You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜம்மு காஷ்மீர்: 370-வது பிரிவு நீக்கப்பட்ட பிறகு 'அமைதி' திரும்புகிறதா? கள நிலவரம் என்ன?
- எழுதியவர், கீர்த்தி தூபே
- பதவி, பிபிசி செய்தியாளர்
“ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பின்னர் அங்கு முன்னெப்போதும் இல்லாத அளவு அமைதியும் வளர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. அப்பகுதில் இயல்பு நிலை ஏற்பட்டுள்ளது. வேலைநிறுத்தம், முழு அடைப்பு, கல்லெறி தாக்குதல் போன்றவை முற்றிலும் நின்றுவிட்டது ”
ஜம்மு- காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டவை இவை.
கடந்த 4 ஆண்டுகளில் காஷ்மீரின் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதோடு மட்டுமல்லாமல் பயங்கரவாதம் 45 சதவீதம் அளவு குறைந்துள்ளது என்றும் பிரமாணப் பத்திரத்தில் மத்திய அரசு கூறியுள்ளது.
சட்டபிரிவு 370 நீக்கப்பட்டதற்கு எதிரான வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் தினமும் நடைபெறவுள்ளது. அரசின் நடவடிக்கை அரசியலமைப்பு விதிகளின்படி இருந்ததா இல்லையா என்பது குறித்து நீதிமன்றம் முடிவு செய்யவுள்ளது.
முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சகம், 19 பக்க பிரமாண பத்திரத்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில், 2019ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது மற்றும் அதனை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பின்னர், அப்பகுதிக்கு பலன் கிடைத்துள்ளது என்றும் சூழல் இயல்பு நிலையில் உள்ளது என்றும் மத்திய அரசு கூறியிருந்தது.
காஷ்மீரில் சூழ்நிலை எப்படி உள்ளது?
நான் காஷ்மீரில் கடந்த ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரை மூன்று மாதங்கள் நிருபராக இருந்தேன். அரசு தனது பிரமாண பத்திரத்தில் கூறியுள்ளது போல் தெற்கு காஷ்மீரின் லால் சௌக், சோபியான், குல்காம், புல்வாமா, ஸ்ரீநகர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் வேலைநிறுத்தம் இல்லை. எந்தவித பந்த்தும் அறிவிக்கப்படவில்லை.
அதிகளவில் சுற்றுலாப் பயணிகளை பார்க்க முடிந்தது. கொரோனா பொது முடக்கத்துக்கு பின்னர் அதிகளவு சுற்றுலாப் பயணிகள் காஷ்மீர் வருகை தந்துள்ளனர் என்பதை அரசின் தரவுகளும் காட்டுகின்றன.
அதே நேரத்தில், 370 சட்டப் பிரிவு நீக்கப்பட்டதற்கு பின்னர் காஷ்மீரின் அமைதியும் வளமும் நிலவுகிறது என்று பிரமாணப் பத்திரத்தில் மத்திய அரசு கூறியுள்ளது தொடர்பாக காஷ்மீரில் உள்ள மக்கள் எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதைக் கண்டறிய முயற்சித்தோம்.
ஸ்ரீநகரை ஒட்டியுள்ள கந்தர்பால் மாவட்டத்தில் வசிக்கும் ஒருவர் தனது பெயரை குறிப்பிட வேண்டாம் என்ற கோரிக்கையுடம் நம்மிடம் பேசத் தொடங்கினார். “மக்களின் மௌனத்தைதான் அரசாங்கம் அமைதி என்று கூறுகிறது. மக்களை பயமுறுத்தி மௌனமாக இருக்கும்படி சாதித்துள்ளது. துணைநிலை ஆளுநரின் ஆட்சியை மறைமுகமாக விமர்சிப்பவர்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு அழைக்கப்படுவார்கள்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “வேலை நிறுத்தங்கள், பந்த் போன்றவை ஏற்படாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் ஹுரியத் அலுவலம் மூடப்பட்டுள்ளது. ஹுரியத் தலைவர்கள் வீட்டுக் காவலிலோ சிறையிலோ உள்ளனர். பொதுவாக அவர்கள் தான் பந்த்துக்கு அழைப்பு விடுப்பார்கள். தற்போது, அவர்கள் துடைத்தெறியப்பட்டுள்ளனர். எல்லாமே இயல்பாக இருப்பதாக கூறினால், மிர்வாய்ஸ் உமர் ஃபரூக் ஏன் வீட்டுக் காவலில் இருக்கிறார். ஏன் எல்லா இடங்களிலும் ராணுவ வீரர்கள் தடுப்பு காவலில் ஈடுபட்டுள்ளனர்?” என்று கேள்வி எழுப்புகிறார்.
மத்திய அரசு கூறுவதுபோல் காஷ்மீர் இருக்கிறதா?
கடந்த 2022ஆம் ஆண்டு பிபிசிக்கு பேட்டியளித்த ஜம்மு காஷ்மீரின் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, பிரிவினைவாத தலைவர்கள் யாரும் வீட்டுக் காவலில் இல்லை என்று தெரிவித்தார். அவரின் கூற்று உண்மையா என்று பிபிசி குழு ஆய்வு செய்தபோது பதில் வேறுவிதமாக வந்தது.
தற்போதும் மிர்வாய்ஸ் உமர் ஃபரூக் வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படுவது இல்லை.
காஷ்மீரில் எந்த ஒரு சுதந்திரமான மனித உரிமை அமைப்புகளும் எஞ்சியிருக்காத நிலையில், செப்டம்பர் 2021 இல் காஷ்மீரைச் சேர்ந்த பிரபல ஆர்வலரான குர்ரம் பர்வேஸ், தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்டு உபா 43(2) (b) போன்ற பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டார். கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளாக பர்வேஸ் சிறையில் இருக்கிறார்.
ஸ்ரீநகரின் டவுன் டவுன் பகுதியில் வசிக்கும் 28 வயது இளைஞர் ஒருவர், மத்திய அரசு காஷ்மீரின் சூழ்நிலை எப்படி இருக்கிறது என்று வெளியுலகத்துக்கு காட்ட விரும்புகிறதோ அப்படியான சூழ்நிலை இங்கு இல்லை.
“எல்லோரும் ஒரே மாதிரியான மனநிலையில் இருந்தால்தான் காஷ்மீரில் நிலைமை இயல்பாக இருக்கிறது என்று சொல்ல முடியும். நாங்கள் சிறைச்சாலையில் இருப்பது போன்ற நிலையில் உள்ளோம் என்று பலர் இன்றும் உணர்கிறார்கள். வேலையின்மை உள்ளது. நீங்கள் செல்லும் எந்த சாலையிலும் ஏராளமான பாதுகாப்பு படையினர் இருப்பார்கள். பாதுகாப்பு என்ற பெயரில், வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டுள்ளது. அரசு வேண்டுமானால் இதனை இயல்பானது என்று கூறலாம். ஆனால், நாங்கள் அப்படி கருதவில்லை” என்றார்.
ரீகல் சௌக் ஸ்ரீநகரின் நெரிசலான சந்தைப் பகுதியாகும். இந்தச் சதுக்கத்தில் கடை நடத்தி வரும் 42 வயது கடைக்காரர், சூழ்நிலை அமைதியாக இருப்பதாகவும், இப்போது வேலைநிறுத்தம் இல்லை என்றும் நம்புகிறார். ஆனால் இந்தச் சூழலை 370வது சட்டப்பிரிவுடன் இணைப்பது சரியல்ல என்றும் அவர் கருதுகிறார்.
“இப்போது வேலைநிறுத்தங்கள் இல்லை, மற்ற விஷயங்கள் இயல்பாக இருப்பதால் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த பெருமை அரசாங்கத்துக்குதான் போய்ச் சேர வேண்டும். ஆனால் இவை அனைத்தையும் சட்டப்பிரிவு 370 உடன் இணைக்கக்கூடாது. பிரிவு 370 என்பது காஷ்மீரிகளின் அடிப்படை உரிமையாகும், அது எங்களிடமிருந்து பறிக்கப்பட்டது” என்று நம்மிடம் அவர் கூறினார்.
காஷ்மீரில் ஒரு பிரிவினர், துணைநிலை ஆளுநரின் ஆட்சியில், ஊழலும் மோசடியும் முன்பை விட குறைந்துள்ளதாக நம்புகின்றனர்.
ஸ்ரீநகரில் வசிக்கும் 70 வயது முதியவர், ஊழியர்கள் தற்போது பணிக்கு வந்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளார். ஒவ்வொரு பணியாளரும் பொறுப்புடன் உள்ளனர்.
உபா சட்டத்தின் கீழ் அதிகளவில் வழக்குகள்
‘அமைதி’ என்ற அரசாங்கத்தின் கூற்றை ஏதோ ஒரு பின்னணியோடு பார்க்க வேண்டும். கடந்த நான்கு ஆண்டுகளில், சட்டவிரோத நடவடிக்கைகள் சட்டம் அல்லது உபா சட்டம் இதுவரை இல்லாத அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
2019க்குப் பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கில் சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம் (UAPA) மற்றும் பொது பாதுகாப்புச் சட்டம் அதாவது PSA ஆகியவற்றின் கீழ் மக்கள் கைது செய்யப்பட்ட சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
காஷ்மீரில் கடந்த 2014ஆம் ஆண்டு உபா சட்டத்தின் கீழ் வெறும் 45 வழக்குகள் மட்டுமே பதியப்பட்ட நிலையில், 2019ல் இந்த எண்ணிக்கை 255 ஆக உயர்ந்துள்ளதும் வெங்கடேஷ் நாயக் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவல் மூலம் தெரியவருகிறது.
ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் கூற்றுப்படி, 2019 ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 2021 வரை, காஷ்மீரில் 2300 க்கும் மேற்பட்ட மக்கள் மீது உபா சட்டம் சுமத்தப்பட்டது மற்றும் அதன் பிரிவுகளின் கீழ் 1200 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2021 ஆம் ஆண்டுக்கான தேசிய குற்றப் பதிவுப் பணியகத்தின் அறிக்கை மூலம், நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான உபா வழக்குகள் ஜம்மு-காஷ்மீரில் பதிவாகியுள்ளன என்று தெரியவந்துள்ளது.
அனைத்து மாநிலங்களோடு ஒப்பிடுகையில் ஜம்மு காஷ்மீர் தான் அதிக எண்ணிக்கையிலான கலவரங்களைக் கண்டுள்ளது. 2021ல் இங்கு 751 கலவர வழக்குகள் பதிவாகியுள்ளன.
பொது பாதுகாப்பு சட்டத்தைப் பொறுத்தவரை 2019 ஆம் ஆண்டிலிருந்து இந்த சட்டத்தின் கீழ் பதியப்படும் வழக்குகள் குறைந்துள்ளன. 2019 ஆம் ஆண்டில் 699 பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழான வழக்குகள் இருந்தன, ஆனால் அது 2020 ஆம் ஆண்டில் 160 ஆகக் குறைந்துள்ளது. 2021 ஆம் ஆண்டில் 95 வழக்குகள் பதிவாகியுள்ளன.
காஷ்மீரில் மனித உரிமை சம்பவங்களை எதிர்த்துப் போராடும் பல வழக்கறிஞர்கள், 2019-ம் ஆண்டு முதல் இது இயல்பாகி வருவதாகக் கூறுகிறார்கள். பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிலர் மீது பதிவான வழக்குகளை உயர் நீதிமன்றம் ரத்து செய்தவுடன், அவர்கள் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இதனால் அவர்கள் சிறையிலேயே இருக்கும் நிலை ஏற்படுகிறது என்று கூறுகின்றனர்.
அந்த வகையில், ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டால் அவர் சிறையில் இருந்து வெளியே வருவது கடினம். காஷ்மீரில் பொது பாதுகாப்பு சட்டம் மற்றும் உபா ஆகிய சட்டங்களை ஒரே நேரத்தில் பாதுகாப்பு அமைப்புகள் பயன்படுத்தி வருகின்றன.
பொது பாதுகாப்பு சட்டம் அல்லது PSA என்பது 1978 ஆம் ஆண்டு ஷேக் அப்துல்லாவின் அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டது. இது மரக்கடத்தலை எதிர்த்துப் போராட அறிமுகப்படுத்தப்பட்டது, ஆனால் 1990 களில் காஷ்மீரில் பயங்கரவாதம் தலைதூக்கியதும், 'தேச விரோத' செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக இச்சட்டம் பயன்படுத்தப்பட தொடங்கியது.
PSA சட்டத்தின் கீழ், குற்றம் சாட்டப்பட்ட நபர் விசாரணையின்றி இரண்டு ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படலாம்.
இதேபோல், உபா வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்ட எந்த ஒரு நபரையும் விசாரணையே இன்றி பல ஆண்டுகள் சிறையில் அடைக்க முடியும். உபா சட்டத்தின் விதிகள் மிகவும் சிக்கலானவை என்பதால், இதில் ஜாமீன் பெறுவதற்கான வாய்ப்புகள் கிட்டத்தட்ட மிகக் குறைவு.
மேலும் UAPA வழக்குகளில் எந்த ஒரு குற்றவாளியும் பல ஆண்டுகள் விசாரணையின்றி சிறையில் இருக்க முடியும். UAPA இன் விதிகள் மிகவும் சிக்கலானவை, எந்தவொரு குற்றவாளியும் ஜாமீன் பெறுவதற்கான வாய்ப்புகள் கிட்டத்தட்ட மிகக் குறைவு.
கந்தர்பால் குடியிருப்பாளர் ஒருவர் நம்மிடம் பேசும்போது, “மக்கள் பொது பாதுகாப்பு சட்டம் மற்றும் உபா சட்டதுக்கு மிகவும் பயப்படுகிறார்கள், நீங்கள் அவர்களிடம் எதாவது கருத்தை கேட்டால், அவர்கள் எதையும் சொல்லத் தயங்குகிறார்கள். ஊடகவியலாளர்கள், மனித உரிமை வழக்கறிஞர்களின் வீடுகள் சோதனையிடப்படுகின்றன. வழக்கு பதிவு செய்யாவிட்டாலும், நிர்வாகத்திற்கு எதிராக எதுவும் பேசவோ, எழுதவோ கூடாது என அஞ்சுகின்றனர். அப்படியிருக்கும் சூழலில் சாமானியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்களா என்பதை நீங்கள்தான் கூறவேண்டும்.
சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதன் இரண்டாம் ஆண்டு நிறைவின் போது, காஷ்மீரின் லால் சௌக் மற்றும் போலோ வியூ பஜாரின் படங்கள் வைரலாகின.
இந்த நாளில், காஷ்மீரில் உள்ள உள்ளூர் கடைக்காரர்கள் 370 வது பிரிவை ரத்து செய்ததற்கு எதிராக தங்கள் கடைகளை மூடியபோது, பாதுகாப்பு வீரர்கள் சில கடைக்காரர்களை தங்கள் கடைகளைத் திறக்கும்படி கட்டாயப்படுத்தினர்.
கடந்த ஆண்டு, அதாவது ஆகஸ்ட் 5, 2022 அன்று நான் ஸ்ரீநகரில் உள்ள ஒரு ஹோட்டலில் இருந்தேன். அன்று நான் கண்விழித்தபோது எனது மொபைலில் போஸ்ட்பெய்டு கனெக்ஷன் இருந்தாலும் இன்டர்நெட் வேலை செய்யவில்லை. எனது சேவை வழங்குனரிடம் பேசியபோது, அரசு உத்தரவின் பேரில் அப்பகுதியில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளதாக அறிந்தேன். இரவு 10 மணி வரை எனது தொலைபேசி இணையம் முடக்கப்பட்டிருந்தது.
முதலீடு எப்படி உள்ளது?
முதலீடு பற்றி பேசும்போது, இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் வெளிநாட்டு முதலீடு காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஸ்ரீநகரில் 6 கோடி டாலர் செலவில் ஷாப்பிங் வளாகத்தை கட்ட துபாயின் எமார் குழுமம் முதலீட் மேற்கொண்டுள்ளது.
வளைகுடா நாடுகள் காஷ்மீரில் முதலீடு செய்வதாக உறுதியளித்துள்ளன அல்லது முன்மொழிந்துள்ளன என்று அரசாங்கத்தால் அடிக்கடி அறிக்கை வெளியிடப்படுகிறது. இருப்பினும், எமார் குழுமத்தின் இந்த முதலீடு தவிர, மற்ற அனைத்து முதலீட்டு திட்டங்களும் தற்போது காகித அளவில் மட்டுமே உள்ளன.
இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ஜம்மு காஷ்மீரில் ரூ.66,000 கோடி முதலீடு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
காஷ்மீரில் உள்ள ஒரு பிரிவினர் உண்மையான நிலைமை மாறிவிட்டதாக நம்பினாலும், 370வது சட்டப்பிரிவை ரத்து செய்யாமலேயே அரசாங்கம் நிலைமையை மாற்றியிருக்கலாம் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
ஸ்ரீநகரில் வசிக்கும் 35 வயது பெண் ஒருவர், “காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியுள்ளது, ஆனால் 370வது பிரிவை ரத்து செய்யாமல் கூட அது சாத்தியமாகியிருக்கும். காஷ்மீரில் நிலவி வந்த பதற்றம் தற்போது தணிந்துள்ளது. .வீட்டை விட்டு வெளியே வரும் போது எங்கும் கலவரம் நடந்ததாக செய்தி இல்லை. நிலைமை ஓரளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது, ஆனால் அது எங்கள் அடையாளத்தைப் பறித்துவிட்டது.” என்று நம்புகிறார்.
கூடுதல் தகவல்கள்: ஸ்ரீநகரில் இருந்து மஜித் ஜஹாங்கிர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்