அக்பர், சீதா பெயர் சர்ச்சை தொடங்கியது எப்படி? அதில் உயர் நீதிமன்றம் தலையிட்டது சரியா?

'அக்பர்' மற்றும் 'சீதா' வின் பெயர்களை மாற்றுவது தொடர்பான கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் உத்தரவு சொல்வது என்ன?

பட மூலாதாரம், SANJAY DAS

படக்குறிப்பு, ஆண் சிங்கம் மற்றும் பெண் சிங்கம்
    • எழுதியவர், பிரபாகர் மணி திவாரி
    • பதவி, கொல்கத்தாவிலிருந்து, பிபிசி இந்திக்காக

கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் ஜல்பாய்குரி சர்க்யூட் பெஞ்ச் ஒரு சுவாரசியமான பொது நல வழக்கில், அங்குள்ள விலங்கியல் பூங்காவில் இருக்கும் ஆண் சிங்கம் மற்றும் பெண் சிங்கத்தின் பெயர்களை மாற்றுமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

பொதுநல மனுக்கள் (பிஐஎல்) குறித்து ஒரு புத்தகத்தை எழுதியவரும் அரசியலமைப்பு விவகாரங்களில் நிபுணருமான அனுஜ் புவானியாவிடம், இந்த பொதுநல மனு மீதான நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு பிபிசி செய்தியாளர் உமங் போதார் பேசினார்.

"இந்த வழக்கில் எந்த உரிமை மீறலும் இல்லை. இது தொடர்பான எந்த ஒரு சட்டமும் இல்லை. ஆயினும்கூட ஒரு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற வழக்குகளில் சட்ட தலையீடு தேவையில்லை என்று நீதிமன்றங்கள் உணரவில்லை," என்று புவானியா தெரிவித்தார்.

நீதிமன்றம் இந்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்திருக்க வேண்டும் அல்லது கருணை காட்டும் விதமாக இந்த மனுவை வாபஸ் பெறுமாறு மனுதாரரிடம் சொல்லியிருக்கலாம் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

மனு தாக்கல் செய்தது யார்?

'அக்பர்' மற்றும் 'சீதா' வின் பெயர்களை மாற்றுவது தொடர்பான கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் உத்தரவு சொல்வது என்ன?

பட மூலாதாரம், SANJAY DAS

படக்குறிப்பு, கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் சர்க்யூட் பெஞ்ச்

சர்ச்சை என்னவென்றால் இங்கு ஆண் சிங்கத்தின் பெயர் 'அக்பர்' மற்றும் பெண் சிங்கத்தின் பெயர் 'சீதா'. இந்த சிங்கங்கள் பிப்ரவரி 12-ம் தேதி திரிபுராவில் இருந்து கொண்டு வரப்பட்டு சிலிகுரியில் உள்ள சஃபாரி பூங்காவில் தங்க வைக்கப்பட்டுள்ளன.

இது இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளது என்று கூறி விஸ்வ ஹிந்து பரிஷத் நீதிமன்றத்தை அணுகியது.

விஹெச்பியின் மனு மீதான விசாரணையின் போது, உயர் நீதிமன்ற நீதிபதி செளகத் பட்டாச்சார்யா பல சுவாரசியமான கருத்துகளை தெரிவித்தார். தன் மனசாட்சி சொல்வதைக் கேட்டு விவாதத்தைத் தவிர்க்குமாறு அரசு வழக்குரைஞருக்கு அவர் அறிவுரை கூறினார்.

"மேற்கு வங்கம் ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கித் தவிக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆண் சிங்கம் மற்றும் பெண் சிங்கத்தின் பெயர்கள் தொடர்பான சர்ச்சையை தவிர்த்திருக்கலாம். பொதுமக்கள் வணக்கத்திற்கு உரியவர்களாக கருதும் யாருடைய பெயரையும் எந்த ஒரு விலங்குக்கும் வைக்கக்கூடாது" என்றார் அவர்.

உங்கள் செல்லப் பிராணிக்கு ஏதேனும் இந்து தெய்வம் அல்லது முஸ்லிம் தீர்க்கதரிசியின் பெயரை வைப்பீர்களா என்று மாநில அரசின் வழக்குரைஞர் தேப்ஜோதி செளத்ரியிடம் நீதிமன்றம் வினவியது.

நாட்டின் பெரும் பகுதியினர் சீதையை வழிபடுகின்றனர் என்றும் அக்பர் மதச்சார்பற்ற முகலாய பேரரசர் என்றும் நீதிபதி கூறினார். ரவீந்திரநாத் தாகூரின் பெயரை ஒரு விலங்குக்கு சூட்ட முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

பெயரை மாற்றுவதாக உறுதி அளித்த அரசு

'அக்பர்' மற்றும் 'சீதா' வின் பெயர்களை மாற்றுவது தொடர்பான கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் உத்தரவு சொல்வது என்ன?

பட மூலாதாரம், SANJAY DAS

இந்த இரண்டு விலங்குகளுக்கும் முறையே 2016 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் திரிபுராவில் இந்தப் பெயர்கள் வைக்கப்பட்டன. ஆனால், இங்கு வந்த பிறகுதான் பெயர் குறித்த சர்ச்சை தொடங்கியது என்று மாநில அரசின் வழக்குரைஞர் விசாரணையின் போது வாதிட்டார்.

இரண்டு சிங்கங்களின் பெயர்களும் மாற்றப்படும் என்று நீதிமன்றத்தில் அவர் உறுதியளித்தார். விஹெச்பியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அவர் நீதிமன்றத்தில் முறையிட்டார். ஆனால் அதை பொதுநல வழக்காக தாக்கல் செய்ய மனுதாரருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. இப்போது அந்த மனு, பொதுநல வழக்குகளை விசாரிக்கும் அமர்வு முன் விசாரணைக்கு வரும்.

ஆனால், இந்த விவகாரம் எப்படி உயர் நீதிமன்றத்திற்கு சென்றது? இந்த தகவல் செய்தித்தாள்கள் மூலம் தனக்குக் கிடைத்தது என்பது மனுதாரரின் வாதம்.

சிலிகுரியில் இருந்து வெளியாகும் பெங்காலி செய்தித்தாள், ’சங்கிர் கோஜே சீதா’ (துணையை தேடும் சீதா) என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த விவகாரம் ஆட்சேபத்திற்குரிய வகையில் வெளியிடப்பட்டுள்ளது என்பது விஹெச்பியின் வாதம். இது நாடு முழுவதும் உள்ள இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும். இதுதொடர்பாக நாடு முழுவதிலும் இருந்து புகார்கள் வந்ததாக மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் பரவலான போராட்டம் மற்றும் சமூக கொந்தளிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் அது தெரிவித்தது.

ஒருவேளை சிங்கத்திற்கு சீதா என்று பெயர் வைத்தது அன்பின் காரணமாக இருக்கலாம் என்று இரண்டு நாட்கள் நடந்த விசாரணையின் போது, அட்வகேட் ஜெனரல் வாதிட்டார். மனு தொடர்பாக கேள்வி எழுப்பிய அவர், இது பொதுநல மனு அல்ல என்றார். இந்த விவகாரத்தில் ஏன் பொதுநல மனுவை தாக்கல் செய்யவில்லை என்று மனுதாரரிடம் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

பெயர் மத உணர்வுகளை புண்படுத்துமா?

'அக்பர்' மற்றும் 'சீதா' வின் பெயர்களை மாற்றுவது தொடர்பான கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் உத்தரவு சொல்வது என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

"சிங்கத்திற்கு இந்து தெய்வத்தின் பெயர் சூட்டுவதை எதிர்த்து நாங்கள் மனு தாக்கல் செய்திருந்தோம். இதுகுறித்து மாநில அரசிடம் நீதிமன்றம் பதில் கேட்டு பெயர்களை மாற்ற உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து விலங்கியல் பூங்கா அதிகாரிகளுக்கு விஹெச்பி ஏற்கனவே கடிதம் எழுதியிருந்தது. அதன் பிறகு நாங்கள் மனு தாக்கல் செய்ய வேண்டியிருந்தது. நீதிமன்றத்தின் தீர்ப்பு விஹெச்பி-க்கு கிடைத்த வெற்றி. நீதிமன்றம் எங்கள் வாதங்களை ஏற்றுக்கொண்டது," என்று விஷ்வ ஹிந்து பரிஷத்தின் வழக்குரைஞர் சுபங்கர் தத் கூறினார்.

மத உணர்வுகளைப் புண்படுத்தும் விவகாரத்தில் நீதிமன்றங்கள் தலையிடலாம் என்று சில சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

"மத உணர்வுகளை புண்படுத்தும் பிரச்னை உள்ள நிலையில், சமூக நல்லிணக்கத்தையும் அமைதியையும் நிலைநாட்ட நீதிமன்றம் தலையிடலாம். எனவே, நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானது. இது விலங்குகளுக்கு பெயர் வைப்பது தொடர்பானது மட்டுமல்ல. இது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மத உணர்வுகளை புண்படுத்துவது தொடர்பானது. எக்காரணம் கொண்டும் மத உணர்வுகள் புண்படுத்தப்படக்கூடாது," என்று கொல்கத்தா உயர் நீதிமன்ற வழக்குரைஞர் சுனில் ராய் குறிப்பிட்டார்.

ஆனால், இந்த விஷயத்தில் சிலரது கருத்துகள் வேறாக உள்ளது. இதுபோன்ற விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்று அவர்கள் கூறுகின்றனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)