You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிபிசி கள ஆய்வு: மழை நின்று 5 நாளான பிறகும் முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதி நிலை இதுதான்...
- எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்
- பதவி, பிபிசி தமிழ்
வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த அதீத கனமழையால் சென்னை மாநகரமே வெள்ளக்காடாக மாறியது. மழை நின்று 5 நாட்களாகி விட்ட போதிலும் வேளச்சேரி, பள்ளிக்கரணை, முடிச்சூர், மேற்கு தாம்பரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் வெள்ளநீர் இன்னும் முழுமையாக வடியவில்லை.
முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் சொந்த தொகுதியான சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கொளத்தூர் தொகுதி எப்படி இருக்கிறது? அங்குள்ள மக்கள் மழை, வெள்ளத்தை சமாளித்தது எப்படி?
இதுதொடர்பான பிபிசி கள ஆய்வில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து கொளத்தூர் தொகுதி மக்கள் சொல்வது என்ன? முதல்வர் தொகுதி என்பதால் தனி கவனம் கிடைத்ததா?
முதல்வரின் கொளத்தூர் தொகுதி நிலை என்ன?
தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் முழங்கால் அளவிற்கு மேல் மழைநீர் சூழ்ந்து இருந்த நிலையில் மூன்று நாட்களுக்குப் பிறகே மழைநீர் வடிந்தது.
கொளத்தூரில் பாலாஜி நகர், குமரன் நகர், அன்னை சத்யா நகர் போன்ற பகுகளில் டிசம்பர் 7ஆம் தேதி மாலைதான் தேங்கிய வெள்ள நீர் மீன் மோட்டாரைக் கொண்டு அகற்றப்பட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
வீட்டைச் சூழ்ந்த கழிவு நீரில் நடந்ததால் காலில் வீக்கம் ஏற்பட்டதாக கூறுகிறார் கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த காமாட்சி.
இது குறித்து அவர் பிபிசியிடம் கூறுகையில், “புயல் மழையால் எனது வீட்டினுள் 3 அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கியது. அத்துடன் கழிவுநீரும் கலந்திருந்தது. இதனை அகற்ற அதிகாரிகள் யாரும் வரவில்லை. நானும் எனது பேரனும் சேர்ந்து வீட்டில் உள்ள வாளியைக் கொண்டுத் தேங்கிய கழிவு நீரை அகற்றினோம்.” என அவர் தெரிவித்தார்.
மேலும் கூறுகையில், “இதனால், எனது பாதப் பகுதியில் வீக்கம் ஏற்பட்டு நடக்க முடியாத சூழலில் இருக்கிறேன். இன்னமும் ஒரு அடிக்குக் கழிவு நீர் தேங்கி இருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. மழை நீர் சூழ்ந்ததால் வீட்டினுள் இருந்த பிரிட்ஜ், மின்விசிறி, ரேடியோ போன்ற மின் சாதனங்கள் முற்றிலுமாக சேதமடைந்து உள்ளன", என்றார்.
தொடர்ந்து பேசிய அவர் இதேபோல் எம்.ஜி.ஆர் நகரில் உள்ள அனைத்து தாழ்வான வீடுகளிலும் வெள்ள நீர் சூழ்ந்ததால் மின்சாதனங்கள் சேதம் அடைந்ததாகத் தெரிவித்தார்.
“முதலமைச்சர் வந்த பிறகே பணிகள் நடந்தன”
மழை பாதிப்பு குறித்து பிபிசி தமிழிடம் பேசிய கொளத்தூரைச் சேர்ந்த இறைச்சி வியாபாரியான முருகேசன், “வெள்ள நீர் இறைச்சிக் கடைக்குள் புகுந்ததால் இறைச்சியை பதப்படுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த நான்கு குளிரூட்டு பெட்டிகள், இறைச்சியை தூய்மை செய்யும் இயந்திரம் உட்பட 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் முற்றிலுமாக சேதம் அடைந்துவிட்டது” என்கிறார் .
அவர் கூறுகையில், “2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் மூன்று நாட்கள் மட்டுமே பாதிப்புகள் இருந்தன. ஆனால் இந்த ஆண்டு 5 நாட்களாக வீட்டை விட்டு வெளியே வர இயலவில்லை.” எனத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், “முதல்வர் தொகுதிக்கு வருகிறார் என தெரிந்தவுடன் அதிகாரிகள் அவசரஅவசரமாக படகுகளை விட்டு மீட்பு பணியில் இறங்கினர். ஆனால் அவர்கள் கொளத்தூர் தொகுதியின் ஒரு பகுதியில் மட்டுமே மீட்புப் பணிகளைச் செய்தனர். குமரன் நகர் பேருந்து நிலையம் வரை படகு இயக்கவில்லை” என அவர் கூறினர்.
இந்த நிலையில், மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பிறகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் டிசம்பர் 6ம் தேதி தனது தொகுதியான கொளத்தூருக்கு வந்தார்.
ஆனால் மழை நீர் அதிகம் தேங்கி இருக்கக்கூடிய பகுதிக்குள்ளே வரவில்லை. முன்புறமாகவே வந்து நலத்திட்டத்தைக் கொடுத்துத் திரும்பிவிட்டார் என அந்தப்பகுதியைச் சேர்ந்த இறைச்சி வியாபாரி முருகேசன் தெரிவிக்கிறார்.
ஒரு குளிரூட்டியைப் பழைய இரும்பு கடையில் போட்டு விட்டோம். மேலும், 2 பிரிட்ஜ்களை ரிப்பேர் செய்ய எலக்ட்ரீசியன்கள் கிடைப்பதும் இப்போது கடினமாக உள்ளது. இதனால், ஆட்கள் கிடக்காமல் ஒரு வாரத்திற்கு மேலாக எங்களது தொழில் முடங்கி இருக்கிறது" என முருகேசன் கூறினார்.
தூய்மை பணியில் இறங்கிய மக்கள்
கொளத்தூரின் அன்னை சத்யா நகர், பாலாஜி நகர், குமரன் நகர், மீன் மார்க்கெட் போன்றப் பகுதியில் சாலை முழுவதிலும் கழிவு நீர் தேங்கி சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் நிலை இருப்பதால் அதனை பொதுமக்களே அகற்றி வருகின்றனர்.
கொளத்தூரை ஒட்டிய மாதவரம் பகுதியைச் சேர்ந்த பிரேம் என்பவர் கூறும் போது, "கொளத்தூரில் 4 அடி அளவுக்கு நீர் தேங்கியது நீர் வடிந்தாலும் கழிவுகள் தேங்கி கிடக்கின்றன. தூய்மை பணியாளர்களை அழைத்து கழிவுகளை தூய்மை செய்ய சொன்னால் தற்போது பெரிய கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கின்றனர். இதனால் எங்களது பகுதியில் இருக்கக்கூடிய கழிவுகளை நாங்களே அகற்றுகிறோம்,”தெரிவித்தார்.
மேலும் கூறுகையில், “மழை வெள்ளத்தால் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன் பல கழிவு பொருட்களும் கலந்து கொசு உற்பத்தி அதிகரித்து நோய் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்திலேயே தூய்மை செய்து வருகிறோம்", என கூறினார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)