ஒரு நல்ல டாக்டரை இழந்துவிட்டோம்: கமல்ஹாசன்

அனிதாவின் மரணத்தின் மூலம் ஒரு நல்ல மருத்துவரை இழந்துவிட்டதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார். மத்திய அரசிடம் வாதாட வேண்டியவர்கள் பேரம் பேசிக்கொண்டிருந்தால் மக்கள் எப்படி வாழ முடியும் என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

கேரள முதல்வர் பிணராயி விஜயனைச் சந்தித்த பிறகு திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜாதி, கட்சி, மாநில எல்லைகளைத் தாண்டி இதற்காகப் போராட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இதோ வருகிறது நல்ல சேதி என்று குடுகுடுப்பை குலுக்கியவர்கள் காணாமல்போய்விட்டார்கள் என்றும் திருமாவளவன் போன்ற தலைவர்கள் வெகுண்டு எழ வேண்டும் என்றும் கமல் குறிப்பிட்டார்.

"மத்திய - மாநில அரசு நீதிமன்றம் எல்லாம் நாம் வைத்ததுதான். அங்கெல்லாம் நாம் நன்றாக வாதாடியிருக்க வேண்டும். வாதாட வேண்டியவர்கள் பேரம் பேசிக்கொண்டிருந்தார்கள் என்றால் எப்படி மக்கள் வாழ்வார்கள்.

இப்படி தற்கொலைக்குப் பிறகுதான் பாடம் கற்பார்கள் என்றால், நாங்களே கற்றுக்கொள்கிறோம். இல்லை கற்றுக்கொடுக்கிறோம்" என்றும் கமல் கூறினார்.

நடிகர் ரஜினிகாந்தும் அனிதாவின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையில் அனிதாவின் குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பில் ஏழு லட்ச ரூபாய் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார். அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், எதிர்க்கட்சிகள் அனைத்தும் இந்த மரணம் குறித்து அனுதாபத்தையும் கண்டனங்களையும் தெரிவித்துள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தன்னுடைய கட்சி அணிகள் கண்டன இயக்கங்களை நடத்தும்படி கேட்டுக்கொண்டுள்ளது.

பல்வேறு அமைப்புகள் நாளை மறியல் போராட்டங்களை நடத்தப்போவதாக அறிவித்துள்ளன.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :