இந்தியக் காதலியை கரம்பிடித்த பாகிஸ்தான் பெயின்ட்டரின் இப்போதைய நிலை என்ன?

பாகிஸ்தான் ஜோடி
படக்குறிப்பு, இந்தியர்களுக்கும் பாகிஸ்தானியர்களுக்கும் இடையில் எல்லை வெற்றிகரமான தாண்டிய காதல் கதைகள் மிகவும் அரிதானவை
    • எழுதியவர், நேயாஸ் ஃபரூக்
    • பதவி, பிபிசி உலக சேவை

பாகிஸ்தானைச் சேர்ந்த குல்சார் கான் என்பவர் கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து, தனது காதலியைத் திருமணம் செய்துள்ளார்.

ஆனால், அடுத்த 8 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் கைது செய்யப்படும் வரை அவரது உண்மையான அடையாளத்தை அவர் தனது காதலியிடம் இருந்து மறைத்துள்ளார்.

இப்போது அவர் பாகிஸ்தானுக்கு நாடு கடத்தப்படுவாரா அல்லது இந்தியாவிலேயே இருக்க அனுமதிப்பாரா என்ற கேள்வியே அந்த இணையரிடம் உள்ளது

இந்தியர்களுக்கும் பாகிஸ்தானியர்களுக்கும் இடையில் வெற்றிகரமான எல்லைத் தாண்டிய காதல் கதைகள் மிகவும் அரிதானவை. 1947 இல் இந்தியா சுதந்திர நாடாகியதில் இருந்து தனது அண்டை நாடுகளுடன் மூன்று போரை நடத்தியுள்ளது.

அதனால், அண்டை நாடுகளுக்கிடையேயான உறவுகள் பதற்றமானதாகவே நீடிக்கிறது. இதனால், அண்டை நாடுகளில் உள்ள மக்கள் ஒருவரை ஒருவர் பார்ப்பதற்காக விசா பெறுவது மிகவும் கடினமானது.

இதனால், கடந்த காலங்களில், தங்களின் காதலுக்காக எல்லை தாண்டிய பல இந்தியர்களும், பாகிஸ்தானியர்களும் பல சிக்கலில் சிக்கியுள்ளனர். சமீபத்திய ஆண்டுகளில், இணையத்தில் சந்தித்துக்கொண்ட பல காதல் ஜோடிகளின் கதைகள் ஊடகத்தில் கவனத்தை பெற்றுள்ளன.

குல்சார் கான் மற்றும் தௌலத் பி ஜோடி விஷயத்தில், இவர்களின் காதல் கதை ஒரு தவறான தொலைபேசி எண்ணிற்கு அழைத்ததில் இருந்து தொடங்குகிறது.

எல்லை தாண்டிய காதல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, குல்சார் கான் தான் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என முதல் முறையாக தொலைபேசியில் பேசியபோதே கூறியதாக தெரிவிக்கிறார் தெளலத் பீ.

குல்சார் கான் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சியால்கோட் பகுதியைச் சேர்ந்தவர் (இந்தியாவிலும் பஞ்சாப் மாநிலம் உள்ளது, 1947 இல் பிரிவினையின் போது இப்பகுதி பிரிக்கப்பட்டது). தெளலத் பி, ஆந்திரா பிரதேஷ் மாநிலத்தைச் சேர்ந்தவர்.

சவுதி அரேபியாவில் பெயிண்டராகப் பணிபுரிந்து வந்த குல்சார் கான், 2009 ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள தனது முன்னாள் சக ஊழியரை தொலைபேசியில் அழைக்க முயற்சித்ததாக அவர் கூறுகிறார்.

அப்போது, அவரின் நண்பரின் தொலைபேசி எண்ணில் ஒரு சில எண்களை மாற்றி தொடர்பு கொண்டுள்ளார். அது ஒரு தவறான எண்ணாக மாறியது.

"அந்த தவறான தொலைபேசி எண் தான் அவரை என்னுடன் இணைத்தது" என்கிறார் தெளலத் பி.

முகம் தெரியாதவர்களிடம் பேசுவதற்கு தான் முதலில் பயந்ததாகக் கூறும், தெளலத் பீ, “ஆனால், அவர் விடாப்பிடியாக இருந்தார்,” என்கிறார்.

குல்சார் கான் தான் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என முதல் முறையாக தொலைபேசியில் பேசியபோதே கூறியதாக தெரிவிக்கிறார் தெளலத் பீ.

“ஆனால், அது பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் என அவர் குறிப்பிட்டு தெரிவிக்கவில்லை,” என்கிறார் தெளலத் பீ.

மேலும் பேசிய தெளலத் பீ, “அவர் ஒரு கிறிஸ்தவர் என்பதையும் அவர் என்னிடம் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. திருமணமானது முதல் பல ஆண்டுகளாக அவரும் என்னைப் போல ஒரு முஸ்லிம் தான் என நான் நினைத்திருந்தேன்” என்கிறார் தெளலத் பீ.

எல்லை தாண்டிய காதல்
படக்குறிப்பு, சவுதி அரேபியாவில் பணியாற்றி வந்த குல்சார் கான், பல முறை இந்தியா வர விசாவிற்காக முயன்றுள்ளார்.

சௌதியில் இருந்து இந்தியா வந்தது எப்படி ?

அடுத்த இரண்டு ஆண்டுகள், அவர்கள் தொடர்ந்து தொலைபேசியில் பேசி வந்துள்ளனர்.

ஒரு குழந்தையுடன் கைம்பெண்ணாக இருந்த தெளலத் பீ, குல்சார் கானுடன் பேசுவதற்காக தனது உறவினர்களால் கேலி செய்யப்பட்டதாக கூறுகிறார் தெளலத் பீ.

“நான் உயிருடன் இருப்பதைவிட, இறப்பதே நல்லது எனக் கூறுவேன். ஆனால், அவர் வந்து என்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தார்,” என்கிறார் தெளலத் பீ.

சவுதி அரேபியாவில் பணியாற்றி வந்த குல்சார் கான், அங்குள்ள இந்திய தூதரகத்தில் பல முறை செல்லுபடியாகும் விசாவைப் பெற முயன்றதாகக் கூறுகிறார்.

ஆனால், எந்த முயற்சியும் கைகொடுக்காததால், இறுதியாக, அவர் ஒரு இந்திய குடிமகனாக நடிக்க முடிவு செய்துள்ளார்.

"நான் எனது பாஸ்போர்ட்டை தொலைத்து விட்டதாகவும், நான் ஒரு இந்தியன் என்றும், இந்தியாவுக்குத் திரும்ப விரும்புவதாகவும் தூதரக அதிகாரிகளிடம் கூறினேன்," என்கிறார் குல்சார்.

பின்னர், அதே போல் தோற்றமளிக்கும் ஒரு இந்தியரின் கருப்பு மற்றும் வெள்ளை புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை அந்த அதிகாரிகளிடம் காட்டிய குல்சார், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவசரச் சான்றிதழைப் பெற்று, இந்தியாவிற்க நாடு கடத்தப்பட்டுள்ளார்.

பிபிசி சௌதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு கருத்து கேட்டுள்ளது.

சௌதியில் இருந்து ஜனவரி 2011-இல் இந்தியாவிற்கு வந்த குல்சார், ஹைதராபாத்தில் தெளலத்தை சந்தித்து, அடுத்த இரண்டு வாரங்களில் அவரை திருமணம் செய்து கொண்டு ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள நந்தியால் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு குடிபெயர்ந்தனர்.

“அவர் வந்தவுடன், உள்ளூர் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர், ஆனால், அப்போது அவர் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை,” என்கிறார் தெளலத்.

அடுத்த எட்டு வருடங்கள், இருவரும் ஒன்றாக வாழ்ந்து, நான்கு குழந்தைகளைப் பெற்றனர். ஒரு ஓவியராக வாழ்ந்து, இந்தியாவில் தனக்கு தேவையான அடையாள அட்டைகளான ஆதார் கார்டு மற்றும் பிற அடையாள ஆவணங்களும் விண்ணப்பித்து பெற்றுக்கொண்டதாக கூறுகிறார் குல்சார்.

குல்சார் கைதானது எப்படி

குல்சார் கைதானது எப்படி ?

இந்த நேரத்தில் பாகிஸ்தானில் உள்ள தனது குடும்பத்தினருடனான உறவை முற்றிலுமாக துண்டித்துக் கொண்டதாகக் கூறும் குல்சார், தனக்கு என்ன நடந்தது என்பதை அறிய தனது மாமா சௌதி அரேபியாவுக்கு சென்றாக தெரிவிக்கிறார்.

பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் வசிக்கும் அவரது சகோதரி ஷீலா லால், "அவருக்கு விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று நாங்கள் நினைத்தோம்" என பிபிசி உருதுவிடம் கூறினார்.

"நான் எனது புதிய குடும்பத்துடன் வாழ்ந்ததால், நான் என்னை ஒரு இந்தியனாகக் கருதத் தொடங்கினேன்" எனக் கூறும் குல்சார், விரைவில், வீட்டைப் பற்றிய நினைவுகள் திரும்பியதாகவும், மீண்டும் பாகிஸ்தானுக்குச் செல்ல முடிவு செய்ததாகவும் அவர் கூறுகிறார்.

2019 ஆம் ஆண்டில், அண்டை மாநிலமான தெலுங்கானாவில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில், தெளலத் பீ மற்றும் அவர்களது குழந்தைகளுடன் இந்தியாவை விட்டு வெளியேற முயன்றபோது குல்சார் கைது செய்யப்பட்டார். சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்து போலியாக ஆவணங்களை பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

செய்தித் தகவல்களின்படி, பாகிஸ்தானுக்கு குல்சார் மேற்கொண்ட தொலைபேசி அழைப்புகளை உளவுத்துறை அமைப்புகள் கண்காணித்துள்ளன. குல்சார் வழக்கைக் கையாளும் ஹைதராபாத் காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் பிபிசி கருத்து கேட்டிருந்தது. ஆனால், அவர்கள் பதிலளிக்கவில்லை.

அவர் கைது செய்யப்பட்டபோதுதான் குல்சார் பாகிஸ்தானைச் சேர்ந்த கிறிஸ்தவர் என்பதை தெளலத் பீ கண்டுபிடித்துள்ளார். “அவர் பஞ்சாப்பை சேர்ந்தவர் என்று கூறி போலீசாரிடம் சண்டையிட்டேன். அப்போது பாகிஸ்தானிலும் பஞ்சாப் இருக்கிறது என்று சொன்னார்கள், அவர் அங்கிருந்து வருகிறார் என்றும் சொன்னார்கள்," என்கிறார் தெளலத் பீ.

இதுகுறித்து மேலும் பேசிய தெளலத் பீ, முதலில் உண்மையைக் கேட்டு அதிர்ச்சியடைந்ததாகவும், ஆனால் இப்போது சமாதானம் செய்து கொண்டதாகவும் கூறுகிறார்.

எல்லை தாண்டிய காதல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிப்ரவரி 2022 இல், தெலுங்கானா அரசாங்கம் மாநிலத்தில் "சட்டவிரோதமாக குடியேறியவர்கள்" என்று விவரித்தவர்களைத் தடுத்து வைக்க உத்தரவு பிறப்பித்த பின்னர், குல்சார் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

நாடு கடத்தப்படுகிறாரா குல்சார் ?

குல்கார் கான் கைது செய்யப்பட்ட பிறகு, தெளலத் பீ தனது கிராம மக்களிடம் உதவி கேட்டு அவரது சட்ட செலவுகளுக்காக பணம் சேகரித்துள்ளார்.

உள்ளூர் நீதிமன்றம் 2020 இல் அவருக்கு ஜாமீன் வழங்கியது. அவர் நாடு கடத்தப்பட வேண்டுமா என்பது குறித்த வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது.

பிப்ரவரி 2022 இல், தெலுங்கானா அரசாங்கம் மாநிலத்தில் "சட்டவிரோதமாக குடியேறியவர்கள்" என்று விவரித்தவர்களைத் தடுத்து வைக்க உத்தரவு பிறப்பித்த பின்னர் குல்சார் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

அதன் பின்னர், அவரை நாடு கடத்தும் வழக்கில் தீர்ப்பு வரும் வரை அவரை விடுதலை செய்ய மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

குல்சார் தன் மீதான குற்றச்சாட்டை மறுக்கவில்லை, அவர் ஒரு இந்தியராக நடித்த பாகிஸ்தான் குடிமகன் என்பதை ஒப்புக்கொள்கிறார். "எனக்குத் தகுதியானதை நான் பெற்றேன். எனக்கு எந்த புகாரும் இல்லை," என அவர் பிபிசியிடம் கூறினார்.

இப்போது இந்த ஜோடி இந்தியாவிலோ அல்லது பாகிஸ்தானிலோ ஒன்றாக இருக்க முடியுமா என்பதைக் தெரிந்துகொள்ள நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருக்கிறார்கள்.

"எல்லாம் சரியாக நடக்கும் என்று நான் நம்புகிறேன்," என முடித்தார் தெளலத் பீ.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: