சுதா மூர்த்தியின் 'கரண்டி' பேச்சு பிராமணியத்தின் வெளிப்பாடு என்ற விமர்சனம் எழுவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், கீதா பாண்டே
- பதவி, பிபிசி நியூஸ்
உலகம் முழுவதும் பல சமூகங்களை ஒன்றிணைக்க உணவு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்தியாவில், பிரபல எழுத்தாளரும், சமுக சேவகரும், கல்வியாளருமான சுதா மூர்த்தி தனது சைவ உணவுப் பழக்கவழக்கங்கள் குறித்துத் தெரிவித்த கருத்து சமூக ஊடகங்களில் பெரும் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
மென்பொருள் துறையில் தொழில் செய்துவரும் இந்திய கோடீஸ்வரர் என்.ஆர். நாராயண மூர்த்தியும், அவரது மனைவி சுதா மூர்த்தியும், அவர்களது மருமகன் ரிஷி சுனக் பிரிட்டனின் பிரதமர் பதவியேற்றதில் இருந்து பொதுவெளியில் பலமுறை பேசுபொருளாகியுள்ளனர்.
ஆனால் 72 வயதான சுதா மூர்த்தி - "கானே மே க்யா ஹை?" (இன்றைய மதிய உணவு என்ன?) என்ற பிரபலமான உணவுத் திருவிழாவில் பங்கேற்றபோது தெரிவித்த கருத்து - மூன்று நாட்களாக ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
முட்டை கூட சாப்பிடாத ஒரு "சுத்த சைவரான" சுதா மூர்த்தி, வெளிநாட்டிற்குச் செல்லும் போது, அடிக்கடி தனது சொந்த உணவை எடுத்துச் செல்வதாகவும், உணவகங்களில் சைவம் மற்றும் அசைவ உணவுகளுக்கு ஒரே கரண்டி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற மிகப்பெரிய அச்சமே அதற்குக் காரணம் என்றும் தெரிவித்தார்.
"எனவே நான் பயணம் செய்யும் போது, ஒரு சுத்தமான சைவ உணவகத்துக்கே செல்கிறேன். மேலும் பல சமயங்களில் உணவை நானே எடுத்துச் செல்வேன். பல ஆண்டுகளுக்கு முன்பு என் பாட்டிகள் இது போல் சாப்பாட்டை எடுத்துக் கொண்டு பயணங்களை மேற்கொண்ட போது, அவர்கள் ஏன் அவ்வாறு செய்கின்றனர் எனக் கேட்பதையும், கிண்டல் செய்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தேன். உணவகங்களில் கிடைக்கும் சாப்பாட்டை அவர்கள் ஏன் சாப்பிடுவதில்லை என்றும் கேட்பேன். ஆனால் இப்போது நானே அந்த வழக்கத்தைப் பின்பற்றுகிறேன்," என்று அவர் கூறினார்.
அவரது இந்தப் பேச்சின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை விமர்சிப்பவர்கள் அவரை ஆதரித்தும், எதிர்த்தும் கருத்துகளைப் பதிவிட்டுவருகின்றனர்.
அவர் தன்னை ஒரு "சுத்த சைவ உணவு உண்பவர்" என்று கூறிக்கொள்வது, பல கோடிக்கணக்கான சைவ உணவு சாப்பிடுபவர்கள் மத்தியில் தங்களை வேறுபடுத்திக் காட்ட முயற்சிப்பதன் வெளிப்பாடே என சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. சைவ உணவு சாப்பிடுபவர்களாகத் தங்களைக் காட்டிக்கொள்பவர்கள் கூட முட்டை சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால், அவர்களை விட உயர்ந்தவர் என்பதைக் காட்டவே சுதா மூர்த்தி தான் ஒரு "சுத்த சைவர்" எனப் பேசியதாகவும் பலர் விமர்சிக்கின்றனர்.
இது சாதியவாதம் என்றும், சிலர் தங்களைத் தூய்மையானவர்களாகக் காட்டுவதற்கு இது போல் பேசி வருவதாகவும் இந்த விமர்சனங்கள் கூறுகின்றன. மேலும், இப்படித் தான் பிராமணர்கள் தங்களை மற்றவர்களிடம் இருந்து உயர்த்திக் காட்ட- தூய்மையின் அடையாளமாகத் தங்களை வெளிப்படுத்த இதுபோல் தாங்கள் சைவ உணவை மட்டுமே சாப்பிடுவதாக கூறி வருவதாகவும் இந்த விமர்சனங்களில் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இருப்பினும் சில வரலாற்றாசிரியர்கள் இந்தியாவின் சில பகுதிகளில் பிராமணர்கள் பாரம்பரியமாக இறைச்சியை உண்டு வந்ததாகவும், தற்போதும் சிலர் அசைவ உணவை உண்பதாகவும் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
"இந்தியாவில் கடைப்பிடிக்கப்படும் சைவ உணவு என்பது சாதி அமைப்புடன் தொடர்புடையதாக இருக்கிறது. ஒருவர் தன்னை சைவராக காட்டிக்கொள்ள முயற்சிப்பதை நியாயப்படுத்த, அது ஒருவரின் தனிப்பட்ட விஷயம் என்ற ஒரே ஒரு கருத்துதான் அனைவராலும் முன்வைக்கப்படுகிறது. அதன் சாதி அடித்தளத்தை ஒப்புக் கொள்ளும்போது கூட அதை உடைப்பது கடினம் என்று சமூகவியல் விஞ்ஞானி ஜானகி சீனிவாசன் ட்வீட் செய்துள்ளார்.
"சைவ உணவு உண்பதால் தங்களை தூய்மையானவர்களாக காட்டிக்கொள்பவர்களுக்கு சோப்பு எதற்காக உள்ளது என்பது கூட புரியவில்லையா? இந்த அளவு சித்தப்பிரமை பிடித்த மக்களும் இருக்கிறார்களா? இது போல் பிதற்றிக்கொள்வது அல்லது இதுபோல் பேசுவதில் கூடுதல் கவனம் செலுத்துவது 100% பிராமணியத்தின் விளைபொருள்," என்று மற்றொரு ட்விட்டர் பயனர் விமர்சித்துள்ளார்.
பிரிட்டன் பிரதமர் சுனக்குடன், சமைத்த இறைச்சி தட்டுகளை சுதா மூர்த்தி எடுத்துச் செல்லும் புகைப்படங்களை சிலர் பகிர்ந்துள்ளனர் .
இதுபோன்ற கடுமையான விமர்சனங்கள் இந்தியாவில் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன. குறைந்தது 20% மக்கள் தாவர அடிப்படையிலான உணவுகள் மற்றும் பால் பொருட்களை மட்டுமே உட்கொள்ளும் சைவ உணவு உண்பவர்களாக அடையாளம் காணப்படுகிறார்கள்.
"என்னால் அசைவ உணவு சாப்பிடுபவருக்கு அடுத்ததாக அமர்ந்து மகிழ்ச்சியுடன் சாப்பிட முடியும். ஆனால் ஒரே கரண்டியை சைவம் மற்றும் அசைவ உணவுகளைப் பரிமாறப் பயன்படுத்தினால் அது என்னை மிகவும் சங்கடப்படுத்தும். அது போன்ற உணவகங்களில் நான் சாப்பிடுவதைத் தவிர்த்துவிடுவேன். இதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால், அது உங்கள் பிரச்சனை. சுதா மூர்த்தி மற்றும் தங்கள் விருப்பப்படி சாப்பிடும் அனைவருக்கும் நான் ஆதரவளிக்கிறேன்," என்று மூத்த காவல்துறை அதிகாரி அருண் போத்ரா எழுதியுள்ளார்.
பத்திரிகையாளர் ஷீலா பட், சுதா மூர்த்தியைப் போலவே நடந்து கொள்ளும் பலரைத் தனக்குத் தெரியும் என்றும், தன்னை இதில் தொடர்பு படுத்தாமல் தனியாக விட்டுவிடுமாறும் கேட்டுக் கொண்டார் .
இறைச்சி உண்ணும் பெரும்பாலான இந்தியர்கள் ஒருவித உணவுச் சட்டங்களையும் மரபுகளையும் பின்பற்றுகிறார்கள் என்ற ஆராய்ச்சியையும் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர் . உதாரணமாக, இறைச்சி உண்ணும் பல இந்துக்கள் மாட்டிறைச்சியைத் தவிர்க்கிறார்கள், முஸ்லிம்கள் பன்றி இறைச்சியைத் தவிர்க்கிறார்கள்.
சைவ உணவு உண்பவர்கள் மட்டுமல்லாமல், அசைவ உணவு உண்பவர்களும் தங்களுக்குள் ஒரு சில சட்டங்களை வைத்துள்ளனர். உதாரணமாக, அசைவ உணவை உண்பவர்கள், மாட்டிறைச்சி குழம்பில் இருந்து தயாரிக்கப்பட்ட பிரஞ்சு வெங்காய சூப் மற்றும் மாட்டிறைச்சி கொழுப்பில் வறுத்த கெட்டியான பெல்ஜியன் பொரியல் ஆகியவற்றைத் தவிர்த்தனர் என்றும், ஹலால் செய்யப்படாத அசைவ உணவுகளை முஸ்லிம்கள் தவிர்த்தனர் என்றும் ஒரு ட்விட்டர் பயனர் எழுதியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
தற்போதைய காலகட்டத்திலும் ஆழமாக உணர்வுகளைத் தூண்டுமளவுக்கு இந்துகளை கடுமையான பல்வேறு நிலைகளாகப் பகுத்து, உயர் சாதியினருக்குப் பல சலுகைகளை வழங்கிய பழங்கால சாதி அமைப்பு, தாழ்த்தப்பட்ட சாதியினரை மேல் சாதியினர் ஒடுக்குவதற்கு அனுமதி அளித்ததில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.
பல தசாப்தங்களாக சாதியின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவது சட்டவிரோதமானது என்றாலும், இன்னும் அடிமட்டத்தில் இருக்கும் சமூகத்தினர் சாதீய வன்முறைகள் குறித்து புகாரளிக்கும் நிலை தொடர்ந்து நீடித்துவருகிறது.
கடந்த தசாப்தத்தில், இந்தியாவில் சைவ உணவு உண்ணும் பழக்கம் உள்ளவர்கள் பிற உணவுப் பழக்கம் உள்ளவர்களை ஆயுதங்களால் தாக்கும் சம்பவங்கள் பல முறை நடந்துள்ளன. இந்துத்துவக் குழுக்கள் முஸ்லிம்கள் மற்றும் தலித்துகளை மாட்டிறைச்சியைக் கொண்டு சென்றதற்காகவோ அல்லது சாப்பிட்டதற்காகவோ தாக்கி அடித்துக் கொன்றனர். (இந்துகள் பசுவை புனித விலங்காக கருதுகின்றனர் .)
அந்த வரலாற்றுப் பின்னணியில், சுதா மூர்த்தியைப் பற்றி விமர்சிப்பவர்கள், அவரது அந்தஸ்தையும் பெருமையையும் கொண்ட ஒருவர், பொது வெளியில் பேசும் போது மிகவும் கவனமாக இருக்கவேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.
இருப்பினும் சுதா மூர்த்தி தனது கருத்துக்கு எதிராக எழுந்த விமர்சனப் புயலுக்கு ட்விட்டரில் எந்தப் பதிலையும் பகிரவில்லை. மேலும் அவரது கருத்துகள் சமீபத்திய மாதங்களில் தலைப்புச் செய்தியாக இடம்பெறுவது இதுவே முதல் முறை அல்ல என்பதால் அவர் இந்த விமர்சனங்களுக்கு பதில் சொல்ல மாட்டார் என்றே கருதப்படுகிறது.
மே மாதம், பிரிட்டனில் தனது முகவரியை பிரதமரின் இல்லமான 10 டவுனிங் ஸ்ட்ரீட் என்று லண்டனில் உள்ள குடியுரிமைத் துறை அதிகாரி ஒருவரிடம் தெரிவித்தபோது, அதை நம்ப மறுத்த அவர், சுதா மூர்த்தி நகைச்சுவையுணர்வுடன் பேசியதாகக் கருதியதாகவும், தனது எளிமையான தோற்றம் தான் அதற்குக் காரணம் என்றும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சயில் தெரிவித்திருந்தார். அதற்கும் சமூக ஊடகங்களில் அவருக்கு எதிராக பெரிய அளவில் விமர்சனங்கள் எழுந்தன.
அதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு, "நான் என் கணவரை ஒரு தொழிலதிபராக்கியதைப் போல", அவரது மகள் அக்ஷதா மூர்த்தி "தனது கணவரை [பிரிட்டன் பிரதமர் ரிசி சுனக்கை] பிரதமராக்கினார்," என்று நகைச்சுவையாகப் பேசி இந்தியாவில் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றார்.
குறைந்தபட்சம் தன்னைப் பற்றிய அவரது தற்பெருமை, ஒருபோதும் கேள்விக்கு உட்படுத்தப்படவில்லை. 1981 இல் சுதா மூர்த்தியின் கணவரான என்.ஆர். நாராயண மூர்த்தி, அவரிடம் இருந்து $250-ஐ கடனாகப் பெற்றுத்தான் ஒரு ஐ.டி. நிறுவனத்தைத் தொடர்ங்கினார் என்பது அனைவரும் அறிந்ததே.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








