You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நீட் தேர்வுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த மாணவி அனிதா தற்கொலை
நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய, அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அனிதா, தூக்கிலிட்டு தற்கொலைசெய்துகொண்டார். பிளஸ்டூ தேர்வில் 1176 மதிப்பெண் எடுத்திருந்தும் தமக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காது என்ற காரணதால் அவர் இந்த முடிவை எடுத்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகில் உள்ள குழுமூரைச் சேர்ந்த சண்முகம் என்பவரது மகள் அனிதா. 17 வயதான இவர், நடந்து முடிந்த 12ஆம் வகுப்புத் தேர்வில் 1200க்கு 1176 மதிப்பெண்களைப் பெற்றிருந்தார். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இவரது மருத்துவத்திற்கான கட் - ஆஃப் மதிப்பெண் 196.75 ஆக இருந்தது. எனவே தமக்கு மருத்துவக் கல்லூரியில் நிச்சயம் இடம் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தார்.
நீட் தேர்வையும் அனிதா எழுதியிருந்தார். அந்தத் தேர்வில் 700க்கு 86 மதிப்பெண்களையே அவர் எடுத்திருந்தார் என்பதால், அவர் தேர்ச்சிபெறவில்லை.
இந்த ஆண்டு முதல் தமிழகத்தில் மருத்துவ சேர்க்கை எதன் அடிப்படையில் நடக்கும் என்பதில் நீண்ட காலம் குழப்பம் நீடித்துவந்தது. இந்நிலையில், விரைவில் மருத்துவக் கல்லூரி சேர்க்கையை நீட் தேர்வின் அடிப்படையில் நடத்தி முடிக்கவேண்டும் என சிபிஎஸ்சி மாணவர்கள் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு
அந்த வழக்கில் எதிர் மனுதாரராக அனிதா தன்னை இணைத்துக்கொண்டார். நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ கல்லூரி சேர்க்கையை நடத்தினால், அதில் தன்னைப் போன்ற கிராமப்புற பின்னணியைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்படுவார்கள் என வாதிட்டார். 12ஆம் வகுப்புத் தேர்வில் அதிக மதிப்பெண்களை எடுத்தும், தன்னுடைய மருத்துவ கனவு பாழாகிவிடும் என்று கூறினார்.
ஆனால், உச்ச நீதிமன்றம் நீட் தேர்வில் அடிப்படையில் மருத்துவ சேர்க்கையை நடத்த உத்தரவிட்டது.
இந்த நிலையில், இன்று பிற்பகல் ஒரு மணியளவில் அனிதா துப்பட்டாவால் தூக்கிலிட்டு தற்கொலைசெய்துகொண்டார். மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காது என்ற காரணத்தினாலேயே அவர் தற்கொலை செய்துகொண்டதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அரசு மீது குற்றச்சாட்டு
தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் இந்த நிகழ்வு குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ளன. மத்திய - மாநில அரசுகள் இந்த மரணத்திற்குப் பொறுப்பேற்க வேண்டுமென பாட்டாளி மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், "கையாலாகாத மாநில அரசுதான் இந்த மரணத்திற்குக் காரணம்" என்று குற்றம்சாட்டினார்.
ஊடகங்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், மாணவர்கள் எந்தக் காரணத்திற்காகவும் தற்கொலை முடிவை எடுக்கக்கூடாது என்று மட்டும் கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய - மாநில அரசுகளுக்குக் கண்டனம் தெரிவித்து சமூக வலைதளங்களில் ஆவேசமான கருத்துகள் பதிவுசெய்யப்பட்டுவருகின்றன.
அனிதாவின் தந்தை சண்முகம் திருச்சி காந்தி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார். அவருக்கு அனிதாவுடன் சேர்த்து ஐந்து குழந்தைகள் உள்ளனர்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :