சிரியாவில் அமெரிக்கா திடீர் ஏவுகணைத் தாக்குதல் : அதிபர் டிரம்ப் பதிலடி
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள பகுதியில் ரசாயன ஆயுத தாக்குதல் நடந்ததாக சந்தேகிக்கப்படும் நிலையில், சிரியாவில் உள்ள குறிப்பிட்ட இலக்குகள் மீது அமெரிக்கா திடீரென ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.
கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள சிரியா கடற்படைத் தளத்திலிருந்து 50 டொமாஹாக் ஏவுகணைகள் ஏவப்பட்டதாக பென்டகன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமையன்று நடத்தப்பட்ட நரம்பு மண்டலத்தைப் பாதிக்கக்கூடிய ரசாயன தாக்குதல் என சந்தேகிக்கப்படும் தாக்குதலில் டஜன்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
செவ்வாய்க்கிழமை எந்த தளத்திருந்து தாக்குதல் நடைபெற்றதோ அப்பகுதியில் தாக்குதல் நடத்த தான் உத்தரவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

மனித நேயம் கொண்ட அனைத்து நாடுகளும், சிரியாவில் நடைபெறும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர உதவ வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
வியாழக்கிழமையன்று அமெரிக்க வெளியுறவுச் செயலர் ரெக்ஸ் டில்லர்ஸன் பேசுகையில், எதிர்கால சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத்துக்கு எந்தப் பங்கும் இருக்கக் கூடாது என்று தெரிவித்திருந்தார்.
அவரது இந்த சமிக்ஞை, அமெரிக்க கொள்கையில் ஏற்பட்ட திடீர் மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.
தாக்குதல் நடந்தது எங்கே?
ஷராத் விமானப்படைத் தளத்திலிருந்துதான் ரசாயன தாக்குதல் தொடுக்கப்பட்டதாகக்கூறும் அமெரிக்கா, அந்த தளத்தின் மீதுதான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது என அமெரிக்க அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி செய்திகள் தெரிவிக்கின்றன.
சிரியா ராணுவத் தளம் மீது பல ஏவுகணைகளைக் கொண்டு அமெரிக்கா அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளதாக சிரியா அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. கூடுதல் தகவல்களைத் தெரிவிக்கவில்லை.
சிரியாவில் 'விஷவாயுத் தாக்குதல்'- யார் காரணம்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்














