ஒருவரின் காதருகே பட்டாசு வெடித்தால் என்ன ஆகும்?

நெரிசலான சந்தைகள், வாகனங்களின் ஹாரன் சத்தம், ஒலி மாசுபாடு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நெரிசலான சந்தைகள், போக்குவரத்தில் சிக்கித் தவிக்கும் வாகனங்களின் ஹாரன் சத்தம், கட்டுமான தளங்கள் போன்ற எண்ணற்ற ஆதாரங்கள் ஒலி மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன
    • எழுதியவர், டிங்கிள் பாப்லி
    • பதவி, பிபிசி செய்தியாளர்

"ஒலி மாசுபாடு என்பது 'ஸ்லோ பாய்சன்' போன்றது, சிறிது சிறிதாக நம்மை காது கேளாமைக்கு இட்டுச் செல்லும் விஷம்..." ஒலி மாசுபாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த டெல்லி மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியின் காது, மூக்கு மற்றும் தொண்டை (ENT) துறையின் இயக்குநர், பேராசிரியர் மற்றும் தலைவர் டாக்டர் ரவி மெஹர் இவ்வாறு கூறினார்.

தீபாவளி பண்டிகை நேரத்தில், காற்று மாசுபாட்டை உணர்வதுடன், வெளிப்படையாக கண்களாலும் பார்க்க முடிகிறது. ஆனால் இந்த பண்டிகைக் காலத்தில் உச்சத்தில் இருக்கும் ஒலி மாசுபாட்டை நாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை, ஆனால் அது நிச்சயமாக நமது உடலில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.

நெரிசலான சந்தைகள், போக்குவரத்து நெரிசலில் வாகனங்களின் ஹாரன் ஒலி, கட்டுமான தளங்களில் எழும் சத்தம் என பல்வேறு விசயங்களால் ஒலி மாசுபாடு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இவ்வாறு வெளிப்படும் உரத்த சத்தங்கள், நமது ஆரோக்கியத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, அதிகப்படியான சத்தம் இதய நோய், உயர் இரத்த அழுத்தம் (BP), தூக்கமின்மை, காது கேளாமை, டின்னிடஸ் (காதுகளில் இரைச்சல்) மற்றும் அறிவாற்றல் குறைபாடு ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிக்கும்.

இதுபோன்ற சூழ்நிலையில் நாம், நம்மை எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருக்க முடியும் என்பதை அறிந்து கொள்வோம்.

நெரிசலான சந்தைகள், வாகனங்களின் ஹாரன் சத்தம், ஒலி மாசுபாடு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவின் பல நகரங்களில் பல்வேறு காரணங்களுக்காக நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளை விட ஒலி மாசுபாடு அதிகமாக உள்ளது.

ஒலி மாசுபாடு என்றால் என்ன, அது எவ்வாறு அளவிடப்படுகிறது?

தேவையற்ற அல்லது அதிக சத்தம் எழுப்பப்படுவதால் ஏற்படும் இரைச்சல் ஒலி மாசுபாடு எனப்படுகிறது. இந்த இரைச்சல் சத்தம், மனிதர்களின் ஆரோக்கியம், வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் தரத்தை எதிர்மறையாக பாதிக்கிறது.

பொதுவாக தொழிற்சாலைகள், நெடுஞ்சாலைகள், ரயில்கள் மற்றும் விமானங்கள் என போக்குவரத்து அமைப்புகள் மற்றும் வெளிப்புற கட்டுமான நடவடிக்கைகளால் அதிக அளவிலான சத்தம் வெளியாகிறது.

ஒலியின் அளவு டெசிபல்களில் அளவிடப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, 65 டெசிபலுக்கு மேல் சத்தம் இருந்தால், அது தொல்லை தரும் காரணியாகக் கருதப்படுகிறது, அதே நேரத்தில் 75 டெசிபலுக்கு மேல் ஒலிப்பது தீங்கு விளைவிக்கும் என்றால், 120 டெசிபலுக்கு மேல் உள்ள சத்தம் காதுகளில் வலியை ஏற்படுத்தக்கூடியவை.

இந்தியாவில் ஒலி மாசுபாடு தொடர்பான அதிகபட்ச டெசிபல் வரம்புகள், பிராந்தியம் மற்றும் பகலா அல்லது இரவா என நேரத்தைப் பொறுத்து மாறுபடும்.

  • தொழில்துறை மண்டலத்தில் இரைச்சல் வரம்பு 75 டெசிபல் (பகல்)/70 டெசிபல் (இரவு) ஆகும்.
  • வணிகப் பகுதிகளில் 65 டெசிபல் (பகல்)/55 டெசிபல் (இரவு) மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் 55 (பகல்)/45 டெசிபல் (இரவு) அனுமதிக்கப்படுகிறது.
  • கூடுதலாக, மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளைச் சுற்றியுள்ள அமைதி மண்டலங்கள், பகலில் 50 டெசிபல் மற்றும் இரவில் 40 டெசிபல் என்ற கடுமையான வரம்புகளைக் கொண்டுள்ளன.

இந்த வரம்புகள் ஒலி மாசுபாடு விதிகளில் வரையறுக்கப்பட்டுள்ளன, இதன் கீழ் பகல் நேரம் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை என்றும் இரவு நேரம் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை என்றும் வரையறுக்கப்படுகிறது.

நெரிசலான சந்தைகள், வாகனங்களின் ஹாரன் சத்தம், ஒலி மாசுபாடு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, 65 டெசிபலுக்கு மேல் சத்தம் தொல்லை தரும் காரணியாகக் கருதப்படுகிறது

ஒலி மாசு தொடர்பான வரம்புகள் மற்றும் விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா?

2017-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) விரிவான ஒலி மாசு கண்காணிப்பு அறிக்கையின்படி, இந்த ஒலி வரம்புகள் 89 சதவீத இடங்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.

இந்தியாவின் ஏழு முக்கிய நகரங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த அறிக்கையின்படி, 70 இடங்களில் 62 இடங்களில் மிக அதிக அளவு ஒலி மாசு இருப்பது கண்டறியப்பட்டது.

குறிப்பாக பெரும்பாலான குடியிருப்பு மற்றும் அமைதி மண்டலங்கள் பாதிக்கப்படுகின்றன, பல வணிக மற்றும் தொழில்துறை பகுதிகளில் சத்த அளவுகள் சட்ட வரம்புகளை விட 8-20 டெசிபல் வரை அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.

அமைதி மண்டலங்கள் சிலவற்றில், நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளை விட 10-25 டெசிபல்கள் வரை அதிக அளவில் இரைச்சல் இருந்தன.

ஒட்டுமொத்தமாக, பெருநகரங்களில் சராசரியாக சுற்றுப்புற ஒலியின் அளவு 60-75 டெசிபல்களுக்கு இடையில் இருந்தது, இது பாதுகாப்பான அளவை விட மிக அதிகமாகும். அதிலும் குறிப்பாக, பகலில் ஒலி மாசு அதிகமாக இருக்கிறது.

2017-இல் வெளியான அறிக்கை, CPCB தனது வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட கடைசி தரவுத் தொகுப்பாகும், அதன் பிறகு ஒலி மாசு தொடர்பாக நாடு தழுவிய புதிய கணக்கெடுப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் விஞ்ஞானியும், ஏர் லேப் பிரிவுத் தலைவருமான டாக்டர் தீபங்கர் சாஹாவிடம் பிபிசி பேசியது. "இந்தியாவில் பல காரணங்களால் நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளை விட ஒலி மாசுபாடு அதிகமாக உள்ளது. நகரங்களிலும், அதிகரித்து வரும் போக்குவரத்தும், உயரமான கட்டடங்களும் ஒலி அதிகரிப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உயரமான கட்டடங்கள் சத்தத்தை எதிரொலிக்கின்றன, இதனால் ஒலி மாசு அதிகரிக்கிறது," என்று அவர் கூறினார்.

வளர்ந்து வரும் இந்தப் பிரச்னையைச் சமாளிக்க அரசாங்கம் சில திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகக் கூறும் டாக்டர் தீபங்கர் சாஹா, அதனை விளக்குகிறார்.

"பண்டிகைக் காலங்களில் ஒலி மாசுபாடு மேலும் அதிகரிக்கிறது. உதாரணமாக, தீபாவளிக்கு முன்பு போக்குவரத்து அதிகரிப்பது மற்றும் தீபாவளியின் போது பட்டாசு வெடிப்பதால் ஒலி மாசு வழக்கத்தைவிட பல மடங்கு அதிகரிக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில், அரசாங்கம் நிர்ணயித்த அளவுகளில் மக்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்".

ஹாரன் சத்தம், ஒலி மாசுபாடு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நிபுணர்களின் கூற்றுப்படி, சத்தம் அதிகமாகும்போது, ​​அது உள் காதில் உள்ள உணர்திறன் செல்களை சேதப்படுத்தும்

ஆரோக்கியத்தில் தாக்கம்

ஒலியை கணக்கிடும்போது, டெசிபல் அளவுகோல் ஒரே நேர்கோட்டில் அளவிடப்படுவதில்லை, இது மடக்கை அளவை ஒன்றை அடிப்படையாகக் கொண்டது.

இதன் பொருள் சத்தம் 1 டெசிபல் அதிகரித்தால், அது உணரப்படாமல் போகலாம், ஆனால் அதுவே 10 டெசிபல் அதிகரித்தால், அது இரண்டு மடங்கு அதிகமாக உணரப்படும்.

அதாவது, ஒலியின் அளவு 50 டெசிபலில் இருந்து 51 டெசிபலாக அதிகரிக்கும்போது, பாதிப்பின் அளவும் சிறிதளவே இருக்கும். ஆனால் 50-இல் இருந்து ஒலி 60 டெசிபலாக அதிகரித்தால், அது 2 மடங்காக உணரப்படும்.

லூதியானா கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியின், காது-தொண்டை (ENT) துறைத் தலைவர் டாக்டர் நவ்நீத் குமார் கூறுகையில், "70 டெசிபலுக்கு மேல் தொடர்ந்து சத்தம் இருந்தால், அந்த சூழலில் வசிப்பவர்களுக்கு மன அழுத்தம், தூக்கமின்மை, உயர் இரத்த அழுத்தம், இதயப் பிரச்னைகள் மற்றும் கேட்கும் திறன் இழப்பு ஏற்படலாம். ஒலி, தொடர்ந்து நீண்ட நேரமாக 85 டெசிபலுக்கு மேல் இருந்தால், அது ஒரு நபரை நிரந்தரமாக காது கேளாதவராக மாற்றிவிடும்."

அதிகப்படியான சத்தம் மன உளைச்சலை ஏற்படுத்தும் என்று டாக்டர் நவ்நீத் மேலும் விளக்குகிறார். இது இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம், தூக்கக் கலக்கம், காது கேளாமை, டின்னிடஸ் (காதுகளில் சத்தம்) மற்றும் அறிவாற்றல் குறைபாடுகள் ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிக்கும்.

"அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட வரம்புகள் முழுமையான ஆய்வுகளுக்குப் பிறகு தீர்மானிக்கப்படுகின்றன, எனவே மக்கள் அவற்றைப் பின்பற்றுவது அவசியம். ஒலி மாசுபாட்டால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்" என்று அவர் கூறினார்.

"ஒருவரின் காதுக்கு அருகில் திடீரென பட்டாசு வெடித்தால், கேட்கும் திறன் குறையலாம் அல்லது காதுகளில் தொடர்ந்து சத்தம் கேட்டுக் கொண்டிருக்கலாம். இதுபோன்ற சூழ்நிலையில், மருத்துவ ஆலோசனையைப் பெறுவது அவசியம்."

ஒலி மாசு, பட்டாசு, காது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இசையைக் கேட்கும்போது '60 சதவீத விதி'யைப் பின்பற்றவும்

தவிர்க்க என்ன செய்யலாம்?

டெல்லியில் உள்ள மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியின் காது, மூக்கு, தொண்டை (ENT) துறைத் தலைவர் டாக்டர் ரவி மெஹர், சத்தத்தால் ஏற்படும் காது கேளாமையே, இன்று காது கேளாமைக்கு மிகவும் பொதுவான ஆனால் தவிர்க்கக் கூடிய காரணங்களில் ஒன்றாக இருப்பதாகக் கூறுகிறார்.

"நமது காதுகள் நீண்ட நேரம் உரத்த ஒலிகளை தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கும் போது காதுகள் பாதிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக 85 டெசிபல்களுக்கு மேல் சத்தம் தொடர்ச்சியாக (போக்குவரத்து அல்லது உரத்த இசை) அல்லது மிகவும் உரத்த வெடிப்பு, பட்டாசு அல்லது துப்பாக்கிச் சூடு சத்தம் போன்றவற்றைக் கேட்கும்போது காது கேளாமை என்ற நிலை ஏற்படுகிறது" என்று அவர் கூறுகிறார்.

"சத்தம் அதிகமாகும்போது, ​​அது காதின் உட்புறத்தில் உள்ள உணர்திறன் செல்களை சேதப்படுத்தும். இந்த செல்கள் சேதமடைந்தால், கேட்கும் திறனை நிரந்தரமாக இழக்க நேரிடும்."

கேட்கும் திறன் இழப்பு பெரும்பாலும் இரண்டு காதுகளையும் சமமாக பாதிக்கிறது என டாக்டர் மெஹர் விளக்குகிறார். நீரிழிவு நோய், புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்ற பல காரணிகள் இந்தப் பிரச்னையை மேலும் தீவிரமாக்கும்.

"இந்த பிரச்னை, காதுகளை மட்டும் பாதிப்பதில்லை. உடலின் பிற பாகங்களையும் பாதிக்கிறது. ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும், இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும், தூக்கத்தை சீர்குலைக்கும், மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வை ஏற்படுத்தும்."

"காதுக்கு அருகில் வெடிப்பு அல்லது திடீரென் கேட்கும் அதீத சத்தம், காதுகுழாய் அல்லது உள் காதை சேதப்படுத்தி, உடனடி கேட்கும் திறனை இழக்கச் செய்யலாம்" என்று டாக்டர் மெஹர் கூறுகிறார்.

இந்த வகையான சேதத்திற்கு எந்த சிகிச்சையும் இல்லை என்று அவர் கூறுகிறார், எனவே விழிப்புணர்வுடன் இருப்பதே சிறந்த அணுகுமுறையாகும்.

ஒலி மாசு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய சட்டம் சாதாரண குடிமக்களுக்கு ஒலி மாசுபாட்டிற்கு எதிராக புகார் அளிக்க உரிமை அளிக்கிறது

மருத்துவர்களின் பரிந்துரைகள் என்ன?

சத்தம் அதிகமாக இருக்கும் இடங்களில் காதுகளை மூடும் சாதனங்களை (earplugs/earmuffs) அணியுங்கள்.

பணியிடத்தில் ஒலி அளவைக் கண்காணிக்கவும்

தொடர்ந்து செவிப்புலன் திறன் பரிசோதனைகளை மேற்கொள்ளுங்கள்.

இசையைக் கேட்கும்போது "60 சதவீத விதியை" பின்பற்றுங்கள், ஒலியளவை 60% க்கும் குறைவாகவும், கால அளவை 60 நிமிடங்களுக்கும் குறைவாகவும் வைத்திருங்கள்.

இந்தியாவில், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் நீதிமன்றங்களுக்கு அருகில் ஒலிபெருக்கிகள், ஹாரன்கள் மற்றும் பட்டாசுகளைப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகள் "அமைதி மண்டலங்களாக" அறிவிக்கப்பட்டுள்ளன.

"இந்த விதிகளைப் பின்பற்றுவதும் விழிப்புணர்வைப் பரப்புவதும் நமது செவித்திறனைப் பாதுகாப்பதற்கான மிகச் சிறந்த வழியாகும். ஒரு முறை செவித்திறனை இழந்துவிட்டால், அதை மீண்டும் மீட்கமுடியாது. எனவே உங்கள் காதுகளை இன்று பாதுகாத்துக் கொண்டால் தான் எதிர்காலத்தில் உங்கள் செவிப்புலன் சரியாக இருக்கும்" என்று டாக்டர் மெஹர் கூறுகிறார்.

ஒலி மாசுபாட்டிலிருந்து பாதுகாக்க சட்டப்பூர்வ வழிகள், உங்கள் உரிமைகள் என்ன?

இந்தியாவில் ஒலி மாசுபாட்டைக் கட்டுப்படுத்த தெளிவான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

ஒலி மாசுபாடு (ஒழுங்குமுறை மற்றும் கட்டுப்பாடு) விதிகள், 2000-த்தின் படி, சிறப்பு அனுமதியின்றி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலிபெருக்கிகள் அல்லது அதிக ஒலியைப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.

இந்த தீபாவளி சமயத்தில் குடியிருப்புப் பகுதிகளில் சத்தத்தின் அளவு 45 டெசிபல்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும், அதே சமயம் அமைதி மண்டலங்களில் (மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் நீதிமன்றங்களுக்கு அருகிலுள்ள பகுதிகள்) இந்த வரம்பு 40 டெசிபல்களாக இருக்கவேண்டும்.

எங்கு புகார் அளிக்கலாம்?

உங்கள் குடியிருப்புப் பகுதியில் ஒலிக் கட்டுப்பாட்டின் வரம்புகள் மீறப்பட்டால், உள்ளூர் காவல் நிலையத்திலோ அல்லது மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்திலோ (SPCB) புகார் அளிக்கலாம்.

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆன்லைன் போர்டல்கள் மூலமாகவும் புகாரளிக்கலாம்.

ஒலி மாசுபாடு பின்வரும் சட்டங்களின் கீழ் கட்டுப்படுத்தப்படுகிறது:

  • சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம், 1986 (பிரிவு 15)
  • ஒலி மாசுபாடு (ஒழுங்குமுறை மற்றும் கட்டுப்பாடு) விதிகள், 2000

இந்திய தண்டனைச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளை மீறினால் என்ன நடவடிக்கை எடுக்க முடியும்?

  • காவல்துறை அல்லது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஒலி உபகரணங்களை பறிமுதல் செய்து உடனடியாக நிறுத்த அறிவிப்பை வெளியிடலாம்.
  • முதல் முறை மீறுபவருக்கு 1 லட்ச ரூபாய் வரை அபராதம் அல்லது 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் (பிரிவு 15, சுற்றுச்சூழல் சட்டம்).
  • மீண்டும் மீண்டும் விதிமுறைகளை மீறினால் அதிக அபராதம் மற்றும் அதிக ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
  • விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரம் பெற்ற காவல்துறை, மாவட்ட நீதிபதி அல்லது மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் நீங்கள் சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி புகாரளிக்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு