இந்தியாவுக்கு நவீன ஆயுதங்களை விற்க அமெரிக்கா தயக்கமா? ஜெய்சங்கர் கூறியது என்ன?

ஜெய்சங்கர் கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images

இந்தியா, அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தங்கள் குறித்த முக்கியமான சில விஷயங்களை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வியாழக்கிழமை அன்று பகிர்ந்து கொண்டார்.

பொதுவாக இதுபோன்ற தகவல்களை அமைச்சர்கள் பொதுவில் பகிர்ந்துகொள்ள மாட்டார்கள்.

அமெரிக்காவுடனான ராணுவ ஒப்பந்தத்திற்கு இந்தியா எப்போதும் தயாராக இருப்பதாகவும், ஆனால் அதை வழங்குவதில் அமெரிக்காவே தயக்கம் காட்டுவதாகவும் ஜெய்சங்கர் கூறியிருந்தார்.

அமெரிக்காவின் 'தயக்கத்தை’ பற்றிப் பேசிய ஜெய்சங்கர், அதேநேரம் ஜப்பானை பாராட்டி, அது இந்தியாவில் போக்குவரத்து, வாகன தயாரிப்பு, மெட்ரோ ரயில் போன்ற பல ‘புரட்சிகளை’ ஏற்படுத்தியுள்ளது என்றார்.

'குவாட்' என்ற மூலோபாய பாதுகாப்பு அமைப்பில் அமெரிக்கா, ஜப்பான் ஆகிய இரண்டும் இந்தியாவின் நட்பு நாடுகளாக உள்ளன.

கடந்த வியாழக்கிழமை ஜப்பான்-இந்தியா சந்தித்த மன்றத்தில், ஜெய்சங்கர் ஜப்பான் வெளியுறவு அமைச்சர் யோஷிமாசா ஹயாஷி முன், பிரதமர் நரேந்திர மோதியின் அமெரிக்கப் பயணத்தின்போது இரண்டு முக்கிய ஒப்பந்தங்கள் எட்டப்பட்டன என்று கூறினார்.

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஜெய்சங்கர், மோதி

பட மூலாதாரம், ANI

ஒன்று GE ஏரோஸ்பேஸ் மற்றும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் இடையிலான GE14 இன்ஜின் உற்பத்தி ஒப்பந்தம்.

மற்றொன்று அதிக உயரத்தில் பறக்கும் ஆளில்லா விமானங்களை வாங்குவதற்கும் அவற்றை அசெம்பிள் செய்வதற்குமான ஒப்பந்தம்.

மேலும் பேசிய அவர், “அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் இதர பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவதில் இந்தியாவுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. கடந்த பல ஆண்டுகளாக இதுபோன்ற பொருட்களை வழங்க அமெரிக்காதான் தயங்கி வருகிறது,” என்றார்.

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்திற்குப் பிறகு இந்தத் தயக்கம் குறைந்துள்ளது என்றார் ஜெய்சங்கர்.

மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது 2008ஆம் ஆண்டில், இந்தியா - அமெரிக்கா இடையே அணுசக்தி ஒப்பந்தம் எட்டப்பட்டது.

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஜெய்சங்கர், மோதி

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனுடன் எஸ் ஜெய்சங்கர்

ஜப்பானை புகழ்ந்த ஜெய்சங்கர்

ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் யோஷிமாசா ஹயாஷி முன்னிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜப்பானை பாராட்டிப் பேசினார்.

இந்தியாவிற்குப் பல துறைகளில் ஜப்பான் உதவியுள்ளதாக அவர் கூறினார். சமீபத்திய உதவி ஏவுகணைகளுக்கான செமிகண்டக்டர் சார்ந்தது.

அப்போது பேசிய ஜெய்சங்கர், "ஜப்பான் இந்த நாட்டில் ஒன்றன் பின் ஒன்றாகப் புரட்சிகளைச் செய்ததாக நான் நினைக்கிறேன். மாருதி, சுசுகி புரட்சி மட்டுமல்ல. ஜப்பானிலிருந்து ஒரு முழு வாழ்க்கை முறையே இந்தியாவிற்கு வந்தது. இந்தியாவிற்கு ஒரு புதிய சிந்தனை முறை வந்தது. அதாவது, ஒரு மாற்றத்தைக் கொண்டுவந்த தொழில் கலாசாரம் இங்கு வந்தது," என்றார்.

அதேபோல், இந்தியாவில் ஜப்பான் செய்த இரண்டாவது புரட்சி மெட்ரோ ரயில், என்றார். “இது இந்தியாவின் நகர்ப்புற உள்கட்டமைப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று நான் நம்புகிறேன்," என்றார்.

மேலும் பேசிய அவர், மூன்றாவது புரட்சி அதிவேக ரயில். இந்தியாவில் புல்லட் ரயில் திட்டம் நிறைவேறினால், அதிவேக ரயிலின் விளைவை மக்கள் பார்க்க முடியும். இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும், என்றார்.

நான்காவது புரட்சி, வளர்ந்து வரும் செமிகண்டக்டர் துறை, என்றார்.

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஜெய்சங்கர், மோதி

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் யோஷிமாசா ஹயாஷி (நடுவில்) டெல்லி மெட்ரோவில் பயணம் செய்தார்

இந்தியா, ஜப்பான் இடையே ஒத்துழைப்பு

அணு ஏவுகணை பரவல் மற்றும் பயங்கரவாதம் போன்ற பல முக்கியமான சவால்களை உலகம் எதிர்நோக்கியிருக்கிறது. இதற்குக் காரணமானவர்களை நாம் பொறுப்பேற்க வைக்க வேண்டியது, என்று ஜெய்சங்கர் கூறினார்.

"இந்தியாவும் ஜப்பானும் ஒன்றாக உள்ளன. இந்தியா மற்றும் ஜப்பான் போன்ற ஒத்த எண்ணம் கொண்ட நாடுகளுக்கு பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதுதான் முதன்மையான முன்னுரிமை என்றும் அவர் கூறினார்.

புது டெல்லியில் நடைபெற்ற இந்தியா-ஜப்பான் மன்றத்தின் தொடக்க அமர்வில், ஜப்பான் வெளியுறவு அமைச்சர் யோஷிமாசா ஹயாஷி, இந்தியாவின் ஜி20 தலைவர் பதவியை வெற்றிகரமானதாக ஆக்குவதற்காக, இந்தியாவுடன் நெருக்கமாகப் பணியாற்ற ஜப்பான் மிகவும் ஆர்வமாக உள்ளது என்றார்.

ராணுவ உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகளைத் தவிர, செமிகண்டக்டர் துறையில் இணைந்து பணியாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய இந்தியாவும் ஜப்பானும் வியாழக்கிழமை வலியுறுத்தின.

ஜெய்சங்கர் மற்றும் ஜப்பானிய வெளியுறவு மந்திரி ஹயாஷி ஆகியோர், சுதந்திரமான, வளமான இந்தோ-பசிபிக் பகுதியை உறுதி செய்வதில் இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே வலுவான மற்றும் நீடித்த கூட்டாண்மையை மேம்படுத்த வேண்டும் என்று பேசினர்.

ஜப்பான் இந்தியாவில் பெரிய முதலீடுகளைச் செய்துள்ளது. ஜூன் 2022ஆம் ஆண்டில், இந்தியாவில் 1,439 ஜப்பானிய நிறுவனங்கள் செயல்பட்டன. இவற்றில் பாதி உற்பத்தி நிறுவனங்கள்.

கடந்த 2000ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை, ஜப்பான் இந்தியாவில் 37.8 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்தது. இந்தியாவில் ஐந்தாவது பெரிய அந்நிய நேரடி முதலீட்டாளராக ஜப்பான் உள்ளது.

ஜெய்சங்கர் வெளியிட்ட வீடியோவில் என்ன பேசியிருந்தார்?

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஜெய்சங்கர், மோதி

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ஜெய்சங்கர் மற்றும் ஜப்பானிய வெளியுறவு மந்திரி ஹயாஷி ஆகியோர், சுதந்திரமான, வளமான இந்தோ-பசிபிக் பகுதியை உறுதி செய்வதில் இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே வலுவான, நீடித்த கூட்டாண்மையை மேம்படுத்த வேண்டும் என்று பேசினர்

இதற்கிடையில், நாடாளுமன்றத்தில் வெளியுறவுக் கொள்கை குறித்து பேசிய எஸ் ஜெய்சங்கர் எதிர்க்கட்சிகளைக் குறிவைத்தார்.

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நிலவும் அமளியின்போது வெளியுறவுத்துறை அமைச்சர் சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

இந்த வீடியோவில், ஜனாதிபதி திரௌபதி முர்மூ, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் மற்றும் பிரதமர் நரேந்திர மோதி ஆகியோரின் வெளிநாட்டுப் பயண விவரங்களை அவர் பகிர்ந்துள்ளார்.

சர்வதேச அரங்கில் நாட்டில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து விளக்கிய அவர், பிரதமர் நரேந்திர மோதியின் அமெரிக்கா, பப்புவா நியூ கினி மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கான பயணங்களின் முக்கியத்துவம் குறித்தும் பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 20-23 வரை அமெரிக்காவிற்கு மேற்கொண்ட அதிகாரப்பூர்வ பயணம் இந்தியப் பிரதமரின் இரண்டாவது விஜயம் என்று ஜெய்சங்கர் கூறினார். அமெரிக்க காங்கிரஸின் கூட்டு அமர்வில் இரண்டாவது முறையாக உரையாற்றும் அரிய வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டது, என்றார்.

ஜெய்சங்கர், ட்விட்டரில் பகிர்ந்த ஒரு வீடியோ அறிக்கையில், "துரதிர்ஷ்டவசமாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளால் எனது அறிக்கைகள் பலமுறை குறுக்கிடப்பட்டன. வெளிப்படையாக அவர்களுக்கு தேசிய முன்னேற்றத்தைவிட கட்சி நலன்கள் முக்கியம்," என்றிருந்தார். மாநிலங்களவையில் தனது அறிக்கையின்போது எதிர்க்கட்சிகள் சலசலப்பை ஏற்படுத்தியதாக அவர் கூறியிருந்தார்.

ஜெய்சங்கர், “வியாழன் அன்று, வெளியுறவுக் கொள்கை தொடர்பான சில முக்கிய முன்னேற்றங்கள் குறித்து நாடாளுமன்றத்திற்கும் நாட்டு மக்களுக்கும் தெரிவிக்க விரும்பினேன். ஆனால் எனது அறிக்கையின்போது எதிர்க்கட்சிகள் குழப்பத்தை ஏற்படுத்தியது.

எதிர்க்கட்சிகளுக்கு, தேசிய முன்னேற்றத்தைவிட, பாகுபாடான அரசியலே முக்கியம்,” என்றார்.

கடந்த வியாழக்கிழமையும், மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோதி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்டது. மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

ஜெய்சங்கரின் ‘ஆக்ரோஷமான’ அணுகுமுறை

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஜெய்சங்கர், மோதி

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, வெளியுறவு அமைச்சர் சில காலமாகத் தனது அறிக்கைகளால் நிறைய தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றிருக்கிறார்

வெளியுறவு அமைச்சர் சில காலமாக தனது அறிக்கைகளால் நிறைய தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றிருக்கிறார். குறிப்பாக மேற்கத்திய நாடுகளைப் பற்றி அவர் பேசியவை தலைப்புச் செய்திகளாயின.

வளர்ந்துவரும் நாடுகளின் சிந்தனையை அவர் வெளிப்படையாகப் பேசுகிறார் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஜெய்சங்கரின் அறிக்கைகள் கூர்மையாக இருக்கும் அதேநேரம், சிலரது பார்வையில் எரிச்சலூட்டுவதாகவும் உள்ளது, என்று பார்க்கப்படுகிறது.

சமீப காலமாக, ஜனநாயக நாடுகளை மதிப்பீடு செய்யும் முக்கியமான மேற்கத்திய நிறுவனங்கள், இந்தியாவில் சிறுபான்மையினர் நடத்தப்படுவது குறித்து கவலை தெரிவித்து வருகின்றன. இது ஜனநாயகத்தின் வீழ்ச்சி என்றும் கூறி வருகின்றன.

இந்தக் கவலைகளில் ஜெய்சங்கரின் நிலைப்பாடு மிகவும் ஆக்ரோஷமாக உள்ளது.

மேற்கத்திய நாடுகளின் மனோபாவம் குறித்து, "இது பாசாங்கு. உலகத்தில் சிலர் இப்படி சான்றிதழ் கொடுப்பதற்காக சிலர் தம்மைத் தாமே நியமித்துக்கொண்டிருக்கின்றனர். இப்போது இந்தியா அவர்களது சம்மதத்திற்காகக் காத்திருக்கவில்லை என்பதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை," என்று கூறுயிருந்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: