ரஷ்ய அதிபர் புதினின் இந்திய வருகை பற்றி சர்வதேச ஊடகங்கள் கூறுவது என்ன?

பிரதமர் நரேந்திர மோதி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த ஆண்டு ஜூலையில் பிரதமர் நரேந்திர மோதி ரஷ்யாவுக்குச் சென்றிருந்தார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் டிசம்பர் 4-5 தேதிகளில் இந்தியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார். அப்போது அவர் பிரதமர் நரேந்திர மோதியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்.

2021-ஆம் ஆண்டிற்குப் பிறகு, இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாட்டிற்காக விளாடிமிர் புதின் இந்தியாவிற்கு வருவது இதுவே முதல் முறை.

இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே ஒரு 'சிறப்பு வாய்ந்த உத்தி கூட்டாண்மை' உள்ளது. பல முக்கியமான தருணங்களில் இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று ஆதரவாக இருந்துள்ளன.

அதிபர் புதினின் இந்த பயணத்தின்போது, இந்தியாவும் ரஷ்யாவும் கூடுதல் எஸ்-400 ஏவுகணை அமைப்புகள் மற்றும் சுகோய்-57 போர் விமானங்கள் தொடர்பான பாதுகாப்பு ஒப்பந்தங்களில் பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்லலாம்.

அத்துடன், ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மீதான அமெரிக்கத் தடைகளுக்கு மத்தியில் எரிசக்தித் துறையில் ஒத்துழைப்பு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படலாம்.

அதிபர் புதினின் இந்தப் பயணம், ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் அணுசக்தி, தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகத் துறைகளில் தங்கள் இருதரப்பு உறவுகளை சீராய்வு செய்ய ஒரு வாய்ப்பை அளிக்கும்.

ரஷ்யாவின் அரசுத் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ரஷ்யாவின் வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் யூரி உஷாகோவ் சர்வதேசப் பிரச்னைகள் குறித்து ஆழமான விவாதம் நடத்துவதற்கான தேவையிருக்கிறது என்றும் அதிபரின் பயணம் "மகத்தானதாகவும், வெற்றிகரமானதாகவும்" இருக்கும் என்றும் கூறினார்.

யுக்ரேன் போருக்கு மத்தியில் ரஷ்யாவை தனிமைப்படுத்த மேற்கத்திய நாடுகள் கொடுத்த அழுத்தத்தை இந்தியா தவிர்த்து வருகிறது.

அதிபர் டிரம்ப் இந்தியா மீது அதிக வரிகளையும் தடைகளையும் விதித்துள்ளார், இது அமெரிக்கா மற்றும் இந்தியாவின் உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதினின் இந்தப் பயணம் இந்தியா மற்றும் ரஷ்யாவின் பாதுகாப்பு உறவுகளை மேலும் பலப்படுத்தும் என்றும், உலகளாவிய பாதுகாப்பிற்கு ஒரு புதிய வடிவம் கொடுக்கும் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்தியாவின் தேசிய தொலைக்காட்சியான தூர்தர்ஷனிடம் பேசிய முன்னாள் தூதரக அதிகாரி மஞ்சிவ் சிங் புரி, "சமீபத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் போது ரஷ்யாவிலிருந்து பெறப்பட்ட ஆயுதங்கள், குறிப்பாக எஸ்-400, இந்தியாவிற்கு ஒரு முக்கியப் பங்கை வகித்தது. மிக மேம்பட்ட போர் விமானமான எஸ்யூ-57 குறித்து அனைத்து வகையான விவாதங்களும் நடந்து வருகின்றன. இரு நாடுகளும் வரலாற்று ரீதியாக கூட்டாளிகள் மட்டுமல்லாமல், அணுசக்தி போன்ற பல துறைகளிலும் புதிய கூட்டாண்மையை நோக்கி நகர்கின்றன," என்று கூறினார்.

பிரதமர் நரேந்திர மோதி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரஷ்ய அதிபர் புதின் கடைசியாக 2021-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தார். இந்தக் காட்சி ஹைதராபாத் இல்லத்தில் அவர் பிரதமர் மோதியைச் சந்தித்தபோது எடுக்கப்பட்டது.

யுக்ரேன் மீது ரஷ்யா படையெடுப்பதற்கு முன்பு வரை இந்தியா மற்றும் ரஷ்யாவின் தலைவர்கள் ஆண்டுதோறும் உச்சிமாநாடுகளை நடத்தி வந்தனர்.

இருப்பினும், யுக்ரேன் போரில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதாக அதிபர் புதின் அச்சுறுத்திய பின்னர், டிசம்பர் 2022-இல் இந்திய தலைமை புதினுடன் சந்திப்பை நடத்தவில்லை என்று உயர் மட்ட வட்டாரங்களை மேற்கோள் காட்டித் ப்ளூம்பெர்க் ஒரு செய்தியில் தெரிவித்தது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ரஷ்யா பிரிக்ஸ் மாநாட்டை நடத்தியபோது புதினும் மோதியும் சந்தித்துக் கொண்டனர். யுக்ரேன் போர் தொடங்கிய பிறகு, பிரதமர் நரேந்திர மோதி தனது முதல் ரஷ்யப் பயணத்தை ஜூலை 2024-இல் மேற்கொண்டார், அப்போது இரு தலைவர்களும் சந்தித்துக் கொண்டனர். இது நரேந்திர மோதியின் மூன்றாவது பதவிக் காலத்தில் மேற்கொண்ட முதல் இருதரப்புப் பயணமாகும்.

யுக்ரேனில் ஒரு குழந்தைகள் மருத்துவமனையின் மீது ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதலுக்கு மறுநாள், சர்வதேச அளவில் சீற்றம் நிலவிய நிலையில், புதின் மற்றும் மோதி சந்தித்துக் கொண்டனர். அந்தப் பேச்சுவார்த்தையின்போது மோதியை ஆரத்தழுவிய புதின், அவரைத் தன் 'நண்பர்' என்று அழைத்தார்.

நரேந்திர மோதியின் இரண்டு ரஷ்யப் பயணங்களுக்குப் பிறகு புதின் இந்தியாவிற்கு வர வாய்ப்பு இருப்பது குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

ரஷ்யா-இந்தியா உறவுகள் மற்றும் புதினின் உத்தேச இந்தியா வருகை குறித்து வெளியான ஒரு கட்டுரையில் ப்ளூம்பெர்க் பின்வருமாறு எழுதியது: "இந்த ஆண்டு பிரதமர் மோதி ரஷ்யாவில் புதினைச் சந்தித்தபோது, அமெரிக்காவில் கவலைகள் எழுந்தன. ஏனெனில் யுக்ரேன் போரின் காரணமாக ரஷ்ய அதிபரை அமெரிக்கா தனிமைப்படுத்த விரும்புகிறது. இருப்பினும், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கைச் சமநிலைப்படுத்த இந்தியா தேவை என்பதை அமெரிக்கா புரிந்துகொள்கிறது."

இந்தியா-ரஷ்யாவின் பழைய நட்பு

பிரதமர் நரேந்திர மோதி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்

பட மூலாதாரம், Getty Images

பனிப்போர் காலத்திலிருந்தே இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் நெருங்கிய உறவுகள் இருந்து வருகின்றன. ரஷ்யாவின் ஆயுதங்களை அதிகம் வாங்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

யுக்ரேன் போருக்குப் பிறகு ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மீது அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் தடை விதித்த நிலையில், ரஷ்ய எண்ணெயை மிக அதிகமாக வாங்கும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

விளாடிமிர் புதினின் உத்தேசப் பயணம் குறித்து ப்ளூம்பெர்க் தனது கட்டுரையில், "கடந்த மார்ச் மாதம் யுக்ரேனில் நடந்த போர்க் குற்றங்களுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி) அவருக்கு எதிராகக் கைது ஆணை பிறப்பித்திருந்த நிலையில், புதின் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டால், வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வதில் அவருக்கு நம்பிக்கை அதிகரித்து வருவதை காட்டும்." என்று கூறியது.

இந்தியா ஐசிசியில் உறுப்பினராக இல்லை. எனவே, அதன் பிடிவாரண்டை செயல்படுத்தவேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு இல்லை. இருப்பினும், 2023-இல் இந்தியாவில் ஜி-20 உச்சி மாநாடு நடந்தபோது புதின் அதில் பங்கேற்கவில்லை.

எனினும், செப்டம்பர் 2024-இல் புதின் மங்கோலியாவிற்குச் சென்றபோது, ஐசிசி-யின் பிடிவாரண்ட்டை அந்த நாடு செயல்படுத்தவில்லை. மங்கோலியா ஐசிசி-யின் உறுப்பு நாடு என்றபோதிலும், பிடிவாரண்ட்டை அமல்படுத்தத் தவறியதற்காக அது சர்வதேச விமர்சனத்தை எதிர்கொண்டது.

டிசம்பர் 4-5 தேதிகளில் நடைபெறவிருக்கும் 23-வது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சிமாநாட்டிற்காக புதின் இந்தியாவுக்கு வரவிருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள சர்வதேச ஊடகங்கள், இது ஒரு கடினமான நேரத்தில் நடக்கிறது என்று கூறுகின்றன.

ஃபாரீன் பாலிசி பத்திரிகை ஒரு கட்டுரையில், "புதின் வருகையையொட்டி இந்தியா தனது உத்தி மூலதனத்தை கணிசமாக செலவிட்டுள்ளது," என்று கூறியது.

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இந்த மாதம் மாஸ்கோ சென்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு குழுவுடன், புதினையும் சந்தித்தார்.

முன்னதாக ஆகஸ்டில் ஜெய்சங்கர் மற்றும் இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரும் மாஸ்கோ சென்றிருந்தனர்.

புதின் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையேயான பேச்சுவார்த்தை சமீபத்தில் தோல்வியடைந்த நிலையில், புதினின் இந்தியப் பயணம் அமைந்துள்ளது. ஆகஸ்டில் அலாஸ்காவில் நடந்த டிரம்ப் மற்றும் புதின் இடையேயான சந்திப்பு எந்தவொரு குறிப்பிடத்தக்க பலனையும் தரவில்லை.

அலாஸ்காவில் நடந்த இந்தச் சந்திப்பிற்குப் பிறகு, வரையறுக்கப்பட்ட அளவில் நேட்டோ கூட்டாளிகள் மூலம் அமெரிக்கா தொடர்ந்து யுக்ரேனுக்கு ஆயுதங்களை அனுப்பி வருகிறது. இந்த மாதம், அமெரிக்கா முன்பு வழங்கிய பேட்ரியாட் ஏவுகணைகளின் மேம்படுத்தப்பட்ட அமைப்புகளையும் யுக்ரேனுக்கு வழங்கியுள்ளது.

டிரம்பின் நடவடிக்கை என்னவாக இருக்கும்?

பிரதமர் நரேந்திர மோதியுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கியதற்காக அபராதமாக இந்தியா மீது டிரம்ப் 25% கூடுதல் வரிகளை விதித்தார்.

ஃபாரீன் பாலிசியில் வெளியான கட்டுரையில், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் ஹூவர் இன்ஸ்டிட்யூட்டின் மூத்த ஆய்வாளரான சுமித் கங்குலி , "இந்தியா மற்றும் ரஷ்யா இரண்டும் அமெரிக்காவின் அழுத்தத்தை உணர்வதால், ஒருவருக்கொருவர் நெருங்கி வருகின்றன," என எழுதினார்.

யுக்ரேன் போர் தொடர்பாக ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனின் கடுமையான கொள்கையை டிரம்ப் பின்பற்றவில்லை. மேலும், யுக்ரேன் கணிசமான சலுகைகளை வழங்க வேண்டிய ஒரு அமைதித் திட்டத்தையும் டிரம்ப் சமீபத்தில் அறிவித்தார். இருப்பினும், அமெரிக்கா தொடர்ந்து யுக்ரேனுக்கு ஆதரவளித்து வருவதால் ரஷ்யா அதிருப்தியில் உள்ளது.

இந்தியா ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்குகிறது, இதன் காரணமாக டிரம்ப் நிர்வாகத்தின் இலக்கில் இந்தியா இருந்தது. இருப்பினும், மே மாதத்தில் பாகிஸ்தானுடனான ஒரு குறுகிய ஆனால் தீவிரமான ராணுவ மோதலை முடிவுக்குக் கொண்டுவந்த பெருமையை மோதி டிரம்புக்கு கொடுக்காததே டிரம்ப்பின் கோபத்திற்குக் காரணம் என்று பல ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.

ஃபாரீன் பாலிசி கட்டுரையில், "இந்தியா-பாகிஸ்தான் நெருக்கடி முடிவுக்கு வந்த பிறகு, டிரம்ப் விடுத்த நான்கு தொலைபேசி அழைப்புகளுக்கு மோதி பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. உடனடியாக, டிரம்ப் இந்தியாவின் பல தயாரிப்புகளுக்கு 50% வரை வரிகளை விதித்தார், மேலும் இரு நாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு உறவுகள் சரிந்தன," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இந்தியா-அமெரிக்கா உறவுகளில் ஏற்பட்டுள்ள இந்த வீழ்ச்சிக்கு மத்தியில், ரஷ்யாவுக்கு இந்தியா வெளிப்படையாக கைகொடுப்பது ஆச்சரியமளிக்கவில்லை.

இந்தக் கட்டுரையில், "அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் உச்சிமாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று பல செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன. இந்தச் சந்திப்பின் போது சுகோய்-57 போர் விமானங்கள் தொடர்பான ஒப்பந்தம் உட்படப் பல ஒப்பந்தங்கள் மற்றும் உடன்படிக்கைகள் விவாதிக்கப்படும்," என்று கூறப்பட்டுள்ளது.

புதினின் இந்த இந்தியப் பயணத்தின்போது, இரு நாடுகளுக்கு இடையே விவாதிக்கப்படும் அனைத்து ஒப்பந்தங்கள் மற்றும் உடன்படிக்கைகளில் கையெழுத்திடப்படாவிட்டாலும், சில விஷயங்களில் முடிவுகள் எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதினின் டெல்லி பயணம் மூலம், "தங்களுக்கு சக்திவாய்ந்த நண்பர்கள் உள்ளனர்" என்ற செய்தியை இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் உலகிற்குச் சொல்லும்.

"நிச்சயமாக இந்தச் செய்தி அமெரிக்காவை அடையும், ஆனால் இந்தியா மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் அதிகரித்து வரும் இந்த புதிய நெருக்கத்திற்கு டிரம்ப் எப்படி பதிலளிப்பார் என்பது நிச்சயமற்றது," என ஃபாரீன் பாலிசி எழுதியுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு