You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜம்மு காஷ்மீர்: 370-வது சட்டப் பிரிவு ரத்து செல்லுமா? உச்ச நீதிமன்ற தீர்ப்பு விவரம்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்யும் குடியரசுத் தலைவரின் நடவடிக்கை செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டு 4 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் அளித்துள்ளது.
இந்தியாவின் மற்ற மாநிலங்களைப் போலவே ஜம்மு காஷ்மீருக்கும் தனி இறையாண்மை கிடையாது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறியுள்ளார்.
4 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு
சட்டப்பிரிவு 370ஐ நீக்கியதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான தீப்பை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் உள்ளிட்ட ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கியது.
'ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. அரசியலமைப்பின் 1 மற்றும் 370 வது பிரிவுகளில் இருந்து இது தெளிவாகிறது' என்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறினார்.
“சட்டப்பிரிவு 370 தற்காலிகமானது என்று நாங்கள் நம்புகிறோம். இது ஒரு இடைக்கால செயல்முறையை முடிக்க உருவாக்கப்பட்டது. மாநிலத்தில் நிலவும் போர் சூழல் காரணமாக இது ஒரு தற்காலிக ஏற்பாடாகும். இது ஒரு தற்காலிக ஏற்பாடு, எனவே இது அரசியலமைப்பின் 21 வது பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவுடன் இணைவதில் கையெழுத்திட்ட பிறகு ஜம்மு-காஷ்மீருக்கு உள் இறையாண்மை இல்லை என்று நாங்கள் நம்புகிறோம்" என்றும் அவர் கூறினார்.
"அரசியலமைப்பு பிரிவுக்கானது அல்ல"
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தனது தீர்ப்பில் முன்வைத்த விவரங்கள் பின்வருமாறு
- ஒருங்கிணைப்பிற்காகவே 370 (3) கொண்டு வரப்பட்டது. அரசியல் நிர்ணய சபை கலைக்கப்பட்ட பிறகு 370 (3) ஐப் பயன்படுத்த முடியாது என்ற இந்த வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது, ஏனெனில் இது அரசியலமைப்பு ஒருங்கிணைப்புக்கு தீங்கு விளைவிக்கும்.
- குடியரசுத் தலைவர் முடிவுகளின் மீதான மேல்முறையீடுகளை நீதிமன்றம் கேட்க முடியாது. இருப்பினும், எந்த முடிவும் நீதித்துறை மறுஆய்வுக்கு அப்பாற்பட்டது அல்ல. ஆனால் 370(1)(d) இன் கீழ் எடுக்கப்பட்ட பல அரசியலமைப்பு உத்தரவுகள், மத்திய அரசும், மாநிலமும் இணைந்து செயல்படுவதைக் காட்டுகிறது. இந்த செயல்முறை மூலம் ஜம்மு காஷ்மீரில் இந்தியா செயல்படுத்தப்பட்டுள்ளது.
- ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஒருங்கிணைக்கும் செயல்முறை கடந்த காலங்களில் நடந்து கொண்டிருந்ததை இது காட்டுகிறது, எனவே இந்த முடிவை குடியரசுத் தலைவரின் அதிகாரங்களை தவறாக பயன்படுத்துவதாக பார்க்க முடியாது. எனவே, குடியரசுத் தலைவரின் முடிவை நாங்கள் சட்டப்பூர்வமாக்குகிறோம்.
சட்டப்பிரிவு 370 என்றால் என்ன?
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 370வது சட்டப்பிரிவு ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குகிறது. இந்த சட்டப்பிரிவால் இந்திய அரசியலமைப்பு சட்டம் முழுமையாக ஜம்மு காஷ்மீருக்கு பொருந்தாது. இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என்று கூறும் பிரிவு 1 தவிர, ஜம்மு காஷ்மீருக்கு வேறு எந்தச் சட்டமும் பொருந்தாது. ஜம்மு காஷ்மீருக்கு என தனி அரசியலமைப்பு உள்ளது.
அரசியலமைப்பின் எந்தப் பகுதியையும் மாநிலத்திற்குப் பொருந்தக் கூடிய வகையில் மாற்றியமைக்கும் அதிகாரம் இந்தியக் குடியரசுத் தலைவருக்கு இருக்கிறது. ஆனால், இதற்கு மாநில அரசின் ஒப்புதல் கட்டாயம்.
வெளிவிவகாரங்கள், பாதுகாப்பு மற்றும் தகவல் தொடர்பு என மூன்று துறைகள் தொடர்பாக மட்டுமே இந்திய நாடாளுமன்றம் ஜம்மு காஷ்மீரின் சட்டங்களில் திருத்தம் செய்யலாம் என்றும் சட்டப்பிரிவு 370ல் கூறப்பட்டுள்ளது.
மேலும், அந்த திருத்தங்களையும் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதற்கான வரம்புகளையும் சட்டப்பிரிவு 370 கொண்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் அரசியலமைப்பு சபையின் ஒப்புதலுடன் குடியரசுத் தலைவரால் மட்டுமே இந்த விதியை திருத்த முடியும் என்றும் சட்டப்பிரிவில் கூறப்பட்டுள்ளது.
ஜம்மு மற்றும் காஷ்மீரின் அரசியலமைப்புச் சபை 1951-இல் உருவாக்கப்பட்ட 75 உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாகும். இந்திய அரசியலமைப்புச் சபையால் எப்படி இந்திய அரசியலமைச் சட்டம் உருவாக்கப்பட்டதோ, அதேபோல ஜம்மு மற்றும் காஷ்மீருக்கான அரசியலமைப்பை ஜம்மு மற்றும் காஷ்மீரின் அரசியலமைப்புச் சபை உருவாக்கியது. 1956 நவம்பரில், மாநிலத்தின் அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, ஜம்மு காஷ்மீர் அரசியலமைப்புச் சபை நிறுத்தப்பட்டது.
காஷ்மீர் குறித்த பாஜகவின் திட்டத்திற்கு நீண்ட காலமாகவே தடையாக இருந்தது சட்டப்பிரிவு 370தான். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இருந்து 370 மற்றும் 35ஏ ஆகிய பிரிவுகளை நீக்குவோம் என்று பாஜக தனது தேர்தல் அறிக்கைகளில் தொடர்ச்சியாக கூறி வந்தது.
சட்டப்பிரிவு 370 உடன் கூடுதலாக 1954 ஆம் ஆண்டு அரசியலமைப்பில் 35-A சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டது. ஜம்மு மற்றும் காஷ்மீரில் நிரந்தரமாக வசிப்பவர்களுக்கு அரசு வேலை, மாநிலத்தில் சொத்து வாங்குதல் மற்றும் மாநிலத்தில் வசித்தல் உள்ளிட்ட விவகாரங்களில் சிறப்பு உரிமைகளை இந்த சட்டப்பிரிவு வழங்கியது.
சட்டப்பிரிவு 370 எப்படி ரத்து செய்யப்பட்டது?
இந்த சட்டப்பிரிவை ரத்து செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட சட்ட செயல்முறை மிகவும் சிக்கலானதாக இருந்தது.
2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி, குடியரசுத் தலைவர் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து ஒரு உத்தரவு பிறப்பித்தார். மாநிலத்தின் அரசியல் நிர்ணய சபை என்பது மாநிலத்தின் சட்டமன்றத்தைக் குறிக்கும் என்று அந்த திருத்தம் கூறியது.
மேலும், மாநில அரசிற்கு இணையாக மாநில ஆளுநர் இருப்பார் என்றும் அந்த திருத்தம் கூறியது.
இது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த திருத்தம் நிறைவேற்றப்பட்டபோது, ஜம்மு காஷ்மீர் டிசம்பர் 2018 முதல் குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் இருந்தது. ஜூன் 2018-இல், மக்கள் ஜனநாயகக் கட்சிக்கான ஆதரவை பாஜக திரும்பப் பெற்றது. இதையடுத்து 6 மாதங்கள் ஆளுநர் ஆட்சியிலும், பின்னர் குடியரசுத் தலைவர் ஆட்சியிலும் அம்மாநிலம் இருந்தது.
சாதாரண சூழ்நிலையில், குடியரசுத் தலைவருக்கு இந்தத் திருத்தத்தைச் செய்ய மாநில சட்டமன்றத்தின் ஒப்புதல் தேவைப்படும் என்றாலும், குடியரசுத் தலைவர் ஆட்சி இருப்பதன் காரணமாக சட்டமன்றத்தின் ஒப்புதலை பெறுவது சாத்தியமில்லை என்ற சூழல் உருவானது.
இந்த உத்தரவு குடியரசுத் தலைவருக்கும், மத்திய அரசுக்கும் 370வது பிரிவைத் தங்களுக்குத் தகுந்ததாகக் கருதும் விதத்தில் திருத்தும் அதிகாரத்தை வழங்கியது.
அடுத்த நாளான டிசம்பர் 6-ஆம் தேதி, குடியரசுத்தலைவர் மற்றொரு உத்தரவைப் பிறப்பித்தார். அதில் இந்திய அரசியலமைப்பின் அனைத்து விதிகளும் மற்ற மாநிலங்களுக்கு பொருந்துவது போல ஜம்மு காஷ்மீருக்கும் பொருந்தும் என்று கூறினார். இதனால் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது.
பின்னர், ஆகஸ்ட் 9 அன்று, அம்மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியது. ஜம்மு காஷ்மீரில் சட்டப் பேரவை இருக்கும் எனவும், லடாக்கில் இருக்காது எனவும் முடிவு செய்யப்பட்டது.
சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதன் பின்விளைவு என்ன?
2019-ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் ஆகஸ்ட் 5 முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. தொலைபேசி தொடர்புகள் மற்றும் இணைய சேவை முடக்கப்பட்டன. அரசியல் தலைவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் தடுத்து வைக்கப்பட்டனர். சிலர் கைது செய்யப்பட்டனர் அல்லது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.
ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் படையினர் ஜம்மு காஷ்மீரில் குவிக்கப்பட்டனர்.
சில மாதங்களுக்குப் பிறகு ஜனவரி 2020 இல் 2G இணைய சேவை மீண்டும் வழங்கப்பட்டாலும், 4G இணைய சேவை பிப்ரவரி 2021-இல் மட்டுமே மீண்டும் வழங்கப்பட்டது.
ரத்து செய்யப்பட்ட உடனேயே, இந்த நடவடிக்கையை எதிர்த்து பல மனுக்கள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டன. ஆகஸ்ட் 2019-இல், உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு இந்த வழக்கை மாற்றியது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், இந்த வழக்கின் இறுதி வாதங்களை உச்சநீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது.
இந்த வழக்கில் மனுதாரர்கள் யார்? அவர்கள் தரப்பு வாதம் என்ன?
இந்த வழக்கில் 23 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மனுதாரர்களில் சிவில் சமூக அமைப்புகள், வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களும் அடங்குவர்.
மனுதாரர்களில் சிலர் ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாடு, சிவில் உரிமைகளுக்கான மக்கள் சங்கம், தேசிய மாநாட்டுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான முகமது அக்பர் லோன் மற்றும் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் உரையாசிரியர் ராதா குமார் உள்ளிட்டோர் ஆவர்.
சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து, மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்ததை ரத்து செய்ய வேண்டும் என்று மனுதாரர்கள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.
மனுதாரர்களின் கூற்றுப்படி, பிரிவு 370 ஒரு நிரந்தர ஏற்பாடு. அதில் எந்த மாற்றமும் செய்வதற்கு 1956-இல் கலைக்கப்பட்ட ஜம்மு காஷ்மீரின் அரசியல் நிர்ணய சபையின் ஒப்புதல் தேவை. இந்த பிரிவை ரத்து செய்தது சுதந்திரத்தின் போது ஜம்மு காஷ்மீருக்கும் இந்தியாவிற்கும் இடையே போடப்பட்ட இணைப்பு ஒப்பந்தத்திற்கு (Instrument of Accession) எதிரானது என வாதத்தில் கூறப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் மூலம்தான் ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக மாறியது. அதேசமயம் ஜம்மு காஷ்மீருக்கு என தனி இறையாண்மை மற்றும் தன்னாட்சி இருக்கும் என அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்தது.
இது மக்களின் விருப்பத்திற்கு மாறாக செய்யப்படும் அரசியல் செயல் என்று மனுதாரர்கள் வாதிட்டனர்.
அரசியல் நிர்ணய சபையை சட்டப் பேரவையாக மாற்ற முடியாது ஏனென்றால் நிர்ணய சபைக்கும் சட்டப்பேரவைக்கும் அவை செய்யக்கூடிய பணிகளில் வேறுபாடு உள்ளது என அவர்கள் கூறினர்.
குடியரசுத் தலைவர் ஆட்சியில் மாநிலம் இருந்தபோது இந்தத் திருத்தத்தை செய்திருக்க முடியாது என்று மனுதாரர்கள் வாதிட்டனர். ஏனென்றால், சட்டத்திருத்தத்தை நிறைவேற்றி, சட்டப் பேரவையை மாற்றியமைத்து, சட்டப்பிரிவு 370ஐ நீக்கிய ஆளுநர் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஒருவர் என மனுதாரர்கள் வாதிட்டனர்.
மேலும், ஒரு மாநிலம் யூனியன் பிரதேசமாக மாறும்போது அது மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கு சென்றுவிடுகிறது. எனவே, ஒரு மாநிலத்தின் சுயாட்சியைக் குறைத்து, கூட்டாட்சித் தன்மையை பாதிக்கும் என்பதால், ஒரு மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு இல்லை என்றும் அவர்கள் வாதிட்டனர்.
தனது முடிவை மத்திய அரசு எவ்வாறு நியாயப்படுத்தியது?
370வது சட்டப்பிரிவு ஒரு தற்காலிக ஏற்பாடு என்று மத்திய அரசு வாதிட்டது. அரசியல் நிர்ணய சபை கலைக்கப்பட்டதால், சட்டமன்றம் அந்த பொறுப்பை ஏற்க வேண்டும். இல்லையெனில் சட்டப்பிரிவை ஒருபோதும் திருத்த முடியாது என மத்திய அரசு கூறியது.
சட்டப்பிரிவு 370 ரத்து நடவடிக்கை ஜம்மு காஷ்மீரை முழுமையாக இந்தியாவுடன் ஒருங்கிணைத்தது என்று மத்திய அரசு கூறியது. இந்த சட்டப்பிரிவால் இந்திய அரசியலமைப்புச் சட்டம் முழுமையாகப் ஜம்மு காஷ்மீருக்கு பொருந்துவதில்லை. இதனால் மாநிலத்தில் வசிப்பவர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுவதாக அரசு வாதிட்டது.
மேலும், குடியரசுத் தலைவர் ஆட்சியின் போது, மத்திய அரசோ அல்லது ஆளுநரோ பிறப்பிக்கும் உத்தரவுகள், மாநில சட்டமன்றம் இயற்றும் உத்தரவுகளுக்குச் சமம் என்று அரசு கூறியது. எனவே, குடியரசுத் தலைவர் ஆட்சியின் போது சிறப்பு அந்தஸ்தை மாற்றியது சட்டத்துக்குப் புறம்பானது அல்ல என அரசு தெரிவித்தது.
மத்திய அரசிற்கு மாநிலங்களை மறுசீரமைக்க பரந்துபட்ட அதிகாரம் உள்ளது என்றும், மத்திய அரசு ஒரு மாநிலத்தின் பெயர், பகுதி, எல்லைகளை மாற்றியமைக்கலாம் மற்றும் ஒரு மாநிலத்தை யூனியன் பிரதேசங்களாக பிரிக்கலாம் என்றும் மத்திய அரசு வாதிட்டது. சட்டம்-ஒழுங்கு இயல்பு நிலைக்கு திரும்பியவுடன் ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து திரும்ப வழங்கப்படும் என்றும் மத்திய அரசு கூறியது.
சிறப்பு அந்தஸ்தை நீக்கியதன் மூலம் மாநிலத்தின் வளர்ச்சி, சுற்றுலா மற்றும் சட்டம்-ஒழுங்கு மேம்படுத்தப்பட்டது என்றும் எனவே, இது ஒரு நன்மை பயக்கும் நடவடிக்கை என்றும் மத்திய அரசு தனது வாதத்தில் குறிப்பிட்டது.
அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைப்பா?
உச்சநீதிமன்ற தீர்ப்பை முன்னிட்டு, ஜம்மு-காஷ்மீரில் அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாயின. ஆனால், அதனை மறுத்துள்ள ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, "அது முற்றிலும் அடிப்படையற்றது. வீட்டுக்காவலில் யாரும் வைக்கப்படவில்லை. அரசியல் காரணங்களுக்காக யாரும் கைது செய்யப்படவில்லை. இது வதந்தியை பரப்பும் முயற்சி" என்று கூறியுள்ளார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)