ஜெசிக்காவை சந்திக்க ஜோனின் கணவர் மருத்துவமனைக்கு வந்தபோது, அவர் குழந்தையைப் பார்த்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். அவருக்கும் குழந்தை பற்றி எந்தச் சந்தேகமும் ஏற்படவில்லை.
கிளேரின் குழந்தைப் பருவம் எப்படி இருந்தது?
சுமார் 55 ஆண்டுகளுக்குப் பிறகு, தனது சொந்த மகள் கிளேரின் வாழ்க்கையைப் பற்றித் தெரிந்துகொள்ள ஜோன் ஆசைப்பட்டார். 'கிளேரின் குழந்தைப் பருவம் எப்படி இருந்தது? அவர் மகிழ்ச்சியாக வளர்ந்தாரா?' என்றெல்லாம் ஜோன் யோசித்தார்.
ஆனால் ஜோனுக்கு இந்தப் பதில்கள் கிடைப்பதற்கு முன்னதாக டோனி தனது வீட்டில் தங்கையாக வளர்ந்த ஜெசிக்காவிடம் இந்த உண்மைகளைச் சொல்ல வேண்டும். ஜெசிக்கா தனது வாழ்நாள் முழுவதும் ஜோனை தம் தாய் என்றும் டோனி தன்னுடைய சகோதரர் என்றும் நம்பியிருந்தார்.
டோனியும் ஜோனும் ஜெசிக்காவின் வீட்டிற்க்குச் சென்று உண்மைகளைச் சொன்னார்கள். அவர்கள் எப்போதும் தாயாகவும் அண்ணனாகவுமே இருப்போம் என்றும் உறுதியளித்தனர். ஆனால் அதன் பின்னர், ஜெசிக்கா உடனான அவர்களது உறவு பழையபடி இல்லை என்கிறார் ஜோன்.
இந்தக் கட்டுரைக்காக ஜெசிக்கா பேட்டி கொடுக்க விரும்பவில்லை.
உண்மையான அம்மாவை சந்தித்த தருணம்
டோனியின் டி.என்.ஏ முடிவுகள் பற்றிய உண்மை தெரிந்து ஐந்து நாட்களுக்குப் பிறகு, கிளேர் தனது வீட்டிற்கு சற்றுத் தொலைவில் இருந்த ஜோன் வீட்டிற்குப் பயணித்தார்.
பல ஆண்டுகளாக, கிளேர் இந்த வழியாகத்தான் வேலைக்குச் சென்று வந்தார். இருப்பினும், இங்குதான் தன் உண்மையான தாய் வசிக்கிறார் என்பது தெரியாமலே கிளேர் அந்த வழியாகச் சென்று வந்திருக்கிறார்.
டோனி அவருக்காக சாலையில் காத்திருந்தார். “வணக்கம் சகோதரி. அம்மா காத்துக் கொண்டிருக்கிறார்” என்றார்.
ஜோனை பார்த்த தருணத்தில், அவர்கள் ஒருவரையொருவர் ஏற்கெனவே சந்தித்திருப்பது போல் உணர்ந்ததாக கிளேர் கூறுகிறார். "நான் ஜோனை பார்த்தவுடன் எனது முக ஜாடை எங்கிருந்தது வந்தது என்பது எனக்குப் புரிந்தது” என்றார் கிளேர்.
"நான் இளமையாக இருந்தபோது எப்படி இருந்தேனோ அப்படியே இருக்கிறார் கிளேர்” என்றார் ஜோன்.
அவர்கள் அன்று மதியம் குடும்ப புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர். கிளேர், டோனி மற்றும் ஜோனிடம் தனது கணவர் தம் குழந்தைகள் மற்றும் பேரக் குழந்தைகள் பற்றிக் கூறினார். அவர் ஒருபோதும் சந்திக்காத உண்மையான தந்தையைப் பற்றி டோனி அவரிடம் சொன்னார்.
ஜோன் கிளேரின் குழந்தைப் பருவம் பற்றிக் கேட்டபோது, கிளேர் அமைதியாக இருந்தார். "ஜோன் கேட்டபோது என்னால் உண்மையைச் சொல்ல முடியவில்லை," என்று கிளேர் கூறுகிறார்.
“நான் சிறு வயதாக இருந்தபோதே என் பெற்றோர் பிரிந்துவிட்டனர். நான் அவர்களுடன் இருந்ததாக நினைவில்லை. நான் மிகவும் ஏழ்மையான வீடற்ற நிலையில் பசியில் அவதிப்பட்டு வளர்ந்தேன். அது மிகவும் கடினமான குழந்தைப் பருவமாக இருந்தது.”
``என்னை வளர்த்த தாய்க்கு இந்தச் செய்தியைத் தெரிவிப்பது கடினமான காரியம்” என்று கிளேர் கூறுகிறார்.
தன்னை வளர்த்த பெற்றோரிடம் அவரது உறவில் எந்த மாற்றமும் ஏற்படாது என்று உறுதியளிக்கத் தன்னால் இயன்றவரை முயன்றதாக அவர் கூறுகிறார். கிளேரை வளர்த்த தாயார் இந்த ஆண்டின் தொடக்கத்தில் காலமானார்.
'ஒரு மிகப்பெரிய பிழை'
அனைத்து உண்மைகளையும் கண்டுபிடித்த சில வாரங்களுக்குப் பிறகு, கிளேரும் ஜெசிக்காவும் பிறந்தபோது மாற்றப்பட்ட மருத்துவமனையை மேற்பார்வையிடும் என்.எச்.எஸ் அறக்கட்டளைக்கு டோனி ஒரு கடிதம் எழுதினார். டி.என்.ஏ சோதனைகள் வெளிப்படுத்திய உண்மைகளை அதில் விளக்கினார்.
அறக்கட்டளை முழு பொறுப்பையும் ஏற்றுக்கொண்டது. இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களுக்கு இழப்பீடு கிடைத்தது. ஆனால் அந்தத் தொகை போதாது என டோனி மறுப்பரிசீலனைகு கோரினார். என்.எச்.எஸ் அறக்கட்டளை தொடர்பான புகார்களைக் கையாளும் NHS ரெசல்யூஷன் என்னும் பிரிவைத் தொடர்புகொண்டோம். குழந்தை இடம் மாறி இருப்பது ஒரு "மிகப்பெரிய தவறு" என்று அந்த அறக்கட்டளை சட்டப் பொறுப்பை ஏற்றுக்கொண்டது.
இருப்பினும், இதுவொரு "தனித்துவம் வாய்ந்த சிக்கலான வழக்கு" என்றும், எதிர்பார்க்கும் இழப்பீட்டுத் தொகையை ஒப்புக்கொள்ள ஆலோசனை நடந்து வருவதாகவும் கூறப்பட்டது.
கிளேரும் ஜோனும் தங்களுக்கு இருக்கும் ஒரே மாதிரியான ரசனைகள் பற்றிப் பேசி ஆச்சர்யப்பட்டனர். அவர்கள் விடுமுறைகளை ஒன்றாகக் கழித்தனர். அவர்கள் தங்கள் அயர்லாந்து பூர்வீகத்தின் பின்னணி குறித்து ஆராய்கிறார்கள். கடந்த கிறிஸ்துமஸை அவர்கள் மகிழ்வோடு ஒன்றாகக் கழித்தனர்.
"நாங்கள் மிகவும் நெருக்கமாக இருக்கிறோம். நான் அவர்களுடன் முடிந்தவரை நேரத்தைச் செலவிட விரும்புகிறேன். ஆனால் நான் வாழ்வின் பாதி நாட்களை இழந்துவிட்டேன்” என்று கிளேர் கூறுகிறார்.
கிளேர் தன்னை "அம்மா" என்று அழைக்கும்போது, ஜெசிக்காவின் நியாபகம் வருவதாகக் கூறுகிறார் ஜோன். "ஜெசிக்கா இப்போது என்னுடன் இல்லை, ஆனால் அவளும் என் மகள்தான்” என்கிறார் ஜோன்.
"கிளேர் எனக்கு மற்றொரு மகளாக இருப்பாள். ஜெசிக்கா என் வயிற்றில் பிறக்கவில்லை என்றாலும் அவள் என் மகள். எப்போதும் அவள் என் மகள்தான்” என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் ஜோன்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)