சீன நிறுவனம் அலி பாபா தன் போட்டியாளர்களை ஒழிக்கிறதா?அரசு விசாரணை

அலிபாபா

பட மூலாதாரம், Getty Images

கடந்த சில ஆண்டுகளில் அலிபாபா நிறுவனம் அதிகவேகமாக வளர்ந்துவிட்டது. அது தன் போட்டியாளர்களை ஒழிக்க நடவடிக்கை எடுத்துவருவதாக செய்திகள் வெளியாகின்றன.

எனவே, அலிபாபா நிறுவனம், தன்னை மட்டுமே சந்தையில் நிலை நிறுத்திக் கொள்ள, முற்றொருமை (Monopoly) நடவடிக்கைகளை எடுக்கிறதா என சீனாவின் சந்தை நெறிமுறையாளர்கள் விசாரித்து வருகிறார்கள்.

இந்த விசாரணையை, சீனாவின் ஸ்டேட் அட்மினிஸ்ட்ரேஷன் ஃபார் மார்க்கெட் ரெகுலேஷன் (எஸ்.ஏ.எம்.ஆர்) என்கிற அமைப்பு, வியாழக்கிழமை இந்த உறுதிப்படுத்தி இருக்கிறது.

அலிபாபா நிறுவனம், வியாபாரிகளைக் கட்டாயப்படுத்தி, பிரத்யேக ஒப்பந்தங்களில் கையெழுத்திட வைப்பது தொடர்பாக சீன சந்தை நெறிமுறையாளர்கள் முன்பே எச்சரித்தார்கள்.

இப்படி பிரத்யேக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டால், வியாபாரிகள் அலிபாபாவின் போட்டி நிறுவனங்களிடம் பொருட்களை விற்க முடியாது.

இது போக, சீனாவின் நிதித் துறை நெறிமுறையாளர்கள், அலிபாபாவின் நிதி தொழில்நுட்ப நிறுவனமான ஆன்ட் குழுமத்தையும் வரும் நாட்களில் சந்திக்க இருக்கிறார்கள்.

அலிபாபாவின் "இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்யுங்கள்" (choosing one from two) திட்டத்தைத் தான் சந்தை நெறிமுறையாளர்கள் விசாரணை செய்யத் தொடங்கி இருக்கிறார்கள்.

அதென்ன இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்யும் திட்டம்?

வியாபாரிகளை, ஏதாவது ஒரு இ-காமர்ஸ் நிறுவனத்தில் மட்டும் பிரத்யேகமாக பொருட்களை விற்க வைப்பதுதான் இந்த திட்டத்தின் நோக்கம்.

இந்த திட்டத்தின் படி, ஒரு வியாபாரி, மற்ற இ-காமர்ஸ் நிறுவனங்களிடம் பொருட்களை விற்றால், அப்படி விற்கும் வியாபாரியின் பொருளைத் தேடி வரும் இணையத் தேடல்களை, இ காமர்ஸ் நிறுவனம் முடக்கிவிடும் எனக் குறிப்பிடுகிறது செளவுத் சைனா மார்னிங் போஸ்ட் பத்திரிகை.

ஜோக் மா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜேக் மா

ஆக வியாபாரிகள், ஒரே ஒரு இ காமர்ஸ் நிறுவனத்தின் வலைதளத்தில் தங்களது பொருட்களை விற்க ஒத்துழைப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டும். மற்ற இ காமர்ஸ் நிறுவனங்களில், அந்த வியாபாரிகளின் பொருட்கள் விற்கப்படுவது தடுக்கப்படும்.

அதிகரித்து வரும் கண்காணிப்பு

சீனாவின் தொழில்நுட்ப தாதாவான அலிபாபா மற்றும் டென்சென்ட் போன்ற நிறுவனங்கள் மீது, சீன அரசின் கண்காணிப்பு நடவடிக்கைகள் அதிகரித்திருக்கின்றன. இது இந்த நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் நிறுவனங்களின் பலத்தைக் குறித்து சீன அரசு கவலைப்படுவதைக் காட்டுகிறது.

சீன அரசு நெறிமுறையாளர்கள், இந்த தொழில்நுட்ப நிறுவனங்களின் மில்லியன் கணக்கிலான பயனர்களைக் குறித்தும், சீன மக்கள் அன்றாடம் பொருட்களை வாங்குவது மற்றும் பணப்பரிமாற்றம் செய்வதில் இந்த நிறுவனங்கள் செலுத்தும் ஆதிக்கத்தைக் குறித்தும் கவலைப்படுகிறார்கள்.

அலிபாபா நிறுவனம் ஜாக் மாவால் நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் ஏற்கனவே நெறிமுறையாளர்களின் கோபத்துக்கு ஆளானது.

ஐபிஓ நிறுத்தம்

கடந்த மாதம், ஆன்ட் குழுமத்தின் பங்கு வெளியீடு நிறுத்தப்பட்டது. ஒருவேளை இந்த பங்கு வெளியீடு வெற்றிகரமாக நடந்திருந்தால், உலகிலேயே மிகப் பெரிய பங்கு வெளியீடாக சாதனை படைத்திருக்கும்.

சீனாவின் சந்தை நெறிமுறையாளர்கள், இந்த பங்கு வெளியீட்டுக்கு சில நாட்களுக்கு முன்பு தான் அதை தடுத்து நிறுத்தினார்கள். இதற்கு ஆன்ட் குழுமத்தின் மைக்ரோ கடன் திட்டங்களில் இருக்கும் சிக்கல்களைச் சுட்டிக்காட்டினார்கள்.

கடந்த அக்டோபர் மாதத்தில், ஜாக் மா ஒரு நிதி தொழில்நுட்ப மாநாட்டில், சீன வங்கி முறை மற்றும் சீன நெறிமுறையாளர்களை விமர்சித்தது தான், இந்த தடைகளுக்கு உண்மையான காரணம் என பலரும் கருதுகிறார்கள்.

சீன வங்கிகள் அடகுக் கடைகளைப் போல் செயல்படுகின்றன எனக் கூறினார் அலிபாபா நிறுவனர் ஜாக் மா. அதற்கான விளைவுகளை தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள்.

அந்த கடுமையான பேச்சுக்குப் பிறகு, சீனாவின் தொழில்நுட்பத் துறையில் ஏகப்பட்ட கடுமையான விதிமுறைகளைக் கொண்டு வந்தது சீனா. இதனால் அலிபாபாவின் சந்தை மதிப்பு சுமாராக 140 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (17%) சரிந்திருக்கிறது.

சரியும் ஆன்ட் குழுமம்

சீனாவின் மத்திய வங்கியான பீப்பிள்ஸ் பேங்க் ஆஃப் சைனா, ஆன்ட் குழுமத்தைச் சந்திக்க இருக்கிறது.

ஆன்ட் குழுமம் நிதி மேற்பார்வையிடுவதை செயல்படுவதற்கும், நியாயமான போட்டி நிலவுவதற்கும், சட்ட ரீதியிலான உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், வாடிக்கையாளர்களின் நலனைப் பாதுகாப்பதற்கும்தான் அந்த சந்திப்பு மேற்கொள்ளப்பட இருப்பதாக பீப்பிள்ஸ் பேங்க் ஆஃப் சைனாவின் அறிக்கை கூறுகிறது.

இந்த அழைப்பைத் தொடர்ந்து, அரசு குறிப்பிடும் எல்லா விதிமுறைகள் மற்றும் நெறிமுறைகளை கடைபிடிப்போம் எனக் கூறியிருக்கிறது ஆன்ட் குழுமம்.

ஆன்ட் குழும வணிக சாம்ராஜ்யத்தின் சில பகுதிகளில், குறிப்பாக அதன் லாபகரமான கடன் வணிகத்தைப் பார்த்து, சீன அரசு அதிகம் கவலைப்படுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :